
கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடித்த கூட்டுறவு அமைப்புகளை மாநிலத்திடமிருந்து பறித்திருக்கிறது மோடி அரசு. இதுவரை மாநிலங்கள் வழியாக வழங்கப்பட்டு வந்த நிதியை NCDC என்கிற இந்திய ஒன்றிய அரசின் அமைப்பின் மூலம் நேரடியாக வழங்குவோம் என்கிற அறிவிப்போடு, விவசாயிகளுக்கும், சாமானியர்களுக்கும் செல்ல வேண்டிய நிதியை ‘கூட்டுறவு வளர்ச்சி’ என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையிலும் சட்டத்தை திருத்தி விட்டது.
கூட்டுறவு சங்கங்கள் மாநிலப் பட்டியலில் வரும் ஒரு துறையாகும். இந்தியாவில் சுமார் 8 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சுமார் 30 கோடி மக்கள் இந்த சங்கத்தில் பங்கு பெறுகின்றனர். தமிழ்நாட்டில் 7764 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சுமார் ஒன்றரை கோடி மக்கள் இதன் மூலமாக பயனடைகின்றனர்.
கோடிக்கணக்கான எளிய மக்கள் பயன் பெறும் இச்சட்டத்தில் ,‘தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக சட்டத்தின் (NCDC) திருத்த மசோதா 2026’ என்ற பெயரில் ஆகஸ்ட் 11, 12ம் நாட்களில், மாநில அரசு, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதி என எவருடனும் எந்த ஜனநாயக ஆலோசனையும் நடத்தாமல், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிடம் எந்த விவாதமும் இன்றி, அவசர அவசரமாக இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வங்கிகளை அணுக முடியாதவர்களுக்கும், அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்க விரும்பாதவர்களுக்கும், ஏழை மற்றும் சாமானிய மக்களின் நம்பிக்கையாக இருப்பவை கூட்டுறவு சங்கங்களே.
விவசாயிகளுக்கு விதை, உரம், டிராக்டர் போன்ற தேவைகளுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு மாடு மற்றும் கால்நடைத் தீவனம் போன்றவற்றுக்கும் கூட்டுறவு சங்கங்கள் உதவுகின்றன. அதேபோல், பூ வியாபாரம், மளிகைக் கடை, தையல் கடை போன்ற சிறு தொழில்களை நடத்துவோருக்கும் கடன் உதவி வழங்குகின்றன.
மீனவர்களுக்கு படகு, மீன்பிடி வலை உள்ளிட்ட தேவைகளுக்கும், நடுத்தர மக்களுக்கு நகை, வீடு, கல்வி போன்ற தேவைகளுக்கும் கடன் வழங்குகின்றன. எளிய மக்கள் தங்கள் தேவைகளுக்காக குறைந்த வட்டியில் எளிதாகக் கடன் பெறுவதற்கான முக்கியமான வழியாகவும் கூட்டுறவு சங்கங்கள் விளங்குகின்றன.

கூட்டுறவு சங்கத்திற்கு சென்று ஒரு கையெழுத்தில் எளிதாக கிடைத்த கடன், இனி கிடைக்காத வகையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விதியின்படி, மக்கள் கடன் வாங்க விண்ணப்பிப்பதற்கு ஆதார், பான், சிபில் ஸ்கோர், ஆவண சரிபார்ப்பு என கெடுபிடிகள் அதிகமாகும். ஒரு சிறு விவசாயியாலோ, பால் உற்பத்தியாளராலோ இந்த விதிகளுக்கு உட்பட்டு கடன் வாங்குவது சிரமமாகும்.
இதனால் மக்கள் கூட்டுறவு சங்கங்களை விட்டு வெளியேறி, அதிக வட்டி வசூலிக்கும் தனியார் வங்கிகளையும், வங்கி சாரா நிதி நிறுவனங்களையும் (NBFC) நோக்கி தள்ளப்படுவார்கள். இது கிராமப்புற பொருளாதாரத்தையே சிதைக்கப் போகிறது.
அதுமட்டுமின்றி, விவசாயிகளின் நெருக்கடியை உணர்ந்து மாநில அரசு வழங்கி வந்த கடன் தள்ளுபடி, வட்டி மானியம், இலவச கடன் போன்ற அத்தனை சலுகைகளும் இனி கேள்விக்குறியாகும். ஏனெனில் நிதியை அளிப்பது டெல்லி அதிகாரத்திற்கு உட்பட்டது என்றால், தள்ளுபடி செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்காது. இதுவரை மாநில அரசு வட்டியே இல்லாமல் அல்லது குறைந்த வட்டியுடன் (2%) கொடுத்த கடன் NCBC மூலம் 9-11% வரை உயரப் போகிறது. விவசாயிகள் கடன் சுமையை தாங்க வேண்டி வரும்.
மாநில அரசின் மேற்பார்வையை முற்றிலுமாக நீக்கிவிட்டு, டெல்லியில் அதிகாரத்தைக்கு குவிப்பதன் மூலம் தங்கள் அரசியலுக்கு வளைந்து கொடுக்கும் நிறுவனங்களுக்கும், தங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கும் மட்டுமே நிதியை திருப்பிவிடும் வாய்ப்பு உருவாகும்.
உழைக்கும் மக்களின் சிறிய நிறுவனங்களை ஓரங்கட்டும் அதே சமயத்தில், தனியார் தளவாட நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள், தனியார் பால் மற்றும் உர நிறுவனங்கள், தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற பெரு வணிகத்திற்கு ‘கூட்டுறவு வளர்ச்சி’ என்ற பெயரில் நிதி ஒதுக்குதலுக்கு இந்த புதிய விதிகள் வழிவகுக்கிறது.
இது மட்டுமின்றி, முன்புள்ள விதியின்படி, கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களாக வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உள்ளூர் விவசாயிகள், சமூகம் பெரியவர்கள் போன்றவர்களே நியமிக்கப்படுவர். வங்கி துறை சார்ந்த எந்த கல்வித் தகுதியும் அவர்களுக்கு தேவையில்லாமல் இருந்தது.

