
மாணவர்களின் அறிவின் கூடங்களாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் சாதிய பாகுபாட்டின் களமாக மாறி நிற்கின்றன – ரோஹித் வெமுலா முதல் தர்ஷன் சோலங்கி, பாத்திமா லத்தீஃப் வரையிலான மரணங்கள் “மன அழுத்தம்” என்ற பெயரில் மறைக்கப்படும் நிறுவனக் கொலைகள். இந்த நிறுவனக் கொலைகளைத் தடுக்க பத்தாண்டு போராட்டத்திற்குப் பின் கொண்டுவரப்பட்ட UGC-யின் ‘புதிய சமத்துவ விதிகள் 2026’-க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததும், அதற்கு எதிராக ஜந்தர் மந்தரில் எழுந்துள்ள மாணவர் எழுச்சியுமே இந்த விதிகளின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டுவந்த ‘புதிய சமத்துவ விதிகள் 2026’-க்கு உச்ச நீதிமன்றம் சனவரி 29, 2026 அன்று இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது ஆகத்து 20, 2026 அன்று விசாரணையில் UGC 4 வாரத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மனுதாரர்கள் அதன் பிறகு 2 வாரத்தில் பதில் அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த தடைக்கு எதிராகவும், விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், இதனை எதிர்த்தும் மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு போராட்டம். இந்த முறையும் போராடுவது தமது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் மாணவர் அமைப்புகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும்தான். பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டுவந்த ‘புதிய சமத்துவ விதிகள் 2026’-க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பலை வெடித்துள்ளது. இந்த தடைக்கு எதிராகவும், விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பை உடனடியாக அமல்படுத்தக் கோரியும் மாணவர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த விதிகளின் பின்னணியையும் தேவையையும் புரிந்துகொள்ள, நாம் ரோஹித் வெமுலாவின் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
ரோஹித் வெமுலா: ஒரு சமூக அமைப்பின் சாட்சி

2016-ஆம் ஆண்டு, ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) படித்துக்கொண்டிருந்த 26 வயதான ரோஹித் வெமுலா தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் (ASA) அவர் தீவிரமாகச் செயல்பட்டதால், ABVP அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தால் விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான ஆராய்ச்சி நிதி உதவியும் நிறுத்தப்பட்டு, விடுதியை விட்டே வெளியேற்றப்பட்டார். நண்பர்களுடன் திறந்தவெளியில் கூடாரம் அமைத்துப் போராடிய ரோஹித், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தான் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், “மனிதனின் மதிப்பு அவனது உடனடி அடையாளமாகச் சுருக்கப்பட்டுவிட்டது. எனது பிறப்பே எனக்கு நேர்ந்த பெரும் விபத்து” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது வெறும் ஒரு தனிநபரின் மரணம் அல்ல; நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதியப் பாகுபாட்டின் கொடூர வெளிப்பாடு.
தரவுகளில் மறக்கடிக்கப்படும் மரணங்கள்:
கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் ஜூலை 2023 வரை) ஒன்றியப் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் (IIT, NIT, மத்திய பல்கலை., IIM, IISER, IIIT) மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 98 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகப் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த மரணங்கள் நேரடியாகச் சாதிய அல்லது மதப் பாகுபாட்டால் ஏற்பட்டவை என்று அரசு தரவுகளில் எங்குமே வகைப்படுத்தப்படவில்லை என்பதுதான் மிகுந்த வருத்தத்திற்குரிய விடயம். “மன அழுத்தம்” என்ற பொதுவான சொல்லுக்குள் இந்த நிறுவனக் கொலைகள் (Institutional Murders) மறைக்கப்படுகின்றன.
இருப்பினும், கள யதார்த்தத்தில் பல மாணவர்கள் இத்தகைய கொடுமைகளாலும் பாகுபாட்டாலும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவற்றில் பெரும்பான்மை ஊடகங்களில் வந்த சில சம்பவங்களின் விவரங்கள்:
| ஆண்டு | மாணவர் பெயர் | கல்வி நிறுவனம் | சமூக/மத அடையாளம் | முக்கிய பின்னணி / குற்றச்சாட்டு |
| 2016 | ரோகித் வேமுலா | ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் | தலித் (SC) | அம்பேத்கர் மாணவர் அமைப்பில் செயல்பட்டதால் விடுதியில் இருந்து நீக்கம், உதவித்தொகை நிறுத்தம். |
| 2017 | முத்துகிருஷ்ணன் (ரஜினி கிருஷ்) | ஜே.என்.யூ (JNU), டெல்லி | தலித் (SC) | MPhil/PhD சேர்க்கையில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார் கூறி உயிரிழந்தார். |
| 2019 | டாக்டர் பாயல் தத்வி | டோபிவாலா மருத்துவக் கல்லூரி, மும்பை | பழங்குடியினர் (ST) | பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் மருத்துவர். மூத்த மருத்துவர்களால் சாதிய ரீதியாகத் தொடர் ஏளனமும் மன உளைச்சலும் அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு. |
| 2019 | பாலாஜி நாயக் | ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) | பழங்குடியினர் (ST) | வளாகத்தில் காட்டப்பட்ட பாகுபாடு மற்றும் கல்வி ரீதியான மன அழுத்தத்தால் பலியானார். |
| 2019 | பாத்திமா லத்தீஃப் | ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) | முஸ்லிம் (சிறுபான்மையினர்) | மத அடையாளத்தைக் காரணம் காட்டி மதிப்பெண் குறைக்கப்பட்டதாகவும், பேராசிரியர்கள் துன்புறுத்தியதாகவும் தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்து உயிரிழந்தார். |
| 2023 | தர்ஷன் சோலங்கி | ஐஐடி பாம்பே (IIT Bombay) | தலித் (SC) | நுழைவுத் தேர்வு தரவரிசை மற்றும் சாதி தெரிந்ததும் சக மாணவர்கள் ஒதுக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சல். |
| 2023 | ஆயுஷ் ஆஷ்னா | ஐஐடி டெல்லி (IIT Delhi) | தலித் (SC) | கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் சந்திக்கும் ஆதரவின்மை. |
| 2023 | அனில் குமார் | ஐஐடி டெல்லி (IIT Delhi) | தலித் (SC) | படிப்பை முடிக்க முடியாமல் சாதிய அழுத்தங்களால் தனிமைப்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு. |
புதிய UGC விதிகள் (2026), இதன் முக்கியத்துவமும் குறைபாடுகளும்
ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா உள்ளிட்ட சமூக ஆர்வலர்களின் நீண்டகாலச் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே, 2012-ஆம் ஆண்டின் பழைய விதிகளுக்குப் பதிலாக ‘UGC சமத்துவ விதிகள் 2026’ உருவாக்கப்பட்டது. SC, ST மற்றும் OBC மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் இதில் சில முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன:
UGC கொண்டுவந்த ‘சமத்துவத்தை மேம்படுத்துதல் விதிகள் 2026’ – ன் நிறை, குறைகளை பார்க்கலாம்.
நிறைகள் (ஏன் தேவை என்று சொல்லப்படுகிறது?)
1. 2012 விதிகளுக்கு மாற்றாக புதியது: 14 வருட பழைய விதியை மாற்றி, இப்போதைய சூழலுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டது.
2. பாதுகாப்பு விரிவாக்கம்: SC, ST மட்டுமல்லாமல் OBC, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு.
3. சமத்துவக் குழு (Equal Opportunity Centre / Anti-Discrimination Cell): ஒவ்வொரு கல்லூரியிலும் புகார்களை விசாரிக்க கட்டாயக் குழு.
4. சமத்துவ அதிகாரி (Equity Officer): புகார்களை கையாள தனி அதிகாரி நியமனம்.
5. கடும் நடவடிக்கை: விதிகளை மதிக்காத கல்லூரிகள் மீது UGC நிதியுதவி ரத்து, அங்கீகாரம் ரத்து வரை நடவடிக்கை எடுக்க முடியும்.
6. 24 மணி நேரத்தில் புகார்: புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை தொடங்க வேண்டும் என்ற விதி.
குறைகள் (ஏன் எதிர்க்கப்படுகிறது?)
மாணவர் அமைப்புகள் (SC/ST/OBC தரப்பு) சொல்லும் குறைகள்:
1. Ragging விடுபட்டது: பல்கலைக்கழகங்களில் சாதிய துன்புறுத்தல் பெரும்பாலும் மாணவர் வதை (Ragging) வடிவில்தான் நடக்கிறது. ஆனால் புதிய விதியில் மாண்வர் வதை பற்றிய தெளிவான பிரிவு இல்லை.
2. பிரதிநிதித்துவம் இல்லை: சமத்துவக் குழுவில் SC, ST, OBC பிரதிநிதிகளுக்கு தீர்க்கமான அதிகாரம் இல்லை, பெரும்பாலும் நிர்வாகமே முடிவு எடுக்கும்.
3. புகார்தாரர் பாதுகாப்பு இல்லை: புகார் கொடுக்கும் மாணவரின் பெயர் ரகசியம் காக்கப்படும், பழிவாங்கப்பட மாட்டார் என்ற உத்தரவாதம் பலவீனமாக உள்ளது.
பொதுப்பிரிவினர் (OC) தரப்பு எதிர்ப்பு:
1. தவறாக பயன்படுத்தப்படும்: பொய் புகார் கொடுத்து பொதுப்பிரிவு மாணவர்கள், ஆசிரியர்களை பழிவாங்க வாய்ப்பு உள்ளது.
2. இயற்கை நீதிக்கு எதிரானது: புகார் வந்தாலே குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி போல நடத்தப்படுவார் என்ற அச்சம்.
3. இரட்டை விசாரணை: ஏற்கனவே SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பல்கலைக்கழக விதிகள் இருக்கும்போது மீண்டும் ஒரு விதி தேவையில்லை.

உச்ச நீதிமன்றத் தடையும் எழும் கேள்விகளும்:
இக்குறைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த புதிய விதிகளால் தங்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்றும், இவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறி பொதுப்பிரிவினர்(ஓ.சி) உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதன் விளைவாக, புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
பொதுப்பிரிவினரின் எதிர்ப்பிற்குப் பயந்து ஒன்றிய அரசும் UGC-யும் இந்த விதிகளை முழுமையாக அமல்படுத்தாமல் மறுபரிசீலனை செய்ய சம்மதித்திருப்பதை JNU, BAPSA, ASA போன்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. சாதி ரீதியானத் துன்புறுத்தல்களில் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதிகளுக்கே தடை விதிக்கப்பட்டதால், கொந்தளிப்படைந்த மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
இந்த விதிகள் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் தேர்தலை ஒட்டி கொண்டுவரப்பட்டதாகவும், தலித்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளுக்காக இந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் பொதுப்பிரிவினர் போர்க்கொடி தூக்கியதும் அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடக்கத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அந்த வழிகாட்டுதல்களைக் “கடுமையாக ஆதரித்ததாகவும், சட்டத்திற்கு உட்பட்டே” இருப்பதாகக் கூறியதாகவும், ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கும் முதலில் வரவேற்று பின்னர் பதிவை நீக்கி தடைக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பிஜேபி தலைமை தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும் அப்போது கல்வி துறை அமைச்சராய் இருந்த தர்மேந்திர பிரதானும் தன் நிலைப்பாடுகளை மாற்றி அமைதி காத்தார்.
நீதிமன்றம் யாருக்கானது?

இங்குப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குத் தங்களின் நீதியைப் பெற இருக்கும் ஒரே வழி தெருவில் இறங்கிப் போராடுவது மட்டும்தான். ஆனால், வெறும் 3-5% மட்டுமே உள்ள பொதுப்பிரிவினர், மிக எளிதாக உச்ச நீதிமன்றம் வரை சென்று தங்களுக்குச் சாதகமான ஆணை அல்லது தடையைப் பெற்றுக்கொண்டு வர இயலுகிறது.
இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய அவலநிலையே நீடிக்கிறது. இதில், சிறிதளவு நிதி ஆதரவைப் பெற்றுச் சட்டப் போராட்டம் நடத்திய அனிதாவிற்கும் இறுதியில் தோல்வியே மிஞ்சியது என்பதை இந்தத் தேசமும் உலகமும் நன்கு அறியும்.
இந்த நிலைமை “இங்கு நீதிமன்றங்கள் உண்மையில் யாருக்கானவை?” என்ற பெரிய கேள்வியை நம்மிடம் எழுப்புகிறது. இந்தியாவின் பூர்வகுடிகளான பிற்படுத்தப்பட்ட மக்களைக் காக்கத் தவறும் சட்டமும் அதிகார அமைப்புகளும், ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் பொதுப்பிரிவினரையே காக்க முயல்கின்றனவோ என்ற அச்சத்தை இத்தகைய முடிவுகள் வலுப்படுத்துகின்றன.
UGC-யின் 2026 சமத்துவ விதிகள் முழுமையான தீர்வு அல்ல, அதில் மாண்வர்கள் வதைப்பது போன்ற குறைபாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், எதுவுமே இல்லாத வெற்றிடத்தை விட, குறைகளுடன் கூடிய ஒரு பாதுகாப்புக் கவசம் கூட ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவசியமானது. அந்தக் கவசத்தையும் தடை செய்ய நினைப்பதும், அதற்கு ஒன்றிய அரசே மறுபரிசீலனை என்ற பெயரில் பின்வாங்குவதும், இந்த அமைப்பு யாருக்காக வேலை செய்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஜந்தர் மந்தரில் இன்று எழும் முழக்கம் வெறும் ஒரு விதிக்கான கோரிக்கை அல்ல; “எங்கள் உயிருக்கும், கல்விக்கும் உத்தரவாதம் கொடு” என்ற அடிப்படை உரிமைக்கான குரல். சாதியச் சுவர்களைத் தகர்க்காமல், சமத்துவ விதிகளை முழுமையாக அமல்படுத்தாமல், எந்தப் பல்கலைக்கழகமும் உண்மையான அறிவின் கூடமாக முடியாது.