
திமுக அரசே! பொட்டலூரணி பேருந்துகளை நிறுத்தம் கோரி போராடியவர்களை உடனே விடுதலை செய்! மாசுபடுத்தும் பொட்டலூரணி மீன் கழிவு ஆலைகளை இழுத்து மூடு! பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நின்று செல்ல உத்திரவிடு! பொதுமக்கள் கோரிக்கைகளை காவல்துறை கொண்டு அடக்காதே! போராடும் மக்களுக்கு மே பதினேழு இயக்கம் துணை நிற்கும்! – மே பதினேழு இயக்கம்
தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகிலுள்ள பொட்டலூரணி கிராமத்தை சேர்ந்த மக்கள், பொட்டலூரணி விலக்கில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தியும், கிராமத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மீன் கழிவு ஆலைகளை மூடக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்து, கடந்த அக்டோபர் 22 அன்று பொட்டலூரணி விலக்கில் திரண்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையிலடைத்தனர். அறவழியில் ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறையிலடைத்த ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பொட்டலூரணி விலக்கில் பேருந்து நிறுத்தம் வைத்து தனியார் பேருந்துகளும், அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டுமென பொட்டலூரணி கிராம மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். 1996ல் நெடுஞ்சாலையில் பெயர்ப்பலகை வைப்பதற்கும், 2006ல் பேருந்துகளில் நிறுத்தங்கள் பட்டியலில் பொட்டலூரணி பெயரையும் எழுத வேண்டுமென போராடி உரிமைகளைப் பெற்றனர். ஆனால் காலப்போக்கில் பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நிறுத்தப்படுவது புறக்கணிக்கப்பட்டதால் பொட்டலூரணி கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில், பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நிறுத்தப்படுவதை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், தங்கள் கிராமத்து சுற்றுப்புறச் சூழலை சீரழித்து, நிலத்தடி நீரை பாழாக்கி சுகாதார சீர்கேடுகளை உண்டாக்கி வரும் மீன் கழிவு அரவை ஆலைகளை மூடி அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் சங்கரநாராயணன் தலைமையில் பொட்டலூரணி கிராம மக்கள் 520 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், திமுக அரசு இவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவே இல்லை.
இதனையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கடந்த அக்டோபர் 22 அன்று பொட்டலூரணி விலக்கில் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் அறிவித்து 120க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில், தோழர் சங்கரநாராயணன் (51), சண்முகம் (34), தெய்வானை ஈசுவரராமன் (36), கருப்பசாமி (47) ஆகியோர் மீது 2 வழக்குகளும், ராமகிருஷ்ணன் (25), ஆறுமுக வெங்கடநாராயணன் (38), ராமசாமி (28), பாபு (38), ஈசுவரமூர்த்தி (32), முத்து கருப்பசாமி (38), முத்துராமன் (28), சுடலைமுத்து (37), எஸ்தர் அந்தோணிராஜ் (42) ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர்.
தங்கள் வாழ்வாதார உரிமைகளை காக்க ஜனநாயக முறையில் அறவழியில் போராடிய மக்கள் மீதான காவல்துறையின் மக்கள் விரோத நடவடிக்கை மிக மோசமானது, வன்முறையானது. மக்கள் நீண்டகாலம் போராடி பெற்ற உரிமைகளை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அரசிடம் கோரிக்கை வைத்து 520 நாட்களுக்கு மேலாக போராடிய போது, அரசு சார்பில் பேச்சுவார்த்தை கூட நடத்தப்படவில்லை. இந்நிலையில், அரசின் கவனத்தை பெறுவதற்கு சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துவிட்டே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் அரசு சார்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவில்லை. மாறாக போராட்டத்தை நசுக்குவதற்காக, போராடும் மக்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினரை ஏவி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது திமுக அரசு.
வெகுமக்கள் கோரிக்கைகளை கூட சட்ட-ஒழுங்கு சிக்கலாக சித்தரித்து கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல்துறை. அதிகாரிகள் என்பவர்கள் மகாராஜாக்களைப் போல நடந்து கொள்கிறார்கள். அனைத்து கோரிக்கைகளையும் காவல்துறையை வைத்தே அடக்கி ஒடுக்குகின்றனர். இந்த அதிகாரிகளை மேலும் வளர்த்துவிட்டுள்ளது திமுக அரசு. இதுபோன்ற கோரிக்கைகள் கொள்கை-மக்கள் நலன் சார்ந்தவை. இவற்றை சட்டமன்ற உறுப்பினரால், அமைச்சர்களால் பேசி தீர்த்திருக்க முடியும். ஆயினும் திமுக புறக்கணிக்கிறது.
ஜனநாயகப் போராட்டங்களை காவல்துறையின் அடக்குமுறையின் மூலமே கையாளுமெனில், திமுக அரசு எவ்வகையில் கடந்த அதிமுக அரசிலிருந்து வேறுபடுகிறது எனும் கேள்வி எழுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போதும் போராடிய மக்கள் மீது இது போன்றே கடந்த அதிமுக ஆட்சியில் அடக்குமுறை ஏவப்பட்டது. ஸ்டெர்லைட் படுகொலையில் தண்டிக்கப்பட வேண்டிய அதிகாரிகள் குறித்து நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளி காவல்துறை, நிர்வாகத்துறை அதிகாரிகளை கைது செய்யாமல் பாதுகாக்கிறது திமுக அரசு. அதன் விளைவுகளே இன்று மக்கள்விரோத செயல்களில் அதிகாரிகள் இறங்கி செயல்படும் துணிச்சலை கொடுக்கிறது.
இது போன்ற ஜனநாயகப் போராட்டங்களை காவல்துறையினரை கொண்டு ஒடுக்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும். பொட்டலூரணி விலக்கில் சாலை மறியல் போராட்டத்தில் சிறையிலிடைக்கப்பட்ட 12 பேர் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெற்று அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென திமுக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், போராடும் பொட்டலூரணி கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
25/10/2025