நீதி கிடைப்பதற்கு காரணம் பக்தியா? போராட்டமா?

‘ஜெய் பீம்’ போன்ற படங்கள், சமூக நீதிக்காக தன் வாழ்கையை பணயம் வைத்து போராடிய வழக்கறிஞர் சந்துரு போன்ற மனிதர்களை முன்னிறுத்தி, நீதித்துறை மேல் மக்களுக்கு நம்பிக்கை விதைத்தன. ஆனால் சமீபத்தில் வந்த ‘கருப்பு’ படம், அந்த நம்பிக்கையை வேரோடு பிடுங்கி எறிகிறது. நீதிமன்றத்தில் நடக்கும் அநீதி, ஊழல், முறைகேடு எதையும் மனித முயற்சியால் தீர்க்க முடியாது. நீதிமன்றத்தின் எல்லையில் நிற்கும் கருப்புசாமி வந்தால்தான் தீரும் என்று மக்கள் மனதில் விதைக்கிறது.

கேரளாவில் வசிக்கும் ஒரு தந்தை, தன் மகளுக்கு வந்த நோயை குணப்படுத்த சென்னைக்கு வருகிறார். சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், வீட்டிலிருந்த நகைகளை எடுத்து வருகிறார்கள். அந்த நகைகள் திருடப்படுகிறது. காவல் நிலையம், நீதிமன்றம் என அலைகழிக்கப்படுகிறார்கள்.

வழக்கறிஞரும், நீதிபதியும் அந்த வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து, பணம் பறிக்கிறார்கள். கடைசியில் அவர்கள் நீதிமன்றத்தின் எல்லையில் உள்ள கருப்புசாமியை வேண்டுகிறார்கள். கருப்புசாமியும் வருகிறது.

படத்தின் வில்லன் கருப்புசாமியிடம், “நீ தெய்வமாக இருந்தாலும், இங்கு நடக்கும் மோசடிகளை உன்னால் தடுக்க முடியாது” என்று கருப்பு சாமியிடம் ஒரு சவால் விடுகிறான். மனித சக்தியாக வரும் கருப்பு சாமியினால் நீதித்துறையில் உள்ள அநீதியை மாற்ற முடியாது என்பதே உறுதியாகிறது. இறுதியில் கருப்பு சாமி தன் தெய்வ சக்தியைப் பயன்படுத்தி, நீதித்துறையை சீரமைத்து நீதியை நிலைநாட்டுகிறது.

இது ஒரு எளிய, மேலோட்டமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கதை. சமூகப் பிரச்சினைகளுக்கு நிறுவன ரீதியான தீர்வுக்குப் பதிலாக, தெய்வ நம்பிக்கையிடமே திரும்புவது போல் இப்படம் உள்ளது. 

உண்மையில் நீதித்துறையில் எளியவர்களுக்கு நீதி கிடைத்திருப்பது மனிதர்களில் போராட்டத்தினால் தான். சமூகநீதி சக்திகள் தான் இதே நீதித்துறையைப் பயன்படுத்தி எளியவர்களின் நீதியை உறுதி செய்திருக்கின்றனர்.

1993-ல் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியை சார்ந்த இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்பவரை, ஒரு திருட்டு வழக்கில் காவலர்கள் பிடித்துக் கொண்டு சென்று சித்திரவதை செய்து கொன்றனர். அவருடைய மனைவி செங்கேணிக்காக வழக்காடியவரே அப்போது வழக்கறிஞர் பின்னாளில் நீதிபதியாக இருந்த சந்துரு. அவர் போராடி நீதி பெற்றுக் கொடுத்த அந்த வழக்கின் கதை தான் ‘ஜெய்பீம்’ படம்.

இந்தப் படம் நீதித்துறையில் மேல் நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தது. சமூக நீதிக்காக போராடும் மனித முயற்சியே நீதித்துறையில் ஒளிவிளக்கு என்று  மக்கள் மனதில் காட்டியது. கருப்பு படம் அந்த சிந்தனையை உடைக்கிறது. மக்களின் மன வளத்தை மழுங்கடித்து தெய்வ பக்தியே அனைத்து பிரச்சனைக்குமான தீர்வு என்பதை பதிய வைக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. உடுக்கை சத்தத்திற்கு சாமியாடும் கிராமத்து பெண்களைப் போல, டிஜிட்டல் காட்சி, அதிர்வு இசையினால் நகரத்து பெண்களையும் சாமியாட வைத்திருக்கிறது இப்படம்.

அது மட்டுமல்ல, ஜெய்பீம் படத்தில் நீதி பெற்றுத் தரும் காட்சியில் வைக்கப்பட்ட ‘மண்ணிலே ஈரமுண்டு’ பாடலை நகைச்சுவை காட்சிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த ‘போராடடா, ஒரு வாளேந்தடா’, பாடலை வில்லன்கள் நடத்தும் போராட்டத்திற்கு பின்னணி பாடலாக்கி இருக்கிறார்கள். ‘இவர்களை விட்டால் மெரினாவில் சென்று அமர்ந்து விடுவார்கள்’ என்னும் வசனம், ஜல்லிக்கட்டு போன்ற மக்கள் உரிமை சார்ந்த  போராட்டங்களை கொச்சைப் படுத்துகின்றன.

சாதிய சமூகத்தில் சமூக நீதி வழக்கறிஞர்கள் எண்ணற்ற இன்னல்களைத் தாண்டி தங்கள் வாதங்களால் போராடி எளிய மக்களுக்கு நீதி வாங்கிக் கொத்திருக்கின்றனர். மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் வாதாடிய வழக்கே அதற்கு சான்று. யுவராஜ் என்னும் சாதி வெறியன், தனது சாதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் உடன் பேசிக் கொண்டிருந்ததற்காக கோகுல்ராஜ் என்னும் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்து கொன்றான். அவன் சாதிய வட்டங்கள் யுவராஜிக்கு ஆதரவாக நின்றன. முக்கியமான சாட்சிகள் மாறினாலும் மின்னணு ஆதாரம், சிசிடிவி ஆதாரம் வைத்து யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தார் மூத்த வழக்கறிஞர் ப. பா மோகன் அவர்கள். கடவுளின் மீது வைக்கும் அச்ச உணர்வைக் கொண்டு சமூகநீதி வழக்கறிஞர்கள் போராடுவதில்லை. எளிய மக்கள் மீதான அன்பை மையமாகக் கொண்டே நீதி கிடைக்க போராடுகிறார்கள்.

அனைத்துத் துறைகளிலும் உள்ளது போல, நீதித்துறையிலும் நிறுவன ரீதியாக பல குறைபாடுகள் உண்டு. அவற்றை சரி வேண்டியதும் மக்களின் கடமைதான். சமூக சிந்தனை மாறினால் அமைப்பு முறை மாறும். அது மனித சக்திக்கு மட்டுமே உண்டு. நீதியை கடவுளின் கையில் ஒப்படைப்பதும், கடவுளின் மீதான அச்ச உணர்வைக் கொண்டு வழக்கறிஞர்கள் வழக்காட வேண்டும் என்பதும் பக்தி சுழலுக்குள் மனித சிந்தனையை முடக்கும் செயலன்றி வேறல்ல..

மக்களின் வேதனைக்கு வடிகாலாக இருப்பதே தெய்வ பக்தி. தமிழர் தெய்வங்கள் யாவும் முன்னோர் வழிபாட்டின் வகையைச் சார்ந்தவையே. முருகன், கருப்பு, அம்மன், அய்யனார், மாரி, அழகர்சாமி என நீளும் தெய்வங்களின் பட்டியல் அனைத்தும் நம் முன்னோரை வணங்கும் வழக்கங்களில் இருந்து வந்தவையே. மக்களுக்காக வாழ்ந்து  மறைந்தவர்களே தெய்வம் ஆக்க்கப்பட்டார்கள். காலவோட்டத்தில்  பல புனைவுகளும் கதைகளும் உண்மை கதைகளில் இடைச் செருகலாக்கப்பட்டன.

இதையே நம் பண்பாட்டு ஆய்வாளர்கள் தொ. பரமசிவன் அவர்களும், பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களும், ஏனைய தமிழ் விழுமியங்கள் சார்ந்த ஆய்வாளர்களும் தங்களது வாழ்க்கையை இந்த ஆய்வுகளுக்காக அர்ப்பணித்து கண்டறிந்தவையாகும். இந்த ஆய்வுகளை மக்களிடம் சேர்த்து வேண்டும் என்பதற்காகவே மே 17 இயக்கம் இந்த அறிஞர்களைக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் மூன்று வருடங்களாக அறிஞர் அவையம் நடத்துகிறது.

இப்படி பல அறிவுசார் தளங்களில் மக்களின் சிந்தனையை வளர்க்க பலர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில், ஒரு பானை சோற்றில் ஒரு துளி விஷம் கலப்பது போல, இப்படிப்பட்ட படங்களும் இடையே வந்து தலை காட்டுகின்றன.

‘கருப்பு’ போன்ற படங்கள் நாட்டார் தெய்வத்தின் பெயரால் வந்தாலும், பக்தியை டிஜிட்டல் மயமாக்கி காட்டுவது இந்துத்துவ அரசியலின் நோக்கத்திற்கே உதவுகிறது.

பிரம்மாண்டமான காட்சிகள், பயமுறுத்தும் இசை, கற்பனைக் கதை ஆகியவற்றால் வெற்றி பெறும் இந்தப் படங்கள், அறிவியலையும் கலையும் இணைத்து மக்களை மீண்டும் பிற்போக்குத் தனத்திற்குள் தள்ளுகின்றன. அப்படிப்பட்ட படைப்பாக வெளிவந்திருக்கும் படம்தான் ‘கருப்பு’

தமிழ் சமூகத்தின் சிந்தனை வளர, மனிதனின் போராட்டமே நீதியை பெற்றுத் தரும் என்று சொல்லும் ‘ஜெய் பீம்’ போன்ற படங்கள் தானே தவிர, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் ‘கருப்பு’ போன்ற படங்கள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »