
மதிமுகவின் இதழான ‘சங்கொலி’ முப்பதாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு, கடந்த 17 சூலை 2026 அன்று, சென்னையில் நடைபெற்ற விழாவில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:
தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் “சங்கொலியிலே அதன் எதிர்க்குரலைக் கேட்கலாம்” என்ற வகையிலே, தமிழினத்தின் உரிமைக்காக அயராது உழைத்து வரும் சங்கொலியினுடைய 30-ஆம் ஆண்டு விழாவை மிகச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த நிகழ்வில், நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திராவிட இயக்கத்தின் போர்வாள் ஐயா வைகோ அவர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய மூத்த தலைவர் பேராசிரியர் ஐயா கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தோழர் ராஜ்மோகன் அவர்களுக்கும், இந்த நிகழ்விலே பங்கேற்றிருக்கக்கூடிய தீக்கதிர் இதழினுடைய இணை ஆசிரியர் தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களுக்கும், தமிழீழத்தின் விடுதலையை எங்களது பள்ளிக் காலத்திலிருந்து உணர்வு கொடுத்து உணர்ச்சியூட்டியிருக்கக்கூடிய உணர்ச்சிக் கவிஞர் ஐயா காசி ஆனந்தன் அவர்களுக்கும், தமிழ்நாட்டில் நடக்கின்ற பல்வேறு செய்திகளைப் புலனாய்வு செய்து தரக்கூடிய முதன்மைப் பத்திரிகையாகவும், தமிழினத்திற்கு ஏதேனும் கேடு என்று வந்தால் அதனை எதிர்த்து ஒலிக்கக்கூடிய முதல் குரலாகவும் இருக்கக்கூடிய நக்கீரன் இதழினுடைய ஆசிரியர் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றும் குமுதம் குழுமத்தினுடைய தலைமை நிரூபர் மரியாதைக்குரிய தோழர் எஸ். கோவிந்தராஜ் அவர்களுக்கும், இந்த நிகழ்விலே பங்கேற்றிருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு பத்திரிகை என்பதனுடைய முக்கியத்துவம் குறித்து, குறிப்பாகத் திராவிட இயக்கத்தினுடைய முக்கியத்துவம் அதனுடைய பத்திரிகையில் இருக்கிறது என்பதைக் குறித்து மரியாதைக்குரிய தோழர் செந்தில்அதிபன் அவர்கள் மிக விரிவாக, அது நீதி கட்சி காலத்திலிருந்து எப்படி இன்றைக்கு வரை ஒரு மரபை வைத்திருக்கிறது என்று எடுத்துச் சொன்னார்கள். அந்த மரபிலே சங்கொலி இதழுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது.
ஈழத்தினுடைய ஆய்வாளர், தமிழினத்தினுடைய ஒப்பற்ற சிந்தனையாளர் கா. சிவத்தம்பி அவர்கள் 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையிலே குறிப்பிடுகிறார் – “தமிழ்த் தேசியத்தினுடைய தேவையை உணர்ந்து, அதைப் போராட்டக் களத்தில் கோரிக்கையாக வடிவமைத்துச் செயல்படுகின்ற ஒரு தமிழ்த் தேசியத் திராவிட இயக்கமாக, கழகமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது” என்று அவர் எழுதியிருக்கின்றார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எப்படியான இயக்கமாக இருக்கிறது என்று நாம் ஆவணப்பூர்வமாக அறிய வேண்டும் என்றால், அது சங்கொலியிலே அனைத்தும் பதிவாக இருக்கிறது. பத்திரிகை இல்லாமல் அரசியல் இயக்கம் கிடையாது. லெனின் அவர்கள் இயக்கம் கட்டுவதற்கு, இதழ்கள்தான் இயக்கமாகவே இருந்திருக்கின்றன. அது இஸ்க்ரா என்கின்ற பத்திரிகையாக இருந்தாலும் சரி, பிராவ்தா என்கின்ற பத்திரிகையாக இருந்தாலும் சரி, இந்தப் பத்திரிகைகள்தான் அவர் புரட்சியைக் கட்டமைப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தவை.
பத்திரிகை இல்லை என்றால் அரசியல் மாற்றம் கிடையாது. பத்திரிகை இல்லை என்றால் ஒரு இயக்கத்தின் குரல் கிடையாது, இயக்கத்திற்கு முகம் கிடையாது, இயக்கத்தினுடைய சிந்தனை பதிவாக முடியாது.
அந்த வகையிலே 30 ஆண்டுகளாகச் சங்கொலியினுடைய முக்கியத்துவம் என்ன என்று எடுத்துப் பார்த்தோம் என்றால், தமிழினம் என்ன போராட்டங்களையெல்லாம் தமிழ்த் தேசியத் தளத்தில், திராவிட இயக்கத் தளத்தில் நடத்தியிருக்கிறது, தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று அறிய வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்பினால், நமக்கு இருக்கக்கூடிய ஒரே இதழ் சங்கொலிதான். இந்தப் போராட்டங்களையெல்லாம் வடித்தெடுத்து அதை நமக்குப் பத்திரிகையாகக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு பத்திரிகையை தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும் நாம் பார்க்க முடியாது.
தமிழ்த் தேசியக் களம், தமிழீழக் களம், திராவிட இயக்கத்தினுடைய செயல்பாடுகள் என்று அனைத்தும் இணைந்தது சங்கொலி. ஏனென்றால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பிற திராவிடக் கழகங்களுக்கும், கட்சிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. மூன்று திராவிடக் கழகங்களும் ஒன்றல்ல. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வந்த காலகட்டம் என்பது மிக மிக முக்கியமான காலகட்டம். தமிழினம் அதுவரை சந்திக்காத ஒரு நெருக்கடியைச் சந்தித்த காலகட்டத்தில்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இயக்கமாக, கட்சியாக உருப்பெறுகிறது. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எல்லாம் மாணவர்களாக இருந்தோம், இந்த இயக்கம் எங்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது, எங்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்தது.
90-91-இல் சோவியத் உடைவிற்குப் பிறகு தாராளமயம் நடக்கிறது, எல்லாமே தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார்மயம் குறித்துத் திராவிட இயக்கத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்கின்ற குழப்பம் இன்றளவும் இருக்கிறது. முதலாளித்துவம் குறித்த நிலைப்பாடுகளில் குழப்பம் இருக்கிறது. ஆனால் உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டும் என்கின்ற அரசியல் புரிதல் இருக்கிறது, சோசலிசச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட வகையிலே அந்தப் புரிதல் இருக்கிறது. ஒருபுறம் சோவியத் யூனியன் உடைந்து போயிருக்கிறது, மறுபுறத்தில் ராஜீவ் காந்தி மரணத்தைக் காரணமாக வைத்துக்கொண்டு திராவிட இயக்கத்தின் மீது இந்திய அரசு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. திராவிட இயக்கச் செயல்பாட்டாளர் என்பது கடுமையான நெருக்கடி, வழக்குகள், சிறைக் கொட்டடி என்று தமிழ் உரிமை, தமிழின உரிமை, தமிழீழ உரிமை என்று எதையும் பேச முடியாத ஒரு கட்டுப்பாட்டோடு, ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் களத்திற்கு வருகிறது.
அப்படியாக வருகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ”தனியார்மயத்தை எதிர்க்கிறது, அணு உலை என்று வந்தால் சூழலியல் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சூழலியல் அரசியலை முன்னுக்கு நகர்த்துவோம் என்கிறது” என்று முழங்கிய முதல் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று நாம் பெருமையுடன் சொல்லலாம். வெளியுறவுக் கொள்கை, சூழலியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை என்ற அனைத்திலும் தனித்துவமான நிலைப்பாட்டை இந்தக் கழகக் கட்சிகளுக்கு நடுவே எடுத்த ஒரே கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
அணு உலை வேண்டாம் என்ற தெளிவான முடிவு இருக்கிறது. சூழலியல் மாசுபாட்டில் ஸ்டெர்லைட் உட்பட எதையும் அனுமதிக்க மாட்டோம் என்கின்ற தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை, அது தமிழினத்திற்கு எதிரான ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நாடு. அந்தப் பாசிச நாட்டை அனுமதிக்க முடியாது, அங்கே தமிழர்களுக்கு உரிமை வேண்டும், சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று தெளிவாக எடுத்துச் சொல்லுகின்ற, வெளியுறவுக் கொள்கை குறித்த நிலைப்பாடு இருக்கக்கூடிய ஒரே கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது.
தமிழர் சார்ந்து வெளியுறவுக் கொள்கையை அணுகக்கூடிய கட்சி வேறு எது இருக்கிறது? ஒரு கோரிக்கையை ஆதரித்துப் பேசுவது என்பது வேறு, அதற்கான ஒரு கொள்கையை வடிவமைப்பது என்பது வேறு. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்கின்ற வடிவமைப்பைக் கொடுத்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். நீங்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம். அந்தக் கொள்கைக்காக நீங்கள் சிறை சென்றவர்கள், கொடுமையை அனுபவித்தவர்கள், சித்திரவதையை எதிர்கொண்டவர்கள், வழக்குகளை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆக, வெளியுறவுக் கொள்கை குறித்தான தெளிவான நிலைப்பாட்டை எடுத்தீர்கள், அணு உலை குறித்துத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தீர்கள், சூழலியல் குறித்துத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தீர்கள், திராவிட இயக்கம் குறித்தும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தீர்கள்.
ஐயா வைகோ சிறையிலே இருந்து எழுதிய நூலிலே, அந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்த அந்த நூலிலே, “திராவிட இயக்கத்தினுடைய எதிர்காலத்தைக் குறித்துத்தான் கூட்டணியை நான் அமைப்பேன்” என்று ஒவ்வொரு முறையும் சொல்லி வந்திருக்கின்றார். ஒவ்வொரு இடத்திலும் அவர் சொல்லி வந்திருக்கின்றார். ஒரு கடிதத்தில் அவர் சொல்கிறார்- “சங்கொலியும் முரசொலியும் இணைந்து நிற்கும், ஏனென்றால் திராவிடத்தினுடைய எதிர்காலத்திற்குக் கேடு வருகிறது என்றால் நாம் கைகோர்த்து நிற்க வேண்டிய இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருப்போம்” என்று சொல்கிறார். திராவிட இயக்கத்தினுடைய நலன், எதிர்காலம் அவற்றைக் கணக்கில் கொண்டு நாங்கள் கூட்டணி அமைப்போம், இயங்குவோம் என்கின்ற கொள்கை முடிவை எடுத்திருக்கிறீர்கள். அதே கொள்கை முடிவுதான் 2017-லும் எடுத்தீர்கள். ஆக, கொள்கை சார்ந்த முடிவுகள்தான் இங்கே முன்னிலைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஆகவே, நீங்கள் தமிழ்த் தேசியக் கொள்கையாக, ஒரு கொள்கையைக் கட்சிகளுக்குள்ளாக வரையறுத்த ஒரு பாங்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதனால்தான் கடுமையான நெருக்கடிகளையும் அவதூறுகளையும் அது சுமந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கென்று ஊடக பலம் இல்லை, அரசியல் அதிகார பலம் இல்லை, ஆட்சியாளர்களுடைய ஆதரவு இல்லை. ஆனாலும் நீங்கள் களத்திலே போராடிக் கொண்டிருக்கிறீர்கள். காரணம், உங்களை வழிநடத்துவது தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்தான். இந்த இருவருடைய கொள்கைகளை முன்னுக்கு நகர்த்தக்கூடிய போராட்டங்களை, களங்களை வடிவமைக்கக்கூடியவர் ஐயா வைகோ அவர்கள். அப்படிப் போராட்டக் களங்களின் ஊடாகப் புடம் போடப்பட்ட கட்சியாகத்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. அதுதான் தமிழ்நாட்டினுடைய போராட்டக் களங்களினுடைய வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறது. இத்தனையும் ஆவணமாகச் சங்கொலியில் இருக்கிறது.
எங்களுக்கு ஏதேனும் ஒரு குழப்பம் இருந்தால், ஏதேனும் வரலாற்றுச் செய்தியைக் குறித்து, அரசியல் நிலைப்பாடுகளைக் குறித்துத் தகவல்கள் தேவை என்றால், நாங்கள் சங்கொலியைப் பார்ப்போம், ஐயாவினுடைய அறிக்கைகளைப் பார்ப்போம். இப்படித் தெளிவான, மக்கள் சார்ந்து சிந்திக்கக்கூடிய ஒரு கழகமாக, திராவிட இயக்கத்தினுடைய நீட்சியாக இருக்கிற நிலைப்பாடுகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் பார்க்க முடிகிறது. அந்த வகையிலே முக்கியமான நிலைப்பாடுகளை நீங்கள் காலந்தோறும் எடுத்து வந்திருக்கிறீர்கள், கொள்கை சார்ந்து எடுத்து வந்திருக்கிறீர்கள்.
தேர்தல் சார்ந்து எடுத்த நிலைப்பாடுகளில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம், அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அது தேர்தல் நிலைப்பாடுகள் சார்ந்து எடுக்கக்கூடிய முடிவுகள், உங்களது தனிப்பட்ட வெற்றி தோல்வியை முடிவு செய்யக்கூடியதாக இருக்கிறது. ஆனால் நீங்கள் எடுத்த அரசியல் முடிவுகள் எல்லாம் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த முடிவுகளாகத்தான் இருக்கின்றன. எந்த முடிவும் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான முடிவுகளாக இல்லை. ஒரு கூட்டணியை உருவாக்குவதோ அல்லது கூட்டணியை முறிப்பதோ, இரண்டிலும் நீங்கள் தமிழ்நாட்டு நலனையும், தமிழர் நலனையும், தமிழீழத்தின் நலனையும் தான் முன்னுக்கு வைத்திருக்கிறீர்கள். அந்த ஜனநாயக மரபு இங்கே இருக்கிறது. அப்படிப்பட்ட ஜனநாயக மரபுக்குச் சொந்தக்காரர்களாக நெஞ்சை நிமிர்த்திச் சொல்லக்கூடிய மரபு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்.
கடந்த 17 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கத்தை நடத்தி வரக்கூடிய காலகட்டங்களில், தமிழீழம் சார்ந்த நிலைப்பாடுகள் அனைத்திலும் சரியான, கூர்மையான, தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் எடுப்பதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஐயா வைகோ அவர்களும்தான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் எடுக்கின்ற நிலைப்பாடுகள் எளிமையானவை. ஏனென்றால் இயக்கத் தலைவன் அங்கிருந்து அறிக்கை கொடுப்பார், விளக்கம் கொடுப்பார், அதிலிருந்து நிலைப்பாடுகளை எடுப்போம். ஆனால் அப்படியான ஒரு காலகட்டம் இல்லாத இடத்தில் எப்படி நிலைப்பாடுகள் எடுப்பது, எப்படிப் புரிந்து கொள்வது, எப்படிச் சரியான நிலைப்பாடு எடுத்து எதிர்காலத்தை வழிகாட்டுவது என்கின்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். அந்த இடத்தில் எல்லாம் தெளிவான நிலைப்பாடுகளை எடுத்த ஒரு மாபெரும் இயக்கம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இவை அனைத்துமே வரலாற்று ஆவணமாகச் சங்கொலியில் இருக்கிறது.
ஜெர்மனியில் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்திலே, இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை, அந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு ஒரு கூட்டுக் குற்றவாளி என்கின்ற வாதத்தை முன்வைத்து, இந்தியாவை ஒரு கூட்டுக் குற்றவாளி என்று வெற்றிகரமாக ஒரு தீர்ப்பை வாங்க வைத்தோம். அந்தத் தீர்ப்பு வந்தவுடன் ஐயா வைகோ அவர்களிடத்திலே தொடர்பு கொண்டு நான் பேசினேன். இப்படியான ஒரு தீர்ப்பு வந்திருப்பதைக் குறித்துப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
ஏனென்றால் நாங்கள் வாதிட்டு இந்திய அரசாங்கத்தின் துரோகத்தைத் தோலுரித்து, சர்வதேச அரங்கத்திலே அம்பலப்படுத்தியிருக்கின்றோம். இன்றைக்கு அதே முறைதான், பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய அரசு காசாவில் நடக்கக்கூடிய இனப்படுகொலைக்குத் துணை செய்திருக்கிறது, ஆகவே பிரித்தானிய அரசின் மீது விசாரணை தேவை என்கின்ற ஒரு விசாரணைக் கமிசனுக்கான அனுமதியையும், அதற்கான பெரும்பான்மையையும் அங்கே பெற்றிருக்கிறார்கள். ஒரு ஜனநாயகம் என்பது அப்படித்தான் இயங்கும்.
ஒரு அரசின் மீதும், அரசாங்கத்தின் மீதான விசாரணை முன்வைக்கும் பொழுதுதான் ஜனநாயகம் நிலைத்து நிற்கும். ஒரு ஆட்சி, அரசாங்கம் என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவம். இதை அனைத்துக் காலகட்டங்களிலும் எடுத்துச் சொன்ன இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ஐயா வைகோ அவர்கள்தான். பிரேமன் தீர்ப்பாயம் குறித்தான அந்தக் கட்டுரை, அது குறித்த செய்தி வெளிவந்த ஒரே இதழாகச் சங்கொலிதான் இருக்கிறது. எங்களுடைய இயக்கத்தினுடைய மிக முக்கியமான நடவடிக்கைகளிலே, நாங்கள் பெற்ற தீர்ப்புகள் அல்லது எங்களுடைய நடவடிக்கைகள் குறித்த அனைத்துமே நாங்கள் சங்கொலியில் தான் பார்க்க முடியும்.
எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், எங்கள் இயக்கத்தைப் பற்றிச் சுவடே இல்லாமல் போய்விடாது, எங்களுக்கான பதிவையும் சேர்த்துச் சங்கொலி வைத்திருக்கிறது, சுமந்து கொண்டிருக்கிறது. அதனுடைய குரலிலே எங்கள் வரலாறும் இருக்கிறது என்கின்ற மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கிறது. ஆக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு நெருக்கடிகளின் நடுவே தனக்குக் கிடைக்கக்கூடிய சிறு நம்பிக்கையைப் பற்றி அவர்கள் மேலெழுந்து வரக்கூடிய மாபெரும் பீனிக்ஸ் பறவையைப் போன்ற ஒரு இயக்கம்.
ஐயா வைகோ அவர்கள் வேலூர் சிறையிலிருந்து மே 16, 2003-ல் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு செய்தியைச் சொல்லிவிட்டு நான் விடைபெற விரும்புகின்றேன். அந்தக் கடிதத்திலே அவர் முடிக்கும்பொழுது எழுதுகிறார்: சிறையிலே எங்களுக்கு உணவு தருகிறார்கள், சப்பாத்தியைத் தருகிறார்கள். அங்கே வேலூர் சிறையிலே எறும்புகளுடைய கொட்டம் அதிகம். அந்த எறும்புகள் வந்து குவிந்து விடுகின்றன. பிற்பகலில் எங்களுக்குக் கொடுக்கக்கூடிய உணவை இரவு நேரத்தில் நாங்கள் எடுக்கும்பொழுது அந்தச் சப்பாத்தியின் மீது குவிந்திருக்கக்கூடிய எறும்புகளை அகற்றிவிட்டுத்தான் நாங்கள் உணவை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. எறும்புகளிடமிருந்து உணவைக் காப்பது எப்படி என்பது எங்களுக்குப் பெரும் போராட்டமாக மாறிவிட்டது. அந்த வகையிலே நான் ஒரு முடிவு எடுத்தேன். அந்த உணவுத் தட்டு வைத்திருக்கக்கூடிய அந்த மேசையினுடைய காலுக்குக் கீழாக அலுமினியத் தட்டுகளை வைத்து அதிலே தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டேன். ஆக, தண்ணீரின் வழியாக ஒரு அகழியை உருவாக்கியிருந்தேன். அந்த நான்கு கால்களுக்குக் கீழே நான்கு தட்டுகள் இருக்கின்றன, தட்டுகளில் தண்ணீர் இருக்கிறது. தண்ணீரைக் கடந்து அந்த எறும்புகள் மேலே ஏறி வந்து அந்த உணவை எடுக்க முடியாத வகையில் என் உணவை நான் பாதுகாத்துக் கொண்டேன்.
ஆனால் ஒரு சமயத்தில் பார்த்தால் அந்த உணவுத் தட்டில் இருக்கக்கூடிய அந்தச் சப்பாத்தியின் மீது ஒட்டுமொத்த எறும்புகளும் குவிந்து விட்டன. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. எப்படி இந்த எறும்புகள் அகழியை மீறி அந்த உணவைத் தொட்டன என்கின்ற விந்தையோடு நான் யோசித்துப் பார்த்து, தேடிப் பார்த்தபொழுது அங்கே சுவற்றிலே ஆணி அடித்து அந்த ஆணியிலே என் சட்டையைத் தொங்கவிட்டிருந்தேன். அந்தச் சட்டை காற்றிலே அசையும்பொழுது அந்தக் காற்றோடு சேர்ந்து சட்டையிலே பயணித்து அந்தத் தட்டிலே இறங்கி எனது உணவை எடுத்தார்கள் எறும்பு நண்பர்கள் என்று அவர், எறும்பு எவ்வாறு எனது உணவில் இறங்கியது என்பது குறித்து எழுதிவிட்டுக் இவ்வாறு சொல்லுகிறார்: ஸ்காட்லாந்து விடுதலைக்காக ராபர்ட் புரூஸ் பல்வேறு போராட்டங்களை, போர்களை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், தான் பதுங்கியிருந்த அந்தக் கொட்டடிக்குள்ளாக அந்தச் சிலந்தி எப்படித் தொடர்ச்சியாகப் போராடிப் போராடித் தனது வலையைக் கட்டுகிறதோ, அதுபோல அந்தப் போராட்டத்தின் மூலமாகத்தான் நாம் விடுதலையை வென்றடைய முடியும் என்று எண்ணி, ராபர்ட் புரூஸ் படை நகர்த்தி வெற்றி கண்டான். அதுபோல இந்த எறும்புகள் போராடிப் போராடி வெற்றி பெறுவதைப் போல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் போராடிப் போராடி, தங்களுக்குக் கிடைக்கக்கூடிய அந்த வலிமையை வைத்துக்கொண்டு, நம்பிக்கையை வைத்துக்கொண்டு முன்னேறி வர வேண்டும் என்று அவர் எழுதியிருக்கின்றார்.
சிறையிலே தொண்டர்களைப் பற்றி யோசிக்கிறார். அந்தக் கடிதங்களை நான் முழுவதும் படித்துக் கொண்டிருந்தேன். திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய கடிதங்களாக, எப்படி ஒரு இயக்கத்தை நடத்துவது, ஒரு தொண்டர்களிடத்தில் போராட்ட உணர்வை எப்படிப் பாதுகாப்பது, அவர்களிடத்தில் நம்பிக்கையை எப்படி வளர்த்தெடுப்பது, இவற்றுக்கு நடுவே எப்படி அவர்களை அரசியல்படுத்துவது-இவற்றைச் சமகாலத்தில் செய்த மிகப்பெரும் ஆளுமை ஐயா வைகோ அவர்கள். இவை எல்லாம் ஆவணங்களாக சங்கொலியிலே இருக்கின்றன.

இந்த சங்கொலி காலம் முழுவதும் தமிழ்நாட்டினுடைய 30 ஆண்டு கால வரலாற்றைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லும். ஏனென்றால் தமிழர் உரிமை சார்ந்த போராட்டங்கள் எதுவும் முன்னணிப் பத்திரிகைகளில் தவிர்க்கப்பட்ட செய்திகள், அனைத்தும் சங்கொலியில் இருக்கிறது. ஆக, சங்கொலி என்பது கீழடிப் புதையலைப் போல எதிர்காலத்திலே ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு பெட்டகமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தச் சங்கொலி இன்னும் 100 ஆண்டுகள் இந்த இனத்தினுடைய விடுதலையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
இது மட்டுமல்ல, ஐயா வைகோ அவர்கள் தனது இறுதிநாள் உரை என்று நாடாளுமன்றத்தில் உரைத்தாரே, தமிழனுடைய சுயநிர்ணய உரிமையைப் பேசிய அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு பேசிய ஒரே தலைவனாக இருக்கக்கூடிய ஐயா வைகோ அவர்களுடைய அந்த உரையினுடைய பதிவும் சங்கொலியில் இருக்கிறது. சுயநிர்ணய உரிமையை மறந்த எந்த இனமும் சுயமரியாதையோடு வாழ்ந்துவிட முடியாது என்று தந்தை பெரியார் சொன்னார். அதை இன்றளவும் தனது இயக்கத்தின் ஊடாக முன்னகர்த்துகின்ற ஒரே இயக்கமாக இருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய, ஐயா வைகோ அவர்களினுடைய குரலாக ஒலிக்கக்கூடிய சங்கொலி, இனிவரும் காலத்தில் போற்றப்படும். நிகழ்காலத்தில் அது அனைவராலும் வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மாபெரும் பத்திரிகையாக இருக்கிறது. இந்தப் பத்திரிகை இனிவரும் காலத்தில் தமிழினத்தின் தனித்த அடையாளத்தைச் சுமக்கும் என்கின்ற நம்பிக்கையோடு, வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.