சிவா திலீபன் அரசு அங்கீகாரம் எப்போது? – அண்ணா பிறந்த நாளையொட்டி கோரிக்கை

“இந்தியா கூட்டாட்சி நாடு. இந்திய சமூகம் பன்மைத்தன்மை கொண்டது. ஒரேயொரு மொழியைப் பொதுமொழியாக வைத்துக் கொள்வது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதியைச் செய்வதாகி விடும்!” -1963-ல் மக்களவையில் பாடம் எடுத்த அண்ணாவின் வரிகள் இவை.

பொதுவுடைமைவாதிகள் கூட, இந்தி பொதுமொழியாக இருக்க வேண்டும் என்று வாதிட்டபோது, அவர்களைக் கூட அவர்களின் தாய்மொழிச் சிறப்பை உணரும் வகையில் உரையாற்றியவர் அண்ணா.

மக்களவையில், வங்காளியான பூபேஷ் குப்தா இந்தியை ஆதரித்து வாதிட்டபோது, “இந்தி தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் வேண்டும் என்று வாதிட்ட பூபேஷ் குப்தா, இன்னமும் இந்தி படிக்கவோ பேசவோ முயற்சிகளே எடுக்கவில்லை” என்று அண்ணா கூறினார். அதற்கு கம்யூனிஸ்டான அவர் ‘எனக்கு அதற்கு நேரம் இல்லை’ என்றார். 

அவருக்கு “தாஸ் கேபிடல் (மூலதனம்)” படிக்க நேரம் இருக்கிறது. ரஷ்ய கம்யூனிசத்துக்கும், சீன கம்யூனிசத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் படிக்க நேரம் இருக்கிறது. இந்தியைத் தவிர எல்லாவற்றையும் படிக்க நேரம் இருக்கிறது. இருந்தாலும், இந்திக்கு ஆதரவாக இங்கு பேசுகிறார்”  என்று தமிழ்த் தேசிய இனத்தின் மொழிச் சிறப்பை எந்த நிலையிலும், எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத திராவிடக் கொள்கைவாதியாக, கம்யூனிசக் கொள்கைவாதிகளையும் எதிர்த்து வாதிட்டவர் அண்ணா. 

மக்களவையில் அண்ணாவின் தர்க்கரீதியான வாதங்கள் முக்கியமானவை. “இந்தியாவில் அதிகமான மக்கள் பேசுவதால் இந்தி பொதுமொழியாக வேண்டும் என்றால், அதிக எண்ணிக்கையில் இருக்கும் ‘காகத்தை அல்லவா’ இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவித்திருக்க வேண்டும்? ஏன் ‘மயிலை’ தேசியப் பறவையாக அறிவித்தீர்கள்? எண்ணிக்கை முக்கியம் அல்ல, சிறப்பு தான் முக்கியம். அப்படிப் பார்த்தால் தமிழ் தான் சிறப்பான மொழி” என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.

இதே வாதத்தைத் தான் பூபேஷ் குப்தாவிற்கும் வைத்தார். “உங்கள் வங்காள மொழி இலக்கியச் செழுமை கொண்டது, அதை விட்டுவிட்டு இந்தியை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என்று கேள்விகளை அடுக்கினார்.

மக்களவையில் மட்டுமின்றி மக்கள் மன்றங்களிலும் தனது அடுக்கு மொழியினால் இந்தித் திணிப்பை சாடினார். தம்பிக்கு எழுதிய கடிதங்களில், இந்தியினால் உருவாகப் போகும் பண்பாட்டுப் படையெடுப்பை உணர்ச்சிப்பூர்வமாகக் கடத்தினார். தம்பிகளிடம், தாய்மார்களை இந்திக் களத்திற்கு அழைத்து வரச் சொன்னார்.

“மொழி காத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே! களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்து வா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணகவி.

தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழுந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சியதனை!” -என்று தம்பிகளுக்கு கட்டளை இடுகிறார்.

தனது கடிதங்களில், கட்டுரைகளில், உரைகளில், இலக்கியங்களில், மக்கள் மத்தியில் ஒரு மொழிப் புரட்சியையே கூர்தீட்டினார் அண்ணா.

1965ம் ஆண்டு நடைபெற்ற இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடே கொந்தளித்தது. கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம், கோடம்பாக்கம் சிவலிங்கம் போன்ற எண்ணற்ற இளைஞர்களும், மாணவர்களும் தமிழ் மொழியைக் காப்பதற்காக, தங்களைத் தாங்களே தீக்கிரகையாக்கியும், நஞ்சருந்தியும்  மாண்டனர். அண்ணா சிறையில் இருந்த காலகட்டம் அவை.

இந்த துயரமான சம்பவங்களை கேட்டு மன வேதனை அடைந்த அண்ணா, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போரில் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உருக்கமாக அறிக்கை விடுத்தார்.

“நான் இந்த பிஞ்சுகளை தீக்குளிக்க சொல்லவில்லை. நான் அவர்களை போராடத்தான் அழைத்தேன். ஆனால் அவர்கள் தமிழுக்காக தீயில் விரும்பி வெந்திருக்கிறார்கள். அவர்களின் சாம்பலில் இருந்துதான் தமிழகத்தின் எதிர்காலம் எழும்”.. “இவர்களின் தியாகம் வீண் போகாது அதுவே தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் மொழி உரிமைகளில் எதிர்கால விடியலாக மாறும்” என்று வெளிப்படுத்தினார்.

இந்தி எதிர்ப்பு களத்தில் முன்னணி படை வீரராக இருந்த அண்ணா, 1967-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றதும் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார். தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளே பயிற்றுவிக்கப்படும். தமிழ் கட்டாய பாடமாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் கற்பிக்கப்படும் என்று அரசாணை கொண்டு வந்தார். அண்ணாவின் அரசாணையே இன்று வரை நீடிக்கிறது.

ஆனால் கல்வியை 1976-ல் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றது காங்கிரஸ். அன்றிலிருந்து எப்படியாவது இந்தியைப் புகுத்தி விட வேண்டும் என்கின்ற டெல்லியின் ஆதிக்கம் இன்று வரை தொடர்கிறது. இந்தியைத் திணிப்பதில் பல வடிவங்களில் உருவெடுக்கும் பாஜக அரசு, புதிய கல்விக் கொள்கை (NEP) மூலம் மும்மொழியைப் புகுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத் தொகுப்புகளையே இந்திப் பெயரில் மாற்றி விட்டது, ஆங்கிலப் பெயர்களை மாற்றி இந்திப் பெயர்களைத் திணிக்கவே ஒவ்வொரு சட்டத் திருத்தத்தையும் மேற்கொள்கிறது.

கல்வியில் சமக்ர சிக்க்ஷா, பிஎம் ஸ்ரீ, விக்கித் பாரத் கிஷா அதிஷ்தான் (VBSA), குற்றவியல் சட்டத்தில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷி சன்ஹிதா (இதில் சன்ஹிதா என்பது வேதங்களின் தொகுப்பு என்று பெயர்), வேலை திட்டத்திற்கு கூட ‘விபி ஜி – ராம் ஜி யோஜனா’ போன்று பல்வேறு துறைகளிலும் இந்தித் திணிப்பினை செயல்படுத்தி விட்டது. இரயில்வே நிலையங்களின் பலகைகளில் இந்தி மொழி வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்டு தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இப்படியாக இந்தித் திணிப்பு நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் ஒரு மொழிப்போருக்கான அத்தனை அறிகுறிகளும் தென்படும் இந்த வேளையில், பலரும் இதைக் கண்டும் காணாமல் கடந்து சென்றனர். ஆனால், இந்த அநீதியை எதிர்த்து மே 17 இயக்கம் ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை நடத்தியது.

இந்தப் போராட்டத்தின் உச்சமாக, 1965-ல் தமிழ் காக்க இளைஞர் படை தன்னுயிரை தற்கொடையாக்கியது போல, மே 17 இயக்கத் தோழர் ‘சிவா திலீபன்’ அவர்களும் “இந்தி வீழ்க! தமிழ் வாழ்க!” என முழங்கிக்கொண்டே ரயில் முன் பாய்ந்து தங்கள் இன்னுயிரை தமிழுக்காக தற்கொடையாக்கிக் கொண்டார்..

“தீயில் வெந்த தமிழ்ப் புலிகள்” என இந்தி எதிர்ப்புக்காக தன்னை மாய்த்துக் கொண்ட போராளிகளை ஆண்டு தோறும் நினைவு கூர்கிறது தமிழ்நாடு.

தமிழ் மண்ணுக்கேற்ற தத்துவங்களான திராவிட கொள்கையாளர்களும், தமிழ்த் தேசியவாதிகளும் இந்நாளை மொழிக்காப்புப் போரின் அடையாளமாக தங்கள் உணர்ச்சிகளில் செதுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அன்றைய காலகட்டத்தை விட இன்றைக்கு மோடி ஆட்சியில் இந்தி திணிப்பு மட்டுமின்றி, இந்திக்காரர்கள் திணிப்பும் பல வகையிலும் நடைபெறுகிறது. மாநிலங்களில் உள்ள அனைத்து ஒன்றிய அரசுத் துறைகளிலும் இந்திக்காரர்கள் திட்டமிட்டு பணியமர்த்தப் படுகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் விருப்ப மொழி, தேசிய மொழி, ஆட்சி மொழி என்ற பெயர்களில் நேரடியாகத் திணிக்கப்பட்ட இந்தி, இன்று பாஜக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் செல்லரிப்பது போல உள்ளூர ஊடுருவி விட்டது. இதைக் கண்டு கொதித்தெழுந்த தோழர் சிவா திலீபன் அவர்கள், உறங்கிக் கிடக்கும் தமிழினத்தை மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தட்டி எழுப்பவே தன் உயிரை ஈந்தார்.

1965-ல் எப்படி தமிழ் மீதான பற்று மிகுதியால் தமிழர்கள் தங்கள் உயிரை தற்கொடையாக்கினார்களோ, அதே தமிழ் உணர்வின் உந்துதலால் தான் தோழர் சிவா திலீபன் அவர்களும் தன்னுயிரை தமிழுக்காக அர்ப்பணித்தார்.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் மறைவின் போது அண்ணா தீட்டிய வரிகள், மொழிப்போர் ஈகியர்களுக்கும் பொருந்திப் போகிறது. சங்கரலிங்களார் மறைவின்போது அண்ணா எழுதிய வரிகள் ;

“அந்தோ! அருமைத் தியாகியே! தமிழகத்திலேயன்றோ, உன் அரும்பெரும் தியாகம் கண்டனர்.

தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட தமிழகமாயிற்றே!

தருக்கரிடம் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் தமிழகமாயிற்றே!

உண்மைத் தியாகத்தின் உயர்வு அறியாத உலுத்தர்கள் உயர் இடம் பிடித்துக்கொண்டு, அன்பு, அறம், ஆகியவற்றை அழித்தொழிக்கும் நிலைக்கு வந்துற்ற தமிழகமாயிற்றே!

இங்கே அறம் ஏது?

வீரம் எங்ஙனம் எழும்?

நீதிக்கு வழி ஏது?

நிமிர்ந்து நின்று உரிமை பேசுவோர் யார்?

என்றெல்லாம் அழுதபடி கேட்கத் தோன்றுகிறது.”

தாய்மொழிப் பற்று மேலிட்டு, தாய்நாட்டு உணர்வு பொங்கிட,

தன்னுயிரைத் துச்சமெனத் தூக்கி எறிந்த தியாகிகளுக்காக,

அண்ணாவின் நெஞ்சம் குமுறி, ஆதங்கம் பொங்க வெளிப்பட்ட வரிகள் இவை. மொழிப்போர் ஈகியரான சிவா திலீபனுக்கும் பொருந்தும் வரிகள்.

“மொழிக்காக உயிர் கொடுத்தவனை விட பெரிய தமிழன் இல்லை” என்று மொழிப்போர் தியாகிகளை போற்றியவர் பேரறிஞர் அண்ணா.

1965 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் தீக்குளித்து தமிழ் காத்த தாளமுத்து –  நடராசன் தொடங்கி, இன்று வரை தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த அத்தனை பேரும் அண்ணாவின் வழியில் வந்த தமிழ்ப் புலிகளே.

அந்த வகையில், அண்ணாவின் இந்த பிறந்த நாளில், தமிழ் மொழிக்காக தன்னுயிரை ஈந்த சிவா திலீபன் அவர்களின் அவர்களின் ஈகத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்.

சிவா திலீபன் அவர்களின் உயிர் ஈகத்தை “மொழிப்போர் ஈகம்” என்றும், அவரை “மொழிப்போர் ஈகியர்” எனவும் அரசிதழில் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்த நன்னாளில் கோரிக்கை வைப்பதே, நாம் அண்ணாவுக்கு செலுத்தும் உண்மையான நினைவஞ்சலியாக இருக்கும்.

“தமிழ் வாழ்க! அண்ணா புகழ் வாழ்க!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »