அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்

சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள், மாநில கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் மற்றும் இந்திய தேசிய பனியா முதலாளிகள் நலனுக்கும் கட்சிகளுக்கான ஊடகங்கள் இடையிலான ஊடக சூழல், சிவில் சமூக செயல்பாட்டாளர்களை ஊடக விவாதத்திலிருந்து அப்புறப்படுத்திய இந்த ஊடகங்கள், இந்துத்துவ தேசியவாதம் கையிலெடுக்கும் தவெக-வின் அரசியல் மயப்படுத்தப்படாத கதாநாயக பிம்ப கட்டமைப்பு, சமஸ் ஊடக நேர்மையற்ற தன்மை, திராவிட கொள்கையை மழுங்கடித்து இந்தியப் பார்ப்பனிய தேசியத்திற்குள் உபதேசியமாக மாற்றும் மருதையன், திமுக ஐடி விங் போன்றவைகளுக்குள் அடங்கியிருக்கும்ஆழ்ந்த அரசியலைப் பற்றி தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் அக்டோபர் 18, 2025 அன்று முகநூலில் பதிவு செய்தது.

சமஸ், மருதையன், திமுக, தவெக என நடக்கும் ஊடக அறம், ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம் அரசியல்-சமூக செயல்பாட்டினருக்கு பயன்படுமா? திமுகவின் ஆதரவாளரான மருதைய்யன் ‘Political Pimp’ என்று விளிக்கிறார். இதை மருதைய்யன் சொல்ல இயலுமா எனும் கேள்வி எழுந்தாலும், இந்த ‘சொல்லாடல்’ குறித்து இறுதியாக பார்க்கலாம். (சொ-கால்டு) சுதந்திர இந்தியாவில், சுதந்திரமான ஊடகம் இருந்ததில்லை. அப்படியாக சுதந்திரமாக இயங்கிய சில ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் மையநீரோட்ட கருத்துருவாக்கத்திற்கான செய்திகளை (நேரேட்டிவ்) வெளியிட அனுமதிக்கப்பட்டதில்லை.

2014 மோடி வருகைக்குப் பின் இந்தியாவின் ஊடக அறம் பெரும்பாலான ஊடகங்களில் பல்லிளித்தது. இந்தியாவின் ஊடகங்களை சொந்தமாக நடத்தியவர்கள் பணக்கார்கள் அல்லது கட்சிக்கார்கள். இந்தியாவின் சூழலுக்கு பொருந்தும் படி சொல்லவேண்டுமெனில் உயர்சாதிக்கார்களே ஊடகத்தை நடத்தினார்கள். பணக்கார பனியா மார்வாடிகள் நலனுக்காக, பார்ப்பனர்களின் அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஊடகங்கள் சேவை செய்தன. ஒருசில ஊடகங்களே தனித்துவமாக மக்கள் சார்ந்து இயங்கின. இவை முற்போக்கு கட்சிகள் அல்லது இயக்கம் சார்ந்து இயங்கியவை. இந்த பத்திரிக்கைகளை முதன்மையான ஊடகங்களாக இந்தியா அங்கீகரித்ததில்லை என்பது கவனத்திற்குரியது. இந்த ஊடகங்களில் பெரும்பாலானாவை மோடியின் வருகைக்கு பின்னர் முழுநேர இந்துத்துவ தேசியவாத அரசியலை கையில் எடுத்துக் கொண்டன. அதுவரை இலைமறை காயாக செயல்பட்ட பலர், முழுநேர இந்துத்துவவாதி அல்லது சங்கியாக அடையாளம் அடைவதில் கூச்சப்படவில்லை. இந்த கட்டமைப்பின் கீழாக மாநில மொழி சார்ந்த ஊடகங்களும் கொண்டுவர வைக்கப்பட்டன. விதிவிலக்காக தமிழ்நாடு, கேரளா, வங்கம் போன்றவை மாநில நலன் சார்ந்தே இயங்கும் நிலைப்பாட்டை எடுத்தன. மாநில நலன் எனும் வகையில் இந்த ஊடகங்கள் மாநில முதலாளிகளின் நலனை முன்னிலைப்படுத்தின. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில் மார்வாடிகளுக்கான பாஜக நலனா அல்லது மாநில முதலாளிகளுக்கான மாநில கட்சிகளா எனும்வகையில் இவை தம்மை அணி சேர்த்துக்கொண்டன.

ஒருபுறம், மாநில முதலாளிகளின் நலனை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளுக்கான ஊடகங்களாகவும், மறுபுறம், இந்தியதேசிய பனியா முதலாளிகள் மற்றும் மாநில முதலாளிகளுக்கான கட்சிகள் ஆகியவற்றிற்கு சரிவிகிதமான முன்னிலைப்படுத்தும் யுக்தியை கொண்டவையாகவும் மாறின. அதாவது திமுக/அதிமுக/பாஜக சார்ந்து மட்டும் இயங்குவது அல்லது பாஜக-திமுக ஆகியவற்றிற்கு சரிசமமான செய்தி கவரேஜ் நேரத்தை ஒதுக்குவது என 2021க்கு பின்னர் ஊடக சூழல் (போலரைஸ் ஆனது) உருவானது. இதை மே17 இயக்கம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. தமிழ்நாட்டில் உருவான புதிய செய்தி ஊடகங்கள் 2018 வரையில் பாஜக-வலதுசாரி நபர்களுக்கு ஒதுக்கிய டெலிகாஸ்டிங் நேரம் பின்வரும் நாட்களில் அதிகரிக்கப்பட்டது. பாஜகவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து அதிக பங்கேற்பாளர்கள், அதிக நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். பாஜக சார்ந்த செய்திகள் 2021க்கு பின்னர் அதிகம் முன்னிலை பெற்றது. அண்ணாமலை ”ஊடகத்தினரை கைக்குள் கொண்டுவருவோம்” என பேசியது தான், பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் அவர் பேசிய கன்னிப்பேச்சு. அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் இதற்கு எதிரான சமூக செயல்பாட்டாளர்கள் என 2019வரை செயல்பட்ட ஊடகம், பின்னரான காலத்தில் பாஜக-திமுக எனும் அணிகளை தவிர்த்து பிற சிவில்-செயல்பாட்டினரை அனுமதிக்க மறுத்தது. இந்நிலை இன்றுவரை தொடர்கிறது. இந்த அடிப்படையில் பெரும்பாலான யூட்யூபர்களும் இரு அணிகளாக பிரிந்தனர். இரு அணிகளுக்கு அப்பாற்பட்ட யூட்யூபர்கள் இரு அணிகளாலும் குறிவைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தமிழக ஊடக கட்டமைப்பும் கட்சிகளின் நலன் சார்ந்து மட்டுமே இயங்கும் நிலைப்பாட்டை எடுத்துவிட்டன எனலாம்.

இந்த கட்சிசார்பு ஊடக செயல்பாட்டிற்கு தடையாக இருக்கும் சிவில் சமூக செயல்பாட்டாளர்களை செய்திகளிலிருந்தும், விவாதங்களிலிருந்தும் நீக்கம் செய்யும் பணியை 2019ல் ஆரம்பித்து 2021ம் ஆண்டில் முடித்துவிட்டார்கள். இன்றைய நிலையில் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஊடக வெளியில் கிடையாது. மனித உரிமை, சூழலியல், சாதி எதிர்ப்பு, மொழியுணர்வு, பண்பாட்டு ஆய்வு, ஈழ ஆதரவு, மீனவர்-விவசாய-பழங்குடிகள், கல்வி, சுகாதாரம் என பல துறை செயற்பாட்டாளர்களை ஊடகங்களில் கடந்த 4 ஆண்டுகளாக உங்களால் காண இயலாது. இவர்களை முற்றிலுமாக துடைத்து எறிந்தவர்கள் பாஜக-திமுக என இரு அணியினருமே ஆகும்.

தமிழ்நாட்டில் முற்போக்கு (அ) லிபரல் கருத்துகளால் அரசியல்மயப்படுத்தப்பட்ட திமுக கூட்டணி வாக்களர்கள், வலதுசாரி சாதி-மத அரசியல் அல்லது திமுக எதிர்ப்பு அரசியல் கொண்ட அதிமுக வாக்காளர்கள் என இரு பெரும் அணிகளாக கட்டமைக்கப்படுகிறது. இந்த இரு அணிகளுக்குள் தற்போது தவெக நுழைய முயல்கிறது. இதில் முற்போக்கு அல்லது லிபரல் அரசியல் அணியாகவும் அதேநேரத்தில் திமுக கூட்டணிக்கு எதிர் அணியாகவும் உருவாக விரும்பிய விஜய், தனது தொண்டர்களை அரசியல்வயப்படாத வாக்காளர்களாக வைத்துக்கொள்ள விரும்புகிறார். இந்த போக்கு அவரது கட்சி-தொண்டர்களை-வாக்காளர்களை வலதுசாரி அரசியல் திசையில் நகர்த்தி அவர்களுக்கு இரையாவதை தவிர்க்க இயலாது போகும் என்பதையே மே17 இயக்கம் சொல்லி வருகிறது. திராவிடம்-தமிழ்த்தேசியம் என விஜய் பேசி வந்தாலும், இந்த கருத்தாக்கங்கள் குறித்து இதுவரை அவர் விளக்கியோ, புரியும்படியாகவோ தம் கட்சியினருக்கு பயிற்சியளித்ததில்லை. விஜய்யின் ‘சினிமா-ஹீரோ’ பிம்பத்தை ‘அரசியல்-ஹீரோ’ எனும் பிம்பமாக கட்டவேண்டிய தேவை இந்துத்துவ தேசியவாதிகளுக்குண்டு. இந்த பிம்பம் தனக்கும் தேவைப்படுவதாக விஜய் அணுகிய காரணத்தினாலேயே, மிகமோசமான சூழலையும், மரணத்தையும் கரூரில் உருவாக்கினார். இதை கள ஆய்வு செய்து முதன்முதலில் அம்பலப்படுத்தியது மே17 இயக்கம் மற்றும் கூட்டமைப்பு இயக்கங்களான தமிழர் ஆட்சிகழகம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, வி.த.புலிகள் உள்ளிட்ட தமிழ்தேசிய-பெரியாரிய அமைப்புகள்.

விடலைத்தனமான இளைஞர்களை, கொச்சையான அரசியல் புரிதலுக்குள் உள்வாங்கி, வாக்குவங்கிகளாக மாற்றிக்கொள்ளுதலே பாஜகவின் நீண்டகால செயல்யுக்தியாக இருந்திருக்கிறது. இதை விஜய் வழியாக சாத்தியப்படுத்திவிட முடியுமென பாஜக காத்திருக்கிறது. விஜய்யின் பின்னால் திரளும் இளைஞர்களை அமைப்பாக்காமல் உதிரிகளாக, ரசிகர்களாக வைத்திருப்பது பாஜகவின் தேவை.

‘ராமன்’ எனும் ஹீரோயிசம் எடுபடவில்லையெனில் ‘விஜய்’ எனும் பிம்பத்தை பயன்படுத்திக்கொள்ளுதல் பாஜகவிற்கு எளிது. இந்த அரசியலை விஜய்க்கு எடுத்துச் சொல்பவர்கள் இருக்கிறார்களா என தெரியாது, ஆனால் இந்த யுக்தி அவருக்கு வசதியானதாக இருப்பதாகவே அவர் எண்ணி நடைமுறைபடுத்துகிறார். இந்த வகையில் ஊடகத்தில் அவர் கட்சிக்கான இடமும் முண்டியடித்துக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால் ஊடகத்தில் தவெகவிற்காக இடத்தை பாஜக-வலதுசாரி ஊடகவியலாளர்கள் உருவாக்கிக்கொடுக்கிறார்கள். இந்த வலையில் மிகப்பெரிய வலையை சமஸ் மூலமாக புதியதலைமுறை விரித்தது. ஏனெனில் இந்த ஊடகத்தின் முதலாளி வலதுசார்பு கொண்டவர், பாஜகவிற்கு நெருக்கமான கூட்டணியில் இருப்பவர். அந்த வகையில் விஜய் குறித்த சிக்கலை அணுகுவது என்பது ஊடக நிறுவனமா, அல்லது சமஸ் எனும் தனிநபரா என்பதே.

இன்றைய நிலையில் தமிழக ஊடக் சூழல் என்பது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை போன்றது. நீங்கள் பாஜக, திமுக, அதிமுக, நாதக, தவெக ஆதரவாளராக அல்லது கட்சிக்காரராக இருந்தால் மட்டுமே ஊடகங்களில் அனுமதிக்கப்படுவீர்கள். ’பத்திரிக்கையாளர்கள்’ என அழைக்கப்படுவர் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப ஆதரவை மாற்றி-மாற்றி நடுநிலையாளராக நடித்துக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்படும். முழுநேரமும் இந்த நபர்களை மட்டுமே சுற்றி தமிழக ஊடகம் இயங்குகிறது. ‘மக்கள் அரசியல்’ சார்ந்த பார்வையை தமிழக மக்களுக்குக் கொண்டு செல்லக்கூடாதென்பதில் அனைவரும் கவனமாக உள்ளனர். இந்நிலையில் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், உரிமை மீறல்கள், கோரிக்கைகள், போராட்டங்கள் ஆகியன செய்தியாவதில்லை. ஆகவே அவர்கள் வெகுமக்களிடம் எதிர்கொள்ளும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், ‘…அதிமுக காலத்தில் போராடிய நீங்கள், தற்போது அமைதியாக இருப்ப்பது ஏன்?’.. இந்த கேள்வியை எதிர்கொள்ளாத சிவில் செயல்பாட்டாளர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். இந்த கேள்வியை கேட்கச்சொல்லி பரப்புவதும் இதே கட்சிகளின் ஐ.டி கும்பல் தான். இந்த பின்னனியில் சமஸ், மருதையன் போன்றோரின் அறச்சீற்றத்தை ‘பிக்பாஸ்’ அரங்கில் நடக்கும் சண்டைகளோடு தான் ஒப்பிட இயலுகிறது.

கரூரில் மக்கள் இறந்துகொண்டிருக்கும் செய்தி வந்துகொண்டிருந்த சமயத்தில், புதியதலைமுறை செய்தியை தேடிய போது, விஜய்யை கதாநாயகன் ரேஞ்சில் செய்தி போட்டுக்கொண்டிருந்ததற்கு நடுவே அவ்வப்போது இறப்பு எண்ணிக்கையை கிரிக்கெட் ஸ்கோர் போல போட்டுக்கொண்டிருந்ததை கண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. இதை அச்சமயத்திலேயே (சம்பவ நேரத்தில்)கண்டித்து நான் பதிவு செய்தது இன்றும் முகநூல் டைம்லைனில் இருக்கிறது.

சமஸின் அரசியலோடு மே17 இயக்கத்திற்கான முரண்பாடு 2016 காலத்திலேயே ஏற்பட்டது. காவிரி போராட்டமும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலும் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ‘காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேச தகுதி இருக்கிறதா’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தார். அச்சமயத்தில் சமஸை கண்டித்து மே17 இயக்கம் பதிவு செய்தது. உடனே அவர் அதை எடுத்துக்கொண்டு மற்றவர்களின் ஆதரவை தேடினார். சில திராவிட சிந்தனையாளர்கள், (இண்டல்க்சுவல்ஸ்) சமஸுக்கு ஆதரவாக பதிவும் செய்தார்கள். எங்களின் ஈழநிலைப்பாட்டின் மீது எரிச்சல் கொண்டவர்கள் என்பது அவர்களின் கூடுதலான தகுதி. திமுகவை தமது ஆபத்பாந்தவனாக பார்த்த திராவிட சிந்தனையாளர்களுக்கேற்ப சமஸிடமிருந்து கட்டுரைகள், பதிவுகள் வரும். திமுகவிற்கு பங்கம் வராதவகையில் அவர் தினமலரோடு ‘மாபெரும் தமிழ் கனவு’, முதல் ‘சோழர் வரலாறு’ வரையாக எழுதித்தொலையட்டும் என வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். முதலமைச்சரை சந்தித்து அவரும் புத்தகத்தை கொடுத்து மகிழ்ந்தார். தற்போது சமஸ் தனது ஊசலாட்டத்தில் தவெக பக்கம் முழுமையாக சென்றுவிட்டது நமக்கு ஆச்சரியமாக இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. விஜய்யை வைத்து பாஜக செய்யும் அரசியலை, ’புதியதலைமுறை’ பாரிவேந்தர் எப்படி புறக்கணிப்பார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா? பாரிவேந்தரைப் பொறுத்தவரை தனது அரசியலையும், டிவியின் டி.ஆர்.பியையும் வெற்றிகரமாக உயர்த்தியவராகவே ’சமஸை’ பார்ப்பார். சமஸை எதிர்க்கும் திமுக ஆதரவாளர்கள் மிக கவனமாக ’புதியதலைமுறை’ தொலைக்காட்சியை எதிர்க்காமல் ’சமஸை’ மட்டுமே குறிவைத்து எதிர்க்கிறார்கள். ஏனெனில் நாளை தனக்கு இந்த ஊடகத்தின் ஆதரவு வேண்டும் எனும் எதார்த்தத்தை அவர்கள் மறந்துவிடவில்லை. சமஸ் விமர்சிக்கப்பட வேண்டியவரா என்றால் நம் பதில் ‘ஆம்’ என்பது தான். ஆனால் அவர் மட்டுமா குற்றவாளி என்றால், ‘இல்லை’ என்பதே, நம் பதில். ஏனெனில் கொள்கை அரசியலாக அணுகினால் ஊடகத்தின் கொள்கையைத்தான் கேள்வி கேட்க வேண்டும், அரசியலற்று அணுகவேண்டுமெனில் தனிநபர் தாக்குதலாக நடத்திச் செல்லாம். புதிய தலைமுறையை பொறுத்தவரை ’சமஸ்’ இல்லையெனில் இந்தப் பணியை செய்ய ’வேறொரு சமஸ்’ என நகர்ந்து சென்றுவிடுவார்கள். இந்த சிக்கலை சமஸ் எனும் தனிநபர் சிக்கலாக திமுக ஆதரவாளர்கள் அணுகுவது ஊடகத்தை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதானே தவிர வேறில்லை. சமஸ் குறித்த கேள்வியை ஊடகவியலாளர் ’ப்ரண்ட்லைன்’ விஜயசங்கர் எழுப்பியது என்பது துறை சார்ந்த கேள்வியாகவும் நாம் பார்க்கலாம். இதை வைத்துக் கொண்டு திமுக ஆதரவு குழுவினர் சமஸ் மீதான கேள்வியாக மட்டுமே இருக்குமாறு, கவனமாக கையாண்டனர். சமஸும் எவ்வகையிலும் திமுகவை நோக்கி பதில் கேள்விகளை எழுப்பிவிடாமல் ’ப்ரண்ட்லைன்’ விஜயசங்கர் நோக்கி மட்டுமே தனது பதில்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார், திமுகவின் ஐடி குழுவினரை நோக்கி சமஸும் பேசவில்லை, புதியதலைமுறை நோக்கி திமுக ஐ.டி குழுவும் பேசவில்லை. தொழில்ரீதியான தேவை இருவருக்கும் உண்டு. அதேசமயம் சமஸ் மீதான மதிப்பீடுகள் என்ன என மே17 இயக்கத்தை நீங்கள் கேட்கலாம். எங்களது பதில் விரிவானதே.

சமஸ் குறித்து இன்னும் குறிப்பாக, ஆழமாக அணுகலாம்.

‘தி இந்து’ இதழ் பொதுவாக தமிழ்நாட்டின் நீர் உரிமைக்கு எதிராகவே எப்போது. கட்டுரைகளை வெளியிடும். காவிரி-முல்லைப்பெரியாறு ஆகிய போராட்டங்களில் முன்னாள் ஒன்றிய நீர்வளத்துறை ஆய்வாளர் ராமசாமி அய்யரின் கட்டுரைகள், டி.ராமகிருஸ்ணனின் கட்டுரைகள் ஆகியன தமிழ்நாட்டின் நீர் உரிமைக்கு எதிரான பிரசித்திபெற்ற கட்டுரைகள். இன்றளவும் ‘தி இந்து’ கேரளாவிற்கு ஆதரவாகவே முல்லப்பெரியார் (முல்லைப்பெரியாறு அல்ல) என்றுதான் சென்னை எடிசனில் எழுதும். ஏனெனில் கேரளாவில் அது ‘முல்லபெரியார்’. இந்த வழியில் காவிரி உரிமைக்கு எதிராக கட்டுரை எழுதிய சமஸின் வரிகள் வரலற்று சிறப்பு மிக்கவை “..

1924-ல் காவிரிப் படுகையில், தமிழகம் 16.22 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துகொண்டிருந்தபோது வெறும் 1.40 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துகொண்டிருந்தது கர்நாடகம். இன்றைக்குக் கிட்டத்தட்ட பதினைந்து மடங்கு சாகுபடிப் பரப்பை அவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மேலும் பல அணைகளைக் கட்டுகிறார்கள். மேலும் மேலும் சாகுபடி பரப்பைக் கூட்டுகிறார்கள். நாம் எதிர்க்கிறோம். பாரம்பரிய நதிநீர் உரிமை, சட்டங்களையெல்லாம் தாண்டி கொஞ்சம் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். காலத்தே வளர்ச்சியில் பின்தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்துவைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?…”.. இப்படியாக தன் முதலாளிக்கு விசுவாசமாக இயங்குபவர் எப்படி பாஜக கட்சியின் பாரிவேந்தருக்கு எதிராக இயங்குவார்? சமஸ் இயல்பில் தவெக ஆதரவாளர் என்பதை விட தனது முதலாளியின் விசுவாசமான ஊழியர் என்பதை மறுக்க இயலுமா? இதற்கு முந்தைய பொறுப்புகளில் சமஸ் எப்படி செயல்பட்டுக்கொண்டிருந்தார் எனவும் பார்ப்போமே.

சங்கராச்சாரியார், ஸ்ரீருங்கேறி மடம், கும்பமேளா, ராகவேந்திரா, சாய்பாபா, ஜகன்னாதர், ரமணமகரிஷி, அத்திவரதர், அஹோபிலமடம், கனகதுர்கா, ஸ்ரீசைலம், கலியுக திருமலா, உடுப்பி கிருஷ்ணா,, தர்மஸ்தலா, சபரிமலை, சித்தகங்கா என புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருந்த ‘தி இந்து’ குழுமம், திடீரென அறிஞர் அண்ணாவிற்கு எதற்காக புத்தகம் வெளியிட வேண்டும். ஆயினும் கேள்விகேட்காமல் சம்ஸ் உழைத்தார்.

அறிஞர் அண்ணாவை இந்திய தேசியத்தின் பன்முகத்தன்மையில் ஒருவராக சித்தரிக்கும் பணியை ‘மாபெரும் தமிழ் கனவு’ நூல் செய்தது. ’ஆரியமாயை’, ’பணத்தோட்டம்’, ‘தீ பரவட்டும்’, ‘கம்பரசம்’ எனும் நூல்களை படைத்த அண்ணா எவ்வாறு இந்தியதேசியத்தின் பன்முகத் தன்மையின் அங்கமாகிவிடுவார்? எனும் கேள்விகள் எழவில்லை.

இந்திய அளவில் இந்துதுவ பாசிசத்தை எதிர்கொள்ளும் போதாமை அனைத்து தேசிய கட்சிகளுக்கும் இருந்தது. முற்போக்கு பேசிய, தேசியவாத பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ்சின் தீவிரவாத பார்ப்பனியத்தைக் கண்டு பதறித்தான் போனார்கள். முழுமையான பார்ப்பனிய ’நடைமுறை அரசாங்கத்தை’ அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பார்ப்பனிய சனாதனத்தை கமுக்கமாக கடைபிடிப்பதற்கும், வெளிப்படையாக அரச கொள்கையாக மாற்றுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு என அஞ்சினார்கள். தங்களது நிறுவனங்களில், மதச் சடங்குகளில், கோவில்களில் பார்ப்பனிய சனாதனத்தை கடைபிடிப்பதற்கும், அரசின் சனநாயக நிறூவனங்களில் கடைபிடிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை அவர்கள் அறிவார்கள். லிபரல் பார்ப்பனர்கள் யார் என்பதற்கு ‘தி இந்து’ குழுமம் சரியான எடுத்துக்காட்டு எனலாம். ‘தி இந்து’ நிறுவன கட்டிடத்திற்குள் அசைவ உணவிற்கு அனுமதி இல்லை, ஆனால் மாட்டிறைச்சி உரிமை குறித்து ப்ரண்ட்லைன் பத்திரிக்கை ஒரு முழு இதழையே எழுதி வெளியிட்டது. சமூகநீதி குறித்து பக்கம் பக்கமாக அப்பத்திரிக்கையில் கட்டுரைகள் வெளியாகும், ஆனால், தி இந்து நிறுவனத்திற்குள்ளாக பார்ப்பனர்களுக்கே முன்னுரிமை இருக்கும். வெளியே முற்போக்கு, உள்ளே பார்ப்பனியம் என்பதே லிபரல் பார்ப்பனியத்தின் அரசியல். ஜெயேந்திர சங்கராச்சாரியை கொலைவழக்கில் இருந்து காப்பாற்ற போராடிக்கொண்டே, விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள் என கட்டுரை எழுதி பிரச்சாரம் செய்ததையும் லிபரல் மார்க்சிய பார்ப்பனியம் எனலாம்.

காங்கிரஸில் இந்தவகை உயிரினங்களை அதிகம் காணமுடியும். காங்கிரஸ், டாங்கேக்கள், கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள் என இவர்கள் கைவைக்காத இடமில்லை. இந்தியாவின் சனநாயக கட்டமைப்புகள் முன்வைக்கும் போலியான சமத்துவத்தை மோடி அரசு உடைப்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள். இதை உடைத்து அப்பட்டமாக சனாதன அதிகாரத்தை மோடி நிறுவினால், ஒட்டுமொத்த பார்ப்பனிய அமைப்பையே மக்கள்விரோதி என கண்டறிந்துவிடுவார்கள் என்பதை லிபரல் பார்ப்பனர்கள் அறிந்தே வைத்திருந்தார்கள். வெகுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டால் தீவிரமான சூழலை எதிர்கொள்ளும் நிலை வரும் என்பதை அறிந்தவர்கள். பாசிச இந்துத்துவத்திற்கு மாற்றான அரசியலை காங்கிரஸிற்குள்ளாக கண்டறிய இவர்களால் இயலவில்லை. அல்லது தேடி கண்டுபிடிக்க முடியவில்லை எனலாம். காரணம் காங்கிரஸில் நிறைந்திருந்த லிபரல் பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின் மீது தீராத காதல் கொண்டவர்களாக இருந்தார்கள். அண்ணல் அம்பேத்கரை தனது அடையாளமாக காங்கிரஸை விட பாஜக முன்னெடுத்த காரணத்தினால் தலித்திய அரசியலை லிபரல் பார்ப்பனர்களால் கையில் எடுக்க இயலாததாயிற்று. இந்திய அளவில் தீவிரவாத பார்ப்பனியத்திற்கு எதிர்அரசியலில் அம்பேத்காரியம் போக மீதி எஞ்சி இருந்தது திராவிட கட்சியின் கூட்டாட்சி கோட்பாடுகளே. கம்யூனிசத்தை நோக்கி செல்ல அவர்கள் தயாரில்லை. சோசலிஸ்டுகள் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்சிடம் எமர்ஜென்சி காலத்திலேயே கரைந்து போயிருந்தார்கள். எனவே, தெற்கிலிருந்து எழுந்த மாநில சுயாட்சி, கூட்டாட்சி, வெல்பேர் அரசுகள், சமூகநீதி மாடல் எனும் சொல்லாடல்கள் எளிமையானவை, இனிமையானவையாக இவர்களுக்கு தோன்றின.

பார்ப்பனிய எதிர்ப்பை அதிகம் முன்னிலைப்படுத்தாமலும் இந்த சொல்லாடலை அரசியல் முழக்கமாக முன்வைக்க இயலும் என்பதை கண்டறிந்தார்கள். இந்த வகையில் திராவிட நாடு, ஆரிய எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு என்பதை மறைத்துவிட்டு, ’பொருளாதார வளர்ச்சி’, ’மாநில சுயாட்சி’, ’மாநில உரிமை’ எனும் அரசியலை இந்தியாவிற்குள்ளாக கொண்டு செல்வது மோடியின் அல்ட்ரா-தேசியவாத்தை எதிர்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பதை லிபரல்கள் நம்பினார்கள். ஒற்றை மையம், ஒற்றை மதம், ஒற்றை கட்சி என்பதை தகர்க்க பன்மைத்துவத்தை பேசும் கொள்கையாக, கூட்டாட்சியை பேசும் சனநாயக குரலாக திராவிடத்தை ‘கஸ்டமைஸ்’ செய்வது லிபரல்களுக்கு தேவையானதாக இருந்தது. ’தமிழ்நாடு தமிழருக்கே’, ‘இந்து மத எதிர்ப்பு’ ‘நாத்திகவாதம்’, ‘திராவிடர் எழுச்சி’, ‘திராவிடர் தேசியம்’ என்பது பிரிவினைவாதமாக வடிகட்டி ஒதுக்கப்பட்டு மேலோட்டமான லிபரல் அரசியல் பிம்பம் அறிஞர் அண்ணாவிற்கு கொடுக்க வேண்டிய தேவை லிபரல் பார்ப்பனர்களுக்கு இருந்தது. ஆகவே லிபரல் பார்ப்பனியத்தின் கோவிலாக இருக்கும் ‘தி இந்து’ குழுமம் இந்த பணியை தலையில் தூக்கிச் சுமந்தது. இதை தொடங்கி வைக்க, சமஸின் ‘மாபெரும் தமிழ்கனவு’ பயன்பட்டது, அல்லது இந்த பணியை செய்து முடிக்க சமஸ் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். (சமஸ், தன்னைப் பற்றி சொல்லிக்கொள்வதைப் போல அவர் இந்த விடயங்களில் கடுமையான உழைப்பாளியே..)

‘இந்திய பார்ப்பனியத்திற்குள்ளாக கரைக்கப்படாமல் தனித்துவமாக இயங்கக்கூடிய சுயநிர்ணயம் வேண்டும்’ என்பதே திராவிடர் இயக்கத்தின் கோட்பாடு. இந்திய தேசியம் என்பதே, ’பார்ப்பன-பனியா தேசியம்’ எனும் திராவிடர் கருத்தியல் முகாமில் புடம்போடப்பட்ட அறிஞர் அண்ணா, உபதேசியம் (sub-nationalist) பேசியவராக இந்திய சிமிழிக்குள் அடைக்கப்பட இந்த நூல் பெரிதும் உதவியது. உலகளாவிய மானுடநேய கருத்தியலை பேசிய அண்ணா என்பதற்கும், இந்துத்துவதேசிய கட்டமைப்பு கொண்ட இந்தியாவிற்கான கருத்தியல் கொடையை வழங்கியவர் என பேசுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. இந்தியாவின் போலி-பெடரலிசத்தை (quasi-federalism) கேள்விக்குட்படுத்திய அண்ணாவை, இந்திய பெடரலிசத்தின் உதாரண புருசனாக கட்டமைப்பதை எவ்வாறு ஏற்க இயலும். (The key difference lies in the scope of their goals: subnationalism seeks more power within the current state, whereas self-determination, in its most extreme form, can seek complete independence.)

இந்திய சனநாயக மாயைக்குள் அண்ணாவை அடைத்துவிடும் சாமர்த்தியம் சமஸ் எழுதிய வெட்டி-ஒட்டப்பட்ட புத்தகத்திற்கு உண்டு. அறிஞர் அண்ணாவின் கனவு ‘இந்திய பார்ப்பனிய தேசத்தோடு முரண்பட்டு வெளியேறுவது, மாறாக இந்திய பார்ப்பனிய அரசிற்கு கோட்பாட்டு கொடையை வழங்குவதல்ல’. இருந்தும் அவர் உபதேசியவாதியாக சுருக்கப்பட்டதை சோ-கால்டு திராவிட அறிவுஜீவிகள் வரவேற்றுக்கொண்டாடினார்கள்.

ஏனெனில் இந்திய தேசியத்திற்குள்ளாக ‘திராவிடத்தை’ கரைத்துவிட்டால், ‘மோடி-பாசிச பார்ப்பனிய’த்தை எதிர்க்க ‘லிபரல் பார்ப்பனிய’த்திற்கு ‘திராவிட-தோழன்’ கிடைத்துவிடுவான் என நம்பினார்கள். லிபரல் பார்ப்பனியத்தோடு கைகோர்ப்பது ’முதலாளிய திராவிட’த்திற்கு கசப்பானதல்ல என்பதை திமுகவின் அறிவுஜீவிகள் அறிவார்கள். ஒன்றிய அரசின் அமைச்சரவைக்குள்ளாக சென்ற பின்னர், திமுகவின் சிந்தனைப் போக்கு ‘முதலாளிய வளர்ச்சி நிலை, வலிமையான ஒன்றிய அரசு, அமைச்சரவை அதிகாரத்தில் பங்கு’ என்பதாகிப் போனது என்பது தனியே எழுதப்பட வேண்டிய விடயம்.

திராவிடத்தை நீர்த்துப் போகச்செய்து, இந்திய தேசியத்திற்குள்ளாக உபதேசிய கருத்தாக்கமாக மாற்ற முயலும் முயற்சியை மே17 இயக்கம் கடந்த 6-7 ஆண்டுகளாக எதிர்த்து வந்திருக்கிறது. இந்த தலைப்பில் மேலதிக விவாதத்தையும், ஆய்வுரீதியான பதிவுகளையும் மே17 இயக்கம் வரும் காலங்களில் விரிவாக செய்யும்.

ஆக, திராவிடத்தை ’கஸ்டமைஸ்’ செய்யும் பணியில் ‘சமஸ்’ பெரும் உதவியை ’தி இந்து’ குழுமத்திற்கு செய்தார். அறிஞர் அண்ணா, போன்றோரை லிபரல் பார்ப்பனர்கள், ’தீண்டத்தகாதவர்களாக’ பார்க்க வேண்டியதில்லை, மாறாக அவரை, உள்ளிழுத்துக் கொள்ளுதல் சாமர்த்தியமானது எனும் ‘தி இந்து’ குழுமத்தின் செயல்திட்டத்தை நிறைவேற்றிய திறமையான ‘தொழிலாளி’ சமஸ். அவருக்கென்று தனித்த கோட்பாட்டு ஆர்வம் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால், அவர் ‘ரங்கராஜ் பாண்டே’ அல்ல. ‘பாண்டே’வால் அண்ணாவை கொண்டாட முடியாது. சமஸ் போன்று அண்ணாவை விரிவாக வாசித்தவர்களால் கூட, விஜய் மீது ’அரசியல்-ஹீரோ’ பிம்பத்தை கட்டியெழுப்பவேண்டுமெனும் விருப்பம் வராது. ஏனெனில் அரசியல் உணர்வுடையவர்களை அறிஞர் அண்ணாவின் சிந்தனை ஆட்கொண்டுவிடும் வலிமை உடையது. அப்படியான விபத்து சமஸுக்கு இதுவரை நடந்ததில்லை. நாளையே வலதுசாரித் தனமான புத்தகங்களை கேட்டால் எழுதித்தராமல் இருப்பாரா என தெரியாது.

லிபரல்-பார்ப்பனியத்திற்கும், முதலாளிய திமுக திராவிடத்திற்கும் திருமணத்தை நடத்தியதில் சமஸுக்கும் சிறிய பங்கில்லாமல் இல்லை. அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி பாதை கண்ட திராவிட மாடல் என்பதை ஸ்லோகனாக்கி (முழக்கம்), இரண்டும் கைகோர்த்து பாசிச பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக களம் காண ஆரம்பித்தார்கள். இந்த குழுவிற்குள் மருதையன் போன்ற ‘ரிடையர்டு’ பார்ப்பன புரட்சியாளர்களும் ஐக்கியமானதுதான் எதிர்பாராத திருப்பம். அவர்களும் தன் பங்கிற்கு, பொருளாதார வளர்ச்சிக்காரணிகளை காட்டி ஐக்கிய முன்னனி கட்டிட, லிபரல் பார்ப்பனியத்தை தலைமை ஏற்க சொன்னார்கள். இப்படியாக உருவெடுத்த சமூகநீதிக் கூட்டணியில் போர்க்குணமிக்க திராவிட ஆற்றல்கள், பாட்டாளி திராவிட ஆற்றல்கள், பாட்டாளி சிந்தனையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை இணைக்காமல் கவனமாக தவிர்த்தார்கள். தங்களது சந்தர்ப்பவாத கூட்டணியை வலுப்படுத்தினார்கள். வாக்குவங்கி அரசியல் இதற்கு எளிமையான முகமூடியாகிப் போனது. இந்த பின்னனியில் தான் லிபரல் பார்ப்பனியத்திற்கும், இந்தியதேசிய பதவிக்கும் ஏதுவாக ‘தேசிய இன உரிமை’ பேசிய பெரியாரின் சிந்தனைகளை மறுத்தார்கள், அவை இக்காலத்திற்கு பொருந்தாதவை என்றார்கள். காலவதியானவை என்றார்கள். ஈழ அழிவை சுட்டிக்காட்டி, நடைமுறைக்கு உதவாதவை என பரப்புரை செய்தார்கள். இதனாலேயே ‘ஈழ தமிழர்கள்’ எனும் திராவிட இயக்கத்தின் சொல்லாடலை, ‘இலங்கை தமிழர்கள்’ என எளிதாக பார்ப்பன மொழியில் திமுகவால் மாற்றி அழைக்க இயன்றது. இந்த கருத்தாக்கத்தை வைத்தே ‘ஈழம் அண்டைநாட்டு சிக்கல்’, ’தேசிய இனவிடுதலை காலாவதியான சரக்கு’ என திமுகவின் பயிற்சி பட்டறையில் புது தொண்டர்களின் மண்டையை கழுவினார்கள். இந்த வழியிலே சென்றாலும், ஓட்டு கிடைக்க வாய்ப்பிருப்பதையறிந்து பாலஸ்தீனத்திற்கு தீர்மானம் நிறைவேற்றும் முடிவுக்கும் வந்தடையுமளவு காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.

இவ்வாறாக, லிபரல்-திராவிட-பார்ப்பன நதியில் படகோட்டிய ‘சமஸ்’ திடீரென பாசிச-பார்ப்பன முகாமுக்கு உதவுகிறாரோ எனும் பதட்டமே தற்போதைய சச்சரவிற்கு காரணம். இதில் ஊடக அறம் என்பதெல்லாம் இரண்டாம் கட்டமே. ஏனெனில் மக்கள்நலன் சார்ந்த ஊடக செயல்பாட்டை இவர்கள் சமஸிடம் கோரவில்லை. அதை சமஸிடம் எதிர்பார்க்க இயலாதென்பதை, முன்னாள் பங்காளி என்ற வகையில் நன்கு அறிந்தவர்கள் இவத்கள். ஏனெனில் இந்த யூட்யூப் ஊடகவியலாளர்கள் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நடந்த போராட்டங்களை மூடிமறைத்ததில் பெரும்பங்கு வகித்தவர்கள். இந்த இடத்தில் ‘political pimp’ என மருதையன் பேசியதை ஆழமாக விவாதிப்பது தேவைப்படுகிறது. உண்மையில் சமஸை இவ்வாறு சொல்ல இயலுமா அல்லது மருதையன் இந்த பட்டத்திற்குரியவரா என்பதை அடுத்த பதிவில் விவாதிப்போம்…

https://www.facebook.com/share/1Axv3VFxBb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »