“காசநோய் – கொரோனா”, ஒரு உயிர்கொல்லி கலவை

“காசநோய் – கொரோனா”, ஒரு உயிர்கொல்லி கலவை.

பெருந்தொற்று சூழலில் காசநோயின் ஆபத்துகளை அறிந்திடுவோம்.


கோவிட்
நேரத்தில் சாதாரண மக்களே மூச்சு விட சிரமப்படும் போது காசநோயை உள்ளவர்களின் நிலைமை என்ன? எப்படி சமாளிக்கிறார்கள்?
உயிரை பறிக்கும் தொற்றுநோயாக அச்சுறுத்தி வரும் காசநோயை கோவிட் பெருந்தொற்று காலத்தில் கையாளுவது மேலும் கடினம். கொரோனா வைரஸ் பற்றி இன்று பேசாதவர்களே இருக்க முடியாது. 2020ல் தொடங்கிய இத்தொற்றினால் பல லட்சம் உயிர்கள் பலியானது. ஆனால், கோவிட்-19 வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உயிர்கொல்லி நோய் டி.பி எனப்படும் காசநோய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பத்தான் வேண்டும்.

காசநோய் ஒரு தொற்றுநோயா?
உலக சுகாதார கழகம் காசநோயின் தன்மையை பற்றி விளக்குகையில், பாக்டீரியாவால் (மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்) உருவாகும் காச நோயானது வழக்கமாக நுரையீரலை பாதிக்கும். இந்நோய் நோயாளியிடம் இருந்து மற்றவருக்கு காற்றில் பரவக்கூடும். காசநோயால் பாதிக்கபட்டவர்கள் தும்மினாலோ இருமினாலோ, உமிழ்நீரை துப்பினாலோ காசநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது. ஒரு நோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 வரை இந்த நோயைப் பரப்ப வாயபுள்ளது. இக்கிருமிகளை சிறியளவு சுவாசித்தாலே போதும் இந்நோய் தொற்று ஏற்படும். ஆகவே, காசநோய் ஒரு தொற்றுநோய் ஆகும்.

காசநோய் உடலில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
காசநோய் கிருமி நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத் தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக்குழல், கருப்பை இணைப்புக் குழல், நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன. இது முடி, பல் மற்றும் நகம் போன்றவற்றை மட்டுமே பாதிக்காது.

இந்நோயின் அறிகுறிகள் என்ன?
காசநோயால் பாதிக்கபட்ட ஒருவருக்கு  இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக்காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல், ரத்தம் கலந்த சளி, மார்புவலி இருப்பது காசநோயின் அறிகுறிகளாகும். குழந்தைகளைப் பொறுத்தவரை 5 சதவிகிதம் பேர் காசநோயால் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடர் இருமல், காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் மற்றும் எடை அதிகரிக்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்படும்.

காசநோய் யாரை எளிதில் தாக்கும் என்று தெரியுமா?
புகை பிடிப்பவர்கள், ஊட்டசத்துக் குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையின் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ள ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை அதிகமாகப் பாதிக்கின்றது. இந்நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

விலங்குகளிடம் இருந்து காசநோய் பரவுமா?
விலங்குகளின் இறைச்சி வழியாக காசநோய் பரவாது. பால் மூலம் பரவலாம். பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் போன்றவற்றின் மூலம் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நோயை அறிந்திடும் மருத்துவ பரிசோதனைகள் யாவை?
காசநோய் பாதிக்கபட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள இரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை (Mantoux test), சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சி.டி ஸ்கேன் போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. சளியில் காசநோய் கிருமி இருப்பது  காசநோயை 100 சதவீதம் உறுதி செய்திடும்.

 காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மிக முக்கியம். அப்படிக் கண்டுபிடித்துவிட்டால் ஆறு மாதங்களில் மருந்து, மாத்திரைகள் கொண்டு நோயை குணப்படுத்திவிடலாம். காசநோயால் ஏற்படும் மரணங்கள் காசநோயானது “மல்டி டிரக் ரெசிஸ்டன்ஸ்” (Multi-Drug Resistant Tuberculosis, MDR-TB) எனப்படும் “பல மருந்து எதிர்ப்பு” நிலையை அடைவதால் நிகழ்கிறது.

அதென்ன மல்டி-டிரக் ரெசிஸ்டன்ஸ் (எம்.டி.ஆர் – டி.பி)?
எம்.டி.ஆர் (MDR-TB, Multi-Drug Resistant Tuberculosis) காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு INH மற்றும் Rifampicin போன்ற மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோல, இதர காசநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு நோய் கட்டுப்படவோ, கட்டுப்படாமல் போகவோ வாய்ப்புள்ளது.

இன்று, இரண்டு நவீன முறைகள் மூலம் எம்.டி.ஆர் காசநோயை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

  1. CBNAAT என்ற முறையில் 2 மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம்.
  2. L.P.A என்ற முறையில் 2 முதல் 3 நாட்களில் கண்டுபிடித்துவிடலாம்.

எம்.டி.ஆர் காசநோய்க்கான சிகிச்சை காலம் இரண்டு ஆண்டுகள். தீவிர சிகிச்சை காலம் ஆறு முதல் ஒன்பது மாதங்களும், தொடர் சிகிச்சை காலம் 18 மாதங்களும் ஆகும். எனவே நோயை முற்றவிடாமல் முன்பே அறிந்து சிகிச்சை பெறுவது பாதுகாப்பானதாகும்.

காசநோயின் வரலாறு தெரியுமா?
கி.மு. 3000 காலகட்டத்தில் பண்டைய எகிப்தில் இறந்தவர்களின் உடல்களை மூலிகைகளை

காசநோயின் அறிகுறிகள் தென்பட்ட எகிப்திய மம்மி.

கொண்டு பதபடுத்தி பிரமிடுகளில் வைத்து பாதுகாத்து வந்தனர். இந்த உடல்களை “மம்மி” என்று அழைத்தனர். இந்த  எகிப்து “மம்மி”களை ஆராய்ந்த போது அதில் காசநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உலகம் முழுவதும் பல்லாயிரம் ஆண்டுகளாக காசநோய் மனிதகுலத்தை பாதித்து வருகிறது. முறையான மருந்துகள் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். தெய்வ குற்றம், முனிவர்கள்  சாபம் போன்றவை இனநோய்க்கான காரணங்களாக கூறப்பட்டு வந்தன.

 

மைக்கோபக்டீரியம் டியூபர்குலோசிசு பாக்டீரியா.

இந்த கருத்துகளை உடைத்தெரியும் விதமாக ஜெர்மனிய மருத்துவர் ராபர்ட் காக் 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி காசநோயை “மைக்கோபக்டீரியம் டியூபர்குலோசிசு” (Mycobacterium tuberculosis) என்கிற பாக்டீரியா நுண் கிருமி உருவாக்குகிறது என்று பெர்லின் நகரில் இருந்து உலகிற்கு அறிவித்தார். எனவே தான் மார்ச் 24-ந்தேதியை உலக காசநோய் தினமாக அனுசரித்து வருகிறோம்.

  • 1859-ல் ஜெர்மானியில் முதல் காசநோயாளிகளின் சானிடோரியம் திறக்கப்பட்டது. நல்ல காற்று, சூரிய ஒளி, சத்துள்ள உணவு போன்றவை காசநோய் குணமடைய உதவும் என்று நம்பப்பட்டது.
  • 1920ல் பி.சி.ஜி (BCG) எனும் தடுப்பூசி ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது. இது 1953 முதல் பயன்பாட்டிற்கு வந்து காசநோய் பரவல் குறைக்கபட்டது.
  • 1943ல் முதன்முதலாக காசநோய்க்கான மருந்து “ஸ்டெப்டோமைசின்” உருவாக்கபட்டது. இந்த மருந்து கண்டுபிடிபிற்காக வாக்ஸ்மேன் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 1952ல் ஐசோநியசிட் (Isoniazid) எனும் மருந்து உருவாக்கப்பட்டது.
  • 1960ல் பிஏஎஸ் (PAS) எனும் மருந்து உருவாக்கப்பட்டது. இந்த மூன்று மருந்துகளையும் கூட்டாக ஒரு நோயாளிக்கு வழங்கினால் நோய் விரைவில் குணமடைவது கண்டறியப்பட்டது. அது முதல் நோய் சிகிச்சை முறையில் கூட்டு மருந்து பயன்பாடு பிரபலமானது.
  • 1970ல் ரிஃபாம்பிசின் (Rifampicin) மருந்து உருவானது. இன்றுவரை, காசநோய்க்கு இதுதான் முதல்நிலை மருந்தாக திகழ்கிறது.

கொரோனா கோவிட்-19 வைரஸ் நுரையீரலை குறிவைத்து தாக்குகிறது. காசநோய் பாக்டீரியா எவ்வாறு தாக்குகிறது?
எய்ட்ஸ், மலேரியாவைவிட காசநோய் மிகவும் கடினமானது. இந்நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தொற்றுநோய்களிலேயே காசநோய் தான் அதிகளவு மரணங்களை ஏற்படுத்துகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் காசநோயாளிகளுக்கு முறையான வழிகாட்டல்கள், விழிப்புணர்வு, மருத்துவ உதவிகள் குறித்து செய்திகள் வெளியாகவில்லை. ஆனால், உலக சுகாதார கழகம் தொடர் எச்சரிக்கைகள் வழங்கியது.

உலக சுகாதார கழக அறிக்கை என்ன‌ சொல்கிறது?
கோவிட்-19 தொற்றுநோய் மிக அதிக ஆபத்துகளை கொண்டு வந்துள்ளது.

காசநோய் உள்ளவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டால் மரண விகிதம் அதிகரிக்கும். 2019ல் உலகம் முழுக்க காணப்பட்ட ஒரு கோடி காசநோய் பாதிப்புகளில் கால்பங்கு இந்தியாவில் உள்ளதாக தெரிவித்தது.  உலக அளவில் நிகழும் 14 லட்சம் காசநோய் மரணங்களில் 25% இந்தியாவில் நேர்கிறது. இது, கொரோனா தொற்றின் இறப்பு விகிதத்தை விட மிக அதிகம்.

கொரானா தொற்று வேகமாக பரவுகிறது, காசநோய் மெதுவாக பரவுகிறது அவ்வளவு தான் வேறுபாடு. காசநோய் ஏழ்மையானவர்களை அதிகமாக தாக்குவதால் தான் என்னவோ சமூக விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

இந்நோயால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் எம்மாதிரியானவை ?
கொரொனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இணையாக காசநோயும் குடும்பங்களில் குழந்தைகள் வரை கடுமையாக பாதிக்கின்றது. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவரின் குடும்பங்கள் சமூக புறக்கணிப்பை சந்திக்கின்றனர். இதில் ஆண்களைவிட பெண்களே அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றனர். பெண் நோயாளிகளை அவர்கள் குடும்பதினரே புறக்கணிக்கும் அவலத்தை காண்கிறோம். பெண் நோய்வாய்பட்டால் அவள் குழந்தைகள் எதிர்காலம் பாதிப்படைகிறது.

கயநோய், இளைப்புநோய், சயரோகம், எலும்புருக்கி நோய், உருக்குலைக்கும் நோய், சரயோகம் என்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வெறு பெயர்களில் அழைக்கப்படும் காசநோய் ஒரு காலத்தில் காத்து கருப்பால் பரவும் நோய் என்றும், ஆவியால் பரவும் நோய் என்றும் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

இன்றைய தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் இந்த மூட நம்பிக்கைகளை அகற்றி குணமான நோயாளிகள் சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள் என்பதைத்தான் கீழ்கண்ட உதாரணம் நமக்கு கூறுகிறது.

காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நோயில் இருந்து எப்படி மீண்டார்கள்? அவர்களின் அடுத்தக்கட்ட பணிகள் யாவை?

  1. ஜனனி, வயது 27. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகும் இவர் தனது நான்கு மாத ஆண் குழந்தை மற்றும் கணவருடன் விழுப்புரம் மாவட்டதில் வசித்து வந்தார். 2020 மே மாதம் இவருக்கு காசநோய் உறுதியானதும் இவர் கிராமத்தில் புறக்கணிப்பிற்கு ஆளாக்கபட்டார். குடும்பத்தினரும் இவரை புறக்கணித்திடவே இவர் தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தொடர்ந்து, முறையான சிகிச்சை பெற்றுக்கொண்டதால் 2020 திசம்பரில் முழுவதும் குணமானார். தற்போது, காசநோய் ஒழிப்பிற்காக REACH என்கிற தன்னார்வ நிறுவனத்துடன் செயல்படுகிறார்.தனது கிராமத்தை சுற்றி உள்ள மக்களை சந்தித்து காசநோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோய் கண்டறியும் வழிமுறைகளையும் பயிற்றுவிக்கிறார். நோயுற்றவர்களை தொடர்ந்து கண்காணித்து நோய் குணமாக்கிட பாடுபடுகிறார். இவரை இப்பகுதி மக்கள் “காசநோய் போராளி” என்றே அழைக்கின்றனர்.
  1. பி.தேவி வயது 36. தென்காசியை சேர்ந்த இவருக்கு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே காசநோய் பாதித்தது. பள்ளி பருவத்தில் மிக கடினமான சூழலில் பல போராட்டங்களை கடந்து 12ம் வகுப்பு படித்து முடித்தார். அவர் பெற்றோர் வறுமையில் இருந்தாலும் உறவினர்கள் உதவியுடன் சிகிச்சையை தொடர்ந்து பெற்றுக்கொண்டார்.ஜனனி போலவே இவரும் காசநோய் பற்றிய விழிபுணர்வுகளை உருவாக்கி வருகிறார். தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி பொது மருத்துவமனையில் தேவி தற்போது 42 காச நோயாளிகளை கவனித்துக் கொள்கிறார். மனநல ஆலோசனை வழங்கி நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஒருவருக்கு காசநோய் தொற்று ஏற்பட்டால் அவரின் குடும்பத்தையும் பரிசோதித்து நோய் தடுப்புமுறைகளையும் கொரொனா காலத்தில் அவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.
  1. பூங்கொடி வயது 30. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் முறையான காசநோய் சிகிச்சையை தொடராததால் மூன்று முறை தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். தனது செவிலியர் இளங்கலை படிப்பின்போது பாதிப்பு ஏற்பட்டது படிப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. 2011 -13 வரை மூன்று குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. 2018ல் மீண்டும் காசநோய் தொற்று உருவானதும் கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்டார். தனது பெற்றோரின் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறார்.

தற்போது, காசநோய் விழிப்புணர்வு பணி செய்யும் பூங்குடி “இந்த வேலை எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது,” என்கிறார். அவர் காசநோய் எதிர்ப்பு பிரசாரத் தலைவராக இருக்கிறார். காசநோயால் பாதிக்கபட்ட 2500 நோயாளிகளுக்கு நோயை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கி வருகிறார். அவர் கண்காணித்து வந்த 80 நோயாளிகளில் 20 பேர் குணமடைந்துள்ளனர். “காசநோய் பெண் தலைவர்” என்ற பெயர் தமக்கு “நிம்மதியையும் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெருமையும் கொடுக்கிறது” என்று பூங்கொடி தெரிவிக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது என்ன?
காசநோயால் பாதிக்கபட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் புறக்கணிப்புகளும் மிக அதிகம். அதிலும், குறிப்பாக பெண் நோயாளிகள் மிக அதிக இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. குடும்பத்தினரே ஒதுக்கி வைப்பது ஒருபுறமிருக்க, அவர்கள் இறந்துபோனால் குழந்தைகள் அரவணைப்பு கிடைக்காமல் சமுதாயத்தை எதிர்மறையாக காண்கின்றனர். இதனால், அவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடுகிறது. பெரும்பான்மையாக, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் முழுவதும் வறுமையில் தள்ளப்பட்டு வாட நேரிடுகிறது.

ஆக, காசநோயை ஒரு சமூக பிரச்சினையாக அணுக வேண்டும். கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு முறைகளை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். காசநோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற்றிட வேண்டும்.  குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசியை அவசியம் செலுத்திட வேண்டும். பொது இடங்களில் சரியான சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடித்திட வேண்டும்.

மக்கள் அனைவரும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் தான் காசநோயாலிருந்து விடுபட்டு மற்றவர்களுக்கு பரவாமல் தடுத்திட முடியும். அரசு நிர்வாகம், மருத்துவத்துறை, பொது சுகாதாரம், மக்கள் விழிப்புணர்வு என ஐந்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் காசநோயை முற்றிலும் ஒழித்திட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »