ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

பூமியின் உயிர்மூச்சாக எப்படி காடுகள் இருக்கின்றனவோ, அதே போலத்தான் நிலப்பரப்பில் இருக்கும் அசுத்தங்களை தூய்மைப்படுத்துவதில் சதுப்புநிலங்கள் (Wetlands) பெரும்பங்கு வகிக்கின்றன. திரைப்படங்களில் வரும் எழில் கொஞ்சும் அழகை வெறும் இயற்கை காட்சிகளாக நாம் பார்க்காமல், இந்த சதுப்புநிலங்கள்‌ பல்லுயிர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட பாதுகாப்பை உறுதி செய்யும் விடயமாக பார்க்க வேண்டும். அதுவே, எதிர்காலத்தில் வரவிருக்கும் இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை நாம் எளிதில் கண்டுகொள்ள உதவும்.

சுருக்கமாக சொல்லப்போனால் சதுப்புநிலங்கள் என்பது நீர்ஆதாரம் நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட பருவத்திலோ நிலப்பரப்பில் சங்கமிக்கும் ஒரு பகுதி. தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எண்ணற்ற சதுப்புநிலங்களை நம்மால் காணமுடியும். இவ்வகை நிலங்களில் மிகவும் முக்கியமான ஒன்று சதுப்புநிலக் காடுகள். சதுப்புநிலங்கள் என்றாலே சென்னை மக்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது பள்ளிக்கரணை, எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகள் தான். இதில் பள்ளிகரணை மிகமுக்கிய சதுப்பு நிலக்காடு ஆகும்.

சென்னையின் உயர்நீதிமன்ற பரிந்துரையின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இன்றைய நிலவரம் குறித்து அறிய பி.எஸ்.ராமன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமித்தது. அந்த அறிக்கை மேற்கோள் காட்டும் விடயம் என்னவென்றால், 1965ம் ஆண்டு 5,500 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலமானது, 2013 கணக்கின்படி 600 ஹெக்டேர்களாக சுருங்கி போயுள்ளது. பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் பூங்காக்களின் பெருக்கமே இதன்‌ காரணங்களாக கூறப்படுகின்றன. அவர் இந்த அறிக்கையை, நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் உள்ளடக்கிய குழுவிற்கு சமர்ப்பித்துள்ளார். இந்த சதுப்பு நிலம் வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இயற்கையாகவே அளித்த சொத்தாகும். இதன் சுற்றுப்புற பகுதிகளாக வடக்கே வேளச்சேரியும், தெற்கே மேடவாக்கம் பகுதியும், மேற்கு பகுதியில் கோவிலம்பாக்கம், கிழக்கு பகுதியில் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.

ராமன் அறிக்கை குறிப்பிட்டது போல தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் ஒருபுறமிருக்க, சென்னை மாநகராட்சி மற்றும் ஆலந்தூர் முனிசிபல் கீழ் செயல்படும் குப்பை கிடங்குகள் அதன் திடக்கழிவுகளை கொட்டி 70 ஹெக்டேர் அளவு நிலத்தை கையகப்படுத்தியுள்ளது பொதுமக்களை மேலும் கவலைகொள்ள செய்துள்ளது. இது, அப்பகுதிகளில் மிகப்பெரும் சூழலியல் சீர்கேடுகளை விளைவிக்கிறது. மேலும் 250 ஏக்கர்கள் பரப்பளவில் பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மாநகராட்சி அமைத்துள்ளது. மாநில அரசுகளின் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது ஒன்றிய அரசிற்கு சொந்தமான பறக்கும் ரயில் (MRTS) நிறுவனமும் சுமார் 100 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளது. வேளச்சேரியிலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் நிறுவப்பட்ட “தேசிய காற்றுசக்தி நிறுவனம் (NIWE)” மற்றும் “தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப கழகம் (NIOT)” ஆகிய இரு ஒன்றிய அரசு நிறுவனங்களும் 20 ஏக்கர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

இந்த பள்ளிக்கரணை சதுப்புநிலமானது 65 வகை வெளிநாட்டு பறவைகள், 105 வகை உள்நாட்டு பறவைகள், 50 வகை மீன்கள், 15 வகை பாம்புகள்,10 வகை பல்லிகள், 34 வகை வண்ணத்துப்பூச்சிகள், 20 வகை தட்டான் பூச்சிகள், 8 வகை கரப்பான் பூச்சிகள், 78 வகை நுண்ணுயிரிகள் மற்றும் எண்ணற்ற உயிரினங்களுக்கு செழிப்பான வாழ்விடமாக திகழ்கிறது. இவ்வகையான காடுகளை அதன் இயற்கை சூழலில் இருந்தால் மட்டுமே, இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் உயிரோடு வாழ்ந்திட வழி இருக்கும். இதை தெளிவாக உணர்ந்து தமிழ்நாடு வனத்துறை ஆகஸ்டு 2020ல் இந்த செய்திக்குறிப்புகளை தனது வழிகாட்டி புத்தகத்தில் வெளியிட்டுள்ளது. இந்த காடுகளை சீரழிப்பதன் மூலம், இயற்கை சுழற்சி முற்றிலும் அழிந்துபோகும். “பிளமிங்கோ” போன்ற இடம்பெயர்வு பறவைகள் அனைத்தும் பள்ளிக்கரணை பகுதிக்கு வராமல் போகலாம். வெள்ளநீர் வடிகாலாகவும், மழை நீரை பஞ்சை போல உறிந்து நிதானமாக வெளியிடுவதால் நிலத்தடி நீர் அளவை மேம்படுத்த உதவுகிறது. இது போன்ற தனித்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புக்குள் புகுவதும், நிலத்தடி நன்நீர் மட்டம் குறைவதால் கடல் நீர் உள்வாங்கி நிலத்தடிநீர் உப்பாக்குவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நவம்பர் 30, 2020 தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை தூர்வாரப்போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, 2005ல் முதல்வர் ஜெயலலிதா பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததற்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 கீழ் வெறும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்காமல், ராம்சார் தளமாக அறிவித்து அதை பாதுகாக்க அரசுகள் முன்மொழிய வேண்டும். கோடியக்கரை தவிர, தமிழ்நாட்டிலுள்ள வேறெந்த சதுப்புநிலங்களும், இந்த “Ramsar Convention” கீழ் ஒன்றிய அரசுகள் சேர்க்கவில்லை என்பது கூடுதல் வேதனை!

அரசு என்ன செய்ய வேண்டும்?

முதலாவதாக, மாநில அரசு பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக சதுப்புநிலங்களுக்குள் செல்வதை தடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 5000 மெட்ரிக் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை சதுப்புநிலத்தில் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும், மாநில அரசு உடனே அப்புறப்படுத்த வேண்டும். வனத்துறை மூலம் காவலர்களை பணியமர்த்தி வேட்டையில் ஈடுபடும் செயல்களை தடுப்பது, தெருநாய்கள் அவ்வப்போது பறவைகள் பாம்புகள் கொள்வதையும் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக அரசு அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள், சூழலியல் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், பல்லுயிர் பெருக்கம் பற்றி தெளிவுள்ள நிபுணர்கள் இவர்களையெல்லாம் ஈடுபடுத்தி பராமரிப்பு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட “பள்ளிக்கரணையை பாதுகாப்போம்” (Save Pallikaranai) என்கிற விழிப்புணர்வு நிகழ்வு குறிப்பிடத்தகுந்த பலன்களை தந்துள்ளது. இந்த விதிமீறல்களை அரசுகள் தடுக்காத பட்சத்தில் பொதுமக்கள், சமூக இயக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புகள் ஒன்று திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இந்த சதுப்புநில கண்களுக்கு விடியல் பிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »