
மேற்கு வங்கத்தில் 22 எம்பிக்களை வைத்திருந்த திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஒரே நாளில் 20 பேர் வெளியேறி, புதிதாக பிறந்த NCPI- கட்சியில் இணைந்திருக்கிறார்கள். அதேபோல மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான சிவசேனை (உத்தவ்) கட்சியில் 7 எம்.பிக்கள் பிளவு ஏற்பட்டுள்ளது. இது மாநில கட்சிகளை உள்ளிருந்தே பலவீனப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றும் பாஜக உடைப்பு அரசியல் சூத்திரம் அரங்கேறுகிறது.
NCPI(nationalist citizens party of India) எனும் புதிய கட்சி துவங்கப்பட்டு திரிணாமுல் காங்கிரசை பலமிழக்க செய்திருக்கிறார்கள். இந்த NCPI கட்சி 2020-ல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக பதிவு செய்யப்பட்டது. கட்சி கட்டமைப்பு இல்லாத முகவரி அச்சிடப்பட்ட அஞ்சல் தாள் (Letter pad) கட்சியாக செயல்படுகிறது. இதற்கு ஒரு எம்பி கூட கிடையாது. 2023 ல் திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி வாங்கிய ஓட்டு எண்ணிக்கை 822. ஆனால் இப்போது திரிணாமுல் காங்கிரசின் 20 எம்.பிக்கள் இணைந்ததனால் மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதியில் இக்கட்சியே 20 எம்பியுடன் முன்னணியில் இருக்கிறது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியில் இருக்கிறது.
இந்த 20 திரிணாமுல் எம்பிக்களும் கட்சி மாறினால் தகுதி நீக்கம் செய்யப்படலாம். ஆனால் ஒருவரோ, இருவரோ கட்சித் தாவல் செய்தால் தான் தகுதி நீக்கம் செல்லும். ஆனால் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்கள் மற்றொரு கட்சியில் போய் சேர்ந்தால் அது சட்டப்படி பிளவு இல்லை. எனவே கட்சித்தாவல் சட்டம் செல்லாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தந்திரமாக தாவியிருக்கிறார்கள்.

NCPI கட்சி தாவிய இந்த 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் பெரும்பாலாலும் இஸ்லாமியர்கள் பகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 27% இஸ்லாமியர்கள் ஓட்டுகள் இருக்கின்றன. மால்டா, முர்சிதாபாத் போன்ற பல தொகுதிகளில் 40-60% வரை இஸ்லாமியர்கள் ஓட்டுகளே இருக்கின்றன. மதவாத கட்சியாக முன்னிறுத்திக் கொள்ளும் பாஜகவினால் நேரடியாக இஸ்லாமியர் மற்றும் தலித்களின் வாக்குகளைப் பெற முடியாது. அதனால் NCPI போன்ற எந்த கட்டமைப்பும் இல்லாத லெட்டர் பேட் போன்ற மதச்சார்பற்ற முகமூடி கட்சிகள் தேவைப்படுகின்றன. அதன் மூலமாக இஸ்லாமியர்கள் மற்றும் தலித்களின் ஒட்டுக்களை திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகளின் உறுப்பினர்கள் பெறும் போது, அவர்களை NCPI போன்ற லெட்டர் பேட் கட்சிகளிடம் தாவ வைத்து விடுவது சுலபமானது.

அதன் மூலமாக தங்களை எதிர்க்கும் மாநில கட்சியையும் உடைத்து விடலாம். அந்த கட்சியிலிருந்து தாவிய, தங்களின் கைப்பாவைகளாகிப் போன உறுப்பினர்களை வைத்தே, அந்த மாநில கட்சியின் பெயருக்கே உரிமை கோர வைக்கலாம் என்பதே பாஜகவின் தந்திர அரசியலாக இருக்கிறது. மாநில கட்சியை உடைத்து அதிலுள்ளவர்களை தங்களிடம் சேர்ப்பதை விட, மதச்சார்பற்றவர்கள் என்கிற முகமுடியில் உருவாக்கிய புதிய கட்சியில் சேர்ப்பது பாஜகவிற்கு எளிதானது. இதன் மூலம் தங்களை வலிமையாக எதிர்க்கும் மாநிலக் கட்சி தலைவர்களை அந்தக் கட்சியின் உரிமையிலிருந்து ஒதுக்கலாம், அதே நேரம் அந்த கட்சியின் பெயரில் பாஜகவின் கைபாவைகள் இயங்கலாம். இதுவே திரிணாமுல் காங்கிரசின் மம்தாவிற்கும் நடந்திருக்கிறது.
திரிணாமுல் கட்சியிலிருந்து NCPI கட்சி தாவிய இந்த 20 பேரும், தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ், மம்தாவை விட மதச்சார்பற்ற முகம் கொண்டவர்கள் என திரிணாமுல் கட்சியையே அபகரிக்கும் தந்திரம் இதில் செயல்பட்டிருக்கிறது. இது மற்ற மாநிலங்களில் வழக்கமாக பாஜக விளையாடிய ‘மறைமுக ஓட்டு வேட்டை’ திட்டமாக நடந்ததே. இதுபோல மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே கட்சியில் 9 எம்.பிக்களில் 6 எம்.பிக்கள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆப்ரேஷன் டைகர் மூலம் இந்த எம்பிக்கள் கட்சி மாறுவதற்காக தலா ஐம்பது கோடி லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டதாக, அதில் ரூ. 25 கோடி முன்பணம் வழங்கப்பட்டதாக என்று அக்கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். சிவசேனா கட்சி பிளவு, பீகாரில் ஐக்கிய தனதா கட்சியின் வாக்குகளை தனதாக்கிய தந்திரம், தமிழ்நாட்டில் அதிமுகவை உடைப்பு என அனைத்து மாநில கட்சியிலும் ஆடிய ஓட்டு வேட்டையை மேற்கு வங்கத்திலும் துவங்கியிருக்கிறது.
பாஜகவின் உடைப்பு அரசியல் குறித்து மே 17 இயக்கக்குரலில் வெளிவந்த கட்டுரை:
இந்திய ஒன்றியத்தில் மசோதாக்களை சட்டமாக்கும் பெரும்பான்மையை கொண்டு வரும் தேவை பாஜகவிற்கு இருக்கிறது. அதற்காகவே ஒருபுறம் எதிர்க்கட்சி எம்பிக்கள் எண்ணிக்கையை குறைப்பதையும், மறுபுறம் பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் செய்கிறது. பாஜக பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு போன்ற மசோதாக்களை சட்டமாக நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. விரைவில் அந்த மசோதாக்கள் சட்டமாக்கப்படும் அபாயமும் இருக்கிறது.
மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பான காலங்களில், மக்கள் மனதில் பயத்தையும் பிளவையும் உருவாக்கும் வகையில் வங்கதேசத்திலிருந்து வரும் இஸ்லாமிய அகதிகளால் தீவிரவாதம் பரவுகிறது என்கிற தீவிர பிரச்சாரம் பாஜகவினால் பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் வந்த எஸ்ஐஆர் மூலமாக 90 லட்சம் பேர் நீக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் வாக்காளர்களின் பெயர்களே நீக்கப்பட்ட சர்ச்சை எழுந்தது. தேர்தலின் போது துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு பாஜகவினர் போல பயன்படுத்தப்பட்டனர். இப்படியான தொடர்ச்சியான பல நிகழ்வுகளுக்குப் பிறகு பாஜக வெற்றியடைந்தது. இந்த வெற்றி குறித்த விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
ஒருபுறம், மாநிலக் கட்சிகளை உடைத்து தங்களுக்கு ஆதரவான ஆற்றல்களை பதவியில் அமர வைக்கும் அரசியலை பாஜக நடத்துகிறது. மறுபுறம் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களின் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. பாஜக வெற்றியின் மீதான விமர்சனம் மற்றும் சந்தேகத்திற்கிடையில் ஜூன் 10, 2026 அன்று கொல்கத்தாவில் இருந்த 10 தொகுதிகளின் 4000 வாக்கு எந்திரங்கள் மர்மமான முறையில் எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எரிப்பு வாக்கு எந்திரத்தின் மூலமாக நடந்த தேர்தல் மோசடியின் விளைவு என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

ஏனென்றால் மேற்கு வங்கத்தில் 88% முஸ்லீம் மக்கள் உள்ள ஒரு வாக்கு சாவடியில் 97% வாக்கினை பெற்றுள்ளது பாஜக. ராஜர்ஹாட் நியு டவுன் தொகுதியில், வாக்குச் சாவடி எண் 164 -ல் மொத்த வாக்குகள் 656. அதில் பிஜேபி 637, திரிணாமுல் காங்கிரஸ் 5, சிபிஎம் 1 வாக்கு.
அந்த ஊரின் பஞ்சாயத்து உறுப்பினர் CPI(M) கட்சியை சேர்ந்தவர். அவர் வீட்டிலேயே 8 ஓட்டுகள். அனைவரும் அந்த சாவடியில் அவருக்கே வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்தல் முடிவில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே உள்ளது. மீதி ஓட்டு என்ன ஆனது என்ற கேள்வியை CPIM நபர் எழுப்புகிறார்.
மேலும் கடைசி சுற்றுக்கு முன்பு வரை 316 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருந்துள்ளார் பாஜக வேட்பாளர். இறுதி சுற்றில் அந்த வாக்குச்சாவடி வாக்குப்பெட்டி எண்ணி முடித்தவுடன் 316 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நிரூபிப்பதற்கு இப்போது ஆதாரம் இல்லை. ஏனென்றால் அவையே தீ விபத்து என்ற பெயரில் எரிக்கப்பட்டு விட்டன. ஒரு வாக்கு எந்திரத்தில் நடந்த பித்தலாட்டமே இப்படி என்றால், நான்காயிரம் வாக்கு எந்திரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது புகை மூட்டமாகிப் போனது.
இப்படி தேர்தலுக்கு முன்பு நடந்த மதவாத பிரச்சாங்கள், வாக்கு எந்திரத்தை வைத்து நடந்த தேர்தல் பித்தலாட்டங்கள், தேர்தலுக்கு பின்பு மாநில கட்சிகளின் உடைப்பு என ஜனநாயகத்தை முற்றிலும் சிதைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.
எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு விலை பேசி, NCPI போன்ற லெட்டர் பேட் கட்சி மூலம் விலைக்கு வாங்கி, தனக்கு எதிராக வாக்களித்தவர்களையும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்ளும் பாஜக-வின் அரசியல் தந்திரம் தமிழ்நாட்டின் பக்கமும் திரும்பியிருக்கிறது. இவை அனைத்தும் மற்ற மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுக்கு நடந்த பாஜகவின் உடைப்பு அரசியலே. குறிப்பாக கடந்த 12 ஆண்டு கால பாஜக மோடி ஆட்சியில் புதிய சட்ட மசோதாக்களை தோல்வியடைந்ததில்லை, ஏப்ரல் 2026 அன்று தொகுதி மறுவரையறை தோல்வியுற்றதால், எனவே பாஜக தனது புதிய திட்டங்களை அமல்படுத்த மாநிலங்களை பிளவுப்படுத்துகிறது. அதிமுகவை ஐந்தாண்டுகளுக்கு முன்பு உடைத்து ஒரு திராவிடக் கட்சியை வீழ்ச்சியின் பாதையில் கொண்டு வந்து விட்டது பாஜக. இன்னும் ஒரு திராவிட கட்சியான திமுகவையும் வீழ்த்தும் வலையையும் தயாராக்கிக் கொண்டிருக்கிறது. ஏன்னெனில் திமுக கூட்டணியில் 39 எம்.பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்காக களம் இறக்கப்பட்டிருப்பவரே அண்ணாமலை.

மோடி அமித்சா ஆசிர்வாதத்துடன் ‘we the leader’ என்னும் அமைப்பைத் துவங்கியிருக்கிறார் அண்ணாமலை. இதனைப் பின்னர் கட்சியாக மாற்றுவோம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு புரியும் வண்ணம் மத்திய அரசுக்கு அரசியலைப் பேசத் தெரியவில்லை என்பதற்காக தனியாக ஆரம்பிப்பதாக பேசியதிலிருந்து, அவர் மத்திய பாஜகவை எதிர்த்து வரவில்லை, அவர்களின் இந்துத்துவ அரசியலை தமிழ்நாட்டுக்கு புரியும் மொழியில் கொண்டு சேர்க்க வந்தவராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வது தெளிவாகிறது. இங்குள்ள இடைநிலை சாதியினரின் முகமாக அவரை உருவாக்க ஆர்எஸ்எஸ், பிஜேபி-யின் செயல்பாடுகளும் தொடங்கிவிட்டன.
தமிழ்நாட்டு கட்சிகள் மேற்கு வங்காள அரசியலை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்று மேற்கு வங்காளத்தில் நடப்பவைதான் நாளை தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. மம்தா பானர்ஜி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த புதிதில் பல்வேறு கட்சிகளில் இருந்து நிறைய பேர் அந்த கட்சியில் சென்று இணைந்தார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டது. அவர்கள்தான் இன்று கட்சியை உடைத்து வெளியேறி இருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டியவை.
மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரசின் உடைப்பும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்களும் பாஜகவின் ஒரே மாதிரியான உடைப்பு அரசியலின் இரண்டு வெவ்வேறு முகங்கள். முன்பு, தமிழ்நாட்டில் அதிமுகவை உடைத்த பாஜகவின் அரசியல் சூத்திரம், இப்போது திரிணாமுல் காங்கிரசை உடைக்கும் வேகம் போல, அடுத்ததாக தமிழ்நாட்டில் திமுகவை குறி வைத்து உடைப்பு அரசியல் நடக்குமென்பது பாஜகவின் உடைப்பு அரசியலைப் புரிந்த பார்வையாளர்களின் எச்சரிக்கையாகும்.