இசுரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில் நவம்பர் 28, 2024 அன்று பதிவு செய்தது.
இசுரேல்-லெபனான்-ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்பிற்குரியது என்றாலும் இசுரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சாதகமான அம்சங்கள் கவலைக்குரியவை. லெபனானை எந்நேரமும் தம் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஒப்பந்தத்தில் இடமளிக்கப்பட்டிருப்பதாக இசுரேல் தரப்பில் அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவும், ப்ரான்சும் ஐ.நா கண்காணிப்பு படையில் இணைக்கப்படுவது எதிர்மறையான சூழலை உருவாக்கிடும். இசுபுல்லா நடத்திய பதிலடி தாக்குதலில் நிலைகுலைந்த இசுரேல், ஆட்சி மாற்றம் நடந்த அமெரிக்கா, தீவிரமடையும் யுக்ரேன் போர் எனும் சூழலில் ஈரான்-ஹிஸ்புல்லா-ஹமாசின் மீதான நெருக்கடிகள் அமைதிகாலத்தில் மேலதிகமாக்கப்படும்.
பொதுவாக போர் நிறுத்த காலங்களில் அரசுகள் தம் படைகளை வலிமைப்படுத்துவதும், போராளிகளை சிதைப்பதும் காலந்தோறும் நடந்து வருகிறது. காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்கும் இசுரேலின் படையை பின்வாங்க வைப்பதும், பாலஸ்தீனத்திற்கான சுயநிர்ணய உரிமை உறுதி செய்யப்படுவதும் நடக்கவில்லையெனில் ‘அமைதிக்காலம்‘ மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். தொடர்ந்து ஆதரவளித்து நிற்பதும், மக்கள் திரள் போராட்டத்தை நடத்துவதும் மட்டுமே பாலஸ்தீனத்தை பாதுகாக்கும்.
ஹிஸ்புல்லா சிதையுமெனில் மேற்காசியாவில் இசுரேல் தனது எல்லைகளை விரிவாக்கும். லெபனான், காசா, மேற்குகரை என ஆக்கிரமிக்கும். துருக்கி, ஜோர்டான், எகிப்து, சவுதி ஆகிய நாடுகளின் இசுரேல் ஆதரவு நிலை அல்லது வாய்சவடால் அறிக்கைகள் பாலஸ்தீன மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. துருக்கியின் கச்சா எண்ணையை கொண்டே இசுரேல் உயிர்வாழ்கிறது. ஜோர்டானின் வான்வெளி பாதுகாப்பு, சவுதியின் மறைமுக ஒத்துழைப்பு, எல்லையில் கைகட்டி வேடிக்கை பார்த்த எகிப்து நாட்டின் இராணுவம் என எதையும் வரலாறு மறக்காது.
துருக்கி, ஜோர்டான், எகிப்தில் எழுந்த வெகுமக்கள் கொந்தளிப்பை அடக்கி வைத்திருப்பது எத்தனை காலம் நீடிக்குமென தெரியவில்லை. ஹமாஸ், ஹிஸ்புல்லா வீழுமெனில் உலகெங்கும் மக்களுக்கான இயக்கங்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக மாறும். 2009ல் டில்லியில் காசுமீரின் சையது அலிஷா கிலானி இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்த கருத்தரங்கில் என்னிடம் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன, ‘.. புலிகளின் அழிவு காசுமீர் போராட்டத்திற்கும் பின்னடைவை கொடுக்கும்’ என்றார். இதேபோன்றதொரு கருத்தை ஐ.நாவில் நான் சந்தித்த போராளி ஒருவர் சொன்னார், ‘..ஈராக்கில் சதாம் உசேன் எத்தனைகாலம் தாக்குபிடிக்கிறார் என்பதை பொறுத்தே நமக்கான தயாரிப்பு காலம் கிடைக்கும் ..‘ என தலைவர் சொன்னதாக சொன்னார்.
ஏகாதிபத்திய ஆதிக்க நகர்வுகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட தொடர் சங்கிலி போன்றவை. 2006ல் தராகி சிவராம் சொன்னார்,’..ஈரான் மீதான அமெரிக்கா நடத்த இருக்கும் போர் தாக்குபிடிக்க வேண்டுமென்றால், திருகோணமலையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாக வேண்டுமென்றார்..‘ அதுதான் நடந்தது. திருகோணமலை அமெரிக்க கப்பற்படை ராணுவ தளமாக 2007 முதல் தொடர்கிறது. லெபனான், யேமன், பாலஸ்தீனம், சிரியா வீழுமானால் போர் ஈரானை நோக்கி நகரும். அப்படியெனில் திருகோணமலை மட்டுமல்ல, காட்டுப்பள்ளி அமெரிக்க கப்பற்படை தளமும் போருக்குள் ஈர்க்கப்படும். எவையும் தனித்த நிகழ்வுகள் அல்ல.
2006- 2007ல் அமெரிக்க திருகோணமலையை தமதாக்க இரணில் விக்கிரமசிங்கே வழியாகவும், இந்திய அரசு வழியாகவும் புலிகளில் இருந்து கருணாவை உடைத்து வெளியேற வைத்தார்கள். இப்பிளவு நடந்த சில மாதங்களில் அமெரிக்காவின் அக்சா -இராணுவ ஒப்பந்தம் திருகோணமலையில் நிறைவேறியது. ஏகாதிபத்தியம் இந்தியாவின் கடற்கரை பகுதியில் தரையிறங்குவதை அம்பலப்படுத்தாமல், கருணாவை சாதி அடிப்படையில், பிரபாகரன் வெளியேற்றினார் என சில தமிழக இடதுசாரி அறிவுசீவிகள் கட்டுரைகள் எழுதிக்குவித்து பொங்கினார்கள். கருணா என்பவர் தலித்துமல்ல, போராளியுமல்ல என்பதை வரலாறு நிரூபிக்கும் சமயத்தில் ஈழம் அழிந்து சில காலம் கடந்து விட்டிருந்தது.
இனிமேலாவது சாமானியர்கள் தமது அரசியல் அறிவுத்திறனை வளர்த்து, விரிவடைந்து செல்லும் ஏகாதிபத்திய போர்களை புரிந்துகொள்வது காலத்தி கட்டாயம். இந்த உந்துதலே மே17 இயக்கம் உருவாக காரணமாக அமைந்தது.