தேர்தலும் மாநில அரசின் வழிகாட்டுதல் மூலமாகவே நடைபெற்றது. ஆனால் புதிய விதியில் வங்கியியல், நிதித்துறை சார்ந்த மேற்படிப்புகள் அவசியம். இதனால் உள்ளூர் மக்கள் இதில் பணியாற்ற முடியாது.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை கலைக்க மாநில அரசை கேட்கவே தேவையில்லை. ரிசர்வ் வங்கியே நேரடியாக கலைத்து தனக்கு வேண்டியவரை நியமிக்கலாம்.
அப்படி நியமிக்கப்படுபவர் இனி அந்தந்த ஊர்களின் விவசாயியாக இருக்க மாட்டார். பெரிய தனியார் வங்கிகளைப் போல வடமாநிலத்தில் இருந்து ஒரு அதிகாரியை கொண்டு வரவும் வாய்ப்புள்ளது. நம் மொழி தெரியாத, நம் விவசாயம் தெரியாத ஒருவரிடம் நம் ஊர் மக்கள் கடன் கேட்கும் நிலையில் எளிய மக்கள் உளவியல் சிக்கலுக்கு ஆளாக நேரலாம்.
ஒரு கூட்டுறவு வங்கி நட்டத்தில் சிக்கினால், வாடிக்கையாளர் பணத்தை முடக்காமலேயே அதை வேறு வங்கியுடன் இணைக்கும் அதிகாரம் இனி ரிசர்வ் வங்கிக்கு உண்டு. இதன் மூலம், சிறு கூட்டுறவு வங்கிகளை பெரிய தனியார் வங்கிகள் மிகக் குறைந்த விலைக்கு விழுங்கி, அதன் கிளைகளையும், கோடிக்கணக்கான கிராமப்புற வாடிக்கையாளர்களையும் ஒரே நாளில் சொந்தமாக்கிக் கொள்ளும்.
மேலும், நிதி நெருக்கடியில் சிக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலதனத்திற்காக பங்குகளை வெளியிடும்போது, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றை மொத்தமாக வாங்கிவிடும். இதன் மூலம் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கியின் நிர்வாகம் மறைமுகமாக தனியாரின் கைக்கு போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.
2011-ல் காங்கிரஸ் அரசு, மாநில கூட்டுறவு சங்கங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 97 -யைக் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரிவையே ரத்து செய்து, கூட்டுறவு மாநில பட்டியலில் உள்ள உரிமை என தீர்ப்பளித்தது. ஆனால் இப்போது மோடி அரசு கொண்டு வரும் இந்த NCDC திருத்த மசோதா 2026, அந்த தீர்ப்பின் அடிப்படையையே தகர்க்கிறது.
மாநில பட்டியலில் உள்ள ஒரு துறைக்கு நேரடியாக டெல்லியில் இருந்து நிதி கொடுப்பது, நிர்வாகத்தை கலைப்பது, தணிக்கை செய்வது என அனைத்தையும் செய்தால், அது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தை படுகொலை செய்வதாகும்.
ஜீ (Zee) குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா பல வங்கிகளிடம் இருந்து வாங்கிய 22,000 கோடி கடனை சமீபத்தில் NCLT (தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்) தள்ளுபடி செய்து வெறும் ஆறு கோடி கட்டினால் போதும் எனத் தீர்ப்பளித்தது.

இதைப் போன்று கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 14 லட்சம் கோடி கார்ப்பரேட் கடனில் 9.81 லட்சம் கோடி (69.4%) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏழை விவசாயி 50,000 கடனுக்கு டிராக்டரை கையகப்படுத்தும் வங்கிகள்தான், பனியா குஜராத்தி பெரு நிறுவனங்களின் 22,000 கோடிக்கு 6 கோடி மட்டும் கட்டச் சொல்கிறார்கள். ஏழைகளிடம் KYC, CIBIL கேட்டு கடனை மறுப்பது, பணக்காரனுக்கு நாட்டையே தாரை வார்ப்பதை தான் NCDC சட்டத் திருத்தம் வழி வகுக்கப் போகிறது.
இது வெறும் சட்டத் திருத்தம் அல்ல. இது ஒரு அதிகாரப் பறிப்பு.
கூட்டுறவு என்பது கிராமத்து ஏழைகளின் வங்கி. அதை மாநில பட்டியலில் இருந்து பறித்து, டெல்லியின் கட்டுப்பாட்டில் கொண்டு போவது கூட்டாட்சி தத்துவத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.
இன்று NCDC மூலம் நிதி, நாளை வங்கி இணைப்பு, நாளை மறுநாள் பங்குகளை கார்ப்பரேட்டுக்கு விற்பது என, படிப்படியாக கூட்டுறவை தனியார்மயமாக்கும் சதித்திட்டமே இது.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் இந்த அதிகாரப் பறிப்பை கடுமையாக எதிர்த்த போதும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்காமல் மௌனம் காக்கிறது.
கூட்டுறவு என்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம். மாநில உரிமையை பறிக்கும் இந்த சட்டத்திற்கு எதிராக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் வேறுபாடின்றி ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம்.