இலங்கை இராணுவத்தால் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது குறித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூலில் 06.08.2024 அன்று பதிவு செய்தது.
நேற்று (05.08.2024) இராமேஸ்வரத்தில் படுகொலையான மீனவ குடும்பங்களை சந்தித்தோம். திரு.மலைச்சாமி உடல் கிடைத்து, அது கரைக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டது. பிணக்கூறாய்வு செய்யப்படவில்லை. கொலை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. படகில் காணாமல் போன மற்ற மீனவர் திரு.ராமச்சந்திரன் உடல் கிடைக்கவில்லை. உயிருடன் உள்ளாரா என தெரியவில்லை. இருவரும் அரை மணி நேரம் நீந்தி பின்னர் இயலாமல் தவறியிருக்கின்றனர். மற்ற இரு மீனவர்கள் உயிருடன் வீடு திரும்பியுள்ளனர்.
கொலையான மலைச்சாமிக்கு 8 குழந்தைகள். அவரது வருமானம் குடும்பத்திற்கு இன்றியமையாதது. மிக வறியநிலையில் குடும்பம் இருப்பதை நேரில் கண்டோம்.
தோழர். கே.எம்.சரீப் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி) தோழர் குடந்தை அரசன்(விடுதலை தமிழ்புலிகள்) தோழர்.எஸ்.ஆர்.பாண்டியன் (தேவேந்திரகுல மக்கள் பேரவை) ஆகியோர் உடன் மே17 இயக்கத் தோழர்களுடன் நேரில் சென்று சந்தித்தோம். உடன் படகு உரிமையாளர் சங்கத்தின் திரு.சகாயம், பாரம்பரிய மீனவர் சங்கத்தின் சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் புலேந்திரன் ஆகியோரும் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிர்வாகிகளும் இணைந்தனர்.
10 லட்ச ரூபாயை கொல்லப்பட்ட மலைச்சாமி குடும்பத்திற்கு கொடுத்து முடித்திருக்கிறது திமுக அரசு. அப்பணத்தை விரைந்து கொடுத்து சிக்கலை முடித்திருக்கிறார்கள் அப்பகுதி அதிகாரிகளும், ஆட்சியாளர்களும். கொலை செய்த இலங்கை மீது வேறெந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனால் இந்த படுகொலை விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இராமசந்திரன் உடல் கிடைக்காததால் அக்குடும்பத்திற்கு நட்ட ஈடு கிடைக்காது. 7 ஆண்டுகள் காத்திருந்து அவர் வரவில்லையெனில் மட்டுமே நிவாரணமான 10லட்சம் கிடைக்கும். அவரது குடும்பமும் மிக வறிய நிலையில் உள்ளது. இரண்டு பெண்கள், ஒரு மகன் என அக்குடும்பம் உரிய வீட்டு வசதியின்றி வாழ்கிறார்கள். ராமச்சந்திரன் மனைவி கையை பிடித்து கெஞ்சுகிறார். தன் கணவன் ஏதும் தெரியாத அப்பாவி மனிதர், சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது. நீண்டநாளாக கடலுக்கு செல்லாமல் இருந்தார். இலங்கைக்கு அஞ்சி கரையோர வேலை பார்த்திருக்கிறார். அது போததென்பதால் சில நாட்களுக்கு முன்புதான் கடலுக்கு தொழில் பார்க்க சென்றார் என குடும்பம் சொல்லி அழுதது.
இதுவரை கொல்லப்பட்ட 600+ மீனவர்கள் மீன்பிடி தொழிலாளர்கள். இத்தொழிலாளர்களின் வாழ்வு மீன்பிடி படகு உரிமையாளர்களை நம்பியுள்ளது. உரிமையாளர்கள் அரசு ஆதரவை நம்பி உள்ளனர். இவர்களை சுரண்டி கம்பெனிகளும், அரசும் வாழ்கிறது. மீனவர் கொல்லப்பட்டால் அரசு கைகழுவுகிறது. போராட்டம் நடத்தக்கூடாதென எச்சரிக்கை கொடுக்கப்படுவதால் கொலை நிகழ்வு சில நாட்களில் மறக்கடிக்கப்படுகிறது. கோரிக்கையோ, போராட்டமோ அரசுக்கு நெருக்கடி தராத வகையில் அமைகிறது. இந்திய அரசின் கொள்கையால் கொலை வழக்குகள், பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தல், உரிமை மீறல் ஆகியன வழக்காக மாறுவதில்லை. இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பதால் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. மேலும் கொலை செய்யப்படுபவர் மீனவ தொழிலாளிகளாக உள்ளனர். இதனால் கொலை தொடர்கிறது. ஆளும், ஆண்ட கட்சிகள் எதிர்த்து கேட்பதில்லை. டில்லிக்கு கடிதம் எழுதுவதோடு முடிந்து போகிறது. தேசிய கட்சிகள் இலங்கையோடு கொஞ்சிக்குலாவிக்கொண்டிருக்கின்றன.
இப்போதும் எவ்வித எதிர்ப்புமின்றி கொலை வழக்கில்லாமல் தப்புத்திருக்கிறது இலங்கை. தமிழ்நாட்டின் சனநாயக அமைப்புகளில் பல அமைதி காக்கின்றன. திமுக சார்பு (சம்பளத்தில் உழைக்கும்) ஊடகங்கள், யூட்யூபர்கள் வழக்கம் போல திமுக புகழ்மாலை பாடிக்கொண்டிருக்கின்றனர். வெட்கமில்லாமல் இப்படுகொலையை மூடி மறைத்திருக்கின்றன. அதிமுக எனும் எதிர்க்கட்சி எழுந்திருக்கவுமில்லை. காங்கிரஸ் வழக்கம் போல கள்ளமெளனம் காக்கிறது. அண்ணாமலை- பாஜக நாடகம் நடத்துகிறது. நாம் தமிழர் வாய்சவடாலோடு நிறுத்திவிட்டனர்.
எப்போது மெளனம் கலைப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் எம் போராட்டம் தொடங்குகிறது. தமிழரை கொலை செய்யும் சிங்கள பேரினவாதத்தை தமிழ்நாட்டின் வணிகத்திலிருந்து அகற்றுவோம். ஆகஸ்டு 10 அன்று, சிங்கள நிறுவனமான ‘DAMRO‘(@DamroFurnitures) நிறுவனத்தை தமிழ்நாடு முழுவதுமுள்ள அதன் கிளைகளை முற்றுகையிடுகிறோம். இந்நிறுவனம் சிங்கள நிறுவனம் கிட்டதட்ட 260 கிளைகளுடன் இயங்கிவரும் சிங்கள பெருநிறுவனம். தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களருடனான பொருளாதார உறவுகளை புறக்கணிப்போம்.