வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த போராட்டம்
வாழ்நாள் இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு சவாலாய் திகழ்ந்த ஒரு பெண்புலியின் நினைவு நாள், இன்று!
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. அதில், மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரமங்கை வேலு நாச்சியார் மிக முக்கியமானது.
சக்கந்தி எனும் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊரில், 1730ம் ஆண்டு ஜனவரி 3ம் நாள் சேதுபதி மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி – முத்தாத்தாள் நாச்சியார் இணையருக்கு ஒரே மகளாக பிறந்தவர் வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு சரியான உதாரணம் வேலுநாச்சியார்.
சிலம்பம், வாள்வீச்சு, அம்பு எய்தல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பல பாடங்களையும் பத்து மொழிகளையும் கற்று தேர்ந்தார். இப்படி வீறு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை 1746 இல் மணமுடித்தார்.
இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றிய நவாப்பின் ஆற்காடு நவாப்பின் பெரும்படை அடுத்து சிவகங்கையை குறி வைத்தது. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரும் அவர் துணைவியார் வேலு நாச்சியார் வீரம் செறிந்தவர்கள். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள் இருந்தனர்.
சிவகங்கையைத் தாக்க நவாப்புக்கு உதவ ஆங்கிலேயேப்படைகள் முன் வந்தன. ஆங்கிலேயர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் நவாப் திட்டமிட்டார். ஒருநாள் மன்னர் முத்து வடுகநாதர் காளையார்கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையார்கோயிலைச் சுற்றி வளைத்து ஆங்கிலேயர் கொடுத்த போர் ஆயுதங்களை வைத்து தீவிரத் தாக்குதலை மேற்கொண்டனர். பதிலுக்கு, வடுகநாதரும் அவரது படை வீரர்களும் சமரசமற்ற வீரப்போர் புரிந்தனர். அப்படியிருந்தும், அவர்களால் நவாப்பின் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. முத்துவடுகநாதர் பான்ஜோர் என்ற ஆங்கில அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். வேலுநாச்சியாரின் மூத்த மகளான இளவரசி கௌரி நாச்சியாரும் கொல்லப்பட்டார். காளையார்கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டதை அடுத்து மருது சகோதரர்களின் பாதுகாப்போடு வேலு நாச்சியார் சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்று மேலூர் அடைந்தார்.
தப்பிச் செல்லும்போது வழியே உடையாள் எனும் பெண் வேலுநாச்சியாரை கண்டார். ஆங்கிலேயபடைகளில் ஒருவன் அப்பெண்ணிடம் வேலுநாச்சியார் குறித்து விசாரித்தான். உடையாளோ காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டாள். ஆங்கிலேயர்கள் அவளை அடித்து சித்ரவதை செய்த போதும் காட்டிக்கொடுக்க மறுத்ததால் கொல்லப்பட்டாள். உடையாளின் நினைவாக தன் பெண்களின் படைக்கு உடையாள் படை என பெயரிட்டு, “வெட்டுடையாள் காளி” என்ற கோவிலை நிறுவினார். இன்றும், உடையாள் அப்பகுதி மக்கள் மனதில் ஒரு நாட்டார் தெய்வமாகவே வழிபடப்படுகிறார்.
நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று வேலு நாச்சியார் தீர்மானித்தார். ஏனென்றால், ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் ஹைதர் அலி பழைய எதிரி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னவர்களை ஹைதர் அலி உள்ளே வரவழைத்தார். “வேலு நாச்சியார் வரவில்லையா?” என்று ஹைதர் அலி கேட்க தன் தலைப்பாகையை கழற்றினான் ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சரியம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் விளக்கிய பின்னர் ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.
வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப்படைகளைப் பெருக்கத் துவங்கினார்.
வேலுநாச்சியார் தப்பியதை அடுத்து ஆங்கிலேயர்கள் நவாப்பை எச்சரித்தார்கள். நவாப்பு தண்டோரா மூலமாக வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்க விலையை அறிவித்தார். ஆனால், மக்கள் வேலுநாச்சியார் தலைமையில் ஆங்கிலேயர்களையும் நவாப்புக்களையும் எதிர்த்து கிளர்ச்சி செய்ய அணி திரண்டனர்.
வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப்படையை அழிப்பது, நவாப்பை வீழ்த்துவது மற்றும் சிவகங்கை சீமையில் மீண்டும் தங்களது கொடியை பறக்கவிடுவது ஆகும். அதற்கான நாளும் வந்தது. 1780 ஐப்பசி மாதம் விருப்பாச்சியிலே கோபால் நாயக்கர் மருது சகோதரர்கள் குயிலி படையினர் மக்கள் யாவரும் திரண்டு நிற்க ஹைதர் அலி தன் மகன் திப்புசுல்தான் தலைமையில் நவீனரக ஆயுதப்படைகளுடன் (நூற்றுக்கணக்கான துப்பாக்கிப்படை 12 பீரங்கிப்படை) நவாப், ஆங்கிலேய படைகளை எதிர்த்து போர் செய்ய வேலு நாச்சியார் கிளம்பினார். முதலில் மதுரை கோட்டை அதனையடுத்து காளையார் கோயிலைக் கைப்பற்றினார்.
சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப்படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால் மட்டுமே சிவகங்கையை மீட்க முடியும். தனது படைகளை மூன்றாக பிரித்து வாள்படைக்கு பெரிய மருதையும், வளரிப்படைக்கு சின்ன மருதையும், உடையாள் பெண்கள் படைக்கு குயிலியையும் தளபதியாக நியமித்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.
சின்ன மருது தலைமையிலான வளரிப்படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்கு உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பார்க்காத ஆங்கிலேயப்படைகள் வெட்டுண்டு விழுந்தார்கள். தப்பி பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு மீண்டும் வேலு நாச்சியாரின் கொடி ஏற்றப்பட்டது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். இந்திய வரலாற்றிலேயே வெள்ளையர்களை திருப்பியடித்து விரட்டி தங்களது நாட்டை மீட்டெடுத்து மீண்டும் வெள்ளையர்களால் ஒருமுறைகூட கைப்பற்ற முடியாத ஒரு ஆட்சியை நடத்திய வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796ல் தனது 66வது வயதில் இதயநோய் ஏற்பட்டு காலமானார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக, சாதி மதம் கடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பின் சாட்சியாக என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
இவ்வளவு வீரம் செறிந்த போரை நடத்திய வீரர்களை இன்றைய பிற்போக்கு சாதி சங்கங்கள் தங்களது அரசியல் நலனுக்காக சாதியத் தலைவர்களாய் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இவர்கள் மட்டுமல்ல நாம் அறிந்திருக்கும் பெரும்பாலான தலைவர்கள் சாதியைக் கடந்து அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டுள்ளனர். வேலு நாச்சியாரோ, மருது சகோதரர்களோ, ஹைதர் அலியோ தங்கள் சமூக மக்களுக்காக மட்டுமே போரிடவில்லை. அவர்களுடன் களத்தில் நின்றவர்களும் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாக போராடினார்கள். ஆனால், இன்று இந்தத் தலைவர்களின் பெயர்களை, அவர்களின் வீர வரலாறைச் சொல்லி மக்களை திரட்டும் இந்துத்துவ சாதிச்சங்கங்கள் அவர்களை பிறசாதி மக்களுக்கு எதிராய் திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.
இத்தலைவர்களின் போராட்டங்கள் அனைத்தும் தம் மண்ணை, தம் மக்களை கைப்பற்ற வந்த அயலாருக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஆனால், இன்று இவர்களின் பெயரால் நடக்கும் அணிதிரட்டல் அயலாருக்கு ஆதரவாக (வடநாட்டு இந்துத்துவ சக்திகள்) நம் மக்களுக்கு எதிராக நம்மை நிறுத்துகிறது. வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி போன்ற போர் வீரர்களை சாதியை கடந்து தமிழர்களின் பொது தலைவர்களாய் அடையாளப்படுத்த வேண்டும். அதன்மூலமே சாதிய மோதல்களை உருவாக்கத்துடிக்கும் பிற்போக்கு சாதிச்சங்கங்களின் சூழ்ச்சியிலிருந்து, இந்துத்துவ சங்பரிவார் கூட்டத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து தமிழினத்தை பாதுகாத்திட முடியும். தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பண்பாட்டு சக்திகள் இதை முன்னெடுப்பதே இன்றைய அவசர தேவையாகும்!