கொரோனா நோயாளிகள் உயிர்காத்த மருத்துவர்களை தாக்கும் இந்துத்துவ மோடி அரசு

கொரோனா நோயாளிகள் உயிர்காத்த மருத்துவர்களை தாக்கும் இந்துத்துவ மோடி அரசு

உயர்சாதி ஏழைகளின் நலனுக்காக பலியாகும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கல்வி.

மனித உரிமைகளுக்கு போராடும் போராளிகளுக்கு மட்டுமல்ல, தங்கள் உரிமைகளுக்கு போராடும் மருத்துவர்களுக்கும் அடக்குமுறை தான் பரிசு என ஒன்றிய அரசு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா கால நெருக்கடிகளில் மருத்துவர்களின் மீது மலர்கள் வீசிய இதே மோடி அரசு தான், இப்பொழுது தங்களுக்கான கோரிக்கைகள் பேசும் மருத்துவர்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துகிறது.

2021 ஆண்டின் மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கொரோனாத் தொற்றின் காரணமாக (NEET – PG) மிகவும் தாமதமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று அக்டோபர் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (BC, MBC) இடஒதுக்கீடும், EWS என்கிற பொருளாதார அடிப்படையிலான உயர்சாதி மாணவர்களின் இடஒதுக்கீடும் பின்பற்றப்படும் என்கிற அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடுகிறது. ஒன்றிய அரசு, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இதுவரை மருத்துவ இளங்கலை படிப்பிற்கும், மருத்துவ முதுகலை மேற்படிப்பிற்கும் இட ஒதுக்கீடு வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார அடிப்படையில் உயர்சாதி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு (EWS) கொடுக்கப்பட வேண்டும் என்கிற காரணத்தால், பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களின் இட ஒதுக்கீட்டிற்கும் அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டது. இந்த ஆணையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கினில் நடந்த விவாதத்தில், உயர் சாதி மாணவர்களுக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு, தொடரும் வழக்குகளால் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம், உயர்சாதி மாணவர்களுக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மூலம், எப்படியாவது அதிக மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் உள்நோக்கமே காரணமாக உள்ளது.

ஏற்கெனவே, மாநிலங்கள் தங்கள் வரிவருவாயில் கட்டமைத்த மருத்துவக் கல்லூரிகளிலிருந்து, அந்தந்த மாநில மாநில மாணவர்களுக்கு சேர வேண்டிய  50% மருத்துவ மேற்படிப்பு (PG)  இடங்களை ஒன்றியத் தொகுப்பிற்கு அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுத்தியுள்ளது. விரிவான மருத்துவக்கல்வி கட்டமைப்பை கொண்டுள்ள தமிழ்நாடு மட்டுமே ஒன்றிய அரசின் இந்த விதிமுறைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதை தமிழர்கள் நினைவில் கொள்ளுதல் அவசியம். மேலும், ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களின் மருத்துவ இடங்களை பொதுப்பிரிவுக்கு தாரை வார்த்துள்ள நயவஞ்சகத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.

“பயிற்சி மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரிகளின் முதுகெலும்பு. ஆனால், இந்த ஆண்டின் தாமதத்தினால் முதல் ஆண்டு முதுகலை மாணவர்கள் இன்னும் சேரவில்லை. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்த மாணவர்களில் மிகச் சிலரே உண்மையில் மூத்த பயிற்சி மருத்துவர்களாக மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள்.”  என்று அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தலைவர் ரோகன் கிருஷ்ணன் தெரிவிக்கிறார். இதனால், தற்போதுள்ள பயிற்சி மாணவர்கள் மீது இது அசாதாரண சுமைக்கு வழிவகுத்துள்ளது என்றும், குறைக்கப்பட்ட பணியாளர்களை ஈடு செய்ய கூடுதல் நேரங்களுடன்  இரட்டை பணிச்சுமைக்கு ஆளாவதாகவும் வருத்தத்துடன் கூறுகிறார்.

48 மணி நேரத்திற்கு பதில் 100 மணி நேரம் பணிச்சுமைக்கு ஆளாகிறார்கள். நவம்பர் மாதமே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும் அரசு அதற்குரிய பதிலை சொல்லாமல் காலம் தாழ்த்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜனவரி 6-ந் தேதி இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அரசு கூடிய விரைவில் கலந்தாய்வு நடத்தும் தேதியை வெளியிட வலியுறுத்துகின்றனர்.

இந்த தாமதத்தால் ஒரு ஆண்டு காலத்தை இழந்திருக்கிறோம் என்றும் இனியாவது விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் பயிற்சி மருத்துவர்கள்  போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக போராடி வரும் இவர்கள் டிசம்பர் 27,  திங்கட்கிழமை அன்று மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் இருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி நடத்தி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதில் பலர் காயம் அடைந்துள்ளனர். பெண் மருத்துவர்கள் மீது ஆண் காவலர்கள் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

கொரோனா எதிர்ப்பு வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய இதே மோடி அரசு தான், சட்டம் ஒழுங்கு மீறியவர்கள் என்று பழி சுமத்தி 12 பயிற்சி மருத்துவர்களைக் கைது செய்துள்ளது. டெல்லி காவல்துறையினரின் இந்த தாக்குதலைக் கண்டித்து  4000 மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அரசு துணை ராணுவப்படையை  வரவழைத்து உள்ளது.

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் டெல்லி  காவல்துறை அத்துமீறி பயிற்சி மருத்துவர்கள் மீது தடியடி நடத்தியதை அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மறுநாள், 28-12-2021 அன்று சுகாதார சேவை  மருத்துவர்களுடன்  பணி நிறுத்தம் செய்யப் போவதாகவும் கூறியது. மற்றைய மருத்துவ அமைப்புகளும் இதற்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த அத்துமீறலைக் கண்டித்து, அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மூடப்படும் என பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA – Federation Of Resident Doctors Association) அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பயிற்சி மருத்துவர்கள் செய்த பணி அளப்பரியது. முன்களப் பணியாளர்களாக நோயாளியுடனும், நோயுடனும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது போராடினார்கள். பெரும் அளவிலான உடல் சோர்வு, மனச்சோர்விற்கு ஆளானாலும் பணிச் சுமையிலிருந்து விடுபடாமல் முழுமையான அர்ப்பணிப்புடன் நோயை விரட்டும் பணியில்  செயல்பட்டனர். கொரோனாத் தாக்குதலால் இறந்த  நூற்றுக்கணக்கான மருத்துவர்களில் பயிற்சி மருத்துவர்களும் அதிகமாக அடங்குவர். ஆகையால், மோடி அவர்களை “போர் வீரர்கள்” என்றழைத்து மலர்களால் பூசிக்க சொன்னார். இன்று அவர்களைத் தான் காவல்துறையின் தடிகளுக்கு இலக்காக்கியிருக்கிறார்.

உலக சுகாதார அமைப்பும், இந்திய மருத்துவ அமைப்பும் எச்சரித்த பின்னும் தேர்தல், கும்பமேளா என மக்கள் கூடி கொரோனா நோய்த்தொற்று எளிதில் பரவும் சூழலை மோடி அரசு உருவாக்கியது. ஆனால், இறுதியில் மருத்துவர்களே நோய்த்தொற்றின் சுமையை சுமந்தனர்.

சமூகவலைத்தள மீம். முதல் அலை: சாமான்களை தட்டுங்கள்.
இரண்டாம் அலை: தீபம் ஏற்றுங்கள்.
மூன்றாம் அலைக்கு முன்: லத்தி மழை பெய்தது.

சுகாதாரப் பணியாளர்கள் முதல்  மருத்துவர்கள் வரை, புகழ்ச்சியின் உச்சம் வரை சென்று பாராட்டி, தமது நெருக்கடி காலங்களை சமன் செய்து கொள்ளும் உத்தி உடையவர் மோடி. அன்று பாராட்டு பெற்றவர்கள் இன்று தங்கள் உரிமைகளுக்காக போராடும் போது அடக்கு முறையை அவிழ்த்து விடுவதிலும் வல்லவர் அதே மோடி. பயிற்சி மருத்துவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையே இதற்கு சரியான உதாரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »