அமெரிக்காவிலும் அம்பலமான அதானியின் ஊழல்

அதானியின் ஊழல் குற்றங்கள் இந்தியாவில் மட்டுமல்ல தற்போது வெளிநாடுகளிலும் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன. ‘Modani’ என்று குறிப்பிடப்படும் அளவிற்கு மோடி + அதானி நட்பு இந்தியாவில் செய்த ஊழல்கள் இப்போது அமெரிக்காவிலும் பேசுபொருளாகி இருக்கிறது.

1980களில் குஜராத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒரு மார்வாடி வணிக நிறுவனம், பாஜகவுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்தியர்களை ஏமாற்றி பிழைத்து, இப்போது வெளிநாட்டிலும் ஊழலை பரவ விட்டிருக்கிறது. முதலில் குஜராத்தை தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சிறு/ குறு வணிகத்தை சீர்குலைத்து பெரு முதலாளியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் அதானி. பின் 2019-ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவாக்கியபோது ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுரங்க நிறுவனம், மின் திட்டம் என்று கொள்ளை லாபம் ஈட்டினார்.

அமெரிக்காவில் டிரம்ப் இரண்டாம் முறை அதிபரானவுடன் மோடியின் நட்பு மூலம் முழு வீச்சில் தன் வணிகத்தை விரிவுபடுத்தினார் அதானி. அமெரிக்காவில் எரிசக்தி திட்டங்களுக்காக 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தார். இந்த திட்டங்களில் அதிக லாபம் ஈட்டும் சூரிய மின் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை பெற அதானி லஞ்சம் கொடுத்ததாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

இரு ஆண்டுகளுக்கு முன் அதானி கிரீன் எனர்ஜி திட்டத்திற்காக அமெரிக்காவில் பணி புரியும் இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக அதானி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது நினைவிருக்கலாம். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதோடு, ஏற்கனவே தன் நிறுவனத்தின்  மீதான லஞ்ச விசாரணையை தனது ஆவணங்களில் மறைந்திருக்கிறார் அதானி. இந்த குற்றவியல் வழக்கை ட்ரம்பின் ஆதரவுடன் நீர்த்துப் போக செய்யவும் முயற்சித்தார்.

அமெரிக்காவில் பல்லாயிரம் கோடி முதலீடுகள், பல வேலைவாய்ப்புகள் என்று கூறி நாடகமாடிய அதானிக்கு டிரம்ப்பின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்தது. டிரம்பின் வழக்கறிஞர்களில் ஒருவரான  கியூஃப்ராவை இந்த லஞ்ச வழக்கிற்காக வாதாட நியமித்தார் அதானி. ட்ரம்பின் ஆதரவு காணமாக அதானிமற்றும் அவரது மருமகன் மீதான குற்றச்சாட்டுகளை மொத்தமாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

அமெரிக்க நீதித்துறை அதானிக்கு சாதகமாக மாறியதை தற்போது நீதிபதி ஒருவர் விமர்சித்துள்ள நிலையில், மீண்டும் இந்த வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதானியின் மின்துறை ஊழல், பங்குச்சந்தை ஹிண்டன்பர்க் ஊழல் வரிசையில் தற்போது சூரிய மின்திட்ட ஊழலும் இணைந்துள்ளது. “இயற்கையை பாதுகாக்கிறோம், வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம்” என்று கூறும் அதானியின் உண்மை முகம் இதுவே. அதானி பெருநிறுவனங்களின் வெற்றுக் கூச்சலுக்கு சான்றாக கமுதி  சூரிய மின் திட்டத்தையும் கூறலாம். கமுதியில் உள்ள அதானி ஆலை, நாள்தோறும் சுமார் 200,000 லிட்டர் தண்ணீரை மாவட்ட அதிகாரியின் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து எடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(படம்: கமுதியில் உள்ள அதானி சூரிய மின் திட்டம்)

இவ்வாறு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி, அதில் வரும் லாபத்தை பாஜகவின் வளர்ச்சிக்கும் பங்குச்சந்தைக்கும் அதிகாரிகளின் லஞ்சத்திற்கும் கொடுத்தவர் அதானி. இந்தியாவில் அவர் செய்த ஊழல்களின் பட்டியல் பெரிது.

கடந்த டிசம்பர் 2019ல், ஒன்றிய அரசால் நடத்தப்படும் இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India -SECI), சூரிய மின்னாற்றல் ஒப்பந்தத்தை அதானி குழுமம் மற்றும் அஸூர் பவர் என்ற  நிறுவனத்திற்கு வழங்கியது. தனியார் நிர்ணயிக்கும் விலையில் மின்சாரத்தை வாங்க நிறுவனங்களை SECI அழைத்த போது, அதிக விலை காரணமாக பல நிறுவனங்கள் முன் வரவில்லை. எனவே அதானி நிறுவனமும் அஸூர் பவரும், அரசு நிறுவனங்களை SECI-யின்  ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021ல் அதானி ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு உயர் அதிகாரியை நேரில் சந்தித்து, அவருக்கு ரூ.1,750 கோடி இலஞ்சம் கொடுத்ததாக நீதிமன்ற ஆவணத்தில் இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி, சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் SECI ஒப்பந்தங்களை ஏற்கும் வகையில் அதானி குழுமம் மற்றும் அஸூர் பவர் நிறுவனம் இதேபோன்று  நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தவிர அதானி நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழல் குறித்து மே பதினேழு இயக்கக் குரல் முன்பு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. விரிவாக வாசிக்க: https://may17kural.com/wp/adani-looted-coal-imports/

அதானியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் யார் என்று உலகமே அறிந்துள்ளது. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அதானியின் லஞ்ச வழக்கு குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அப்போது அதை “ஒரு தனிப்பட்ட விடயம்” என்று கூறி, எதிர்மறையாகப் பதிலளித்தார் மோடி.

அதானியில் கொள்ளை லாபத்திற்காக உலக நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள் அனைவரும் பாடுபட்டு உழைப்பதையே இந்த லஞ்ச வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மின்துறை, ஏற்றுமதி இறக்குமதி வணிகம் என்று தொடங்கி விமான நிலையம், ஊடகம் வரை விரிந்துள்ள அதானி குழுமம் இன்னும் எத்தனை ஊழல்களில் ஈடுபட்டுள்ளது என்பது முறையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் அதானி யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தார், என்னென்ன திரை மறைவு வேலைகள் செய்கிறார் என்பது அம்பலப்பட வேண்டும். இதற்கான முழு விசாரணையும் முறையாக நடத்தப்பட்டு வணிகக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் குரலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »