இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..

இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..

இனப்படுகொலை இலங்கை கிரிக்கெட் வீரர்களை வெளியேற்றுபல கோடி மக்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை உள்வாங்கும் விளையாட்டில் அரசியல் துள்ளி விளையாடுவது பலரும் கவனித்திடாத பக்கமாக இருக்கிறது. இதை அறியாதவர்கள் தான் “விளையாட்டை விளையாட்டாக” பாருங்கள் என்று அறிவுரை கூறுபவர்களாக இருக்கிறார்கள். அரசியலின் சித்து விளையாட்டான நாடுகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுகளை விளையாட்டாக மட்டுமே  பார்ப்பவர்களை அரசியல் அறியாப் பேதைகளாகவே நாம்  கருத முடியும்.

விளையாட்டின் அரசியல்
உலக மக்கள் தொகை வரிசையில் இரண்டாம் இடத்தில உள்ள இந்திய துணைக்கண்டம் ஒலிம்பிக்கில் ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றிடுமா என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும். வர்க்கமும், வர்ணமும் கலந்து அணி வீரர்களை தேர்ந்தெடுப்பது தொடங்கி  நிராகரிப்பது வரை பிணைந்து இருக்கும்  அரசியல் வலை மிக இறுக்கமான ஒன்று. ஒரு அரசின் முகமாகவே அந்நாட்டின் விளையாட்டு அணி பிற நாட்டின் அணியுடன் போட்டியிட செல்கிறது. அப்படியிருக்க, விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்று எப்படி கூற முடியும்?

மக்களிடையே தேசபக்தியை ஊட்டுவதில் விளையாட்டுகள் முக்கியப் பங்காற்றுகிறது. தேசபக்தி  தேசத்திற்கானது என்று மக்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலக அரசுகள் அந்த தேசபக்தியை தங்கள்  தவறுகளை மறைக்கும் கருவியாகவே பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு கூட்டுணர்வை உருவாக்கிடும் மாய பிம்பமாக இன்றைய விளையாட்டுகள் மாறிப் போயிருக்கிறது. மதம், சாதி போன்றவை கூட்டுணர்வின் எச்சங்களே! இந்த சுயநலக் கூட்டுணர்வு பல சமயங்களில் மக்களின் மனதில் இயல்பாக தழைத்திருக்கும் “அநீதிக்கு எதிரான குரல்” என்ற உணர்வை மழுங்கடித்து குதூகலத்தின் மீதான கொண்டாட்டத்தை மட்டும் நிரப்பி விடுகிறது. கிரிக்கெட் விளையாட்டும் இப்படியான ஒன்று தான். இந்த சுயநலக் கூட்டுணர்வினால் தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடும்போது அந்த ஆட்டத்தை கடந்து விரோத உணர்வை எழுப்பிடும்  தேசபக்தி அரசியல் தூண்டப்படுகிறது.

2009-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி ஏலத்தின் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிகள் எதுவும் ஏலத்தில் எடுக்கவில்லை. 2013-ல் இந்திய எல்லையில் நடந்த சண்டைகளுக்காக இந்திய ஹாக்கி போட்டியில் விளையாடி வந்த பாகிஸ்தான் ஹாக்கி  வீரர்கள் திரும்ப அனுப்பப்பட்டார்கள். விளையாட்டில் விரோதத்தை பாராட்டிடும் இந்த செயலில் அரசியல் இல்லையா? “விளையாட்டாய் விளையாட்டாய் பாருங்கள்” என்று கூறுபவர்கள் இதற்கு பதில் சொல்ல முன் வருவார்களா?

சுட்டெரிக்கும் கோடை வெயில், கடும் குளிர் என்று பல துன்பங்களை தாங்கி விவசாயிகள் சாலைகளில் பல மாதங்களாக போராடியதற்கு ஆதரவாக  வெளிநாட்டுப் பாடகி ரிகானா கருத்து பகிர்ந்தார். அதுவரை, இது குறித்து வாய் திறக்காத சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்நிய சக்திகள் இந்திய பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று அனைவரும் ஒரே வாக்கியத்தை கிளிப்பிள்ளையாக ஒப்பித்தனர். விவசாயிகளின்  வாழ்வாதாரப் போராட்டத்தை குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க துணிவில்லாத பிரபலங்கள், அரசு மீது மட்டும் அதீதப் பற்றுக்கொண்டிருப்பது அரசியலன்றி வேறு என்ன?

அரசியலை சுட்டிக்காட்டிய வீரர்கள்
விளையாட்டுத் துறையின் தலைசிறந்த எழுத்தாளரும், தமிழீழ மக்களின் உரிமைப் போராளியுமான டிரெவர் கிரான்ட் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவர். தமிழீழ இனப்படுகொலை செய்த ராஜபக்சே ஆட்சியையும், அதற்கு உடந்தையாக இருந்ததற்காக ஆஸ்திரேலியா அரசையும் தனது புத்தகத்தில் கடுமையாக சாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் தமிழீழ அகதிகளுக்கு துணையாக நின்றார். இவர், 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணி’ என்னும் முழக்கத்தோடு போராட்டம் நடத்தக் காரணமானவர். விளையாட்டுகள் பற்றிய எழுத்தாளராயிருந்தும் விளையாட்டையும் அறவுணர்வு தவறாமல் கண்டவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களை புறக்கணிக்க வேண்டுமென்ற அரசியலைப் பேசினார். விளையாட்டுகளின் உண்மையான நலன் விரும்பியாக டிரெவர் கிரான்ட் வாழ்ந்து மறைந்தார்.

1968-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கருப்பின அமெரிக்கர்களான டாம் ஸ்மித்தும், ஜான் கார்லோசும் முதல் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவைச் சார்ந்த பீட்டர் நார்மன் பிடித்தார். பரிசு வழங்கும் நிகழ்வில் கருப்பின மக்களின் நிலையினைத் தெரிவிக்கும் வகையில் இருவரும்  ஒரு கையில் கருப்பு கையுறையும் மறு கையில் கருப்பு காலணியும் அணிந்திருந்தனர். நிறவெறி அரசியலுக்கு எதிராக தங்கள் எதிர்காலத்தையே அடகு வைத்தனர் அந்தக் கருப்பின வீரர்கள்.

டாம் ஸ்மித்தும், ஜான் கார்லோசும்

பீட்டர் நார்மன் மனித உரிமைச் சின்னத்தை அணிந்து  ஆஸ்திரேலியாவில் பூர்வகுடி மக்கள் தங்கள் உரிமைகளை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அதனால், அவரது விளையாட்டின் எதிர்காலத்தையும் ஆஸ்திரேலிய அரசு முடக்கியது. ஒலிம்பிக்கில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களையும் விட தங்கள் விளையாட்டுத் திறமையில் முதலிடம் பெற்றும், இந்த வீரர்கள் தங்கள் இன மக்களுக்கான அரசியலுக்கே முதலிடம் தந்தனர். விளையாட்டின் வரலாறுகளில் விளையாட்டையும் அரசியலாய் பார்த்த இந்த வீரர்களின் அறவுணர்வே முத்திரை பதிப்பதாய் நீடிக்கிறது.

கறுப்பினத்தவர், மூன்றாம் பாலினித்தவர், ஓரினசேர்க்கையினர் என அனைத்து ஒடுக்கப்படுபவர்கள் உரிமை குரலுக்காக அமெரிக்க தடகள வீராங்கனை ரேவன் சவுண்டர்ஸ் 2021 டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும்போது தனது இரு கரங்களை “X” வடிவில் உயர்த்தி நின்றார்.

2020ல் அமெரிக்காவில் வெள்ளையினவெறி காவலரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு விளையாட்டு வீரர்கள் பலர் நீதி கேட்டது கவனிக்கத்தக்கது.

“என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற ஜார்ஜ் பிளாய்டின் இறுதி வார்த்தைகளை பொறித்த ஆடையில் கூடைப்பந்து ஜாம்பவான் கோபே பிரையன்ட்.

 

ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா வெள்ளையின வெறிக்கு எதிராக தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகிறார். இதனால், அவருக்கு உருவாகும் எதிர்ப்புகளை கடந்து அவர் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாட்டு களத்தில் நிற்கிறார்.


ஐபிஎல் ஆட்டத்தில் இலங்கை வீரர்

மகீஷ் தீக்க்ஷனா

இந்திய ஒன்றியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பல அணிகளாக பிரிக்கப்பட்டு, வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு பல வீரர்களையும் ஏலம் விட்டு அணிகள் தேர்ந்தெடுக்கின்றன. இந்த ஐபிஎல் போட்டியில் இம்முறை “சென்னை சூப்பர் கிங்ஸ்” (சிஎஸ்கே) அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டவர்களில் இலங்கை அணியின் மகீஷ் தீக்க்ஷனா இடம் பெற்றுள்ளார்.

கஜபா படைப்பிரிவு

இவர்  2000-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மிருசுவில் கிராமத்தில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான கஜபா படைப்பிரிவில் இராணுவ வீரராக இருந்துள்ளார். இந்த படைப்பிரிவு ஐந்து வயதுக் குழந்தை ஒன்று, மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்களை கடுமையான சித்திரவதை செய்துக் கொன்று மலக்கிடங்கில் புதைத்தது. இந்த சிங்கள பேரினவாத இராணுவத்தினர் தனது விளையாட்டுப் பயணத்திற்கு வழிகாட்டிகள் என்று மகீஷ் தீக்க்ஷனா கூறியுள்ளார். இந்த படைப்பிரிவின் முகவராக அபுதாபியில் சென்று விளையாடியும் உள்ளார். இந்த இன வெறியனை தான் ரூ.70 லட்சத்திற்கு சென்னை அணியின் முதலாளிகள் ஏலம் எடுத்துள்ளனர். தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறியனை கொண்டாடி வளர்த்துவிடும்  சந்தர்ப்பத்தை ஆரிய பார்ப்பன கூட்டம் ஒருபோதும் தவறவிடுவதில்லை. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை தான் சென்னை அணியின் முதலாளிகள் தற்போது பயன்படுத்துகின்றனர்.

தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறியனுக்கு தமிழர்களுக்கு கேளிக்கைகாட்டி சம்பாரிக்கும் பணத்தை சென்னை அணி தந்திடும் அதேவேளையில் தான் 135 தமிழக மீனவர்களின் படகுகளை ரூ.52 லட்சத்திற்கு இலங்கை ராணுவம் ஏலம் விட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் எப்பொழுதும் அரசியல் தூதுவர்களைப் போலத் தான் பேசியிருக்கிறார்கள். முன்னாள் விளையாட்டு வீரர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளார்கள். தமிழக மண்ணில் சிங்கள வீரர்களை ஐபிஎல் போட்டியில் விளையாட விடமாட்டோமென்று போராடிய பொழுது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குமார் சங்ககரா தமிழர்களைப் பார்த்து இந்தியாவும், இலங்கையும் தான் நாடுகள். தமிழ்நாடு ஒரு மாநிலம் தான் என்று எள்ளலுடன் கூறினார். தமிழினப்படுகொலை செய்த ராசபக்சேவும் இராணுவ வீரனின் சேவைக்கு ஒப்பானது ஒரு விளையாட்டு வீரனின் சேவை என்று குறிப்பிட்டுள்ளார். சிங்கள இனவெறியர்கள் எப்பொழுதும் விளையாட்டையும், அரசியலையும் பின்னிப்பிணைந்ததாக மட்டுமே அணுகுகிறார்கள். ஆனால், இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழினத்தின் மக்கள் தான் வெட்கமே இல்லாமல் “விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்” என்கிறார்கள். பெரும்பாலான தமிழர்களுக்கு அரசியல் அறியாமையால் இப்படி  கூறுகின்றனர்.

அதேநேரம், சில அரசியல் ஒட்டுண்ணிகள் தங்கள் சுய லாபத்திற்காக திட்டமிட்டே இனவெறி இலங்கை அரசை ஆதரிக்கின்றனர். இனப்படுகொலை நடந்த 2009, மே 18-ம் நாளை வாழ்வின் மகிழ்ச்சியான நாள் என்று கூறிய முத்தையா முரளிதரன் போன்ற தமிழர்கள் பட்டியலில் சேரக்கூடிய இனப் பற்றற்றவர்கள், இவர்கள்.

இலங்கை வீரரை நீக்கு
ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரர் என்பதால் மட்டுமே நாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிங்கள விளையாட்டு வீரர்களை இங்கே விளையாட அனுமதிப்பது லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இலங்கை  இனப்படுகொலையை வெள்ளையடிக்கும் முயற்சி என்பதற்காகவே எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டிலிருந்து ஒருவர் தமிழ்நாட்டிற்கு வந்து விளையாடுவதை தான் எதிர்க்கிறோம். இனப்படுகொலைக்கான  நீதி மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, விளையாட்டுப் போட்டிகளின் வழியாக சுமூகமான உறவு நீடிப்பதாக நிலைநிறுத்தும் நயவஞ்சகப் போக்கினை புரிந்து கொண்டதனால் தான் தமிழர்கள் எதிர்க்கிறோம்.

இனவெறி சிங்கள இராணுவத்தால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தமிழீழ பத்திரிகையாளர் இசைப்பிரியா.

 

சிங்கள பௌத்த இனவெறியர்களால் கொல்லப்பட்ட பாலகன் பாலச்சந்திரன்.

2013-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி விளையாட்டைச் சார்ந்த  நடுவர்கள், அதிகாரிகள் என  இலங்கையை சேர்ந்த யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் உறுதியளித்தால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த முடிவை இனப்படுகொலையான தொப்புள் கொடி உறவு ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்வரை, அவர்களின் பொதுவாக்கெடுப்பு கோரிக்கை நிறைவேறும்வரை மாற்றிட அனுமதிக்க முடியாது.

தமிழர்கள் பெயரில் அணியை வைத்து, அதைக்கொண்டு வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” அணி உரிமையாளர்கள் தமிழர்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இனவெறி இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை தங்கள் அணியில் இருந்து உடனடியாக நீக்கிட வேண்டும்.

மேலும், தமிழர்களின் உணர்வை மதித்து; தமிழக சட்டமன்ற தீர்மானத்தின்படி இனப்படுகொலை குற்றவாளி இலங்கை அரசின் விளையாட்டு வீரர்களை தமிழ் நாட்டில் விளையாட அனுமதி வழங்கிடக்கூடாது என்று மே பதினேழு இயக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »