எச்சரிக்கை: கார்கி திரைப்படத்தின் சில காட்சிகளை இக்கட்டுரை விவரிக்கிறது. இது திரைப்படத்தின் முக்கிய கதை நகர்வை வெளிப்படுத்தக்கூடும்.
ஒரு முடிவு உலகை மாற்றுமெனில், அது முடிவு அல்ல தொடக்கம் என்ற வாக்கியத்துடன் முடிகிறது கார்கி திரைப்படம். தமக்கு பிடித்த உடை அணிவது, தமக்கு பிடித்த நபருடன் பேசுவது, அவரை காதலிப்பது, திருமணம் செய்து கொள்ளுதல் என இப்படி பல விடயங்களில் ஒரு ஆண் தன்னிச்சையாக எந்த வித தயக்கமுமின்றி முடிவு எடுத்துவிட முடியும். ஆனால் இந்திய சமூகத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்கு தான் பிறந்த நொடியிலிருந்து, இறக்கும் தருணம் வரை ஒவ்வொரு முடிவுக்கும் ஆயிரம் தடைகள், பல கடுமையான விமர்சனங்கள், வசவுகள் என வந்து குவிந்தவண்ணமே இருக்கும். இப்படியான ஒரு சூழலில் வளர்ந்த கார்கி எனும் பெண் தன் வாழ்க்கையின் மிக முக்கியமான, கடினமான அதே சமயம் அறம் சார்ந்து நிற்கக் கூடிய ஒரு முடிவு எடுக்கிறார். அம்முடிவுடன் நிறைவடைகிறது சாய் பல்லவி நடித்து கெளதம் ராமச்சந்திரன் இயக்கி நடிகர் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் திரைப்படம் கார்கி.
கார்கி (சாய் பல்லவி) ஒரு பள்ளி ஆசிரியராக பணிபுரிய அவருடைய தந்தை பிரம்மானந்தம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். பிரம்மானந்தம் பணிபுரியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு 12 வயது சிறுமியை 4 வட இந்தியர்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்படுகின்றனர். மேலும் நடந்த விசாரணையில் கார்கியின் தந்தை பிரம்மானந்தம் 5 ஆவது நபராக அச்சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். தன் தந்தை அத்தகைய குற்றத்தை செய்திருக்கமாட்டார் என்று தீர்க்கமாக நம்பும் கார்கி, தன் தந்தையை காப்பாற்ற சட்டப்போராட்டம் நடத்தி, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கிறாரா இல்லையா என்பதே கார்கியின் கதை.
உலகில் எந்த அடிப்படையில் அடக்குமுறை நடந்தாலும் அது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. உயர் சாதியை சேர்ந்த ஒரு ஆண் மற்றொரு சக மனிதனை அவர் தாழ்ந்த சாதி என்று கூறி ஒடுக்குவார், உயர் சாதியை சேர்ந்த ஆணால் ஒடுக்கப்பட்ட அந்த ஆண் தன் வீட்டு பெண்ணை மிக மோசமான முறையில் நடத்துவார். இப்படி நிறம், மொழி, இனம், மதம், சாதி என எந்தவித பெதமுமின்றி ஒடுக்கப்படுவது பெண்கள் மட்டுமே.
ஒரு பெண்ணின் வாழ்கையில் அவர் கடந்து வரும் பாலியல் தொல்லை அனைத்து பெண்களின் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத, மீண்டு வர முடியாத ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியை கேட்ட நொடியிலிருந்து கார்கி ஒருவித அசௌகரியத்தை உணர்கிறார். காட்சிகள் விரிய, சிறு வயதில் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை அது அவருக்கு மெதுவாக நினைவூட்டுகிறது. கார்கி வளர்ந்து வேலைக்கு சென்ற பின்னர் தன் 12 வயது தங்கையின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். தன் தங்கை மஞ்சள் நிற ஆடை அணிந்து வெளியே சென்றாலே அவரை திட்டி தீர்க்கிறார். பின்னர் காட்சிகள் நகர, நகரத்தான் தெரிகிறது, கார்கியின் சிறுவயதில் தன் கணித ஆசிரியர் தன்னை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கும் பொழுது கார்கி அணிந்திருந்த ஆடையின் நிறம் மஞ்சள். இப்படியாக பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் அவர்கள் வாழ்நாளில் பலவற்றை கசப்பாக மாற்றி அவர்களின் மனநிலையையே சிதைக்கிறது.
கார்கி, தன் தந்தை நிரபராதி, அவர் அப்படிப்பட்ட ஒரு இழி செயலை செய்திருக்க மாட்டார் என உறுதியாக நம்புகிறார். அவரை எப்படியாவது குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என தன் வழக்கறிஞருடன் போராடுகிறார். பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், ஏன் தன் வீட்டு வாசலில் நின்று ஊர் மக்கள் தன் தந்தையை வசைபாடி, காவல்துறையினர் வேறு ஆள் கிடைக்காமல் கார்கியின் தந்தையை கைது செய்யவில்லை, நன்கு கண்காணித்து, விசாரித்துதான் கைது செய்தோம் என்று கூறியும் கார்கி அதை நம்பவில்லை. காரணம், கார்கியை அவருடைய கணித ஆசிரியர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் பொழுது கார்கியின் தந்தையான பிரம்மானந்தம் தான் தன்னை காப்பாற்றி தைரியம் கூறுகிறார். அவர் நிச்சயமாக இத்தகைய செயலை செய்திருக்க மாட்டார் என நம்புகிறார். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் தன் தந்தையை நிபந்தனையுடன் பிணையில் சிறையிலிருந்து வெளியே அழைத்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை பாதிப்பிற்குள்ளாக்கிய நபர்களை அடையாளம் காட்டும் படலத்தின் பொழுது அச்சிறுமி சரியான மனநிலையில் இல்லை, ஆகையினால் அவர் சீரான மனநிலைக்கு திரும்பிய பின்னர் நடத்தப்படும் அடையாளம் காட்டும் படலத்தில் கார்கியின் தந்தை குற்றமற்றவர் என அச்சிறுமி அடையாளம் காட்டிய பின்புதான் முடிவு செய்யப்படும் என நீதிபதி தீர்ப்பளித்திருப்பார். தன் தந்தையை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என கார்கி, பாதிக்கபட்ட சிறுமியை சென்று அவர் சீரான மனநிலையில் இருக்கும்பொழுது சென்று பேசிய பின்னர் அதிர்ச்சியாகிறார். தன் தந்தையும் சேர்ந்து தான் அச்சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கார் என்று அவருக்கு தெரிய வருகிறது.
“பெண்கள் விடுதலை பெறுவதற்கு ஆண்களைவிட பெண்களே தடையாக இருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்கு தாங்கள் ஆண்களைப்போல முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை” என்கிறார் தந்தை பெரியார். நம் நாட்டில் உள்ள ஆணாதிக்க சிந்தனையில் ஆண்கள் மட்டுமே இல்லை. பெண்களும் தங்களுக்கு நடக்கும் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு, தான் ஒரு பெண் என்றும் தான் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மனநிலை எந்த அளவிற்கு சென்றிருக்கிறது என்றால் தன் வீட்டில் இருக்கும் ஆண் மீது பாலியல் சம்பந்தபட்ட புகார் கொடுக்கப்பட்டு அது உண்மை என தெரிந்ததும் பல பெண்கள் தங்கள் வீட்டு ஆணை பாதுகாத்து, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செய்தது குற்றமே அல்ல என்று நம்பும் அளவிற்கு ஆணாதிக்கச் சிந்தனை நம் நாட்டு பெண்களிடத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.
“பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாதாருக்கு விடுதலை உண்டாகுமா? ஒருக்கால் கிடைத்தாலும் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது!” என்ற தந்தை பெரியாரின் கூற்றின் பொருள், ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக நிற்க முடியுமே தவிர ஒரு ஆண் அல்ல என்பதே. இதை நிகழ்த்தி காட்டும் பெண்ணாக கார்கி திகழ்கிறார். பெரும்பாடுபட்டு யாரை விடுதலை செய்ய முயற்சித்தாரோ, அவரை குற்றவாளி என நிரூபிக்க பாதிக்கபட்ட அந்த 12 வயது சிறுமிக்கு துணை நின்று அவருக்கு தைரியம் கூறி தன் தந்தையான பிரம்மானந்தம் தான் 5-வதாக தன்னை துன்புறுத்தினர் என்று அடையாளம் காட்ட வைக்கிறார் கார்கி.
கார்கி திரைப்படம் முழுக்க ஒடுக்கப்பட்டவர்களின் பரதிநிதித்துவம் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு கார்க்கியின் பக்கம் நின்று வாதாடும் வழக்கறிஞர் பேசும்பொழுது திக்கித் திக்கி பேசும் பழக்கம் உடையவர். கேலிக்கு உள்ளாகும் அவரின் பேச்சையும் மீறி அவர் நீதிமன்றத்தில் திறமையாக வாதாடுகிறார். இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு திருநங்கை. நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் அவர் பாலினத்தை வைத்து அவரை ஏளனமாக பேசும் இடம், ஒடுக்கப்படும் நபர் எப்பெயர் பெற்ற பெரிய பதவியில் இருந்தாலும், அது பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த காரணத்தால் ஒடிசாவில் உள்ள கோவில் ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, தான் எப்படி அவமதிக்கப்படப்போகிறோம் என்றே தெரியாமல் இந்துத்துவ கும்பலுடன் சேர்ந்து தான் சார்ந்த பழங்குடி இன மக்களையே வஞ்சித்த தற்போதய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவாக இருந்தாலும் சரி, நிலை ஒன்றுதான் என்று உணர்த்துகிறது.
தன் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவரின் முகத்தைக்கூட திரும்பிப்பார்க்காமல் அங்கிருந்து வெளியேறுகிறார் கார்கி. சில நாட்களுக்கு பிறகு நடக்கும் தன் தங்கையின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பாதிக்கபட்ட அந்த 12 வயது சிறுமியையும் அழைத்து அவரை இயல்பு நிலைக்கு அழைத்துவர முயல்கிறார் கார்கி. மஞ்சள் விழாவிற்கு வந்திருக்கும் மற்றொரு பெண் கார்கியின் தங்கையிடம் எப்படி உணர்கிறாய் என கேட்கிறார். அதற்கு கார்க்கியின் தங்கை “விளையாடிட்டு இருந்தேன், வயிறு வலிச்சது, அம்மாகிட்ட சொன்னேன். உக்கார வெச்சிட்டாங்க” என்று கூறுவார். அதற்கு அந்த பெண் “மங்கையராக பிறந்திட மாதவம் செய்திட்டாய் பெண்ணே-ன்னுலாம் சொல்லுவாங்க நம்பிடாத! இனி வாழ்க்கை முழுக்க போராட்டம் தான். தைரியமாய் இரு என்று கூற, நிறைவடைகிறாள் கார்கி.
இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இதற்கு முன்பு ரிச்சி என்கிற ஒரு திரைப்படத்தை 5 வருடங்களுக்கு முன்பு இயக்கியிருக்கிறார். அப்படம் தோல்வியை தழுவியது. இதே போல ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய த.சே. ஞானவேல் அவர்கள் தன் முதல் திரைப்படமான கூட்டத்தில் ஒருவர் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படமும் தோல்வியை தழுவியது. இவ்விருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை தாங்கள் இயக்கிய முதல் படங்கள் எந்தவித அரசியல் மற்றும் சமூகநீதி சார்ந்த திரைப்படங்கள் அல்ல. சாதாரண கதையைக்கொண்ட திரைப்படங்கள், தோல்வியுற்றன. பல வருடங்களுக்கு பிறகு இவ்விருவரும் இயக்கிய இரு படங்களுமே அரசியல் மற்றும் சமூக நீதியை விவாதிக்கும் படங்களாக வெளிவந்து வெற்றியும் பெற்றன. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழல். இங்கு சமூகநீதி, முற்போக்கு அரசியல் பேசும் திரைப்படங்களே வெற்றிபெறும் என்ற நிலையை தமிழ்நாடும், தமிழ் மக்களும் இத்திரைப்படங்களின் வெற்றியின் மூலம் சனாதன சக்திகளுக்கு அறிவித்திருக்கிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு அனைத்து விதங்களிலும் முன்னோடியாக இருந்து சனாதனத்திற்கு எதிராக சண்டையிடும் வழிகளை காட்டிய தமிழ்நாடு, கலைப் படைப்புகளின் மூலம் சனாதனத்தை வேரறுக்க ஒரு புதிய வழியை காட்டத் தொடங்கியிருக்கிறது.