கோடியக்கரை கருப்பம்புலத்தில் நடந்த சாதிய வன்முறைகள் – கள ஆய்வு

நாகை மாவட்டம் கோடியக்கரை கருப்பம்புலத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு சாதி ரீதியான வன்கொடுமைகள் நிகழ்ந்தது குறித்து கேட்டறிந்து கள ஆய்வு மேற்கொண்டார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். மேலும் அதிகாரிகள் காவல்துறை மற்றும் கட்சிகள் போன்ற ஆதிக்க சக்திகளின் போக்குகள் குறித்தும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மே 17 இயக்கம் துணை நிற்கும் என்றும், தனது சமூக வலைதளத்தில் அக்டோபர் 08, 2025 அன்று பதிவு செய்தது.

‘…எங்களுடைய ஊரில் முடிவெட்டுவதில்லை. நாங்கள் வெளியூருக்கு சென்று முடிவெட்ட வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மண்டபம் தருவதில்லை, குடும்ப நிகழ்வை வெளியூரில் செய்ய வேண்டியுள்ளது. கோவிலுக்குள்ளாக ஒரு எல்லை கடந்து பிறரை போல அனுமதிக்கப்படுவதில்லை. முதல் மதிப்பெண் பெற்ற, எங்கள் மாணவர்களுக்கு பேனர் வைக்க இயலாது. இவற்றைவிட, இன்றும் கூட சிறுவர்கள் கூட 70 வயதுக்கு மேற்பட்டோரை பேர் சொல்லி கூப்பிடுவார்கள், மரியாதை குறைவாக பேசுவார்கள், நம்முடைய வகுப்பு நண்பனைக் கூட பெயர் சொல்லி நாங்கள் அழைத்தால் பிரச்சனை செய்துவிடுவார்கள்.. ஊரில் மூன்று டீக்கடைகள் இருக்கு, அனைத்திலும் இரண்டு குவளைகள் வைத்துள்ளார்கள். எங்களுக்கு வேறு குவளையில் தான் இன்றும் தருகிறார்கள். அவர்களிடத்தில் சென்றுதான் வேலை செய்யவேண்டியுள்ளது. சாதிய கொடுமையை எதிர்த்து போராடுவதால், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு எங்களை அவர்கள் அழைப்பதில்லை…’ இப்படியான சாதிய வன்கொடுமைகள் இன்றளவும் நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிராமமான கருப்பம்புலத்தில் நடந்துவருகிறது.

2023ம் ஆண்டு அரசு விழாவிற்கான ஓவியத்தை செய்துகொடுத்த இக்கிராமத்தின் இளைஞர் தமிழ் என்பவரை கல்வி அமைச்சர் பாராட்டி கெளரவித்துள்ளார். இந்த இளைஞரை வாழ்த்தி பட்டியல்சமூக மக்கள் ப்ளக்ஸ் பேனர் வைக்க முயன்றதையும் சாதியவாதிகள் தடுத்துள்ளனர். ஊரின் பெரும்பான்மைச் சமூகமான சோழிய வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களின் இந்த சாதி ஆணவப்போக்கையும் ஆதிக்கத்தையும் அம்மக்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மீன்பிடி தொழிலில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டுள்ளனர். பெருமளவில் பட்டியல் சமூக மக்களின் வேலை வாய்ப்பு இவர்களை சார்ந்து இருப்பதால், ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியுள்ளது.

இந்நிலையில் கடந்த விநாயகர் சதூர்த்தியன்று, கோவிலுக்கு சென்ற கந்தசாமி எனும் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட அரசின் உதவி வாகனத்தில் திமுக அரசின் ஸ்டிக்கர் எதேச்சயாக விழுந்திருந்த நிலையில், ‘…இந்த ஸ்டிக்கர் ஏன் இல்லை?’ என மிகமோசமாக சாதி வசவினை ஏவி தாக்கியுள்ளனர். இது ஒரு மாதம் முன்பாக நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு நியாயம் கேட்க சென்றவர்கள் மீதும் சாதியரீதியான எதிர்வினை செய்துள்ளார்கள். இதன் பின்னர், ஊருக்குள் 20-30 பேர் நுழைந்து வீடுகளை தாக்கியுள்ளனர். பொருட்களை உடைத்துள்ளனர். வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கபப்டவேண்டிய நிலையில் கடுமையாக மாற்றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டுள்ளார். வீட்டுப்பொருட்கள், கதவுகள், வாகனங்கள் ஆகியனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறை குறித்து உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு கேட்கப்பட்டு, வழக்கு பதிய கோரிக்கை வைக்கப்பட்டது. பட்டியலின மக்கள் மீதான சாதிய வன்கொடுமை நிகழ்த்திய, தாக்குதல் நடத்திய நபர்களான ஊர் தலைவராக (பிரசிடெண்ட்டாக) உள்ள லட்சுமணன், எஸ்.பி.மணியன், ஆகாஷ் உள்ளிட்ட நான்குபேர் மீதும், மற்றும் பலர் மீது வழக்கு பதியப்பட்டது. வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் ஆனபின்பும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. ஊரில் அவர்கள் இருப்பதையும் பொதுமக்கள் உறுதிசெய்தனர். நாகை மாவட்ட காவல்துறை இந்த குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம்கடத்தி வருகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்களான திமுக கட்சியின் ஊர்பிரமுகர் லட்சுமணன், சுப்ரமணியன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. இப்பிரச்சனை தீவிரமடைய ஆரம்பித்தவுடன் அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் சாதியாக ஓரணியில் திரண்ட ஆதிக்க சமூகம், இன்றளவும் அம்மக்கள் மீது தனது சுரண்டலை நிகழ்த்தி வருகிறது. இதில் பட்டியல் சமூகத்தவரை தாக்கிய மாரியப்பன் எனும் நபரின் பெயர் குற்றவாளி பட்டியலில் இணைக்கப்படவில்லை. இந்த நபரே முன்னின்று தாக்கியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வன்முறை நடந்து ஒருமாதம் கழித்தே மாவட்ட காவல்துறை விசாரணை அதிகாரி கிராமத்திற்கு வந்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பாதுகாப்பை அளித்ததாக தெரியவில்லை. திமுக அரசு சாதிய வன்முறை பாதிக்கப்பட்ட கிராமத்தவர்களுக்கான நீதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த தகவல்களை கடந்த 06-அக்டோபர்-2025ம் தேதி நேரில் கருப்பம்புலம் கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட தரப்பினரை 06-10-2025ம் தேதி நேரில் சந்தித்து மே17 இயக்கத் தோழர்களுடன் ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளோம். எமது கள ஆய்வில் அறிந்தவற்றை முதல்கட்ட தகவலாக பதிவு செய்கிறோம்.

இப்பிரச்சனை நடந்து ஒரு மாதத்திற்கு பின் கடந்த வார இறுதியில் ஆதிதிராவிடர் நல அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தியுள்ளனர். இக்குழுவின் அழுத்தத்தில் முதன்முறையாக பட்டியல்சமூக மக்களில் ஒருவருக்கு முகச்சவரம் செய்திருக்கின்றனர். அதிகாரிகள் சென்ற பின்னர் இந்நிலை தொடருமா எனத் தெரியாது. இப்பொழுதும் ரெட்டைக்குவளை நடைமுறையில் உள்ளது. கோவிலுக்குச் சென்று பார்த்த பொழுதும் அறிவிப்புகளை காணமுடிந்தது. பட்டியல்சமூகத்தினர் உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் சமயத்தில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை, நின்றுகொண்டுதான் பேசவேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர். கோவிலில் மரியாதை கொடுக்கும் நிகழ்வுக்கும் அனுமதியில்லை. ஆனாலும் கோவில் கொடை வசூல் செய்யப்படுகிறது.

இவ்வாறாக சாதிய வன்முறை, சமூக சுரண்டல் தொடர்ந்து நிகழ்த்தப்படும் சூழலில் இப்பகுதியில் இந்த ஆதிக்கத்திற்கு மூளையாக செயல்படும் நபர்களை திமுக தனது கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். மாரியப்பன் எனும் குற்றவாளி பெயர் முதல்தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமெனும் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் நாகை காவல்துறை நிராகரித்துவருவது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இம்மக்களுக்கு ’தாட்கோ’ கடன் வழங்க அனுமதி கொடுத்த போதிலும் கடன்கொடுக்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீனவர் தொழிலில் ஈடுபடும் இப்பகுதி பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தொடர் சாதிய வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

வன்கொடுமை வழக்கை சி.பி.எம் கட்சியின் தோழர்கள் மற்றும் நாகை மாவட்ட வழக்கறிஞர் தோழர் சுபாஷ் அவர்கள் முன்னின்று நடத்தி வருவதாக தெரிவித்தார்கள். சி.பி.எம் கட்சியின் மாநில தலைவர் தோழர் சண்முகம் அவர்களையும் சந்திக்க வைத்து விளக்கியுள்ளனர். நாகையில் கண்டன போராட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளதை கிராம மக்கள் தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களும் இதற்கான போராட்டத்தையும் முன்னெடுத்து கூர்மைப்படுத்தியுள்ளனர்.

மே17 இயக்கம் கோடியக்கரை கருப்பம்புலம் மக்களுக்கு துணையாக நிற்கும், போராட்டங்களை முன்னெடுக்கும்.

ஆதிக்க சமூகத்தை சார்ந்த குற்றவாளிகள் 20க்கும் மேற்பட்ட அனைவரும் கைது செய்து சிறையிலடைக்கவும், வழக்கினை விரைந்து நடத்தி தண்டனை பெற்றுத்தரவும், கருப்பம்புலத்தில் நடக்கும் சாதிய வன்முறைகளுக்கு முடிவு கட்டும்வரை மே17 இயக்கம் இதர சனநாயக, தோழமை கட்சி, இயக்கங்களோடு இணைந்து போராடும். சமூகநீதி பேசும் திமுக அரசு இதுபோன்ற சாதிய வன்முறைகளில் நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதும், தவிர்ப்பதும் தொடர்ந்து நிகழ்வது வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசின் இத்தகைய போக்கு சாதியவாதிகளுக்கு துணிச்சலை கொடுக்கிறது.

தொடர்ந்த கள ஆய்வில், இடைநிலை சாதியவாதிகளின் ஆதிக்கத்திற்குள்ளாக கட்சிகள் கட்டுப்படுத்தப்படும் போக்குகளை கண்டறிய இயலுகிறது. மேலும், இந்துத்துவ அமைப்புகள் சாதிய அமைப்புகளுக்குள்ளாக் ஊடுறுவி, சாதிய வன்மத்தை கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றன. சாதிய அமைப்புகளின் பிரமுகர்கள், திராவிட கட்சிகளுக்குள்ளாக பதவிகளை பெற்று, தமது சாதிய வன்மத்தையும், சுரண்டலையும் பாதுகாத்து வருகின்றனர். இதற்கேற்றார்போல, தமிழ்நாடு காவல்துறையில் சாதிய உணர்வுடன் செயல்படும் அதிகாரிகளின் ஆதரவும், நிர்வாக அதிகாரிகள் சாதியவாதிகளுக்கு ஆதரவளிப்பதுமான போக்குகள் மிகமோசமான வகையில் அதிகாரவர்க்கத்தில் ஊடுறுவி நிற்கிறது.

சாதிய அமைப்புகள், ஆளும்-எதிர் கட்சிக்குள்ளாக இயங்கும் சாதியவாதிகள், இந்துத்துவ அமைப்புகள், சாதியவாத அதிகாரிகள் என அனைவரும் ஓரணியில் திரண்டு அரசியல்சாசன உரிமைகளை காலில் மிதித்து நசுக்கி வருகிறார்கள். திமுக அரசு கோடியக்கரை-கருப்பம்புலத்தின் சாதியவாதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்போராட்டங்களை திமுக அரசு எதிர்கொள்ள வேண்டிவரும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் சாதிய-சனாதன கட்டமைப்புகளை எதிர்த்துப் போராட அனைவரும் அணியமாக வேண்டும், கருப்பம்புலம் மக்களின் மீது காலம்காலமாக தொடர்ந்து நிகழ்த்தப்படும் அவமானகரமான சாதிய வன்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர அனைவரின் ஆதரவையும் மே17 இயக்கம் கோருகிறது. இனிவரும் நாட்களில் இச்சிக்கலை நிரந்தர முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தொடர் போராட்டங்களை மே பதினேழு இயக்கம் அறிவிக்கும்.

சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் எனும் முழக்கத்தோடு பாதிக்கப்படும் மக்களுக்குத் துணையாக மே17 இயக்கம் சமரசமின்றி இயங்கும். சாதியை ‘குடி’ என்று பெருமைப்படுத்தும் போக்கினை தொடர்ந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம், சாதிகடந்து தமிழராய் இணைவதை தடுப்பதற்கே குடிபெருமை பயன்படும். ஏழை எளியோர் உரிமைக்காக தொடர்ந்து களத்தில் போராடுவதே ‘தமிழ்த்தேசியம்’. சாதியொழிப்பை நடைமுறைப்படுத்தாத அரசு சனாதனத்தை பாதுகாக்கவே பயன்படும்.

மே பதினேழு இயக்கம்.

08-10-2025

https://www.facebook.com/share/p/17LgL3YWKM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »