தமிழ்நாட்டின் தனித்துவமான நீட் எதிர்ப்புப் போராட்டம் – திருமுருகன் காந்தி உரை

‘நீலம்’ அமைப்பு சென்னை எழும்பூரில் சூலை 23, 2026 அன்று நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

“சரியான நேரத்தில் ஒரு கலகக் குரலை தோழர் ரஞ்சித் எழுப்பியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலே தமிழக மக்கள் எதை இப்போது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதை அடையாளப்படுதும் விதமாக, இங்கே கலைஞர்கள் ஒன்று கூடியிருப்பது என்பது ஒரு பெரிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. இந்தச் சமயத்தில் நாம் எல்லோரும் நீட் குறித்து பேச வேண்டி இருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக நாம்தான் போராடிக்கொண்டிருந்தோம். தங்கை அனிதா நம்மை விட்டுச் சென்ற சமயத்தில், (செப்டம்பர் 1-ஆம் தேதி 2017-ல்) நான் புழல் சிறையில் இருந்தேன். அங்கே சிறைவாசிகள் தங்கை அனிதாவின் மரணச் செய்தியைக் கேட்டு, உணவு உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலை இருந்தது. தமிழ்நாட்டினுடைய மனசாட்சியை உலுக்கிய சம்பவம், தங்கை அனிதா நம்மை விட்டுச் சென்றது. ஆக, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் நாம்தான் முன்னுக்கு நிற்கிறோம்.

இப்போது இதில் ஒரு கேள்வி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் எந்தக் கோரிக்கையிலும் ஒரு தெளிவோடுதான் நாம் இயங்குவோம். “கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலக வேண்டும்” என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ஏனென்றால் அவர் மேல் பல குற்றசாட்டுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிக் கல்விக்குத் தரக்கூடிய கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார். “தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால்தான் பள்ளிக் கல்விக்கான நிதியைத் தருவேன்” என்று மிரட்டி, நம்மை மிரட்டி பணம் பறித்தல் (Blackmail) செய்திருக்கக்கூடிய அமைச்சர்தான் தர்மேந்திர பிரதான். அந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் நமக்கு ஒரு துளி அளவு கூட மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்கின்ற கேள்வியை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியிருக்கிறது. இந்த நபர் போனால் அடுத்த ஒரு நபர் அமைச்சராக வருவார். இந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் யாருக்கும் அறிவு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இந்த ஆள் போனால் இன்னொரு ஆள் வந்து உட்காருவான். அதுவும் இதே மாதிரி “மாட்டுச்சாணி”யாகத்தான் இருக்கும். எல்லாம் மாட்டுச்சாணியைக் கொண்டு வந்து அமைச்சராகப் போட்டு, நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிஜேபி கட்சியில் ஒரு தெளிவான ஆளோ, மக்கள் மீது அக்கறை கொண்ட ஆளோ, மாணவர்கள் மீது பொறுப்பு கொண்டவர்களோ யாருமே கிடையாது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது ஒரு அடையாள ரீதியாக நாம் வெற்றி பெற்றோம் என்று சொல்வதற்கான ஒரு முழக்கமாக இருக்கலாம். ஆனால் “நீட் ரத்து செய்யப்பட வேண்டும்” என்பதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

தோழர் அறிவு அவர்கள் பேசும்போது ஒன்று சொன்னார்கள். அவருக்கு நான் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதியை முதலில் கலைத்தவர் அவர்தான். நேராகக் களத்தில் இறங்கி அந்த அமைதியைக் கலைத்துவிட்டார். அவரிடம் மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னது, “நீட் குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அதில் பெரும்பான்மையாக வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால்தான், இதை ஒரு Constitution Amendment மாதிரி கொண்டு வர முடியும்” என்று சொன்னதில் உண்மை இல்லை.

கல்வி என்பது மாநிலப் பட்டியலிலும் இருக்கிறது, ஒன்றிய அரசுப் பட்டியலிலும் இருக்கிறது. இரண்டு பட்டியலிலும் இருக்கிறது. நாம் ஏன் நீட்டிற்கு எதிராகப் போராடுகிறோம் என்றால், “தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்” என்று சொல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, நாம் சட்டமாக அதை வரையறை செய்துவிட்டோம். பாரதிய ஜனதா கட்சியைத் தவிர, எல்லா கட்சியும் அதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டது.

ஆனால் இந்த நீட் விலக்குக்கான சட்ட வரைவிற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு தரவில்லை. ஆளுநர் தரவில்லை. ஆளுநரும் ஜனாதிபதியும் ஒப்புதல் தராமல் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு மாநில அரசுப் பட்டியலில் இருக்கக்கூடிய, மாநில அரசுப் பொறுப்பில் இருக்கக்கூடிய, அவர்கள் போடுகின்ற சட்டத்தைத் தடுத்து வைப்பதற்கு ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ, ஒன்றிய அமைச்சரவைக்கோ எந்தவித அதிகாரமும் கிடையாது.

இன்றைக்கு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கேட்கிறோம். இந்தியா முழுவதும் நீட்டை நடத்துவதற்குச் சட்டத்தை, நீங்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய சட்டத்தை நீக்குவதற்குப் பாராளுமன்றத்தில் நாம் பேச வேண்டும். அதற்குத் தீர்மானம் கொண்டு வருவது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மாண்புமிகு அமைச்சர் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், “தமிழ்நாட்டிற்கு எங்களுக்கு நீட் விலக்கு வேண்டும்” என்று நாம் சட்டசபைத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். சட்ட வரைவு கொண்டு வந்திருக்கிறோம். ஒன்றிய அரசு அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஒன்றிய அளவில் நீட்டிற்கு எதிரான போராட்டத்தில் தனித்துவமான இடத்தில் தமிழ்நாடு நிற்கிறது. ஏனென்றால் “தமிழ்நாட்டிற்கான  நீட் விலக்கு குறித்து முதலில் பதில் சொல்லுங்கள்” என்பதுதான் தமிழ்நாட்டின் கேள்வி.

ஒன்பது வருடமாக அதைத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். “நீட் வேண்டாம்” என்று சொல்வது நாம்தான். நீட்டில் நடக்கக்கூடிய குளறுபடிகளை நீக்குங்கள் என்று சொல்வதல்ல, “நீட்டே குளறுபடி” என்று சொல்வதுதான் நம்முடைய நிலைப்பாடு. அடிப்படையில் நீட் என்பது ஒரு ஊழல். National Testing Agency is a Scam. மக்களையும் மாணவர்களையும் சுரண்டிப் பிழைப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் National Testing Agency.

என்.டி.ஏ தான் நீட்டை நடத்துகிறான், CUET-ஐ நடத்துகிறான், NIFT-க்கான தேர்வை நடத்துகிறான். எல்லாமே அவன்தான் நடத்துகிறான். ஆனால் எதையும் ஒழுங்காக நடத்துவது இல்லை. ஏனென்றால் ஒழுங்காக நடத்த வேண்டும் என்கின்ற நோக்கமே அந்த நிறுவனத்திற்குக் கிடையாது. தயவுசெய்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, “நீட்டிற்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று சொல்வதோடு நமது போராட்டம் நின்றுவிட முடியாது. நமது முழக்கம் “நீட்டே வேண்டாம்” என்பதுதான். ஏன் நீட்டு வேண்டாம்? மூத்த கலைஞர் ரேவதி அவர்கள் ஒன்று கேட்டார். “எதனால்” என்பதைப் பற்றி கொஞ்சம் புரிதல் வேண்டும் என்று கேட்டார்கள். அதைத் தெளிவாகச் சொல்கிறோம்.

ஏன் தமிழ்நாட்டிற்கு நாம் விலக்கு கேட்கிறோம் என்றால், தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள். ஆனால் நீட் தேர்வு ஒன்றிய அரசினுடைய பாடத்திட்டத்தைப் பொறுத்துதான் வைக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. நாம் படிக்கிற பாடத்திட்டம் வேறு. அவன் தேர்வு வைக்கக்கூடிய பாடத்திட்டமே வேறு.

அப்போது எப்படி எங்கள் பிள்ளைகள் அந்தத் தேர்வை எழுத முடியும்? எதற்குக் கேட்கிறோம் என்றால், “நீ ஒன்றிய அரசினுடைய மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு உன் பாடத்திட்டத்தைப் படித்து தேர்வு எழுதுவதைக் கூட நான் ஏற்றுக்கொள்கிறேன். அது IIT-யோ, Central University-யோ. ஆனால் மதுரையில் இருக்கக்கூடிய மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு நாங்கள் எதற்காக டெல்லிக்காரனுடைய பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும்? உன்னுடைய தேர்வு எதற்கு எங்களுக்கு?

நான் மதுரையில் சேர்வதற்கோ, திருநெல்வேலியில் சேர்வதற்கோ, சேலத்தில் சேர்வதற்கோ, சென்னையில் சேர்வதற்கோ, கோயம்புதூரில் சேர்வதற்கோ, இங்கே மருத்துவப் படிப்பை நான் படிப்பதற்கு டெல்லிக்காரனுடைய கல்வியை நான் ஏன் படிக்க வேண்டும்? அதற்குத்தான் நீட் வேண்டாம் என்று சொல்கிறோம்.

உன்னுடைய கல்லூரியில் நீ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உன்னுடைய பாடத்தைப் பயன்படுத்திக்கொள். அது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் நாங்கள் வரி கட்டி, நாங்கள் நடத்தக்கூடிய கல்லூரிகளில், நாங்கள் நடத்தக்கூடிய மருத்துவமனைகளில், நாங்கள் பயிற்சி பெறுவதற்கு, எங்கள் பாடத்திட்டத்தில்தான் நாங்கள் தேர்வு எழுத வேண்டுமே ஒழிய, உன்னுடைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய அவசியம் இல்லை. இதுதான் நீட் அநீதி.

இதில் என்ன நடந்தது என்றால், நம்முடைய பாடத்தில் படித்த குழந்தைகள், மாணவச் செல்வங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமில்லை. இடம் கிடைக்காமல் போவதால்தான் தமிழ்நாட்டில் “விலக்கு வேண்டும்” என்று கேட்கிறோம். இது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “நீட் விலக்கை” தமிழ்நாடு கேட்ட வரலாற்றை அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும். அப்போது இந்தப் போராட்டம் அதிக அளவில் மையம் கொள்ள வேண்டிய மாநிலம் எது? தமிழ்நாடு. அந்த இடத்தில் இப்போது”நீலம் அமைப்பு” ஒரு மிகப்பெரிய ஆதரவு சக்தியைத் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

இடதுசாரிக் கட்சியினுடைய தோழர்கள், அவர்களுடைய மாணவ அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றன. SFI-யுடைய மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். என்ன தவறு செய்தார்கள் அவர்கள்? ஏன் அந்த மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவுகிறீர்கள்? ஏன்?

தமிழ்நாடு காவல்துறையைப் பார்த்து நான் கேட்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளைக்கும் சேர்த்துதான் மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளும் நீட் எழுத வேண்டும். உங்கள் பிள்ளைகளை நீட் பயிற்சிக்கு அனுப்ப வேண்டுமென்றால் வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும். ஒரு வருடம் இல்லை, 3 வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் நீங்கள் செலவு செய்ய வேண்டும். முடியுமா? இவர்கள் கொடுக்கிற சம்பளத்தில் நீங்கள் பிள்ளைகளை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க முடியுமா? இல்லை, தமிழ்நாட்டின் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்களா, “எங்க பிள்ளைகளுக்கு Doctor Seat-டே வேண்டாம்” என்று?

நான் கேட்கிறேன்- எங்கள் பிள்ளைகள் மருத்துவர் ஆக வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் மாணவர்கள் போராடுகிறார்கள். அவர்களைப் போட்டு இழுத்து, தரதரவென்று இழுத்துகொண்டு போவது எதற்காக? அவர்கள் தீவிரவாதியா? பயங்கரவாதியா? ஊழல்வாதியா? யார் அவர்கள்?

உங்கள் வீட்டுக் குழந்தைகளும், எங்கள் வீட்டுக் குழந்தைகளும் போராடுவது, அவர்கள் எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒரு குற்றவாளியை கையாள்வது போல கையாள்கிறீர்கள்.

இன்றைக்கு மெரினாவைப் பூட்டி வைத்துவிட்டார்கள். மெரினாவில் சினிமாப் படமோ, கால்பந்து விளையாட்டோ, மட்டைப்பந்து விளையாட்டோ போட்டுக் காட்டினால் அதெல்லாம் சிக்கலே கிடையாது. அப்போதெல்லாம் நீதிமன்றத்தின் பிரச்சினை வராது. நமக்கு “இந்தத் தேர்வு வேண்டாம்” என்று சொல்லி நம்முடைய மாணவர்கள் அமைதியாகப் போய் உட்கார்ந்தால், அதற்கு மெரினாவைப் பூட்டுவீர்களா சார்?

உலகத்தில் எங்கேயாவது ஒரு Beach-க்குப் பூட்டுப் போடக்கூடிய நாட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு அரசாங்கத்தையோ, காவல்துறையோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம்ம ஊரில்தான் 3 கிலோமீட்டர், அதுவும் உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாக இருக்கக்கூடிய மெரினா கடற்கரையைப் பூட்டிய மிகப்பெரிய பெருமை தமிழ்நாடு காவல்துறைக்குத்தான் இருக்கிறது.

ஏன் Cinema போட்டால், Football Match போட்டால், Cricket Match போட்டால், குத்தாட்டம் போட்டால் எல்லாம் பிரச்சினை வராது. ஆனால் எங்கள் மாணவர்களுடைய எதிர்காலத்திற்கு, மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமைதியாக உட்கார்ந்தால் பிரச்சினை வருமா? நீங்கள் எந்த நாட்டுக்குக் காவலர்கள்? எல்லாத்தையும் அடிக்கிறது. முன்னால் இருக்கக்கூடியது தன்னுடைய வீட்டுக் குழந்தையா, அல்லது நம்முடைய குழந்தையின் நண்பர்களா, பள்ளி நண்பர்களா, கல்லூரி நண்பர்களா என்பதைப் பார்க்காமல் அடித்து நொறுக்குவதைப் பற்றி தோழர் அமீர் அவர்கள் மிக வருத்தத்தோடு பேசினார்கள்.

நான் திரும்பச் சொல்கிறேன். இங்கே இருக்கும் காவல்துறை வெள்ளைக்காரன் காலத்தில் தயார் செய்யப்பட்ட காவல்துறை. வெள்ளைக்காரன் காலத்தில் என்ன செய்தார்கள்? ”எதிர்த்து நிற்பது”, ”போராட்டம் பண்ணுவது”, “விடுதலை வேண்டும்” என்று, “சுதந்திரம் வேண்டும்” என்று கேட்கக்கூடியவர்கள். உன் சொந்தக்காரனாக இருந்தாலும் வெள்ளைக்காரன் உத்தரவிட்டால் மண்டையை உடைக்க வேண்டும் என்பதுதான், வெள்ளைக்காரன் காவல் துறைக்குக் கொடுத்த பயிற்சி. அந்தப் பயிற்சியை இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாடு காவல்துறை அச்சு பிசகாமல் படியெடுத்து, நகல் எடுத்து, பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாடு விடுதலை அடைந்துவிட்டால் அதனுடைய சிறப்புமிக்க துறைத் தலைவர்கள் பெயர் எங்கிருந்து இருக்க வேண்டும்? விடுதலை அடைந்த ஆண்டிலிருந்துதான் இருக்க வேண்டும். 1947-ல் யார் இந்த காவல்துறை தலைவர் என்ற பெயர் இருக்க வேண்டும். அப்போது நமக்குப் பெருமையாக இருக்கும். ஆனால் தமிழ்நாடு காவல்துறையிடைய DGP Office, அந்த தலைமை அலுவலகத்திற்குப் போனீர்கள் என்றால், வெள்ளைக்காரன் காலத்தில் யார் Commissioner-ஆக இருந்தார்கள் என்ற பெயரைப் பெருமையாகப் போட்டு வைத்திருப்பார்கள். 1863-ல் இருந்து பெயர் இருக்கும். வெள்ளைக்காரன் இங்கே காவல்துறை தலைவராக இருந்ததைப் பெருமையாகக் கொள்ளக்கூடிய காவல்துறை தமிழ்நாடு காவல்துறை.

தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்: நீங்கள் தயவுசெய்து இந்த காவல்துறையை, இங்கே போராடுகின்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதோ, அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதோ, அவர்கள் மீது வழக்கு போடுவதோ, தரதரவென்று இழுத்துச் செல்வதோ, மிரட்டுவதையோ நிறுத்தச் சொல்லுங்கள். காவல் துறையை வைத்து அடக்குமுறை செய்த எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை என்பது வரலாறு.

இப்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்குக் காவல்துறையிடம் சென்று அனுமதி எழுதிக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை. போராடுவது என்றால் என்ன? எங்கள் கோரிக்கையை நாங்கள் சொல்வதற்கு என்ன வழி வைத்துள்ளீர்கள்? ஏதாவது Polling வைத்திருக்கின்றீர்களா? Referendum ஏதாவது வைத்திருக்கின்றீர்களா? ஒன்றும் கிடையாது. நாங்கள் தெருவில் இறங்கி இப்படி கூட்டம் போட்டு, Mike வைத்துதான் சொல்ல முடியும். அதைச் செய்வதற்குரிய வழிமுறையைச் செய்வதுதான் ஒரு ஜனநாயக அரசு.

தமிழ்நாடு காவல்துறை இந்த ராஜரத்தினம் ஸ்டேடியம் தெருவை நிரந்தரமாக போராட்டத்திற்காகத் திறந்து விட வேண்டும். உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. எதற்கு வாங்க வேண்டும்? போராட்டத்திற்கு அனுமதிக்காக காவல்துறைக்குச் செல்ல வேண்டும் என்றால், எதற்கு அனுமதி என்றால்: நீங்கள் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று எழுதிக் கொடுத்து அனுமதி வாங்க வேண்டியதில்லை. நீங்கள் வைக்கிறீர்களே Mike Set, அதற்குத்தான் Permission.

இந்த Mike-ஐ வைக்கலாமா? இந்த Speaker-ஐ வைக்கலாமா? இந்த இடத்தில் வைக்கலாமா என்பதுதான் Permission. அதை விட்டு காவல்துறை அவங்களே Headmaster மாதிரி, “இந்த தலைப்பை வைக்கலாம், இந்த தலைப்புக்கு நடத்தக் கூடாது” என்று சொல்வதற்கு உரிமை கிடையாது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எதற்குப் போராடக் கூடாது, போராட வேண்டும் என்று சொல்வதற்குக் காவல்துறைக்கு அதிகாரம் கிடையாது. சட்ட விதிமீறல் நடந்தால் வழக்குப் பதிவு செய்வதற்கு மட்டும்தான் அதிகாரம். “சட்டத்தைப் பாதுகாக்கிறோம், சட்டத்தைப் பாதுகாக்கிறோம்” என்று சொல்லியே எங்கள் போராட்டத்தை முடக்கினால், ஊர் முழுக்க எப்படி கஞ்சா இருக்கிறது? அதை முதலில் பாருங்கள்.

அதனால் காவல்துறை இங்கே போராடுவதற்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். நாங்கள் என்ன கடைகளை உடைக்கப் போகிறோமா? வீடுகளை இடிக்கப் போகிறோமா? அது எங்க கடை, எங்க வீடு, எங்க மக்கள், இது எங்கள் ஊர். உங்களை விட நாங்கள் இந்த ஊரை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறோம்.

அதனால் இங்கே போராடுகின்ற மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். போராடுகின்ற மாணவர்களுக்கு நாம் ஆதரவைத் தர வேண்டும். போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். தர்மேந்திர பிரதான் மட்டுமில்லை, ஒட்டுமொத்த நீட்டும் வெளியே போக வேண்டும். அப்படியான ஒரு போராட்டத்திற்கு நாம் எல்லோருமே அணியமாவோம். இன்றையிலிருந்து தமிழ்நாடு மறுபடியும் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் என்று நான் நம்புகிறேன். இங்கே வந்திருக்கக்கூடிய அனைத்துத் தோழமைகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி!வணக்கம்!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »