உலகத்தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படமான விடுதலை-2 திரைப்படம் எடுத்த இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் இந்துத்துவ அமைப்புகளை எச்சரித்தும், கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் கொடூரம், அண்ணாமலையின் நாடகம் போன்றவை குறித்தும் மே 17 இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு டிசம்பர் 27, 2024 அன்று நடத்தப்பட்டது. தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர். குடந்தை அரசன், பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர். குமரன் மற்றும் தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர். திருமுருகன் காந்தி பேசியவை :
இப்போது தமிழ்நாட்டில், தமிழர்களுடைய வரலாறை, தமிழர் வரலாற்றில் நடந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை, பல்வேறு சமூகப் பிரச்சினைகளை தொகுத்து பல நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவுடைய ஒரு பொற்காலம் என்று கூட நாம் இதனை சொல்லலாம். தமிழ் இயக்குனர்கள் உலகத்தரம் வாய்ந்த இந்தியாவிலேயே மிகச்சிறந்த படைப்புகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். வணிக ரீதியாக மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்திலே இருக்கக்கூடிய தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளை குறித்தெல்லாம் ஆகச்சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, அவை மிகவும் ஆரோக்கியமான, நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழலை அளிக்கின்றன.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பல்வேறு குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களை இயக்கியவர். பாலுமகேந்திராவின் மாணவர். அவர் இயக்கி வெளிவந்திருக்கக்கூடிய விடுதலை என்கின்ற திரைப்படம் இரண்டு திரைப்படப் பகுதிகளாக வெளிவந்துள்ளது. இரண்டாவது பகுதியாக இப்பொழுது வெளிவந்திருப்பது, தமிழ்நாட்டினுடைய கடந்த கால வரலாறை மிகச் சிறப்பாக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது.
விடுதலை – 2, கலைப்படைப்பின் தரத்தின் வகையிலும் பார்த்தோம் என்றாலும் அது உலகத்தரம் வாய்ந்த ஒரு படைப்பாக உருவாகி இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் கடுமையான தணிக்கை அல்லது சென்சார் இருக்கக்கூடிய சூழலில், ஆக்கப்பூர்வமான விடயங்களையும் வரலாறுகளையும் சொல்ல முடியாத ஒரு சூழலில், காஷ்மீர் ஃபைல்ஸ் கேரளா ஸ்டோரி போன்ற பொய்யான தகவலின் அடிப்படையில் கட்டப்பட்ட திரைப்படங்களை எல்லாம் ஒரு பிரதமரே பரப்பக்கூடிய ஒரு சூழலில், தமிழ்நாட்டில் நடந்த மாற்றங்களைக் குறித்து, தமிழ்நாட்டினுடைய கடந்த கால வரலாறுகளில் தங்களை ஈகியராக தியாகியாக கொடுத்து இந்த மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்தவர்களைப் பற்றியான ஒரு திரைப்படத்தை வெற்றிமாறன் எடுத்திருக்கிறார்.
இது தமிழ்நாடே கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம். தமிழர்கள் கொண்டாட வேண்டிய திரைப்படம். தமிழர்கள் பெருமையுடன் இந்த படத்தை முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய வகையிலே ஒரு சிறப்பான திரைப்படம். உண்மையான தகவல் அடிப்படையிலே இல்லாத கேரளா ஸ்டோரி அல்லது காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படங்களை எல்லாம் பிரதமரே நேரடியாக நின்று விளம்பரப்படுத்துகிறார். ஆனால் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை முன்னின்று, அதை முன்னகர்த்தக்கூடிய ஆதரவு என்பது பெருமளவில் இல்லாமல் இருப்பது வருத்தத்தத்திற்கு உரியதாக இருக்கிறது. தமிழக முதல்வர் அதைக் குறித்து பேசி இருக்க வேண்டும். அவர் இதுவரைக்கும பேசவில்லை.
இப்படியான ஒரு சூழலில், சில நாட்களுக்கு முன்பு சில வலதுசாரி மதவாத அமைப்புகள் வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி திரு. வெற்றிமாறன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். எந்த அடிப்படை காரணமும் இல்லாமல், ஆனால் ஒரு மிரட்டுகின்ற தோரணையுடன், படைப்பாளிகளினுடைய கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக இந்த பணியை இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் போக்கை மிக மிக ஆபத்தானதாக நாங்கள் பார்க்கின்றோம்.
தமிழ்நாட்டினுடைய ஆகச்சிறந்த ஒரு படைப்பாளியை இவ்வாறாக எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் மிரட்டுவது அல்லது அந்த படைப்பை கொச்சைப்படுத்துவது, இழிவுபடுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அப்படியான ஒரு பண்பாடு என்பது தமிழ்நாட்டிற்குள் இதுவரை கிடையாது. தமிழ்நாட்டிலே இப்படிப்பட்ட ஒரு மிரட்டுகின்ற அரசியலை முன்னகர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டினுடைய தமிழர்களுடைய வரலாறைப் பற்றி பேசிய ஒரு திரைப்படத்திற்கு இப்படியான நெருக்கடி வருவது குறித்து தமிழ் திரையுலகம் அமைதி காப்பது என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயமாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலே தமிழ் திரையுலகத்தில் இருக்கக்கூடிய மிக கவனத்திற்குரியவர்கள் இது குறித்து பேசி இருக்க வேண்டும். படத்தை முதலில் ஆதரித்திருக்க வேண்டும். இந்த படத்தைப் அனைவரும் பார்க்க வேண்டும், அனைவரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற குரலை அவர்கள் எழுப்பி இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல், இன்றைக்கு திரு. வெற்றிமாறன் அவர்களை தனிமைப்படுத்துவது போன்ற ஒரு போக்கு இருப்பதாக நாங்கள் கவலைப்படுகின்றோம். தலைசிறந்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள் இது போன்ற வலதுசாரி அமைப்புகளினுடைய மிரட்டலைக் கண்டித்து வெளிப்படையாகவே X தளத்தில் பதிவு போட்டிருக்கிறார். அவர் மிகச்சிறந்த ஒரு ஒளிப்பதிவாளர். இது கருத்துச் சுதந்திரம் மற்றும் தமிழ்நாட்டினுடைய வரலாறு என்றும், எல்லோரும் படிக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட குரல்கள் பல இடங்களில் இருந்து வந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு எதிர்ப்புக் குரல் வரும் என்று நாங்களும் ஒரு சில நாட்களாக காத்திருந்தோம். எதிர்பார்த்திருந்தோம். அப்படியான ஒன்று வரவில்லை. ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் இன்றைக்கு நாங்கள் வெற்றிமாறன் அவர்களுடைய இந்த படைப்பிற்கும், அவருடைய கருத்து சுதந்திரத்துக்கும், படைப்பு உரிமைக்குமான பாதுகாப்பினை தமிழ் சமூகம் தர வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரின் முன்பாக நாங்கள் முன்வைக்கிறோம்.
இப்படிப்பட்ட ஒரு கொச்சைத்தனமான ஒரு மிரட்டலை வெற்றிமாறன் மீது வைக்கின்ற இந்த இந்து மகாசபை என்கின்ற அமைப்பு தமிழ்நாட்டில் பெரிய அமைப்பு எல்லாம் கிடையாது. ஆனால் இந்த இந்து மகா சபை யார் என்றால், காந்தியடிகளை படுகொலை செய்த கோட்சேவினுடைய அமைப்புதான் இது. இந்த இந்து மகா சபைதான் இந்தியாவை இரண்டு நாடுகளாக உடைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவர்கள். இந்தியாவிலே முதன்முதலாக இந்த நாட்டை இரண்டாக உடைக்க வேண்டும், இந்தியா பாகிஸ்தானாக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற முதல் கோரிக்கையை 1924/25 -லேயே எழுப்பியவர்கள். இக்குரலை முதலில் எழுப்பியது முஸ்லிம் லீக் அல்ல, இந்த இந்து மகாசபை தான்.
சுபாஷ் சந்திரபோஸ் ஐ.என்.ஏ-வான இந்திய நேசிய படையை திரட்டிக் கொண்டு வரும் பொழுது, இங்கிலாந்து அரசால் இந்தியாவைக் காப்பாற்ற முடியாத நிலை இருந்தது. ராணுவ வீரர்கள் இல்லாத நிலை இருந்தது. ஆங்கிலேய அரசு சிங்கப்பூரில் தோல்வி அடைகிறது, மலேசியாவில் தோல்வி அடைகிறது, பிலிப்பைன்சில் தோல்வி அடைகிறது. இந்நிலையில் இந்தியாவை பிடித்து விடுவார்கள் என்ற ஒரு சூழலில், இந்த இந்து மகா சபையினுடைய தலைவராக இருந்த வீர சாவர்க்கர் 10 லட்சம் பேரை இந்தியா முழுவதும் சென்று பிரச்சாரம் செய்து, ஆட்களைத் திரட்டி ஆங்கிலேய படைகளில் சேர்க்கிறார். சுபாஷ் சந்திர போசுக்கு எதிராக படை திரட்டியவர் அவர். அவரின் அமைப்பே இந்து மகாசபை.
இதை நான் வெறும் போகிற போக்கில் எல்லாம் சொல்லவில்லை. ‘வார் கவுன்சில்’ என்கிற ஒன்று இருக்கிறது. பொதுவாக போர் நடத்தும் பொழுது வார் கவுன்சிலை உருவாக்குகிறார்கள். முக்கியமான அதிகாரிகள் சேர்ந்து போரை எப்படி நடத்துவது என்று ஆலோசிப்பார்கள். அப்படி அன்றைக்கு உருவாக்கிய ஆங்கிலேய அரசினுடைய வார் கவுன்சிலில் பங்கு பெற்ற அமைப்பு இந்து மகாசபை. சுபாஷ் சந்திரபோசுக்கு எதிராகப் படையை எப்படி நடத்துவது, சண்டை எப்படி போடுவது என்பதற்கான அந்த திட்டக்குழு அமைத்தார்கள்.
யுத்தத்தைப் பற்றியான யுக்திகளை வகுக்கக்கூடிய வெள்ளையர்களின் குழுவிலே பங்கெடுத்தவர்கள் இந்து மகா சபையினர். அப்படிப்பட்ட அமைப்பினர் வந்தெல்லாம் இங்கே வெற்றிமாறனை போன்றவர்களைப் பேசுவதும், இங்கே தமிழ்நாட்டினுடைய படைப்புச் சுதந்திரத்தின் மீது ஒரு தாக்குதலை நடத்துவதும் அனுமதிக்க முடியாது. அதிலும் அவர்கள் பேட்டியை பார்த்தால், அது முழுவதும் தகவல் பிழைகளோடு இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சமூக விரோத கும்பல்கள் எல்லாம் தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய படைப்பாளிகளை நோக்கி குரல் எழுப்புவார்கள் என்றால் அந்த படைப்பாளிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்பதை சொல்வதற்காக இங்கே வந்திருக்கின்றோம். தமிழ்நாடு அனைத்து அரசியல் சமூக பொறுப்பில் இருக்கக்கூடிய அனைவருமே இந்த விஷயங்களை கண்டிக்க முன்வர வேண்டும். அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் எல்லாம் வெளிப்படையாகவே X தளத்தில் இந்த மாதிரி பதிவு செய்திருப்பதைக் கண்டிக்க வேண்டும்.
பாஜக ஆக்கப்பூர்வமான எந்த வேலையும் செய்வது இல்லை. ஆக்கப்பூர்வமான கோரிக்கை எதுவும் வைப்பது இல்லை. ஆனால் இது போன்ற ஒரு வன்முறையான விசியங்களை தொடர்ச்சியாக பதிவு செய்வதன் மூலமாகவே தங்களுக்கான கவனத்தை ஈர்த்துக் கொள்கிறார்கள். இந்த போக்கினை ஒரு சமயத்தில் கட்டுப்படுத்த வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அர்ஜுன் சம்பத் வந்து ஸ்கெட்ச் போட்டு எங்களை எல்லாம் கொலை பண்ண வேண்டும் என்று ட்விட் போட்டு இருக்கிறார். இன்னும் அந்த பதிவு ’X’ தளத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சமூக செயல்பாட்டில் இருக்கக்கூடியவர்களை நீங்கள் எப்படி கனடாவில் கொன்றீர்களோ, அதைப்போன்று கொல்லலாம் என கூறிய செய்தி இன்னும் ’X’ தளத்தில இருக்கிறது. அதைப் பற்றி கண்டித்து நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பும் வைத்திருந்தோம். இன்று வரைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது போன்ற ஒரு சமூக விரோதப் போக்குகள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது.
இப்போது அண்ணாமலை கோயம்புத்தூரில் என்ன பேசுகிறார் என்றால், ஆயுதம் தூக்க வேண்டாம் என்று நான் பாஜக தொண்டர்களை தடுத்து வைத்திருக்கிறேன். இங்கு தமிழ்நாட்டில் ஆயுதம் தூக்குகிற அளவுக்கு என்ன நடக்கிறது? போர் நடக்கிறதா, மோசமான சூழல் இருக்கிறதா அல்லது அவருடைய தொண்டர்களுக்கு ஏதாவது நெருக்கடி வந்திருக்கிறதா என்ன? நான் என்ன கேட்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவராவது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எத்தனையோ கட்சிகளில் இங்கு இருக்கக்கூடியவர்கள் யாராவது இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களா? இப்படிப்பட்ட வன்முறையை தூண்டுகின்ற வகையில் நான் அடக்கி வைத்திருக்கிறேன் என்றால், மற்ற கட்சியில் இருப்பவர்களுக்கு எல்லாம் இதெல்லாம் செய்யத் தெரியாதா? இந்த வன்முறையை தூண்டக்கூடிய ஒரு போக்கு நடந்து கொண்டே இருக்கிறது. அதை கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறோம்.
அரசியலாக கேள்வி கேட்பதும், அரசியலை விமர்சிப்பதும் தவறு கிடையாது. அதை செய்ய வேண்டும். அதுதான் அரசியல். என்ன தவறு இருக்கிறதோ அதை சுட்டிக்காட்ட வேண்டும், ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டும், விமர்சிக்க வேண்டும். அதற்கு எதிராக மக்களிடத்திலே இது போன்ற தவறுகளை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். அது நியாயம். அதை விடுத்து, ஆயுதங்களை எல்லாம் எடுக்க சொல்லி, நான் சொல்வதால்தான் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று சொல்வது வன்முறை அரசியல்.
இப்படி சொல்லும் அளவுக்கு இங்கு என்ன தவறு நடந்திருக்கிறது, மோசமான சூழல் எழும்பி இருக்கிறது என்பதை அண்ணாமலை சொல்ல வேண்டும். ஒரு சாதாரண பாஜக தொண்டனுக்கு இதைக் கேட்டால் என்ன தோன்றும்? இந்த அரசியல் வன்முறை என்பது ஒரு பண்பாடாகவே தமிழ்நாட்டில் இவர்களால் வளர்க்கப்படுகிறது. அர்ஜுன் சம்பத் இங்கு வந்து ஸ்கெட்ச் போடுவேன் என்று சொன்னால், அண்ணாமலை ஆயுதம் தூக்க வேண்டாம் என்று அமைதியாக தொண்டர்களை வைத்திருப்பதாக சொல்கிறார். அப்படி என்ன மோசமான சூழல் இங்கு இருக்கிறது, எதை தடுப்பதற்காக இவற்றையெல்லாம் பேசுகிறீர்கள் என்று ஊடகவியலாளர்கள் தயவுசெய்து அவர்களிடம் கேளுங்கள்.
இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களை அடித்துக் கொல்லுகிறது. அங்கு ஏதாவது படையெடுக்கப் போகிறாரா அண்ணாமலை? அதாவது தேசத்தை காக்கப் போகிறேன், தேச மக்களை காக்கப் போகிறேன், தமிழனை காக்கப் போறேன் என்று இலங்கை மீது படை எடுக்கப் போகிறாரா? எதற்காக இது போன்ற ஒரு அரசியல் வன்முறை பண்பாட்டை வளர்க்கிறார்கள் என்பதைத்தான் நாங்கள் கேள்வியாக எழுப்புகிறோம். இத்தனை வன்முறையையும் பேசிவிட்டு, இன்றைக்கு சாட்டையில் அடித்துக் கொள்கிறேன் என்கிறார் அண்ணாமலை. இந்த நாடகத்தை நாங்கள் எப்படி சொல்வது?
தமிழ்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து வரவேண்டிய நிதி வரவில்லை. டெல்லி அரசு மோடி அரசு தரவில்லை. இது திமுக அரசுக்கு மட்டும் இல்ல, முன்பு இருந்த எடப்பாடி அரசு காலகட்டத்திலும் இதுதான் நிலைமையாக இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கான போதிய நிதி ஒதுக்கீடுகள் நடந்ததில்லை. காவிரி உரிமை நிலைநாட்டப்படவில்லை. இந்தியாவிலிருந்து, டெல்லியிலிருந்து, மோடி அரசிலிருந்து தமிழ்நாட்டிற்காக கிடைக்க வேண்டிய எந்த உரிமைகளும் எந்த நலத்திட்டங்களும், எந்த பட்ஜெட் பங்கீடுமே நடக்காமல் இருக்கக்கூடிய இந்த சூழல் தமிழ்நாட்டில் புதிதில்லை. ரயில்வே திட்டங்களுக்கு நிதியில்லை. எயிம்ஸ் மருத்துவ கட்டமைப்பு செய்யவில்லை. கல்வி கட்டமைப்பில் அவர்கள் கல்வித்துறைக்கு தர வேண்டிய போதுமான பணத்தை தரவில்லை. இது எல்லாமே தமிழ்நாட்டை முடக்குகின்ற செயலாக இருக்கிறது.
இது திமுக, அதிமுக என்கிற கட்சி அடிப்படையில் பேசவில்லை. தமிழ்நாட்டு குடிமகன் என்கிற அடிப்படையில் நாங்கள் கேள்வி கேட்க விரும்புகின்றோம். இது குறித்து எல்லாம் சட்டை செய்யாமல் சாட்டையில் அடித்துக் கொள்வாரா? அண்ணாமலை கட்சி தானே டெல்லியில் இருக்கிறது. அவருடைய தலைவர் மோடி தானே ஆட்சியில் இருக்கிறார். அங்கு போய் கேட்டு தமிழ்நாட்டுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத் தராமல், தமிழ்நாட்டுக்குள்ளாக ஆயுதம் தூக்க வைக்க வேண்டாம், ஸ்கெட்ச் போட்டு தருவேன் என்று வன்முறையை பேசிக் கொண்டிருக்கக்கூடிய அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் அருவருப்பாக இல்லையா? தமிழர்கள் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
திமுக ஆட்சியின் மீது இருக்கக்கூடிய குறைகள் என்னவென்று பட்டியல் போட்டு சொல்லுங்கள். அதைக் குறித்து பேசுவதற்கு எல்லாம் தயாராக இருக்கிறோம். நாங்கள் திமுகவினுடைய பல்வேறு குறைகள் குறித்தான போராட்டங்கள் நடத்துகிறோம், கண்டனங்களை தெரிவிக்கின்றோம், மக்களை திரட்டுகின்றோம், பிரச்சாரம் செய்கிறோம். ஆனால் அதையெல்லாம் அண்ணாமலை செய்யாமல், ஆயுதம் தூக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு கூறியிருக்கிறேன் எனப் பேசுகிறார். எதற்கு இந்த நாடகம் நடத்துகிறார்?
அண்ணாமலை கோயம்புத்தூரில் போராட்டம் நடத்தி இருக்கிறார். அவர் கைதாகும் பொழுது அவரை ஆம்னி பஸ்ஸில் வைத்து கூட்டிச் செல்கிறார்கள். இதுதான் இங்கு நடக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழல் அவருக்கு இருக்கிறது. ஆனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் ஒரு வன்முறை சூழலை உருவாக்குவதும், ஒரு பதட்டத்தை உருவாக்குவதுமான சூழலில் நடந்து கொள்கிறார். சாட்டை வைத்து அடித்துக் கொள்வேன் என்கிறார், செருப்பு போட மாட்டேன் என்கிறார் இவர் செருப்பு போடவில்லை என்றால் என்ன ஆகி விடப்போகிறது? இங்கு இதெல்லாம் ஒரு போராட்ட வடிவமா? இதெல்லாம் ஒரு அரசியல் தன்மையா? இது எந்த வகையில் தமிழ்நாட்டிற்கு பலன் கொடுக்கும்?
அண்ணாமலை தன்னை முதன்மைப்படுத்திக் கொள்வதற்கு, பாஜக கட்சித் தலைவராக தன்னை நிலைநிறுத்துவதற்காக இந்த ஸ்டன்ட் எல்லாம் அடிக்கிறார். இது அவருக்கும், அங்கு இருக்கக்கூடிய பாஜக தலைவர்களுக்கும் இருக்கக்கூடிய போட்டியில் நடத்தக்கூடிய ஸ்டன்ட் வேலையை தவிர, இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. தமிழ்நாட்டில் வெள்ளம், பஞ்சம், புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களால் கடந்த ஆண்டுகளில் நமக்கு வரவேண்டிய நட்ட ஈடு மட்டுமே ஒரு லட்சம் கோடியைத் தாண்டுகிறது. மோடி அரசிடம் இருந்து வரவேண்டிய தொகை இது. இதுவரைக்கும் அதில் 10 – 15% அளவுக்கு மட்டும்தான் நிதியைக் கொடுத்திருக்கிறார்கள். அரசு இழப்பு அல்லாமல், மக்களுடைய இழப்பு பல லட்சம் கோடிகளைத் தாண்டுகிறது. வீடுகளை இழந்திருக்கிறோம், சொத்துக்களை இழந்திருக்கின்றோம் அல்லது சொந்தங்களை இழந்திருக்கின்றோம், பொருட்களை இழந்திருக்கிறோம், இந்த இழப்புக்கான நட்ட ஈடுகளை இதுவரைக்கும் மோடி தரவில்லை.
அது திமுக அதிமுக ஆட்சிக்கான பணமில்லை. அரசாங்கத்தின் பணம். இது வெகு மக்களுக்கு தந்திருக்க வேண்டிய பணம். எங்களுடைய கட்டமைப்புகளை சரி செய்திருக்க வேண்டிய பணம். அந்த பணத்தை, அந்த நிதியை தராமல் மோடி சர்க்கார் தமிழர்களை வஞ்சிக்கிறது, தமிழர்களை நாசப்படுத்துகிறது. உலகத்தில் புயல் மழை ஏற்படுத்தாத பாதிப்பு இல்லை. பொது சொத்துக்கள் பாதிக்கப்படாமல் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நகரம் உலகத்தில் இருக்கிறதா? பொது சொத்துக்கு சேதம் வரும்பொழுது, சாமானிய மக்களுக்கு இழப்பு வரும் பொழுது, இழப்பீடு கொடுப்பதற்குதான் அரசாங்கம் இருக்கிறது. அதற்குதான் நாம் வரி கட்டுறோம்.
இப்போது நிர்மலா சீதாராமன் அம்மையார் புதிதாக ஒரு வரியை கொண்டு வந்திருக்கிறார்கள். பழைய கார்களை விற்றால் அதற்கு வரி போடுகிறேன் என்கிறார்கள். இந்த வரி விதிப்பைப் பற்றி பிரசாந்த் பூஷன் அவர்கள், அந்தக் கார் வாங்கப்பட்ட விலைக்கும், விற்கும் விலைக்கும் இடையில் உள்ள தொகைக்கு வரி போடுவதாக பதிவிட்டிருக்கிறார். அதாவது 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை வாங்கி, அதை நான் 10 வருடம் கழித்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கிறேன் என்றால், இந்த அம்மையார் காரை விற்கக்கூடிய ஒரு லட்சம் ரூபாய்க்கு வரிபோடவில்லை, எவ்வளவுக்கு விற்கிறேனோ, அந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை, மாறாக வாங்கிய விலைக்கும், விற்கும் விலைக்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாட்டில் போடுகிறார். ₹10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றால், இடையிலுள்ள மீதி ₹9 லட்சம் ரூபாய் இருக்கிறதே, அதற்குத்தான், அந்த ₹9 லட்சம் ரூபாய்க்கு தான் வரி போட்டிருக்கிறார்கள். அந்த ₹9 லட்சம் ரூபாய்க்கு வரி போட்டால் கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும். கார் விற்பது ஒரு லட்சம் ரூபாய்க்கு என்றால், அரசாங்கத்துக்கு ₹1.5 லட்சம் ரூபாய் வரி கொடுக்க வேண்டும். இப்படி வரி மேல் வரி போட்டு நம்மை எல்லாம் நெருக்கடிக்குத் தள்ளுகிறார்கள். வருமானம் ஏறவில்லை, ஆனால் வரி ஏறிக்கொண்ட போகிறது.
அனைத்துக்கும் வரியைப் போட்டாலும் தமிழர்களுக்கு உரிய நிதிப் பங்கீடு தரவில்லை. அதைக் கேட்டால் தமிழர்களுக்காகவும் நாங்கள் ஸ்டேட் ஜிஎஸ்டியும் போடுகிறோம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தி பண்ணக்கூடிய வணிகம் செய்வதில் இருந்துதான் வரியும் கொடுக்கிறோம். மாநில அரசு இதற்கெல்லாம் வரி போடுங்கள் என்று சொல்வதில்லை. ஆனால் வரியை குறித்து கேட்டால் மாநில அரசும் ஜிஎஸ்டி வாங்குவதாக சொல்கிறார்கள். ஒன்றிய அரசினுடைய ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களிலும் இவற்றிற்கெல்லாம் வரி என்று முடிவு செய்வது ஒன்றிய அரசு. ஆனால் மாநிலத்திற்கு வரி தருகிறோம் என்று சொல்லி இது போன்ற மடை மாற்றுகின்ற வேலையெல்லாம் பாஜக செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் சிக்கலைக் குறித்து ஆளுங்கட்சியிடம் முறையிடுவதற்கும், ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான அந்தப் பணிகளை எல்லாம் மடை மாற்றும் வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது. இப்போது பரந்தூர் விமான நிலையத்தை எதிர்க்கிறோம், மாஞ்சோலை பிரச்சனைகளுக்கு தீர்வு தரவில்லை என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். போராட்டம் நடத்துகிறோம். அதேபோல ஒப்பந்த ஊழியர்களுக்கான பணி நிரந்தரம் வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் திமுக அரசை எதிர்த்து கேள்வி கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதையெல்லாம் பற்றி இதுவரை அண்ணாமலை பேசியதில்லை.
அண்ணாமலை மாஞ்சோலைக்கு ஏதாவது பேசியிருக்கிறாரா? மீனவர் பிரச்சனைக்கு ஏதாவது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறாரா? ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறாரா? பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, ஆசிரியர் துறை, பேராசிரியர் துறை தூய்மைப் பணியாளர்கள் என்று கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று திமுக சொன்னது இன்னும் செய்யப்படவில்லை. அதற்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது எதற்கும், எதைப் பற்றியும் கேட்காத அண்ணாமலை, தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையை தீர்க்கப் போகிறார்.
அப்படி எந்தப் பிரச்சனை தீர்ப்பதற்காக அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்கிறார்? உண்மையாக சொல்லப்போனால் தமிழர்கள் தான் சவுக்கால் அடிக்க வேண்டும். எங்களுக்கு தரவேண்டிய பணத்தை மோடி அரசிடம் இருந்து வாங்கி தராததற்கு தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து அண்ணாமலை சவுக்கால் அடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் பிரதிநிதியாக மோடி அரசு தரவேண்டிய பேரிடர் நிவாரண நிதியான ஒரு லட்சம் கோடி ரூபாயை வாங்கித் தந்திருக்க வேண்டும். எய்ம்ஸ் நிதியை வாங்கித் தந்திருக்க வேண்டும். இதையெல்லாம் விடுத்து மடை மாற்றக்கூடிய அரசியலை அண்ணாமலை செய்கிறார். இந்த நாடகத்தை எல்லாம் நிறுத்தி விட்டு ஆக்கப்பூர்வமான அரசியல் செய்தால் நல்லது.
அமித்சா அண்ணல் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தினார். இன்று வரைக்கும் அண்ணாமலை பேசினாரா, வருத்தம் தெரிவித்தாரா அண்ணாமலை. அண்ணல் அம்பேத்கர் யார்? ஆகப்பெரும் தலைவர். உலகளாவிய அளவிலே புகழ்பெற்ற ஒரு சிந்தனையாளர். அவர் உருவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இந்தியாவினுடைய அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது, இயங்குகிறது. அவரை கொச்சைப்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர். ஆனால் அதைப்பற்றி என்றைக்காவது இவர் வருத்தம் தெரிவித்தாரா? இதற்கெல்லாம் யாரை சவுக்கால் அடிப்பது? சவுக்கால் அடிப்பதற்கான பட்டியல் பெரிதாக இருக்கிறது. பிஜேபிகாரர்கள் மக்களிடம் சவுக்கால் அடிவாங்க தயாராக இருக்க வேண்டும். இவர்களில்தான் தமிழ்நாடு இவ்வளவு நெருக்கடி சந்தித்திருக்கிறது. இதையெல்லாம் மடை மாற்ற சவுக்கால் அடிப்பது, செருப்பு போடாமல் நடப்பது போன்ற இது போன்ற மூடத்தனத்தை எல்லாம் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.
அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு நிதி பங்கினை தராததைப் பற்றி பேசும் போது கொச்சையான வார்த்தைகளை உபயோகிக்கிறார். நீங்களே கேட்டிருப்பீர்கள். அது தரவில்லை, இது தரவில்லை என்று கேட்பதாகப் பேசுகிறார். ஒரு தலைவருடைய பண்பா அது? நிதி தரவில்லை என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழர்களிடமிருந்து எல்லாவற்றிற்கும் வரி வாங்குகிறார்கள். ஆனால் திருப்பித் தருவதில்லையென்றால் கேள்வி கேட்காமல் என்ன செய்வது? எங்களிடம் இருந்து வரி வாங்குகிறார்கள், திமுக, அதிமுக கேட்கிறது என்றில்லை, நாங்கள் கேட்கிறோம், அதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். அவர் திமுகவை திட்டுவார், அதிமுகவை கண்டு கொள்ள மாட்டார். அது அவருக்கும் கட்சிகளுக்கும் இடையிலான சண்டை. பொதுமக்கள் இயக்கங்கள், சமூக இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள் ஆகிய நாங்கள் கேட்கிறோம், எங்களுக்கான பண பங்கீடு ஏன் தரவில்லை? வரியை மட்டும் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் வருகின்ற எல்லா திட்டங்களையும் வடக்கில் கொண்டு போகிறார்கள். அனைத்து திட்டங்களும் வடவர்களுக்கும், குஜராத்துக்காரனுக்கும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எதற்கு பிஜேபி 2024 தேர்தலில் அயோத்தியில் தோற்றது? அங்கு கோயில் கட்டுவதில் இருந்து எல்லா ஒப்பந்தமும் குஜராத்காரர்களுக்கு கொடுத்ததாக சொன்னதால் உத்தரபிரதேசக்காரனே ஓட்டு போடவில்லை. உத்தரபிரதேசத்தில் நடக்கக்கூடிய திட்டங்கள் எல்லாம் குஜராத்காரர்களுக்கு கொடுத்து விட்டு, தமிழ்நாட்டில் போடப்படுகிற ப்ராஜெக்ட் எல்லாம் ஹரியானா மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசத்திற்கு நகர்த்துகிறார்கள். அங்கு இருக்கக்கூடிய ப்ராஜெக்ட்களை குஜராத்காரனுக்கு கொடுத்து விடுகிறார்கள். இத்தனை சரிவுகளை, இத்தனை நெருக்கடிகளை தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஊடக நண்பர்கள் இதையெல்லாம் தயவு செய்து அவரிடம் கேட்டு பதில் சொல்ல சொல்லுங்கள்.
திமுக அரசு மாஞ்சோலை மக்களுக்கான போதுமான நட்ட ஈட்டினை வாங்கித் தரவில்லை. இந்த பிரிட்டானியா நிறுவனத்திலிருந்து வாங்கித் தரவில்லை. அதை நாங்கள் குற்றம் சாட்டுறோம். பிரிட்டானியா நிறுவனம் பிஜேபிக்கு தான் அதிகமான நிதி கொடுத்திருக்கிறது. இதன் நிறுவனர் நூஸ்லிவாடியா, அவர்களுக்குத் தான் நிதியைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார். முகமது ஜின்னாவுடையன் பேரனான அவர், பிஜேபிக்கு நெருக்கமானவர் தானே. அவரிடம் சொல்லி வாங்கித் தரலாமே, அண்ணாமலை அதை ஏன் செய்யவில்லை? அந்த மக்கள் பட்டியல் சமூக மக்கள் என்பதற்காகவா செய்யவில்லை.
அவர்கள் அண்ணல் அம்பேத்கரையும் இழிவுபடுத்துவார்கள், இங்கு போராடுகின்ற மக்களையும் இழிவுபடுத்துவார்கள், எல்லாவற்றையும் மடை மாற்றுவார்கள், இவற்றையெல்லாம் எவ்வளவு நாட்கள் பார்த்துக் கொண்டிருப்பது? அண்ணாமலையின் மிரட்டலுக்கு நாங்கள் பயந்து கொண்டிருக்க மாட்டோம். அதே போல ‘நான் ஆயுதங்களை தூக்க வேண்டாம் என்று அமைதிப்படுத்தி இருக்கேன்’ என்கிற அண்ணாமலையின் இந்த மிரட்டல் உருட்டல் வேலையெல்லாம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். அண்ணாமலை அரசியல் பேசினால் அரசியலாக பதில் சொல்லப்படும். ஆனால் ஆயுதத்தை தூக்குவதை தடுத்து வைத்திருக்கிறேன் என்றெல்லாம் பேச வேண்டாம்.
ஏனென்றால் தமிழர்களுக்கு வேறு வரலாறும் இருக்கிறது. அதற்கெல்லாம் பயந்து நாங்கள் எல்லாம் இங்கு வந்து உட்காரவில்லை. அதனால் இங்கு வந்து மிரட்டுவது பெரிய ரவுடி மாதிரி நடந்து கொள்வது என்பதையெல்லாம் அரசியலில் வைக்காதீர்கள். ஆக்கப்பூர்வமான அரசியல் செய்தால் எல்லோரும் வரவேற்போம். அதனை இதுவரை அண்ணாமலை செய்யவில்லை. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பதினால் நாங்கள் இன்றைக்கு இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை வைத்து சொல்லுகின்றோம். இதற்கு மேல் அண்ணாமலை அர்சூன் சம்பத் போன்றவர்கள் வன்முறையைத்தான் தங்களது அரசியலாக முன்வைப்பார்கள் என்றால், அதற்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் மக்களை ஒன்று திரட்டி இவர்களை தனிமைப்படுத்தி, அந்நியப்படுத்தி வெளியேற்ற வேண்டிய அரசியலுக்கு நாங்கள் செல்ல வேண்டி வரும் என்று அண்ணாமலைக்கு சொல்லிக் கொள்கிறோம்.
சவுக்கடியை அடிக்கடி அடிப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். 2024, 2019, 2018 என தேர்தல்களில் வரிசையாக சவுக்கால் அடித்து மக்களே இவர்களை விரட்டி இருக்கிறார்கள். ஒரு தேர்தலில் கூட வெல்ல முடியாத அளவிற்கு மக்களால் சவுக்கால் அடித்து வெளியேற்றப்பட்ட கட்சி பாஜக. அதனால் இந்த நாடகங்களை எல்லாம் தவிர்த்து விட்டு இந்த வன்முறை அரசியலை முடிவு கட்டி விடுவது தான் அண்ணாமலைக்கு நல்லது என்பதை நாங்கள் இங்கே சொல்ல விரும்புகிறோம்.
பத்திரிக்கையாளர் கேள்வி: சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையை பற்றிப் பார்க்கும் போது யுனிவர்சிட்டி பற்றி பார்க்கும்போது, அருண், போலீஸ் ஆபீசர், அமைச்சர் சொல்வதில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. FIR காப்பி சொல்வது மற்றும் பத்திரிக்கை சந்திப்பிலும் அமைச்சர் அது பல்கலைக்கழகத்துக்கு தெரியாது என்று சொல்வதும் முரண்பாடு இல்லையா?
பதில்: அண்ணா யுனிவர்சிட்டி பாதுகாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாக, தமிழ்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமாக இருக்கிறது. அதற்குள் சமூக விரோதி எப்படி நுழைய முடியும்? அது குறித்து முதலில் அந்த நிர்வாகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சாதாரண ஆட்கள் உள்ளே போய்விட முடியாத அளவு இருக்கும் போது, இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது ஒன்று. இரண்டாவது எஃப்.ஐ.ஆர் எப்படி வெளியே வருகிறது, யார் வெளியே கொண்டு வந்தார்கள், இது குறித்து விசாரணை நடந்து, அதன் பிறகு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லையா என்பதை வெளிப்படையாக காவல்துறை சொல்ல வேண்டும். திமுக அரசு, காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் சென்னையின் மையப் பகுதியில் இப்படி நடக்கக்கூடிய ஒரு பாலியல் வன்முறையை பார்த்துவிட்டு எப்படி அமைதியாக கடக்க முடியும்?
உரத்தநாட்டில் ஒரு பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த போதும் நாங்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பத்திரிக்கை சந்திப்பு வைத்தோம். கலெக்டரை சென்று பார்த்தோம். எஸ்பி-யை பார்த்தோம். எல்லோரிடமும் தொடர்ச்சியாக பேசினோம். ஆனாலும் இன்று வரை அந்தப் பெண்ணுக்கு நிவாரணம் தரவே இல்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரு வேலைவாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். எதுவுமே நடக்கவில்லை. அன்றைக்கு திமுக அரசைக் கண்டித்து இங்கே தான் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்தோம். ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எல்லாம் செய்தோம். அது சம்பந்தமாக திமுக அரசு தீவிரமான நடவடிக்கையை போதுமான அளவுக்கு இதுவரைக்கும் எடுக்கவில்லை என்கிற அந்த குற்றச்சாட்டு சொல்லி விடுகிறோம்.
தமிழ்நாட்டில் இதுவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை வேறு எங்காவது இவ்வளவு மோசமாக நடந்திருப்பதை பார்த்திருக்கிறோமா? அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை கொடுத்து பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அந்தக் குற்றவாளி இன்னும் அந்த அந்த குடும்பத்தை மிரட்டுகிறான். தொடர்ச்சியாக அந்த குடும்பத்தை நாங்கள் சந்தித்து வருகின்றோம். நாங்கள் ஆதரவு அளித்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கான பாதுகாப்பு தர வேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் முறையிட்டு இருக்கிறோம். இதுதான் இன்றைக்கு இருக்கின்ற நிலைமை. இதையெல்லாம் மூடி மறைத்தெல்லாம் திமுக அரசு நல்ல பெயர் வாங்கி விட முடியாது. அன்றைக்கு பாப்பா நாடு காவல் நிலையம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்போது இந்த சம்பவம். இது சம்பந்தமாகவும் காவல்துறை பொறுப்போடு பதில் சொல்ல வேண்டும். அதை தட்டி கழித்து விட முடியாது. FIR எப்படி வெளியே வந்தது, தகவல் எப்படி வெளியே வந்தது, நீங்க அப்லோட் செய்யும் சாஃப்ட்வேர் அப்டேசனில் பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள். எல்லா காவல் நிலையத்திலும் கண்காணிப்பு கேமரா இருக்கிறது, யார் வெளியே கொண்டு வந்தார்கள் எனக் கண்டுபிடியுங்கள். அவரைக் கைது செய்துவிசாரணை நடத்துங்கள் அல்லது துறை சார்ந்தவராக இருந்தார் என்றால் துறை சார்ந்த விசாரணை மேற்கொள்ளுங்கள். அதுதான் முறையானதாக இருக்கும். இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
விடுதலை’ திரைப்படம் மற்றும் இயக்குனர் ‘வெற்றிமாறன்’ மீது அவதூறுகள், மிரட்டல்களை ஏவும் வலதுசாரிகளை குறித்தும், அண்ணா பல்கலைக்கழக பாலியல்வன்முறை, பாஜக தலைவர் அண்ணாமலையின் நாகரீகமற்ற பேட்டி ஆகியன குறித்தான சனநாயக அமைப்புகளின் ஊடக சந்திப்பு இணைப்பு கீழே