துணைவேந்தர் நியமனம்: குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ் நாட்டிற்கு ஒரு சட்டமா?

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் நடைமுறையை மாற்றி, துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.இரவி தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்கவில்லை என்பதனால் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார். தற்போது, துணைவேந்தர்களை அரசே நியமித்தால் அரசியல் தலையீடுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறி, அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.

குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே செய்கின்றன. அங்கு பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) விதிமுறைகளின் படியே நியமனங்கள் நடக்கின்றன. ஆனால் இதைப் போன்றே தமிழ் நாட்டிலும் கொண்டு வர தமிழ் நாடு அரசு முடிவு செய்து, அதற்கான மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்குப் புறம்பானது எனவும், அரசியல் தலையீடு வந்துவிடும் எனவும் கூறி ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார்.

அதோடு துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முடிவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், மாநிலத்தின் மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.இரவி தன்னிச்சையாக நியமனம் செய்தும் உள்ளார்.

இதுவரையில் தமிழ்நாட்டில் ஆளுநர்கள் அரசுடன் கலந்து பேசி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்து வந்துள்ளனர். ஆனால், ஜெயலலிதாவின் ஆதிக்கத்திற்கு பிறகான அதிமுக ஆட்சியிலிருந்து பாஜக ஆதரவு ஆளுநர்கள் மாநில அரசை மதிக்காது தன்னிச்சையாக செயல்பட்டு வருவது தொடர்கிறது. கடந்த ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆர்எஸ்எஸ்-பாஜகவை சேர்ந்த தமிழர் அல்லாத, கர்நாடகவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பலரது எதிர்ப்பையும் மீறி நியமித்தார். அது போலவே தற்போதைய ஆளுநர் இரவியும் செயல்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் தான் நாம், “அரசியல் சட்டத்தில் இல்லாத / வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை நினைவு கூறுவது மிகவும் அவசியமாகிறது. அந்த பரிந்துரையில், ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக் கூடாது’ எனவும் ‘துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ‘துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பது என்பது அதிகார மோதலுக்கு வித்திடும்’ எனவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நீதிபதி பூஞ்சி

கடந்த நான்கு ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில், ஆளுநர் தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பது போல செயல்பட்டு வருவதும், மக்களுக்கு உயர்கல்வியை அளிக்கும் பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கும், அதோடு ஆர்எஸ்எஸ்-பாஜகவை சேர்ந்தவர்கள் பல்கலைக் கழங்களின் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இத்தனைக்கும் மாநில அரசின் உயற்கல்வித்துறை அமைச்சர் ஆளுநருக்கு நிகரான பொறுப்புடன் இணைவேந்தராக செயல்படுகிறார். துணைவேந்தர்கள் நியமானத்திலோ, பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்களிலோ இணைவேந்தரான பொன்முடி அவர்களின் எவ்வித ஆலோசனையுமின்றி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

இத்தகைய பாஜக ஆதரவு ஆளுநர்களின் அதிகார போக்கிற்கு எதிராகவும், துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசின் உரிமையை நிலை நாட்டும் வகையிலும் திமுக அரசு இந்த நடைமுறையை மாற்றி அமைக்க முடிவு எடுத்து, இனி ‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை தமிழ் நாடு அரசே நியமனம் செய்யவும், மேலும் தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவையும் மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் இரண்டு மசோதாக்களை கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இந்த சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதோடு, தமிழ்நாட்டிலுள்ள 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் தற்போது அவரே நியமித்து உள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் என். சந்திரசேகரனும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ஜி ரவியும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டி ஆறுமுகமும் ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர்களுக்கு தனி மாநாடு நடத்துவதும், உயர்கல்வித் துறை அமைச்சரை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்துவதும், உயர்கல்வி நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் கூடாரமாக்குவதும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக்கொள்கையை திணிக்கவும் தொடர்ந்து தன்னிச்சையாக பல செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகிறார் ஆளுநர் இரவி.

குஜராத்தில் 1949-இல் இயற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத்தின் படி மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க அம்மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. தெலங்கானாவிலும் பல்கலைக்கழக சட்டம் 1991-இன் படி அங்குள்ள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை அம்மாநில அரசே நியமனம் செய்ய முடியும். இதே போலவே கடந்த ஆண்டு மகாராட்டிரா மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் மூலம் ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநர் நியமித்த முறைகேடான துணைவேந்தர்களை நீதிமன்றம் தலையிட்டு பதவி நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல மேற்கு வங்க அரசும் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்ததுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அளவுக்குச் சென்றது. அதோடு கேரளாவில் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மாநில அரசு தனது விருப்பத்திற்கு மாறாக நியமித்து உள்ளதாக ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். இதே போல், ஒடிசாவிலும் பிஜேடி (BJD) அரசும் மாநிலப் பல்கலைக்கழகத்தின் அனைத்து நியமனங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்தது. சமீபத்தில், ஹரியானா மாநில அரசும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் உட்பட அனைத்து ஊழியர்களின் நியமனங்களும் அதன் கண்பார்வையின் கீழ் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ஆக, இந்திய ஒன்றியத்திலுள்ள எல்லா மாநிலங்களும் தங்கள் மாநில உரிமையை நிலைநாட்டிட விரும்புகின்றன. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்திலும் இடமிருக்க, ஒன்றிய பாஜக அரசோ தங்களுடைய கைப்பாவையாக ஆளுநர்களை வைத்து தாங்கள் ஆட்சியமைக்க இயலாத மாநிலங்களில் நெருக்கடியை உருவாக்குகிறது. பாஜக ஆளும் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டமும், இதர மாநிலங்களுக்கு வேறொரு சட்டமும் என்றால் அது எவ்வகையான அரசியலமைப்பு? தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் அதிகாரத்தை, மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கட்சி குறுக்கு வழியில் ஆளுநரை வைத்து பறிக்க முயன்றால் அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »