
பொட்டலூரணி மக்கள் தமது பகுதியில் இயங்கிவரும் மீன்கழிவு நிறுவனங்களை மூட சொல்லி அந்நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கைதானவர்கள் மீது வழக்கு தொடுக்காமல், விடுவிக்கப்பட வேண்டுமென மே17 இயக்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் அக்டோபர் 22, 2025 அன்று சமூகவலைதளத்தில் பதிவு செய்தது.
பொட்டலூரணி மக்கள் தொடர்ந்து 520 நாட்களாக தமது பகுதியில் இயங்கிவரும் மீன்கழிவு தொழிற்சாலை மாசுபாட்டுற்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசாங்கமே செய்ய வேண்டிய பணியை மக்கள் போராடி நினைவூட்ட வேண்டியுள்ளது. அதுவும் 520 நாட்களாக போராடியும் நிறைவேற்றாமல் தவிர்க்கின்றனர்.
தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலிருந்து தமது ஊருக்கான சாலை (விலக்கில்) பேரூந்துகள் நின்று செல்ல வேண்டுமெனும் கோரிக்கை உட்பட பலவேறு கோரிக்கைகளை நீண்டநாட்களாக முன்வைத்
து குரல் எழுப்பியும் வருகின்றனர். இன்று காலை சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை வழக்கம் போல காவல்துறையை வைத்து மாவட்ட நிர்வாகம் கையாண்டது. வெகுமக்கள் கோரிக்கைகளை கூட சட்ட-ஒழுங்கு சிக்கலாக சித்தரித்து கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல்துறை. அதிகாரிகள் என்பவர்கள் மகாராஜாக்களைப் போல நடந்து கொள்கிறார்கள். அனைத்து கோரிக்கைகளையும் காவல்துறையை வைத்தே அடக்கி ஒடுக்குகின்றனர். இந்த அதிகாரிகளை மேலும் வளர்த்துவிட்டுள்ளது திமுக அரசு.

இதுபோன்ற கோரிக்கைகள் கொள்கை-மக்கள் நலன் சார்ந்தவை. இவற்றை சட்டமன்ற உறுப்பினரால், அமைச்சர்களால் பேசி தீர்த்திருக்க முடியும். ஆயினும் திமுக புறக்கணிக்கிறது. 520 நாட்கள் போராட்டம் என்பது மிக நீண்ட அமைதிவழி எதிர்ப்பு போராட்டம். இத்தனை நாட்களாக இக்கோரிக்கையை தீர்க்க இயலாதா திமுக அரசிற்கு?
இன்று காலை பொட்டலூரணி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு, அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றபோது வலிந்து கைது செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தைகள் உரிய அதிகாரிகளுடன் நடத்தப்படவில்லை. போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர் சங்கரநாராயணனை கைது செய்து தனியே கொண்டு சென்றிருக்கிறது காவல்துறை. வெகுமக்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் அவரை அடைக்கவில்லை. அவரது இருப்பிடம் தெரியவில்லையென போராட்ட குழு தோழர்கள் தேடியவண்ணம் உள்ளனர்.
காவல்துறையின் இந்த போக்கு மிக மோசமானது, வன்முறையானது, மக்கள் விரோதமானது. தூத்துக்குடி காவல்துறை இதேபோன்றே ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுதும் போராட்ட குழுவினரை கொண்டு சென்று துப்பாக்கி சுடும் மைதானத்தருகில் அடைத்து வைத்தனர். நீதிமன்றத்தின் உத்திரவின் பெயரில் அன்று தீர்வு கிடைத்தன. சுதந்திரம் கிடைத்ததாக 77 ஆண்டுக்கு முன் அறிவித்த போதிலும், வெள்ளைக்காரன் காலத்து காவல்துறையை போல பொதுமக்களை எதிரிகளாக எண்ணி, வன்முறையாக நடந்துகொள்ளும் வன்முறை போக்கை இன்றளவும் கடைபிடித்து வருகிறது.

ஸ்டெர்லைட் படுகொலையில் தண்டிக்கப்பட வேண்டிய அதிகாரிகள் குறித்து நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளி காவல்துறை, நிர்வாகத்துறை அதிகாரிகளை கைதுசெய்யாமல் பாதுகாக்கிறது திமுக அரசு. அதன் விளைவுகளே இன்று மக்கள்விரோத செயல்களில் அதிகாரிகள் இறங்கி செயல்படும் துணிச்சலை கொடுக்கிறது.
பொட்டலூரணி கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கைதானவர்கள் மீது வழக்கு தொடுக்காமல், விடுவிக்கப்பட வேண்டுமென மே17 இயக்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
22.10.2025