வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுக்கா வீரளூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் பொதுச்சாலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்த நிகழ்வு சில மாதங்கள் முன்பு நடந்தேறியது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அமைதிப்பேச்சுவார்த்தை மூலமாக பொதுவழியில் எடுத்துச் செல்லும் உரிமையை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை பொதுவழியில் எடுத்துச் செல்லும் உத்திரவாதம் பெற்ற நிலையில், கடந்த சனவரி 15, 2022 அன்று இக்கிராமத்தைச் சார்ந்த அமுதா என்ற அருந்ததியர் பெண் உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார். இவரது உடலை சனவரி 16ம் தேதியன்று பொதுவழியில் எடுத்துச் செல்ல முயன்ற நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த பிள்ளை, ஆச்சாரி, கோனார், வன்னிய-கவுண்ட சமூக மக்களில் ஆதிக்க உணர்வுடனும், அரசியல் லாபத்திற்காகவும் செயல்பட்டவர்களால் சாதிய வன்மம் தூண்டப்பட்டு கலவரச் சூழலை உருவாக்கியுள்ளனர். பொதுவழியில் உடலை எடுத்துச் செல்வது என அருந்ததிய மக்கள் உறுதியான முடிவை எடுத்தப் பின்னர், பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காண முயன்ற நிலையில், பேச்சுவார்த்தைக்குச் சென்ற அருந்ததிய பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அருந்ததியர் மக்கள் வசிக்கும் தெருவில் நுழைந்த சாதியவெறியினர் அருந்ததிய மக்களின் வீடுகள், வாகனங்கள் உட்பட தாக்குதல் நடத்தியதுமட்டுமல்லாமல் அங்கிருந்தவர்களையும் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இந்த தாக்குதல் காணொளியாக சமூகவளைதளங்களில் வெளியானது.
ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தினர் மீதான ஆதிக்க சாதிவெறியர்களின் கொலைவெறி தாக்குதலை, “கோஷ்டி மோதல்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகள் அடிப்படையில் மே பதினேழு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழுவானது கடந்த ஜனவரி 19, 22 ஆகிய இரண்டு நாட்கள் வீரளூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டது. அதனடிப்படையில் கள ஆய்வு அறிக்கையை அக்குழு உருவாக்கியது. அக்கள ஆய்வின் அறிக்கை வெளியீடு, ஆவணப்படம் வெளியீடு, பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி சாட்சியங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் போன்றவை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 28-01-22 மாலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை. திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடர் தமிழர் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சங்கர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். வீரளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் கலந்துகொண்டதோடு சிலர் நேரடி சாட்சியங்கள் அளித்தனர்.
காலங்காலமாக, சாதியரீதியான ஒடுக்குமுறைகளில் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு வரும் அருந்ததியர் சமூகத்தின் அவலத்தை பொது சமூகத்தின் முன் வைத்து அவர்களுக்கான சமூக நீதி போராட்டத்தில் இதர முற்போக்கு சக்திகளை இணைக்கும் நோக்கில் இவ்வறிக்கை உருவாக்கப்பட்டது.
அறிக்கையை PDF வடிவில் பதிவிறக்கம் (download) செய்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (click)
வீரளூர் சாதிய தாக்குதல் - கள ஆய்வு அறிக்கை
மே பதினேழு இயக்கம்
9884864010
நன்றிகள் பல
வண்மையான கண்டனங்களும், அரசுத்துறைகளின் கையாலாகாத அதிகாரமும் நிலைநாட்டப்பட வேண்டும்.