பாலஸ்தீனர்களின் தோழன் ஹவுதி

இசுரேலின் சியோனிச இனவெறியர்களால் காசாவில் நடத்தப்படுகின்ற மனித படுகொலைகள், கொடூரங்களின் சாட்சியங்கள் நாளுக்கு நாள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி மக்கள் போராடினாலும், அது எந்தவொரு தாக்கத்தையும் இசுரேலுக்கு ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏமனின் ஹவுதி போராளிகள் காசாவில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என, உலகின் முக்கிய கடல் வழியான செங்கடலின் ‘பாப் அல் மாண்டேப் (Bab Al Mandeb)’ நீரிணை வழியாகச் செல்லும் இசுரேல் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பாலஸ்தீன இனப்படுகொலை கூட்டாளிகளின் கப்பல்களையும் முக்கிய இலக்காக வைத்து இன்று வரை தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அச்சாணியாக செயல்படும் இசுரேலுக்கு இதனால் நெருக்கடி ஏற்படுவதை உணர்ந்த அமெரிக்காவும், செங்கடல் தாக்குதலால் தனக்கான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதை உணர்ந்த இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகளும், இந்த தாக்குதலுக்கு காரணமான காசாவின் மீதான இனப்படுகொலை போரை நிறுத்த முயற்சிக்காமல், ஏமனின் மக்கள் ஆதரவு பெற்ற அமைப்பான ‘அன்சர் அல்லா(Ansar Allah(Houthis)’வை  தீவிரவாதக் குழுவாக சித்தரித்து அவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அன்சர் அல்லா அமைப்போ காசாவில் போர் நிறுத்தம்‌ நடைபெறும் வரை செங்கடலில் எங்கள் தாக்குதல் தொடரும் என்று அறிவித்து இன்று வரை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

காசாவில் பாலஸ்தீனிய இனப்படுகொலை

அகதிகளாக பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த யூதர்கள் கடந்த 70 ஆண்டுகளாக பாலஸ்தீனிய மக்களை இனப்படுகொலை செய்தும், அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்தும் தனக்கான நாட்டை உருவாக்கிக் கொண்டனர். ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட இசுரேலை அங்கீகாரம் பெற வெற்றிகரமாக முயற்சிகளை நகர்த்திக்கொண்டிருக்கும் போது, பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் அக்டோபர் 7, 2023 அன்று யூத குடியேற்றம் செய்யப்பட்ட இசுரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதியில் வான் வழி, தரை வழி, கடல் வழி தாக்குதலை தொடுத்து அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

மத்திய கிழக்கில் தான் அசைக்க முடியாத இராணுவ வல்லமை வாய்ந்தவனாக காட்டிக் கொண்டு, இராணுவ கருவிகள், தொழில்நுட்பங்களை விற்றுக் கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அங்கமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இசுரேலின் பிம்பத்தை ஹமாஸின் இந்த எதிர்  தாக்குதல் உடைத்து நொறுக்கியது. இவ்வாறு இசுரேலின் மேலாதிக்க கருத்தியல் உடைந்து போன அவனமானமும், யூத சியோனிச இனவெறியும் சேர்ந்து ஹமாசை அழிக்கிறோம் என்று காசாவில் பாலஸ்தீனிய மக்கள் மீதான இனப்படுகொலை தொடங்கியது.

யார் இந்த ஹவுதி(Ansar Allah)?

ஏமனின் வடமேற்கு மற்றும் சவுதியின் எல்லையில் இருக்கும் பழங்குடிகள் ஹவுதி மக்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஏமனை ஆட்சி செய்த இவர்களின் கடைசி அரசரான, முகமது – அல் – பார் (Muhammad al-Badr) – ஐ 1962 இல், ஐக்கிய அரபு குடியரசு (United Arab Republic -எகிப்து மற்றும் சிரியா) முடிவுக்கு கொண்டு வந்தது.

2011 ஏமனில் நடந்த அரபு வசந்த போராட்டத்தின் காரணமாக, வளைகுடா நாடுகளின் பின்புலத்துடன், அப்போது ஆட்சியிலிருந்த சலே (Saleh) கீழிறக்கப்பட்டு, சவுதிக்கு ஆதரவான, அப்த்-ரப்பு-மன்சூர் ஹாடி (Abd-Rabbu Mansour Hadi) கொண்டு வரப்பட்டார். இந்த மாற்றம் எந்தவித தீர்வையும் மக்களுக்கு தராமல் தோல்வியுற்றது.

2014-யில் ஹவுத்தில், ஏமன் தலைநகர் சனா (Sanaa)வை கைப்பற்றினர். பின் ஹவுதி மற்றும் சலே-வின் ஆதரவாளர்கள் மொத்த நாட்டையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர், அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான கோரிக்கையை சலே-வுடன் ஹவுதி-கள் முன்வைத்தனர்.  பின் அப்த்-ரப்பு மன்சூர் ஹாடி (Abd-Rabbu Mansour Hadi)  தப்பித்து சவுதி செல்ல வேண்டிய நிலையானது.

இவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் முயற்சியை சவுதி மேற்கொண்டது. ஈரானை பின்புலமாகக் கொண்ட ஹவுதி-யின் இந்த செயலை தீவிரவாத செயலாக அறிவித்தது. ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, மொரோக்கோ, ஜோர்டான், பக்ரைன் மற்றும் சூடான் உடன் சவுதி கூட்டணியை ஏற்படுத்தி, அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் ஹவுதி-க்கு எதிரான போரில் இறங்கியது. சில வாரங்களில் முடியக்கூடிய போர் என கூறிய சவுதியால் பல ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

ஆனால், இந்த போர் பெரும் மனித பேரழிவுகளை ஏற்படுத்தியது. 3,77,000 மக்கள் இந்த போரில் இறந்துள்ளனர். நான்கு மில்லியன் மக்கள் உள்நாட்டுக்குள்ளே அகதியானார்கள்.

சீன அதிபர் முன்னிலையில் சவுதி-ஈரான் தலைவர்களின் நல்லிணக்க சந்திப்பு இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

அமெரிக்காவும், சவுதியும் ஏமனில் ஆதிக்கத்தை நிறுவ முயன்றதை முறியடித்த ஹவுதி இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அன்சார் அல்லா ( Ansar Allah) அமைப்பு இன்று ஏமன் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பாக இருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ‘பாப் அல் – மாண்டேப் (Bab Al Mandheb )’ நீரிணையும் அதன் தற்போதைய நெருக்கடியும்

அரேபிய தீபகற்பத்தின் ஏமனையும் ஆப்பிரிக்காவின் டிஜிபெளடி மற்றும் எரித்திரியா- பகுதிகளை பிரிக்கும் நீரிணை தான் பாப் எல் மண்டேப் (Bab Al Mandeb). இது செங்கடலையும் ஏமன் வளைகுடாவையும் இணைக்கிறது. ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள் செங்கடலின் பாப் எல் மண்டேப் (Bab Al Mandeb) நீரிணை வழியாக செங்கடலை அடைந்து சூயஸ் கால்வாய் மூலம் ஐரோப்பாவை சென்றடைகிறது. 2023 ஆண்டின் கணக்கீட்டின் படி 21,344 கப்பல்கள் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக பயணித்தன. உலக வர்த்தகத்தில் 12%, ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான வர்த்தகத்தில் 40% செங்கடல் வழியே நடைபெறுகிறது.

ஹவுதி இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அன்சார் அல்லா ( Ansar Allah) அமைப்பு இன்று ஏமன் மக்களின் ஆதரவு பெற்ற அமைப்பாக, பாலஸ்தீனர்களுக்கு தோழனாக நிற்கிறது.

காசா போரை நிறுத்த ‘அன்சர் அல்லா’ அமைப்பு நடத்தும் செங்கடல் தாக்குதலால் இசுரேலின் செங்கடல் வழி கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எகிப்துக்கு, சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து குறைபாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கடல் வழி செல்லும் கப்பல் போக்குவரத்துக்கான செலவுகள் மற்றும் காப்பீடு கட்டணங்கள் அதிரித்திருக்கின்றன். உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்களான AP Moller-Maersk, Hapag-Lloyd போன்றவை Bab Al Mandeb நீரிணை வழியாக போவதை நிறுத்தி வைத்திருக்கின்றன. சில கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் பயணச் செலவு மற்றும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கூடுதல் பயண நேரம் ஆகும் ஆப்பிரிக்காவை சுற்றிச் செல்கின்றன.

பாலஸ்தீன மக்களின் தோழனாக ஹவுதி-யின் போராட்டம்

காசா இனப்படுகொலையை எதிர்த்து ஹவுதி இசுரேலை நோக்கி அக்டோபர் 2023 இல், அனுப்பப்பட்ட பெரும்பான்மையான  ஏவுகணை மற்றும் டிரோன்களை இசுரேல் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு கருவிகள் இடைமறிப்பு செய்தது. கிட்டத்தட்ட ஏமனில் இருந்து 2000 கி.மீ தொலைவுள்ள துறைமுகம் மற்றும் சுற்றுலா தளமான எலியட்-யை இலக்காக வைத்து அனுப்பியது.

நவம்பர் 19 அன்று காலக்சி லீடர் (Galaxy leader) என்ற இசுரேல் தொழிலதிபருடன் தொடர்புடைய  சரக்கு கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கி, அதனைக் கைப்பற்றி ஏமன் மக்களுக்கான சுற்றுலாத் தளமாக மாற்றினர்.

டிசம்பர் 18 அன்று அமெரிக்கா, கப்பல் போக்குவரத்துக்கு ஹவுதி பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பக்ரைன், ஐக்கிய நாடுகள், கனடா, பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீசெலஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பத்து நாடுகள் அடங்கிய புதிய பன்னாட்டு பாதுகாப்பு படையை உருவாக்கியது. இத்தகைய கூட்டணியில் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்தால், அவர்களின் எண்ணெய் கிடங்குகளை இலக்காக வைத்து தாக்குவோம் என்று ஹவுதி அரசியல் செயலகத்தின் உறுப்பினரான முகமது-அல்-புகாடி (Mohammed al-Bukhaiti) – யை எச்சரித்தார்.  பாப் அல் மாண்டேப் நீரிணையில் இசுரேல் கப்பலை இலக்காக வைத்து ஹவுதில் தாக்கிய பிறகு இதே ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி வழியாகத் தான் இசுரேலுக்கான சரக்குகள் சென்றுக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 11-12 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, நெதர்லாந்து, கனடா, பக்ரைன், ஆஸ்திரேலியா  ஆதரவுடன் இணைந்து ரேடார், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளம், ஆயுதங்கள் கிடங்கு என 60 க்கும் மேற்பட்ட இலக்குகளில்  தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், இனி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கப்பல்கள் தான் முக்கிய இலக்குகள் என ஹவுதி அறிவித்தது.

பிப்ரவரி 3 இல் ஆஸ்திரேலியா, பக்ரைன், கனடா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஏமனில் 13 இடங்களில் 36 ஹவுதி இலக்குகளைத் தாக்கின. 

பிப்ரவரி 8 ம் தேதி ஹவுதி- யால் தாக்கப்பட்ட The M/V Rubymar மார்ச் 2 ஆம் தேதி செங்கடலில் மூழ்கியது.

மே 29 அன்று, அமெரிக்காவின் MQ-9 Reaper drone ஐ surface to air missile மூலம் வீழ்த்தியதாக ஹவுதி போராளிகள் அறிவித்தனர்.

மே 30 அன்று, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஹவுதி-யின் 13 இலக்குகளை நோக்கி தாக்கியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமுற்றதாகவும் தெரிவித்தது.

ஜுன் 22 அன்று, ஹவுதி மற்றும் IRIC இணைந்து டிரோன் தாக்குதலை இசுரேலின் ஹலிஃபா துறைமுகத்தில் நடத்தினர். இதில் இரண்டு சரக்கு கப்பல் மற்றும் இரண்டு cement tankers தாக்கப்பட்டதாக கூறினர்.

ஜுலை 19 அன்று, modified Samad-3 drone ஐ ஹவுதி, இசுரேலை நோக்கி அனுப்பினர். 2600 கி.மீ பயணித்த இந்த டிரோன் இசுரேலின் டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன் வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். புதிய வகையான இந்த டிரோனை ரேடாரால் கண்டறிய முடியாது என்றனர். இதற்கு பதில் தாக்குதலை இசுரேல் ஜூலை 20 அன்று ஏமனில் Hodeidah துறைமுகத்தின் மீது தாக்கியது. 3 மக்கள் கொல்லப்பட்டனர், 87 பேர் காயமுற்றனர்.

ஹவுதி-ஆல் கிட்டத்தட்ட அக்டோபரில்  இருந்து வாரந்தோறும் ஏவப்படும் ஏவுகணை, டிரோன்களை தொடர்ந்து இடைமறித்தும், ஏவப்படுவதற்கு முன்பே ஏவுதளத்தில் தாக்குவதையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகிறது. அதையும் மீறி ஹவுதி-ஆல் ஏவப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணைகள் கப்பல்களை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரைக்கும் ஹவுதி-ஆல் 70 க்கும் மேற்பட்ட கப்பல்கள் இலக்குகளாக்கப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டும், ஒன்றை கைப்பற்றியும் பல கப்பல்கள் தாக்குதலோடு சென்றிருக்கின்றன.

சியோனிச இனவெறியர்கள் பாலஸ்தீனர்களை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தி வருகிறதை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் உலகம் நின்று கொண்டிருக்கையில், அன்சர் அல்லா என்ற ஒற்றை அமைப்பு காசா இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி செங்கடலில் பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இசுரேலின் இனப்படுகொலை கொடூரத்தின் நீட்சியான இந்த செங்கடல் தாக்குதலை நிறுத்த காசா போரை நிறுத்த முயற்சிக்காமல், ஏமனின் அன்சர் அல்லா அமைப்பின் மீது அமெரிக்கா இங்கிலாந்து கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்துக் கொண்டிருக்கிறது. அன்சர் அல்லா அமைப்பு சொல்வது ஒன்று தான், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை எங்கள் தாக்குதல் தொடரும் என்று பாலஸ்தீனர்களின் தோழனாக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »