அரசியலற்ற ராகவா லாரன்சின் அரசியல் குதிப்பு ஆபத்தானது – தோழர் கொண்டல்சாமி நேர்காணல்

அண்ணாமலை, லதா ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸின் அரசியல் அறிவிப்புகள் மற்றும் பின்னணி குறித்தும், அவர்களின் அரசியலற்ற தன்மை எப்போதும் எதிர்க்கப்பட வேண்டியதை குறித்தும், ‘அரசியல் வெங்காயம்’ ஊடகத்திற்கு (ஜூன் 15, 2026) மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல் சாமி அளித்த நேர்காணல்:

தொகுப்பாளர்: பார்வையாளர்களுக்கு வணக்கம். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமியுடன் நேர்காணலை காண்போம்…. தோழர் வணக்கம்!

தோழர் கொண்டல்சாமி: வணக்கம் தோழர்!!

தொகுப்பாளர் கேள்வி: தேர்தலுக்கு முன்பிருந்த அரசியல் சூழலை விட தேர்தலுக்குப் பிறகான சூழல் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. திடீரென அண்ணாமலை வந்தார். திடீரென லதா ரஜினிகாந்த் ஒரு இயக்கம் தொடங்கினார். இப்படி கூட்டணி அரசியல் ஒருபுறம் இருந்தாலும், புது புது இயக்கங்களும் கட்சிகளும் ஒருபுறம் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் திடீரென ’ராகவா லாரன்ஸ்’ வந்திருக்கிறார். அவர் “நான் ஜல்லிக்கட்டிலிருந்தே தீவிரமாக அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல கோரிக்கைகளை மே 17 இயக்கம்தான் வடிவமைத்திருக்கிறது. அதில் தீவிரமாகக் களத்திலும் இருந்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களுக்கு ராகவா லாரன்ஸின் அர்ப்பணிப்பு, தியாகம் இதெல்லாம் நன்றாக தெரிந்திருக்கும். அந்த வகையில் இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தோழர் கொண்டல்சாமி: எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்பதே மே 17 இயக்கத்தின் விருப்பம். அதற்காகத்தான் நாங்கள் இயக்க அரசியல் செய்கிறோம். மக்கள் எல்லோருக்கும் அரசியல் தெளிவு வேண்டும், அரசியல் பேச வேண்டும். எந்த நாட்டில் அரசியல் உணர்வு பெற்ற மக்கள் இருக்கிறார்களோ, அந்த நாட்டில் எந்தத் தவறான பாதையிலும் ஆட்சியாளர்கள் செல்லாமல் மிக வளர்ந்த நாடாக மாறும். இதில் நான் மட்டும் இல்லை என்பதே மானுட வரலாறு.

அந்த வகையில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் எல்லாரையும் வரவேற்கலாம். ஆனால் எதற்காக வருகிறீர்கள்? அதுதான் இப்போது கேள்வி. உங்களுடைய அரசியல் என்ன? ஒருவர் (அண்ணாமலை) “பிஜேபி, ஆர்எஸ்எஸ் என்ன பேசுமோ அதையேதான் நானும் பேசுவேன்… ஆனால் தனியாக பேசுவேன்” என்கிறார். இன்னொருவர் (லதா ரஜினிகாந்த்) தன்னுடைய சொந்த கட்டடத்துக்கு மாநகராட்சி வாடகை கட்ட சொன்னால், அந்தக் கட்டணத்தையே கழித்து கொள்ளுங்கள் என சொல்லும் அளவுக்கான சமூக சிந்தனை உள்ளவர். அவர் தற்போது “மக்கள் மன்றம்” ஒன்று உருவாக்கி உள்ளார். இதெல்லாம் போதாது என இன்னொருவர் (ராகவா லாரன்ஸ்) “நான் எல்லாருக்கும் சாப்பாடு போட்டு இருக்கிறேன், தண்ணீர் பாட்டில் கொடுத்திருக்கிறேன், நிறைய இலவசங்கள் கொடுத்திருக்கிறேன், சீமான் கூட எக்ஸ் வலைதளத்தில் சண்டை போட்டு இருக்கிறேன்… அதனால் நான் அரசியலுக்கு வருகிறேன்” என்கிறார்.

நான் (கொண்டல்) கேட்கிறேன்: இதெல்லாம் ‘ஒரு பெரிய சமூக சீர்திருத்தமான வேலை’ என்றால் அரசியல் என்பதை எவ்வளவு கேவலமாக நினைக்கிறீர்கள் என்பது புரிய முடிகிறது. உங்களுடைய இந்த அரசியலற்ற தன்மை எப்போதும் எதிர்க்கப்பட வேண்டியது.

ராகவா லாரன்ஸுக்கு மிக தெளிவாக சொல்கிறோம்: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோரையும் வரவேற்கிறோம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் நீங்கள் பேசக்கூடிய அரசியல் இந்த மக்களுக்கு, இந்த மண்ணுக்கு எதிராக இருந்தால் அதை எதிர்க்கிறோம். இதுவரை லாரன்ஸ் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் அப்படிப்பட்ட எந்த அரசியலும் செய்யாத பொழுது, “நான் அரசியலில் குதிக்கப் போகிறேன்” என சொல்கிறார். அரசியலுக்கு வருகிறேன் என கூட சொல்லலாம். வருபவர்கள் எல்லாம் அரசியலில் குதிக்கிறார்கள் என்கிறார்கள். அது என்ன குளமா? குட்டையா? என தெரியவில்லை.

தொகுப்பாளர்:  அதாவது இதற்கு முன் அது சாக்கடையாக இருந்தது. இப்போது விஜய் வருகைக்கு பிறகு அது நீச்சல் குளம் போல சுத்தமாகி விட்டது போல! அதனால் குதிக்கப் போகிறேன் என்கிறார்கள் போல!

தோழர் கொண்டல்சாமி: இதுதான் மிக ஆபத்தானது. ராகவா லாரன்ஸ் “அம்மா நான் அரசியலுக்கு போகிறேன்” என கேட்டாராம், அதற்கு “தம்பி, அரசியல் மிக ஆபத்தானது. சாதி இருக்கும், மதம் இருக்கும், அது சாக்கடை அது உனக்கு ஒத்துக்காது, அதனால் நீ போகாதே” என சொன்னார்களாம். இப்போது “பார் அம்மா, தம்பி எல்லாம் வென்றுள்ளார்கள்” எனக் கேட்டேன், “அப்போது நீ அரசியலுக்கு போ” என அம்மா ஆசீர்வாதத்தோடு வந்துள்ளேன் என்று பேசியிருக்கார்.

ஆனால் இப்போதும் அரசியல் எப்படி இருக்கிறது? என்ன மாற்றம் நடந்திருக்கிறது? ஒரு ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த ஆட்சி மாற்றத்தினாலயே அரசியலே தலைகீழாக மாறிவிட்டது என்று லாரன்ஸ் பேசுவது மக்களை ஏமாற்றுவதுதான்.

தொகுப்பாளர்: மே 17 இயக்கத்திடம் ஏன் இது குறித்தான விவாதம் நடத்துகிறோம் எனில், இங்கு ஊடகத்தில் இயங்குபவர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகிறது. தொடர்ந்து களத்தில் போராடிக் கொண்டு இருக்கின்ற இயக்கங்கள், கட்சிகள் எல்லாம் ஒரு புறம் நிற்க, அந்த களம் என்னவென்று அறியாதவர்கள் வந்து திடீரென “மாற்றம்” என சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஊடகத்திலிருக்கும் நமக்கே அச்சமாக இருக்கும்போது, தொடர்ந்து தீவிரமாக களத்தில் இருக்கிறீர்கள்… உங்கள் பார்வையில் அது சமூகத்தை எப்படி பாதிக்கும்?

தோழர் கொண்டல்சாமி: விஜய்யுடைய அரசியல் பிரவேசம், அரசியலில் வெற்றி பெற்றதை இரண்டு விதமாக பார்க்க வேண்டி இருக்கிறது. ஒன்று: பலம், இன்னொன்று பலவீனம்.

  • பலம் என்ன? அது “அரசியலில் யார் வேண்டுமனாலும், எளிமையானவர்கள் வந்து விடலாம்” என்கிற ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அது வரவேற்கக்கூடியதுதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. மேலும் அரசியலற்று இருந்தவர்கள் எல்லாருமே “அரசியல் பேசலாம், விஜய்காக அரசியல் பேசலாம்” என்கிற பார்வை வந்துள்ளது.
  • பலவீனம் என்ன? அரசியலற்ற தன்மை வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு சித்தாந்தம், தத்துவம், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் இப்படி எல்லாம் பேசுவதை விட்டு “நாங்கள் ரீல்ஸ் போடுகிறோம். இங்கே பார்த்தீர்களா சாக்கடை, இதை யார் அடைப்பார்?” என பேசினால் ஓட்டு வாங்கி விடலாம் என்கின்ற இந்த அரசியலற்ற தன்மை மிக ஆபத்தானது.

உதாரணமாக வயதான பாட்டிக்கு பணம் கொடுத்து உதவி செய்வது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலுமே மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர் இருக்கிறார்கள். இது அரசியலுக்கு வருவதற்கான ஒரு தகுதி கிடையாது. “நான் நன்றாக எல்லாருக்கும் சாப்பாடு போடுவேன்” என்றால் உணவக கடைக்காரர் மட்டும்தான் அரசியலுக்கு வர முடியும். இது மட்டுமே அரசியல் கிடையாது. “நான் எல்லாருக்கும் துணிமணி எடுத்து கொடுப்பேன்” என்றால், ஜவுளி கடைக்காரர் அரசியலுக்கு வரப்போகிறாரா? அது கிடையாது.

அரசியல் என்பது இந்த மக்களுக்கு எது அன்றாட தேவையோ, அது அவர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும். உணவு இலவசமாக கிடைக்க வேண்டும். “இலவசம்” நீங்கள் நினைக்கிற மாதிரி, சினிமா படத்தில் காட்டியத்தைப்போல தூக்கி போட்டு உடைக்கிற விடயம் எல்லாம் கிடையாது. இதெல்லாம் இன்றியமையாதது. இது அவர்களுக்கு கிடைத்தால், அவர்களுடைய வாழ்வு தன்னால் முன்னேறும். அப்படி முன்னேறும் பொழுது அது அந்த சமூகத்தினுடைய முன்னேற்றமாக மாறும். அந்த முன்னேற்றம் அந்த நாட்டின் முன்னேற்றமாக மாறும். இதுதான் தத்துவம். உலகத்தில் எங்கு நடந்தாலும் இதுதான் தத்துவம்.

அதற்கான அரசியலில் அடிப்படையாக சொல்கிறேன். மிக தத்துவார்த்த ரீதியாக சொல்லவில்லை. எதெல்லாம் மக்களுக்கு இன்றியமையாததோ, அதெல்லாம் பணம் கொடுத்து வாங்குகிறான். எதெல்லாம் தேவையில்லையோ, அதெல்லாம் இலவசமாக வருகிறது. இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

இந்த அரசியலற்ற தன்மையை “இதுதான் அரசியல்” என சொல்லிகொண்டு, “நான் அரசியலில் குதிக்கப் போகிறேன்” என சொல்வதும் வேடிக்கை. ஏனெனில் உங்கள் (லாரன்ஸ்) அம்மாவிடம் கேட்டு, முடிவு எடுத்துவிட்டு, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பாக நிற்கும் முடிவு எடுத்துவிட்ட பிறகு, அது மக்களிடம் கேட்பது என்பதாகுமா?

தொகுப்பாளர்: அவர் எம்எல்ஏ-வாகவே தன்னை முடிவு செய்துகொண்டார். அதற்கு அடுத்த நிலையில் தன்னை அமைச்சராக நினைத்துக்கொண்டார்.

தோழர் கொண்டல்சாமி: என்னென்னமோ நினைக்கலாம் என வைத்துக் கொள்ளுங்கள். அது அவருடைய உரிமை, அவருடைய கனவு, அவருடைய கற்பனை. அதில் நாம் தலையிடவில்லை. ‘லாரன்ஸ் இந்த சமூகத்துக்கு என்ன செய்ய போகிறீர்கள்? இதுவரைக்கும் உங்களுடைய செயல்பாடு என்ன?’ என்பதே நம் கேள்வி.

தொகுப்பாளர்: அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்ததிலிருந்து தீவிரமாக இயங்கியதாகவும், அதில் பெரும் பங்கு அவருக்கு இருப்பதாகவும் சொல்கிறார். அதைத்தான் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.

தோழர் கொண்டல்சாமி: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் பங்கு இவர்களுக்கு யாருக்கும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், பெரிய பெரிய ஆண்ட ஆளுகின்ற கட்சிகளுக்கு கூட பங்கு கிடையாது. அது ஒரு தன்னெழுச்சியான போராட்டம்.

அந்த தன்னெழுச்சியான போராட்டம் எதனால் வந்தது என்பதுதான் முக்கியம். இன்று வரைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தினுடைய நியாயத்தை யாரும் பேசுவது கிடையாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது வெறும் ஜல்லிக்கட்டுக்காக வந்த மக்கள் கூட்டம் அல்ல.

நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன் திடீரென ”பொங்கலுக்கு விடுமுறை இல்லை” என ஒன்றிய அரசு சொன்னது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், “அதற்கான வழிமுறை ஒன்றிய அரசுக்கு தெரியவில்லை” என சொன்னது. இப்படி தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்சியாக வஞ்சித்துக்கொண்டிருந்ததை, இங்கு இருக்கின்ற மே 17 இயக்கம் போன்ற இயக்கங்கள், ஒன்றரை வருடமாக, போராடி போராடி அந்த மக்களுக்கு சொன்னதின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு.

“ஜல்லிக்கட்டு தடை” என்று சொன்னபோது, அந்த ’பீட்டா’ என்கிற அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் போராட்டம் உருவானது. அது வெறுமன ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டும் கிடையாது. மேற்கு உலக நாடுகளால் எப்படி ஒரு புரட்சியை உருவாக்குவதற்காக “எல்லோ புரட்சி”, “குடை புரட்சி” என புதிது புதிதாக புரட்சி உருவாகின்ற மாதிரி நடந்த போராட்டம் கிடையாது. தமிழ்நாடு ஒன்றரை வருடமாக அடக்கி அடக்கி வைக்கப்பட்டதனுடைய வெளிப்பாடாக இளைஞர்கள் போராடியதுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

ஆனால் அந்த போராட்டத்தின் நோக்கத்தையும், அந்த போராட்டம் எதற்காக, என்ன நோக்கம் என்பதையும் சரியான வழியில் கொண்டு போனதில் மே 17 இயக்கத்தின் பங்கு பெரியது. மே 17 இயக்கம், அந்த போராட்டம் நடந்த அத்தனை காலமும் காலையிலிருந்து இரவு வரை ஒரு நாள் விடாமல் முழுக்க மக்களுடன் இருந்திருக்கிறோம். அங்கு மே 17 இயக்கம் போன்ற இயக்கங்களை தவிர, வேறு யாரையுமே அந்த இளைஞர்கள் உள்ளே விடவில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இஸ்லாமியர்களுடைய பங்கு மிக பெரியது. அவர்கள் தன்னெழுச்சியாக வந்து ஒவ்வொருவருக்கும் பிரியாணி, தண்ணீர் போன்ற உணவுப் பொருட்கள் கொடுத்தனர். அவர்கள் யார்? என தெரியாது, முகமே காட்டாமல், எந்த நோக்கமும் இல்லாமல் உதவினர். இத்தனைக்கும் ஜல்லிக்கட்டுக்கும்  இஸ்லாமியர்களுக்கும் உள்ள சம்பந்தம் கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் அவ்வளவு உதவி செய்தார்கள். ஒரு அமைப்போ, ஒரு கட்சியோ, “நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு உதவி செய்தோம்” என இன்றைக்கு வரைக்கும் யாராவது சொல்லியிருக்கிறார்களா?

தொகுப்பாளர்: யாரும் விளம்பரம் செய்யவில்லை.

தோழர் கொண்டல்சாமி: எல்லா இடத்திலும் இந்த மாதிரி உதவிகள் சத்தம் இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி விளம்பரப்படுத்திக் கொண்டார்களா? ஆனால் லாரன்ஸ் “ஒரு கோடி கொடுத்தேன்” என சொல்கிறார். யாரிடம் கொடுத்தீர்கள்? எதற்கு கொடுத்தீர்கள்?

தொகுப்பாளர்: அதுவும் பணமதிப்பிழப்பின் போது கொடுத்தார். அப்போது 4000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கமுடியாது!

தோழர் கொண்டல்சாமி: நாம் அவர் செய்யும் உதவியை கொச்சைப்படுத்தவில்லை. அதை அவர்தான்(லாரன்ஸ்) கொச்சைப்படுத்துகிறார். இந்த சமூகத்தில் தான் செய்யும் உதவியை வெளியில் சொல்லாமல் நிறைய பேர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் பல கல்வி நிறுவனங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்கிறார்கள். மருத்துவமனையில் உதவி செய்கிறார்கள். யாரும் “தானம் செய்தோம்” என சொல்லிக்கொள்வது கிடையாது.

அவர் ஒரு திரை பிரபலம். அவர் உதவி செய்வதனால் நான்கு பேர் அதைப்போல செய்வார்கள் என்கின்ற ஒரு காரணத்துக்காக அதை அங்கீகரிக்கலாமே ஒழிய, அதுவே லாரன்ஸ் அரசியலுக்கு வருவதற்கான அங்கீகாரம் கிடையாது.

லாரன்ஸுடைய அரசியல் நிலைப்பாடு என்ன? சமூகத்தின் மீது உங்கள் மதிப்பீடு என்ன? உங்கள் செயல்பாடு என்ன என்பதுதான் முக்கியம். உங்கள் செயல்பாடு ஏதாவது இதுவரைக்கும் தமிழுக்கும், தமிழருக்கும் சார்பாக இருந்துள்ளதா? தமிழ்நாட்டில் எத்தனை போராட்டம் நடந்துள்ளது. ஏதாவது ஒரு போராட்டத்துக்கு வந்து இருக்கிறாரா? ஜல்லிக்கட்டுக்கு ஏன் வந்தார்? விளம்பரம் கிடைக்கும் என வந்தார்.

தொகுப்பாளர்: அவர் அம்மா “அது சாக்கடையாக, பிரச்சனையாக இருக்கும் வரைக்கும் நீ போகாதப்பா, அது சுத்தம் ஆகிவிட்டது, நீ போ” என சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு அரசியல் பிரச்சனை இருக்கும் போது நீ போகாதே என சொல்லியிருக்கிறார்.

தோழர் கொண்டல்சாமி: பிரச்சனை இருக்கும் போது ஒருவன் அரசியலுக்கு வருகிறான் எனில், அவன்தானே போராளி!

தொகுப்பாளர்: ஒரு இடத்தில் பிரச்சனை இருக்கும் போது தலைவன் வருவான். பிரச்சனை இல்லாத போது நடிகன் வருவான் என்பது போல!

தோழர் கொண்டல்சாமி: அவ்வளவுதான்! இதற்கு மேல் என்ன சொல்வது? இப்படித்தான் வருகிறார்கள். இந்த அரசியலை நாங்கள் முழுக்க முழுக்க எதிர்க்கிறோம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், கண்டதையும் சொல்லி அரசியலுக்கு வரக்கூடாது.

அரசியல் என்பது மக்கள் பணி. உங்களுடைய தத்துவத்தையும், நோக்கத்தையும் சொல்லுங்கள். அதை உங்களுடைய செயல்பாடு தீர்மானிக்கும். இன்றைக்கு புதிய முகமல்ல ராகவா லாரன்ஸ், அவர் 20 ஆண்டுகளாகவே அறிமுகம்தான். ஒரு சினிமா நடிகர். மக்களை மகிழ்விக்கிறேன் என்ற பெயரில் பேய் படமாக எடுத்தீர்கள். அந்த விமர்சனம் வேறு. சரி தவறெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம். அதற்காக இதையெல்லாம் தகுதியாக நினைத்து கொண்டு “தேர்தலில் நிற்கப் போறேன்” என சொல்கிறார். ஏதோ “தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அரசியல் கெட்டுப் போயிருந்தது போலவும், நாங்கள் வந்து மாற்றப் போறோம்” என்கின்ற மாதிரி பேசுவது எல்லாம் அதிகப் பிரசங்கித்தனம். இத்தகைய பேச்சை பேசாதீர்கள்.

தொகுப்பாளர்: ரஜினியை பிரதிநித்துவப்படுத்துகின்ற மாதிரி லாரன்ஸ் தன்னை அடையாளப்படுத்துகிறார். ரஜினி அரசியலுக்கு வரும்போது இணைந்து பயணிப்பதாக இருந்தால், “நான்(லாரன்ஸ்) சுகாதாரத்துறை அமைச்சர் ஆவதற்கெல்லாம் திட்டம் போட்டு இருந்தேன்” எனவும், ரஜினி ஆதரவு தற்போது முழுதாக தனக்கு இருப்பதாகவும், அவரின் ரசிகர்கள் எல்லாம் தன் பக்கம் இழுக்கின்ற மாதிரி பேசுகிறாரே?

தோழர் கொண்டல்சாமி: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் நிறைய பேர் “இயக்கம், கட்சி” போன்றவற்றை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக மூன்று பேர். 1. அண்ணாமலை, 2. லதா ரஜினி, 3. ராகவா லாரன்ஸ்.

தொகுப்பாளர்: இந்த மூன்று பேருமே ரஜினியை மையப்படுத்தியே இருக்கிறார்களே!

தோழர் கொண்டல்சாமி: ரஜினி எதை மையப்படுத்தி இருக்கிறார்?

தொகுப்பாளர்: ஆர்எஸ்எஸ்-ஐ மையப்படுத்தி!

தோழர் கொண்டல்சாமி: அவ்வளவுதான். ரஜினி குருமூர்த்தி வழியாக ஆர்எஸ்எஸ் உடைய கொள்கையை பேசக்கூடிய ஒரு நபர். அவரை மையப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார், இவரும் அவரை மையப்படுத்தியே பேசுகிறார். இந்த இரண்டு பேரும் “நாங்களே ஒரு தனி இயக்கம்” என்று சொல்கிறார்கள்.

இதில் என்ன நடக்கிறது எனில், ஆளாளுக்கு ஒரு கடையை திறந்து, நல்ல வியாபாரம் நடந்து கொண்டிக்கின்ற இடத்தில், அந்த வியாபாரத்தை பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் அதே பகுதியில் அதே கடையை பல பேர் திறந்தால், மக்கள் சிதறிப் போவார்கள் அல்லவா! அதே  சிந்தனை தான், அரசியலை ஒரு வியாபாரமாக நினைத்து இந்த கும்பல் இறங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் சக்தி ஒரு பக்கம் குவியக் கூடாது. அது தவெக பக்கம் போகக் கூடாது, நாளைக்கு விஜய்க்கு எதிரான மனநிலை வரும்பொழுது, அது திமுகவுக்கு சாதகமாக போகக்கூடாது என்கின்ற நோக்கத்தில் ஓட்டை பிரிக்கின்ற வேலையை பிஜேபி அரசு செய்கிறது. அத்தகைய சதிதான் இது.

இந்த நபர்களினுடைய அரசியல் வேரை பிடித்துப் பார்த்தால், இது எல்லாமே ஒரு நூலில் கட்டப்பட்டிருக்கும். அந்த நூலை பிடித்துப் போனால், ஆர்எஸ்எஸ், பிஜேபி வரும். இதுதான் இவர்களுடைய அரசியல். தற்போது இதுதான் நடக்கிறது. பாஜக ஆர்.எஸ்.எஸ் என்ன வேடம் கட்டி வந்தாலும் தமிழ்நாடு உங்களை ஒரு நாளும் அங்கீகரிக்காது, ஏற்றுக்கொள்ளாது. அதுதான் உண்மை.

தொகுப்பாளர்: அப்போது ரஜினியை மையப்படுத்தி பேச லாரன்ஸை விஜய் அனுமதிப்பாரா? ஒருவேளை அது விஜய்க்கு எதிராக கூட முடியலாம். ராகவா லாரன்ஸ் ரஜினியை மையப்படுத்தி தன்னை ஒரு பிம்பமாக உருவாக்கி, இன்றைக்கு விஜயிடம் போய் சேர வேண்டும் என நினைக்கும் போது, விஜயும் கூட வலுபெறக் கூடாது என்று நினைக்கிறார்களா? அது உண்மையாக இருந்தால், அதை ரஜினி ஒத்துக்கொள்வாரா? அல்லது ராகவா லாரன்ஸ் திருச்சியில் நிற்க விஜய் ஒத்துக்கொள்வாரா?

தோழர் கொண்டல்சாமி: விஜய்க்கு இந்த அரசியல் புரியுமா? என்பது எங்களுடைய கேள்வி. இன்றைக்கு தவெகவுக்கு வருபவர்கள் எல்லாரையும் சேர்த்துக்கொண்டே இருக்கிறார். கிட்டத்தட்ட அதிமுகவினர் 50% பேர் தவெகவில் போய் சேர்ந்துவிட்டார்கள். இன்னும் யார் யார் போய் சேர போகிறார்கள் என தெரியவில்லை. இதையெல்லாம் தெரிந்து சேர்க்கிறார்களா? இல்லை “வருகிறார்கள், ஏற்றுக்கொண்டோம்” என்கிறார்களா? என்பது தவெகவின் முடிவு.

“திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்களாக பார்க்கிறோம்” என தவெக தலைவர் சொன்னார். அப்படி இருக்கும் போது தவெக ஒரு மாற்றாக, இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, அதே திராவிட கொள்கையை பேசக்கூடிய கட்சியாக சொல்கிறார்கள். ஆனால் அதிமுக கட்சியிலிருந்து பாதி பேரை தவெக கட்சியில் சேர்க்குறீர்கள், அப்போது எதையெல்லாம் மாற்றப் போகிறீர்கள்? உங்களிடம் வந்தபிறகு என்ன மாற்றத்தை கொடுக்கப் போகிறீர்கள்? அந்த புரிதல் உங்களுக்கு இருக்கிறதா?

ராகவா லாரன்ஸ் மாதிரி நபர்கள், “நான் ராகவேந்திராவுக்கு கோவில் கட்டுகிறேன்” என ஆரம்பிப்பார். அடுத்து மதத்தை கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்? அவர் கிட்டத்தட்ட சங்கி மாதிரிதான் இருக்கிறார். இவர் போன்ற ஆட்களை சேர்த்தால் தவெகவுடைய எதிர்காலத்தில் பாதிப்பு வருமா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

திரு.விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் மட்டும் கிடையாது. அவர் தவெக கட்சியுடைய தலைவர். நாளைக்கு உங்களுக்கே இதெல்லாம் ஆபத்தாக முடியாதா? என்று மே 17 இயக்கம் எச்சரிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மட்டுமல்ல, எல்லாரையும் சேர்க்கிறீர்கள். அப்படி சேர்த்துக் கொண்டு தவெக என்ன மாற்றத்தை கொடுக்க போகிறீர்கள்? உங்களுடைய நோக்கம் என்ன?

தொகுப்பாளர்: “புதுசு, மாற்று” என்பதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

தோழர் கொண்டல்சாமி: இன்னமும் அந்த நடிகர்கள் எப்படி மக்கள் மத்தியில் அந்த பிம்பத்தை கட்டி எழுப்புவார்களோ, அந்த பிம்ப அரசியல் பதிவாகாது. அது தேர்தலுக்கு முன் வேண்டுமானால் பதிவாகும். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டின் முதல்வர், ஒரு கட்சியினுடைய தலைவர், இந்த இரண்டு பொறுப்பையும் சுமக்க வேண்டிய தேவை இருக்கிறது. மக்களுடன் உரையாட வேண்டிய தேவை இருக்கிறது. இதை எல்லாம் தவிர்ப்பதும், லாரன்ஸை சேர்ப்பதும், உங்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கலாக முடியும் என்பதை நாங்கள் (மே 17) உரிமையோடு சொல்கிறோம். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

தவெக அரசியல் செயல்பாடுகளை இன்னும் தீர்க்கமாக, தெளிவாக பேச வேண்டிய, செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். செய்யுங்கள். இல்லையெனில் அது உங்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும் என கருதுகிறோம்.

தொகுப்பாளர்: தவெகவுக்கு தொடர்ந்து மே 17 இயக்கம் ஆரம்பத்தில் இருந்து ஒரு முறையான வழிகாட்டுதல் போல செய்கிறீர்கள். கரூர் சம்பவம் மற்றும் ஆட்சி அமைத்த பிறகு உங்களின் கருத்தை அவர்கள் உள்வாங்குகிறார்களா என ஏதாவது தெரியுமா?

தோழர் கொண்டல்சாமி: எங்களுடைய கருத்தை தவெக கேட்கிறார்களா என்பது தெரியாது. எங்கள் அமைப்பு தமிழுக்காகவும் தமிழருக்காகவும் பேசக்கூடிய ஒரு அமைப்பு. யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டுகின்ற இடத்தில் இருக்கிறோம். அந்தத் தவறை சுட்டிக்காட்டும் பொழுது, அதை சரிபடுத்த எண்ணுபவர்களுக்கு “இப்படி ஒன்று இருக்கிறது, கவனியுங்கள்” என அறிவுரையாக சொல்கிறோம். மாறாக “நாங்கள் இப்படித்தான் செய்வோம்” என சொல்லும் போது போராட்டத்தை நோக்கி நகர்கிறோம். இது எல்லா காலத்திலும் இருந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தபோதும், டிஎன்பிசியில் தமிழே தெரியாதவர்களெல்லாம் தேர்வு எழுதலாம் என ஆணையை மாற்றும் பொழுது அதற்கு எதிராகப் பேசினோம். அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை. போராட்டத்தை அறிவித்து, முற்றுகை நடத்தினோம். திமுக அரசு வந்தபின் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு, கோடியக்கரை மீனவர் பிரச்சனை என தொடர்ந்து போராடினோம். அதேதான் தவெகவுக்கும். இப்போதுதான் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் என்னவென்று புரியவே நாளாகும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் தவெக ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முற்போக்கு இயக்கங்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். ஒரு சனநாயக நாட்டில் ஒரு ஆளுங்கட்சியானது எதிர்கட்சி மற்றும் முற்போக்கு இயக்கங்களுடைய கருத்தையும் கேட்டு, அதன்படி செயல்பட்டால் சிறந்த ஆட்சியாக இருக்கும். அது உங்களுடைய நன்மைக்குத்தான். இல்லையெனில் தவெகவும் கடந்த கால ஆட்சியாளர்கள் எப்படி என்ன தவறு செய்து கொண்டார்களோ, அதே தவறைத்தான் செய்வீர்கள். இதில் மே 17 எந்த சமரசமும் செய்துகொள்ளாது.

உண்மையிலேயே புதிதாக வந்த தவெகவுக்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஏனெனில் அரசியலுக்கே தவெக வந்து இரண்டரை வருடம்தான் ஆகிறது. இந்த அரசியல் என்னவென்று புரிந்து கொள்வதற்கே ஆறு மாதம் ஓடிவிடும். நம் பயமே இந்த காலகட்டத்தை தமிழுக்கும் தமிழருக்கும் எதிராக இருக்கக்கூடிய ஒன்றிய அரசு கையில் எடுத்துவிடக் கூடாது என்பதே. அதனால் முன்பை விட மிக அதிகமாக சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கும். தேவைப்பட்டால் போராட்டத்தை நடத்துவோம்.

ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராக இருக்கும் பொழுது, உடனே இந்த அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் அறிவித்தோம். ஐயா வைகோ உடன் சென்ற வாரம் போராட்டத்தில் பங்கெடுத்தோம். எல்லா சனநாயக இயக்கங்களும் அப்படித்தான் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு நம்முடைய கோரிக்கையை சொல்வது இயக்கங்களின் வேலை. செய்யவில்லையெனில் போராட்டம் செய்வோம். இதை மே 17 இயக்கம் எல்லா காலகட்டத்திலும் கடைபிடிக்கும்.

தொகுப்பாளர்: ராகவா லாரன்ஸ் “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என சொல்லி விட்டு, “நான் தொடர்ச்சியாக என் கடமையை செய்து வந்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்திருக்கிறேன். அதன் பலனாக இன்றைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்று, மறுபடியும் மக்களுக்கு இன்னும் நன்மை செய்யப்போகிறேன்” என்று ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், “விஜய், ரஜினியை தவிர்த்து வேறு யார் கூப்பிட்டாலும் நான் (லாரன்ஸ்) வேலை செய்ய மாட்டேன். அப்பேற்பட்ட நான் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறேன், அதுவும் அம்மா ஆசீர்வாதத்தோடு வந்திருக்கிறேன்” என்கிறாரே, இதை எப்படி பார்ப்பது?

தோழர் கொண்டல்சாமி: “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற உதாரணமே தவறு. அப்படியெனில் லாரன்ஸ் நல்லது செய்ததால் அதன் பலனை அனுபவிக்க அரசியலுக்கு வருகிறாரா? இந்த உதாரணம் கேலி கூத்தானது.

தொகுப்பாளர்: அந்த பலனை கடவுள் கொடுப்பார் என்கிறாரே?

தோழர் கொண்டல்சாமி: ஒன்று சொல்கிறேன்: சினிமாவில் அவருக்கு சம்பளம் 50 கோடி என்று வைத்துக் கொள்வோம், ஒரு எம்எல்ஏக்கு ஒரு லட்சம் சம்பளம் இருக்கும். இதில் எது பெரிது? சினிமாதானே. அதை வைத்து அதிக மக்கள் பணி செய்யலாம் அல்லவா! மக்கள் பணியை வெளியில் இருந்தே கூட செய்யலாம். அரசியலுக்கு வந்து ஒரு திட்டம் போட்டு, நடவடிக்கை எடுத்து வரையறை செய்து நல்லது செய்வதற்குப் பதில், நீங்கள் ஒரு முதலாளி மாதிரி கிராமத்தை தத்தெடுத்து அல்லது நகரத்தை தத்தெடுத்து நல்லது செய்திருக்கலாமே!

“நான் 150 கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன். நான் 200 கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தேன்” என ஏலம் போடுகிறார்கள். இது இங்கு மட்டும் கிடையாது. இந்தியா முழுக்க இந்த கொச்சை வார்த்தை இருக்கிறது. ஆந்திராவில் பவன் கல்யாண், சிரஞ்சீவி. இப்போது விஜய் சொன்னார், அண்ணாமலை ஐபிஎஸ் வேலையை விட்டு வந்தேன் என்கிறார். இப்படி விட்டு வந்த யாரும் மக்களிடம் போகமாட்டார்கள். கட்சியில் சேர்ந்து பெரிய பொறுப்பு, பதவி மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள்.

லாரன்ஸ் சினிமா துறையில் வருடத்துக்கு இரண்டு படம் நடிக்கிறார். அதுவும் பேய் படமாக நடிக்கிறார். அதில் 50, 100 கோடி சம்பாதிக்கிறீர்கள். அந்த 100 கோடியில் எவ்வளவு நன்மை செய்யலாம்! ஒரு அரசு செய்வதை விட அதிகமாகவே செய்யலாம். ஏன் அதை செய்யவில்லை? மாறாக “எனக்கு அரசியலுக்கு வருவதற்கு ஆசை இருக்கிறது” என சொல்லி, அதை சொல்லாமல் பூசி மொழுகி, “நான் மக்களுக்கு சாப்பாடு கொடுத்தேன், ஆடை கொடுத்தேன்” என பேசுவதை எப்படி எடுத்துக்கொள்வது?

தொகுப்பாளர்: நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார் என்கிறாரே!

தோழர் கொண்டல்சாமி: இன்னமும் செய்யலாம். அதெல்லாம் தவறு கிடையாது. அரசாங்கத்தில் ஏற்கனவே தொட்டில் குழந்தை திட்டம் (அன்னை நாகமையார் திட்டம்) மற்றும் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. லாரன்ஸ்அரசியலுக்கு வந்து புதிதாக செய்வதற்கு ஒன்றும் கிடையாது. அவர் வருமானத்திலேயே ’ராஜா’ மாதிரி உட்கார்ந்து அந்த திட்டத்தை செய்யலாம். இவர் விஜயை சந்தித்துவிட்டு, எல்லாம் பேசி உறுதிப்படுத்திவிட்டு, இப்போது “அரசியலுக்கு வருகிறேன், கருத்து சொல்லுங்கள்” என்பது வேடிக்கை. அரசியலுக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு போக வேண்டும் என்பது உங்களுடைய ஆசை. அதை வெளிப்படையாக சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு “நாங்கள் மக்களுக்காக வருகிறோம்” என சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.

அதாவது “விஜய் வந்ததற்குப் பின் எனக்கும் பொறாமையாக இருக்கிறது” என வெளிப்படையாக சொல்லுங்கள். “இப்போது விஜய் கூட சேர்ந்து இருக்கிறேன். அரசியல் கற்று கொண்ட பிறகு அண்ணாமலை கூட போவேன், பிஜேபி கூட போவேன்”, “எனக்கு ஆசை இருக்கிறது” என சொல்ல வேண்டியது தானே! தற்போது லதா ரஜினிகாந்த் அவர்கள் ”முதலமைச்சர் மனைவி என சொல்லிக் கொள்ள வேண்டும், அது பெருமையாக இருக்கும்” என கூற வேண்டியது தானே! ஏன் “அவரே முதலமைச்சர்” என கூட சொல்லுங்கள். அண்ணாமலையும் “நான் தமிழ்நாட்டுக்கு தலைவராக இருக்க வேண்டும், என்னை தூக்கி விட்டார்கள்” என சொல்லுங்கள். இதையெல்லாம் சொல்லாமல் “மக்களுக்காக வந்தேன்” என பொய் சொல்லாதீர்கள். மக்கள் யாரும் உங்களை கூப்பிடவே இல்லை. இன்றைக்கு ராகவா லாரன்ஸ் பேசும் அரசியல் இதுதான்.

மக்களுக்காக எந்த அரசியலும் பேசாத இவர்கள், அரசியலுக்காக மக்களை பலியாக்கக்கூடாது என்பதுதான் நம்முடைய வேண்டுகோள்.

இறுதியாக தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம் தான். அவர்கள் எல்லாவற்றையும் கவனிப்பார்கள். உடனுக்குடனே எதிர்வினை செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. மக்களை குறைத்து மதிப்பீடு செய்த யாருமே தமிழ்நாட்டு அரசியலில் வென்றதில்லை. அதனால் மக்களை ஏமாளியாக நினைத்துக் கொண்டு, “இவர்கள் நம்மை ஒன்றும் கேட்க வில்லையே” என நினைத்துக் கொண்டு பேசினால், ஒரு காலகட்டம் வரும்பொழுது அது யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, 50 வருட கட்சி ஆனாலும் சரி,  “மக்கள் தங்கள் வேலையை காண்பிப்பார்கள்”.

ஒரு உதாரணம் சொல்கிறேன். லாரன்ஸுக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் படுகொலை நடந்த போது அந்த படுகொலையை ஆதரித்து பேசியவர். அந்த மக்களை பார்க்கும்போது “நீங்க யார்” என கேட்டான் ஒரு பையன். அது தனிப்பட்ட ரஜினியை கேட்ட கேள்வி கிடையாது. இது உங்களுக்கும் (லாரன்சுக்கும்) பாடம். சூப்பர் ஸ்டார் சொன்னது: ”எதற்கு எடுத்தாலும் போராட்டம் செய்தீர்கள் என்றால் நாடு சுடுகாடாயிடும்” என்று அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரை, ”நீங்கள் யார்” என கேட்டது தமிழ்நாடு.

நாங்கள் எச்சரிக்கையாக சொல்கிறோம்: அந்த ரஜினிகாந்தையே மக்கள் கூட நிற்காத ஒரே காரணத்துக்காக புறக்கணித்த மாநிலம் இது. அந்த விடயத்தினால்தான் அவர் கடைசி வரைக்கும் அரசியலுக்கே வராமல் ஒதுங்கிப் போனார். உடல் நலம் காரணமெல்லாம் கிடையாது. இது லாரன்ஸுக்கு ஒரு பாடம். மக்களோடு நிற்பதாக இருந்தால் அரசியலில் நில்லுங்கள். இல்லையெனில் மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள்.

தொகுப்பாளர்: பார்ப்போம், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் மக்களிடம் சென்று களப்பணி செய்யாத அரசியல் கட்சியோ, இயக்கமோ, தலைவரோ சில காலத்தில் அம்பலப்படுவார்கள். ராகவா லாரன்ஸ் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிறைய கேள்விகளுக்கு மிக விளக்கமாக பதில் அளித்தீர்கள். மிக்க நன்றி தோழர்! வணக்கம்!!

தோழர் கொண்டல்சாமி: நன்றி! வணக்கம்!!

காணொளி: https://www.youtube.com/watch?v=VTSvibrhCx8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »