
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை எதிர்த்து 01.08.2026 அன்று காட்பாடியில் மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருநாள் பட்டினி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காவல்துறை திடீரென அனுமதி மறுத்த காரணத்தினால் பட்டினிப் போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டு நடத்தபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, விசிக, எஸ்.டி.பி. ஐ, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி உள்ளிட்ட தோழமை இயக்க பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர். இதில் மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் அவர்கள் ஆற்றிய உரை:
அன்பானவர்களே, இங்கு நாங்கள் மக்களோடு மக்களாக நிற்கிறோம். இங்கு மதிமுக, விசிக, SDPI உட்பட இதர கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இப்போராட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்று ஆட்சி செய்யக்கூடியவர்களை ஆதரிக்கிறவர்கள் கிடையாது. அதே நேரத்தில் எதிர்கட்சியாக இருக்கிறவர்களை ஆதரிக்கிறவர்களும் உண்டு, எதிர்க்கிறவர்களும் உண்டு. ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று ஒற்றுமையாக ஒரு கோரிக்கைக்காக நிற்கிறோம் என்றால், தமிழ்நாட்டில் திமுக-அணி வேண்டுமா, தவெக-அணி வேண்டுமா, அதிமுக-அணி வேண்டுமா என்பது கேள்வி அல்ல. இந்த ஜனநாயக அணிதான் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. இந்த ஜனநாயக அணிதான் தமிழ்நாட்டு மக்களுக்காக நிற்பவர்கள். தமிழ்நாட்டிற்கு எதிராக வரும் பாசிசத்தையும், தமிழகத்திற்கு எதிராக வரக்கூடிய மோடி சர்காரையும் எதிர்கொள்பவர்கள். தேர்தல் நேரத்தில் கட்சிகள் மாறி இருந்தாலும், தமிழர் வாழ்வுரிமை என்று வந்தால் நாங்கள் திரண்டு போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம்.
அன்பானவர்களே, இந்த “காக்ரோச் ஜனதா பார்ட்டி” நடத்தக்கூடிய போராட்டம் என்பது நீட்டுக்கு எதிராகத் தொடங்கப்பட்டது அல்ல. அது ஒரு உருவகம் (Metaphor). “என்னடா கரப்பான் பூச்சி மாதிரி இந்தியாவில் வேலை இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறீர்களே” என்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி சொல்கிறார். அதற்கு எதிர்வினையாக இங்கே இருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய பெயரை “காக்ரோச் ஜனதா பார்ட்டி” என்று ஆரம்பித்தார்கள். அதனுடைய அடிப்படை என்னவென்றால், நீட் எதிர்ப்பு மட்டும் கிடையாது.
இந்தியாவில் மருத்துவம், கலை & அறிவியல், பொறியியல், ஐடிஐ போன்ற பல்வேறு தொழிற்கல்வி கல்லூரிகளில் படித்த இளைஞர்கள், “எங்களுக்கு வேலைவாய்ப்பை மத்திய சர்க்கார் கொடுக்கவில்லையே” என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் “காக்ரோச் ஜனதா பார்டி”-யுடைய போராட்டம். இது நீட்டுக்கான எதிர்ப்புக்குத் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல.
இந்த நாட்டில் படித்த மாணவர்கள், இளைஞர்கள் வேலை கிடைக்காமல் பலவேறு மாநிலத்திலும் நகரங்களிலும் Uber, Swiggy, Zomato, Zepto பணியில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கான். இந்தியாவில் யாரை எதிர்த்து CJP தொடங்கப்பட்டது? மோடி சர்க்காருக்கு எதிராக தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஆட்சிக்கு வரும்போது சொன்னார்கள், “நாங்கள்(பாஜக) வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறோம்” என்று கூறினார்கள். அப்படி என்றால் மோடி ஆட்சியின் 12 வருடத்தில் 25 – 28 கோடி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்தியாவில் வேலை கிடைத்திருக்க வேண்டும்.
அதைத் தடுத்தது மோடி அரசு. இந்தக் கோபத்தில்தான் நம்முடைய மாணவர்கள், இளைஞர்கள் இந்த நீட் தேர்வு தொடர்பான ஊழலும், முறைகேடும் வந்த போது தக்க சமயத்தில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுடைய சீட்டு 65 ஆயிரம். (அரசுடைமை சீட்டு என்பது 65 ஆயிரம்). ஆக இந்தியா முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் சீட்டுகள். ஆனால் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அந்த ஒவ்வொரு மாணவர்களும் நீட் பயிற்சி மையத்திற்கு வருடத்திற்கு 2-5 லட்சம் செலவு செய்து படிக்கிறார்கள். அவ்வளவு கடினப்பட்டு படித்து தேர்வு எழுதுகிறார்கள். அந்த 20 லட்சம் மாணவர்களும் “தங்கள் மருத்துவக் கனவு நிறைவேறும்” என்று எண்ணும் போது, அந்த தேர்வை ரத்து செய்கிறார்கள். இதை யார் ரத்து செய்தது? ஒன்றிய அரசு ரத்து செய்தது. ஏன் ரத்து செய்தது? அதுதான் மிக முக்கியமானது.
கடந்த நான்கு- ஐந்து வருடமாக நீட் தேர்வில் ஊழல் நடக்கிறது என தொடர்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த ஊழல் (Question Paper Leak) எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து மூலம் (Via Transportation) நடந்தது. அதாவது வினாத்தாள் ஒரு இடத்தில் அச்சிடுவார்கள். ஒரு இடத்திலிருந்து (டெல்லியிலிருந்து சென்னை) மாற்றும்போது, அதில் பயணிக்கும் ஓட்டுநரோ அல்லது பாதுகாப்பு பணிக்குப் போகக்கூடியவரோ புகைப்படம் (Photo) எடுத்து கசிய விடுவார். அதுதான் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் இந்த முறை வித்தியாசம். “மாற்றம், மாற்றம்” என்று சொல்லுவார்களே, மோடி அரசுடைய மாற்றம் இந்த முறை இந்தத் தேர்வை கசிய செய்தது யார் என்றால், “National Testing Agency” (NTA) என்ற ஒரு நிறுவனம். அது யாருடைய நிறுவனம் என்றால், ஒன்றிய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மத்திய சர்க்கார் நிறுவனம். மத்திய சர்கார் நிறுவனத்தின் “National Testing Agency”-யுடைய தலைவர் பெயர் குல்கர்ணி. இந்த குல்கர்ணிதான் புதிய தேசிய கல்விக் கொள்கை 2015 வரைவில் பாரதிய ஜனதா கட்சி தொடங்கும்போது அதில் ஒரு குழு உறுப்பினர் (Panel Member). அவர்தான் NTA-யுடைய தலைவராக இருக்கக்கூடியவர்.
இப்போது “ஜனநாயகன்” படம் கசிய விட்டார்கள். அந்த படத்தை கசிய விடும்போது காவல்துறையில் ஆய்வு செய்தபோது என்ன சொன்னார்கள் தெரியுமா? அந்த படத்தின் படத்தொகுப்பாளர் (Editor) பண்ணவில்லை, அதில் அவருடன் இருந்த 15 பேர் செய்தார்கள். அந்த 15 பேரும் உட்கார்ந்து ”ஜனநாயகன்” படம் பார்தார்கள். பார்த்தவர்கள் அவனுடைய நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி பரவியது என்று ஒரு கதையை காவல்துறைக்குச் சொன்னார்கள்.
அதே போலத்தான் குல்கர்ணி (National Testing Agency-யுடைய தலைவர்) என்ன பண்ணார்? அவர் புகைப்படம் எடுத்தார். ஏனெனில் அவர் ஒரு நீட் பயிற்சி மையம் வைத்திருக்கிறார். அந்த மையத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும் தொழிலதிபருடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அதில் முழுக்க முழுக்க மார்வாடி பிள்ளைகள். அந்த மார்வாடி பிள்ளைகள் படிக்கக்கூடிய அந்த நீட் பயிற்சி மையத்திற்கு புகைப்படத்தை அனுப்பி வைக்கிறார். இதை நான் சொல்லவில்லை. ஒன்றிய அமைச்சகத்தின் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. 17 பேர் சிறையில் இருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் முதல் தகவர்ல் அறிக்கை (FIR) இப்படித்தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
பாஜக அரசால் தேர்வு முகவராக நியமிக்கப்பட்ட ஒருவர், பாஜக அரசுடைய, இந்திய அரசால் கையாளக்கூடிய “National Testing Agency” இந்த நீட் வினாத்தாளை கசிய வைத்து 25 லட்சம் மாணவருடைய கனவைக் கெடுத்திருக்கிறது.
ஒரு குடும்பத்திற்கு அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தங்கச்சி, அண்ணா, தம்பி என்று 10 பேர். 25 லட்சம் x 10 என்றால் எத்தனை பேருடைய வாழ்க்கை? இந்தியாவில் கிட்டத்தட்ட 1.5 கோடி பேருடைய ஒட்டுமொத்த வாழ்க்கை கனவை இந்த ஒன்றிய அரசு, “National Testing Agency” என்ற தேர்வினால், நம்முடைய மாணவர்களுடைய மருத்துவக் கனவை அழித்திருக்கிறது. இந்த தடவை மாணவர்கள் எல்லாம் போராடியது நீட்டை எதிர்த்து மட்டுமல்ல, கடந்த 12 வருடத்தில் 75 தேர்வுகளுக்கான கேள்வித்தாளை, இந்த பாஜக அரசு கசிய விட்டு இருக்கிறது. அது நீட் தேர்வுக்கு மட்டுமல்ல, Police ஆவதற்கு, Army ஆவதற்கு, IAS எழுத, IPS எழுத, IFS எழுத, IRS எழுத, AIIMS-ல் போய்ப் படிக்க, திட்டக்குழு உறுப்பினராக, Tahsildar-ஆக, Collector-ஆக… இந்த மாதிரி தேர்வுகளை எல்லாஅம் ஒன்றிய அமைச்சகம் நடத்துகிறது. அந்தத் தேர்வுகளில் கடந்த 12 ஆண்டுகளில் 75 வினாத்தாள் கசிய செய்திருக்கிறார்கள். அந்த 75 வினாத்தாள் கசிய செய்து, இவன் நடத்தும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்புகிறான்.
நானும் பொறியியல் (Engineering) படித்தேன். 12-வதில் மதிப்பெண் எடுத்தேன். பொறியியல் படிக்க சென்றேன். என்னுடைய நண்பர்களெல்லாம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். 12-வதில் இல்லாத கல்வித் தகுதி நீட்டில்தான் இருக்கிறதா? நீட்டின் கேள்விகள் அதே 12-வது படித்ததிலிருந்துதான், அதே 11-ம் வகுப்பு படித்ததிலிருந்துதான். இப்போது நம்முடைய கேள்வி என்னவென்றால், இந்த நாட்டில் ஏன் நீட்டை ஒழிக்காமல் இருக்கிறார்கள்?

நம்முடைய அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய மருத்துவர்கள், அல்லது மருத்துவக் கல்லூரியில் இருக்கக்கூடிய மருத்துவ பேராசிரியர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதியவர்களா? ”நீட் எழுதினாலே மருத்துவ இடம் கிடைத்துவிடும்” என்று, இங்கே ஒரு போலியான திட்டத்தை நம் மனதில் ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். வருடா வருடம் செய்திதாளைப் பார்தால், “துப்புரவுத் தொழிலாளருடைய மகள் நீட் தேர்வில் தேர்ச்சி” என்று வரும், அதேபோல ஆட்டோ ஓட்டக்கூடியவரின் பையன், ஒரு கூலி வேலை செய்யக்கூடிய அம்மாவின் மகள் தேர்ச்சி பெற்றார் என்று வரும். “தேர்ச்சி பெற்றார்களே, ஆனால் மருத்துவ இடம் கிடைத்தா? என்றால் இல்லை”. (இதை ஒன்றிய அரசோ அல்லது மாநில அரசு ஆய்வு செய்யட்டும்).
அப்புறம் எதற்கு நீட் எழுதுகிறோம்? அது ஒரு வியாபாரம். ஒரு யுக்தி. இந்தியா முழுவதும் நீட் பயிற்சிக்கு ஒட்டுமொத்த இந்தியாவின் நிறுவனங்கள் சேர்த்தால் எவ்வளவு சம்பாதிக்கிறான்? வருடத்திற்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறான். நான் 12-வது படிக்கும்போது என்னுடைய பள்ளி மாத கட்டணம் 150 ரூபாய். ஒரு வருடத்திற்கு 1500-லிருந்து 5000-க்குள் பள்ளிக்கல்வியையே முடித்தேன்.
ஆனால் இன்றைக்கு ஒரு 11-வது படிக்கும் பிள்ளை, 12-வது படிக்கும் பிள்ளை நீட் பயிற்சி மையத்திற்கு போகும்போது 2 லட்சம் ரூபாய் கட்டுகிறான். கிராமத்தில் இருக்கக்கூடிய என்னுடைய பிள்ளைகள், வருமானம் குறைவாகச் சம்பாதிக்கக்கூடிய என்னுடைய பெற்றோர்கள் எப்படி கட்டணம் கட்டுவார்கள்? எப்படி படிக்க வைப்பார்கள்? தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய மாணவர்கள், விழுப்புரத்திலிருந்து, திண்டிவனத்திலிருந்து, திருநெல்வேலியிலிருந்து, தஞ்சாவூரிலிருந்து, காட்பாடியிலிருந்து, வீரலூரிலிருந்து வரக்கூடிய பிள்ளைகள் ஒருபோதும் மருத்துவர் ஆக கூடாது என்பதற்குத்தான் நீட் தேர்வு.
இது யார் செய்த சூழ்ச்சி? 2000 வருடம் முன் யாருக்கு மட்டும் இங்கே மருத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததோ, அது போலவே இன்றைக்கு பாரத ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 2000 வருடம் கழித்து, “ஏழை எளிய பசங்களா, காசுக்கே வழி இல்லாத பசங்களா, சூத்திரப் பிள்ளைகளா, நீங்கள் ஏன்டா மருத்துவர் ஆகிறீர்கள்?” என்று கேள்வி கேட்கிறான். அதுதான். வேறு எதுவும் இல்லை.

இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டிய இடம் என்னவென்றால், இந்தியாவில் 1 லட்சத்து 30 ஆயிரம் சீட்டு மருத்துவர்களுக்கு உள்ளது. மொத்தம் 30 மாநிலங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் 13,050 சீட்டு. அந்த 13,050 சீட்டில் 7,000 சீட்டு என்பது அரசு கல்லூரிகளில் வரக்கூடிய சீட்டு. மற்றதெல்லாம் தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வரக்கூடிய சீட்டு. இந்தியாவிலே “மருத்துவ தளம்” என்று சொல்லக்கூடியது தமிழ்நாடுதான். 1 லட்சத்து 30 ஆயிரம் சீட்டில் இந்தியாவின் 10% சீட்டை தமிழ்நாடு வைத்திருக்கிறது. அதற்கான உட்கட்டமைப்பு தமிழர்களுடைய வரிப்பணத்தில் ஏற்படுத்தியுள்ளோம்.
ஆனால் இன்றைக்கு நம் மாணவர் படிக்க முடியவில்லை. இந்த ஒன்றிய அரசு வைத்த நீட்டின் மூலம் என்ன பாதகத்தை ஏற்படுத்தியது என்றால், 2017-க்கு முன்பு வரைக்கும் தமிழ்நாட்டில் அந்த 13,000 சீட்டும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய மாணவர்களே மருத்துவர் ஆனார்கள். ஒன்றிய அரசு ”ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல்” என்று சொல்லி, 2017-க்கு பிறகு 13,000 சீட்டில் கிட்டத்தட்ட 6,000-லிருந்து 7,000 சீட்டுகள் வட மாநிலத்திலிருந்து வரக்கூடிய பிள்ளைகளுக்கு போகிறது. தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் கட்டுகின்ற கல்லூரிகளில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகாரிலிருந்து வந்தவன் மருத்துவ சீட்டு படிக்கிறான். ஐந்து வருடம் படிப்பை முடித்துவிட்டு (அந்த 7,000 பேர் வெளி மாநிலத்திற்கு) சொந்த ஊருக்குப் போவான்.
தமிழ்நாடு அரசுக்குச் சரிபாதியான பற்றாக்குறை இங்கே நிகழ்கிறது. இதை யார் கவனிப்பார்கள்? தமிழ்நாட்டில் ஒரு அழகான திட்டம் என்னவென்றால், மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்த பிறகு உங்களுக்கு மருத்துவப் பட்டம் கொடுத்துவிட மாட்டார்கள். ஐந்து ஆண்டு படித்த பிறகு ஒரு ஆண்டு அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குக்கிராமத்தில் போய்ப் பணி செய்ய வேண்டும். சேவை செய்ய வேண்டும். மருத்துவம் என்பது பணத்திற்காக அல்ல, சேவை என்பதுதான் தமிழ்நாடு அரசாங்கத்தின் கூறு.
கிராம புறங்களில் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மருத்துவமனை இருக்காது. பாம்பு கடிக்கும், பல கொடிய மிருகங்கள் கடிக்கும். தூக்கிட்டுப் போக மருத்துவமனை இருக்காது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் 3 கிலோமீட்டருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. அந்த சுகாதார நிலையத்தில் ஆறாவது வருடம் சேவை செய்ய வேண்டும். அதில் பணி செய்ததற்கு சான்றிதழ் கொடுத்தால் மட்டும்தான் தமிழ்நாட்டில் மருத்துவராக முடியும். இப்போது அந்த 13,000 சீட்டில் 7,000 பேர் வெளி மாநிலத்திற்குப் போய்விடுகிறார்கள். மீதம் 6,000 சீட்டை வைத்துகொண்டு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 50 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை மருத்துவர்களை எப்படி நியமிப்பீர்கள்? அப்போது இந்தத் தேர்வினால் ஏழை எளிய மக்களுடைய கனவு மட்டும் பாதிக்கவில்லை, தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பே பாதிப்புக்குள்ளாகிறது. இதை நாம் உணர வேண்டும். அதுதான் முக்கியம்.

இந்த நீட் தேர்வினுடைய சந்தை மதிப்பு 1 கோடியே 30 லட்சம். இதை நடத்தும் அத்தனை பேருமே தேசியக் கட்சிகள் – பாஜக, காங்கிரஸ் மற்றும் பெரும் மார்வாடிகள் இந்தியா முழுவதும் நீட் பயிற்சி மையம் வைத்திருக்கிறார்கள்.
இப்போது நம்முடைய கேள்வி: கடந்த 12 ஆண்டுகளாக மண்டியிடாத மோடி அரசை, இந்த Gen Z தலைமுறையினர் மண்டியிட வைத்திருக்கிறார்கள். நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒருவேளை அரசியல்படுத்தப்பட்ட மாணவர்கள் இருந்திருந்தால், அவர்களுடைய முழக்கம் “மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகு” என்பதாக மட்டும் இருந்திருக்காது. இந்த நாட்டின் ஒன்றிய பிரதமரான மோடி அவர்கள் வீழ வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முழக்கமாக இருக்கும்.
உதாரணம் சொல்கிறேன்: வேலூரில் காட்பாடியில் ஒரு இடத்தில் கொலை நடக்கிறது என்று வைத்து கொள்வோம். உடனே காவல்துறை விசாரணை பண்ணுவார்கள். இரண்டு கொலை நடக்கிறது, உடனே இங்கே மேல் அதிகாரியாக இருக்கக்கூடிய ஆய்வாளர்(Inspector)-ஐ இடைநீக்கம் செய்வார்கள். நான்கு கொலை நடக்கிறது, உடனே இங்கே இருக்கக்கூடிய மேல் அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர்(ACP)-யை பதவி இடைநீக்கம் செய்வார்கள். ஐந்து கொலை அதே இடத்தில் நடந்துகொண்டே இருக்கிறது, உடனே மேலதிக காவல் கண்காணிப்பாளர் (ADSP)-யை தூக்குவார்கள், காவல் துணை ஆணையர் (DCP) -யை தூக்குவார்கள். 10 கொலை நடக்கிறது என்றால் இதே மாவட்டம், இதே இடத்தில் என்றால், உடனே அரசாங்கம் இங்கே இருக்கக்கூடிய காவல் ஆணையரை இடைநீக்கம் செய்யும்.
இந்தியாவில் இதுவரை நீட் தேர்வினால் 50 மாணவர்களுக்கு மேலாக இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 20 மாணவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “நிறுவன கொலை (Institutional Murder)” என்று குற்றம் சாட்டுகிறேன். நிறுவன கொலைக்கு மத்திய அரசாங்கத்தில் இருக்கக்கூடிய கல்வி அமைச்சர் பொறுப்பு ஏற்கவில்லை. அவர் பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்வது மட்டுமல்ல, அந்த மத்திய கல்வி அமைச்சருக்கு மேல் உட்கார்ந்திருக்கிறாரே நரேந்திர மோடி ராஜினாமா செய்வதுதான், இந்த நீட்டை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த (நிறுவன கொலையான) அத்தனை உயிர்களுக்கும் ஒரு தியாக வேள்வியாக இருக்கும்.
நீட் தேர்வு ரத்துப் போராட்டத்தை அதிமுகவின் அமைச்சகம் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். தமிழ்நாடு சட்டமன்றம் தேர்ந்தெடுந்த இந்த இரண்டு தீர்மானத்திற்கும் எவனோ ஒரு ஒட்டுண்ணி (ஆளுநர்) கையெழுத்து போடவில்லை. அதிமுக காலத்தில் இருந்த ஆளுநரும் கையெழுத்து போடவில்லை. திமுக காலத்தில் இருந்த ஆளுநரும் கையெழுத்து போடவில்லை. இன்றைக்கு தவெக ஆட்சியில் இருக்கக்கூடிய ஆளுநரும் கையெழுத்து போடவில்லை. அப்படியென்றால் ஆளுநர் யாருக்கான நபராக இருக்கிறார்? முதலில் ஆளுநர் யார்? என்ற கேள்வியைத்தான் தமிழ்நாடு அரசாங்கம் எழுப்ப வேண்டிய கேள்வி, தமிழ்நாடு மக்கள் எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்கிறது.
நாங்கள் தமிழ்நாடு (தவெக) அரசை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்கிறோம். “நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கை முடிவில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?” தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். SFI-யின் தோழர்களும், AISF-யின் தோழர்களும், OG தமிழா மாணவர்களும் களத்தில் இருந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர் படை ஏன் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை? என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.

அமைச்சர் ராஜ்மோகன், “மாணவர்கள் அறவழியில் போராடும் போது அந்தப் போராட்டத்திற்கு காவல்துறை இடையூறு செய்யக்கூடாது” என்று சொன்னார். நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒவ்வொரு கட்சி, இயக்கங்களுடைய மாணவரணி போராட்டம் செய்யும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவரணி ஏன் போராட்டம் செய்யவில்லை?
இந்திய அளவில் “காக்ரோச் ஜனதா பார்டி”-யுடைய மாணவர்களை தடிக்கொண்டு அடிக்கிறான், pellets வீசுகிறான், சட்டையைக் கிழிக்கிறான், ரத்தம் வருமளவு அடிக்கிறான். ஏன் தேசிய கட்சியான காங்கிரஸ் மாணவரணி போராட்டத்திற்கு வரவில்லை?
கம்யூனிஸ்டு மாணவரணி வந்தார்கள். SFI வந்தார்கள். AISF வந்தார்கள். DYFI வந்தார்கள். ISF வந்தார்கள். ஆனால் இந்தியாவின் போராட்டத்தில் பங்கு பெறாத ஒரே மாணவர் அமைப்பு ABVP மாணவர் அமைப்பு.
மாணவரைத்தான் அடிக்கிறார்கள். இன்னொரு சக மாணவர் அமைப்பு கண்டனம் தெரிவிக்க வேண்டுமா இல்லையா? கண்டனம் தெரிவிக்காத ஒரே அமைப்பு ABVP மாணவர் அமைப்பு. ஏன் என்றால் அது மாணவர் அமைப்பு அல்ல. அது சங்க் பரிவார் (Sangh Parivar) உடைய அமைப்பு. இதை இங்கே இருக்கக்கூடிய மாணவர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லோரும் ஒரு கேள்வி கேட்டார்கள், “அவர்கள் Fair NEET-தானே கேட்கிறார்கள்? நாம் ஏன் Ban NEET கேட்கிறோம்?”
அன்பானவர்களே! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எப்போதுமே பீகார் பாதிப்படையும். இந்த வருடம் மட்டும்தான் மணிப்பூர், மேகலாயா, ராஜாஸ்தான், மும்பை, மகாராஷ்டிரா பாதிப்படைந்து போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்தந்த மாநிலங்களில் சில முறைதான் மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. பல முறை தேசியக் கட்சிகளுடைய ஆட்சி அதிகாரத்தில் அந்த மாநிலங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு மட்டும்தான் கடந்த 70 ஆண்டுகளாக மாநிலக் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கிறது. எங்களுடைய புரிதல் “மாநில உரிமையை நிலைநாட்டுவது” என்பதாக இருக்கும். உங்களுடைய (வட மாநிலங்கள்) புரிதல் என்பது வேறு விதமாக இருக்கும். ஆனால் இதே “காக்ரோச் பார்ட்டி” தன்னுடைய ஐந்தாவது முழக்கத்தில், “எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிறதோ அதை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று சொன்னது. இந்தப் போராட்டம் என்பது “நீட் வினாத்தாளை ஒழுங்குபடுத்துவது” என்பது மட்டுமல்ல.
இன்றைக்கு ஒன்றிய அமைச்சர் சொல்கிறார், “நாங்கள் ஒரு சட்டம்/ மசோதா கொண்டு வருகிறோம்” என்று. இந்த சட்டம், மசோதா கொண்டு வந்து 3 வருடமாகிறது. அது வந்த பிறகுதான் இந்தத் திருட்டு நடக்கிறது. ஜந்தர் மந்தரில் போராடக்கூடிய மாணவர்கள் “2000 பேர் மேல் வழக்குகள் இருக்கிறது, POCSO இருக்கிறது, திருட்டு வழக்குகள் (Chain Snatching, Pickpocket) இருக்கிறது,” என்று ஜந்தர் மந்தரின் காவல் துணை ஆணையர் (DCP) சொல்கிறார்.
ஐயா, உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்: இந்தியாவின் நாடாளுமன்றம் இருக்கிறதல்லவா? பிரதமர் தலைமையில் இயங்குகிறதல்லவா, அதில் 543 பேரில் 350 பேர் மேல் குற்றவாளிகள். இதை நான் சொல்லவில்லை. ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருக்கிறது. லட்சக்கணக்கில் கூடிய மாணவர்களில் “2000 பேர் மீதான வழக்குகளை நாங்கள் கண்டுபிடித்தோம்” என்று சொல்கிறீர்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் 543 பேரில் 350 பேர் மேல் பெண்கள் மீது தவறானப் பார்வை, பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு இருக்கிறது. அதில் பெருவாரியானவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். அதை உங்கள் ராணுவம் என்ன செய்தது? அதை உங்கள் காவல்துறை என்ன செய்தது? அதை உங்கள் ஆட்சி என்ன செய்தது?
தமிழ்நாட்டு அளவில் மட்டுமல்ல, பொதுவாக போராட்டம் என்பது தேர்தல் நடக்கும் முன்பாக ஒரு 6 மாதம் முன்பாகத்தான் அந்தப் போராட்டம் சூடுபிடிக்கும். ஆனால் இந்திய அளவில், முதல் முறையாக Gen Z தலைமுறையினர் தேர்தல் நேரமே வராத இந்த காலகட்டத்தில் ஒரு போராட்டத்தைக் கட்டமைத்து 40 நாட்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால், வரலாறு ஒன்றுதான் சொல்கிறது: “போராட்டம் மட்டும்தான் இங்கே தீர்வு தரும்“.
போராட்டம் மட்டும்தான் கொள்கை வடிவில் தீர்வையும் முழக்கத்தையும் தரும் என்பதை மீண்டும் இந்த இளைஞர்/ மாணவர் போராட்டம் நிரூபித்திருக்கிறது.
இந்த மாணவர்கள் எதை எதிர்த்தார்கள் என்றால்-உச்ச நீதிமன்ற நீதிபதி நமக்கு எதிராகத் தீர்ப்பு கொடுத்திருக்கிறார், இந்தியாவின் ஒரு மாநிலத்தின் காவல்துறை எதிராக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்தப் போராட்டத்தை முடக்கத் திட்டமிடுகிறார்கள். வினாத்தாள் கசிந்த பிறகு, மறுதேர்விற்கான வினாத்தாளை இராணுவம் எடுத்து கொண்டு போகிறான்.
இந்த மாணவர்கள் எதிர்த்தது: ஒரு காவலர்கள் படையை, ஒரு இராணுவ படையை, ஒரு பாராளுமன்றத்தை, ஒரு உச்ச நீதிமன்றத்தை எனலாம்.
இந்த நான்கும் எப்போது சேரும்? இந்தியா ஏதேனும் ஒரு நாடு மீது போர் வந்தால் மட்டும்தான், இந்த நான்கும் ஒன்றாகச் சேரும். வெறும் மாணவர்கள், இளைஞர்கள் 40 நாட்களாக இந்தியா முழுவதும் நடத்திய இந்தப் போராட்டத்தில்தான், ஒரு போர் போல இந்த மத்திய உளவுத்துறையும், மத்திய அரசாங்கமும், மத்தியில் இருக்கக்கூடிய பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை அத்தனையும் ஒன்றாக சேர்ந்து மாணவர்களை எதிர்க்க துணிந்தது.
போராட்ட களத்தில் நின்று என் மாணவன் முழங்கினான்: “சுட்டால் என்னைச் சுடு. நாங்கள் களத்திலிருந்து போக மாட்டோம்” என்று மார்தட்டிக் கொண்டதுதான், பாசிசத்தின் வீழ்ச்சி.

உலகத்தில் ஹிட்லர் வீழ்ந்திருக்கிறார். முசோலினி வீழ்ந்திருக்கிறார். அதேபோல இந்தியாவில் மாணவர்கள் மூலம், இளைஞர்கள் மூலம், ஜனநாயகத்தின் மூலம் இந்த பாசிச மோடி அரசாங்கம் வீழும் என்று சொல்லி, இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற ஏனைய கட்சியினருக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பானவர்களே! “நீட் ஒழியும் வரை, நீட்டுக்கு தமிழ்நாட்டில் விலக்கு கிடைக்கும் வரை, மாணவர்கள் உரிமையை நாம் மீட்டெடுக்கும் வரை” மே17 இயக்கத்தின் போராட்டமும், எங்களது இயக்கத்தின் தலைவர் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் போராட்டமும் தொடரும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! வணக்கம்!!