அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

அதிகார வர்க்கத்தின் அலட்சிய போக்கினை மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியிருக்கிறது கள்ளக்குறிச்சி நிகழ்வு. கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த பிறகு மீண்டும் இந்த ஊரின் பெயர் மற்றுமொரு துன்பியல் நிகழ்வுக்காகவே அறியப்படுகிறது. அண்மையில் கள்ளச்சராயம் குடித்ததால் இங்கு அறுபதிற்கும் மேற்பட்டோர் பலியானது தமிழ்நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜூன் 19, 2024 அன்று கள்ளக்குறிச்சியில் மலிவு விலையில் கிடைத்த கள்ளச்சாராயத்தைக் குடித்ததால் கிட்டத்தட்ட அறுபது பேர் மேல் மரணமடைந்துவிட்டனர். ஒரே ஊரில், ஒரே தெருவில் வசிக்கும் ஆண்கள் கூட்டாக மரணித்ததால் ஊர் முழுக்க மரண ஓலமே கேட்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும், கணவனை இழந்த பெண்களும், தந்தையை இழந்த குழந்தைகளும், சகோதரனை இழந்த சகோதரிகளும் கதறி அழும் சத்தம் நம் அனைவரையும் கலங்க செய்கிறது. பெற்ற பிள்ளைகளின்றி, குடும்பத்தலைவர்கள் இன்றி, தந்தையின்றி, சகோதரனின்றி மீண்டு வருவது என்பது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

பெருநகரங்களில் இருந்து தொலைவிலிருக்கும் கள்ளக்குறிச்சி போன்ற  மாவட்டங்களில் வாழ்வது பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே. அரசின் நலத்திட்டங்களை மட்டுமே நம்பி, அதேவேளையில் அரசிற்கு வரி மூலம் பொருளாதார பங்களிப்பு செய்யும் மக்களே இந்த மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர். எளிமையாக பாதிக்கப்படக்கூடிய வர்க்கமாக (vulnerable people) அறியப்படும் இவர்களுக்கு டாஸ்மாக் (TASMAC) மூலம் கிடைக்கும் சாராயத்தை விட  கள்ளச்சாராயம் எளிதாகவே கிடைக்கிறது.

எனவேதான் அடித்தட்டு மக்களில் சிலர் உடல் உழைப்பிற்கு மருந்தாக கருதி சாராயத்திற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். பலர் சுக துக்க நிகழ்வுகளில் மது அருந்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ‘உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கண் பார்வை பறிபோகும்‘ போன்ற விழிப்புணர்வு இன்றி மெத்தனால் (தொழிற்சாலைகளில் வேதி பொருட்களை தயாரிக்க பயன்படும் மெத்தில் ஆல்கஹால்) அளவிற்கு அதிகமாக கலந்து இங்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடந்து வருவதாக மக்கள் தெரிவிப்பது நாம் கவனித்து பார்க்க வேண்டிய விடயம். இந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகளும், அவர்களை கட்டுப்படுத்தும் திமுக அரசும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கின்றனர். குறிப்பாக காவல்துறை யாருக்காக வேலை செய்கிறது என்ற கேள்வியை கள்ளக்குறிச்சி மரணங்கள் எழுப்பியுள்ளன. 

மேலும் அந்தப் பகுதியின் காவல்துறையை மீறி கள்ளச்சாராயங்கள் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. காவல்துறை தவறிழைக்கும் போது அது மக்களின் கோபமாக மாறி, நேரடியாக ஆட்சியாளர்கள் மீதே திரும்பும் என்பது திமுக ஆட்சிக்கு தெரியாததல்ல. கள்ளக்குறிச்சியின் திமுக பொறுப்பாளர்கள் ஒருவருக்கும் தெரியாமல் இது நடந்திருக்க முடியுமா? என்பதும் கேள்வியாக எழுகிறது. அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், திமுக தன் கட்சியினர் இடையே காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.    

எனவேதான் இப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகார வர்க்கத்தில் உள்ள களைகள் களையப்படுவது முக்கியமானதொரு கருத்தாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் இன்று ‘போலீஸ் ஸ்டேட்‘ என்று குறிப்பிடும் அளவிற்கு மிகவும் அதிகளவில் கண்காணிப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இரவு முழுவதும் சோதனைகள், ஊரடங்கு போல 10 மணிக்கு மேல் கடைகள் மூடப்படுதல், இரவில் செல்பவர்களிடத்தில் விசாரணை என பல நடைமுறைகள் இருக்கும்போது கள்ளச்சாராய  குற்றங்கள் நிகழ்ந்தது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருக்கிறது.

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் கள்ளக்குறிச்சியில் நடக்கும் நிகழ்வுகளாக பள்ளிமாணவி ஸ்ரீமதி மரணம், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி, இப்போது கள்ளச்சாராய மரணங்கள் என பல சர்ச்சைகள் தொடர்கின்றன. சாதிய அரசியல் பரவலாக தலைதூக்கி நிற்கும் இம்மாவட்டத்தில் இத்தகைய தொடர் நிகழ்வுகளை நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்குப் பிறகு ஒருபுறம் காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்த நிலையில் மறுபுறம் கள்ளச்சாராய ஒழிப்பில் அலட்சியம் காட்டப்பட்டிருக்கிறது. அரசியல் செயல்பாட்டாளர்களை கைது செய்வதற்கு காட்டிய முனைப்பை இங்கு கள்ளச்சாராய ஒழிப்பில் காட்டியிருந்தால் இன்று இந்த மரணங்களைத் தடுத்திருக்கலாம்.

கடந்த ஆண்டு மரக்காணம், செங்கல்பட்டு பகுதிகளில் இதேபோன்று கள்ளச்சாராயம் அருந்திய 22 பேர் உயிரிழந்த போதே திமுக அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொருமுறையும் அதிகாரிகள் பணியிட மாற்றம், சிபிசிஐடி விசாரணை என்பதோடு கள்ளச்சாராய பிரச்சினை அப்போதைக்கு முடித்து வைக்கப்படுகிறது. இதற்கு ‘நிரந்தரத் தீர்வு‘ என்ன என்பதை இனியாவது திமுக அரசு யோசிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் முதல் கள்ளச்சாராய பிரச்சினை வரை நேரடியாகப் பாதிக்கப்படுவது பெண்களே. எனவேதான் மதுவிற்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்களை பெண்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டம் வலுத்த போது, வீதியில் இறங்கி போராட்டம் செய்த பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒரு காவல்துறை அதிகாரி. இதை ஊடகங்கள் படம்பிடித்து காட்டியபோதும் எந்தவித தண்டனையும் அளிக்காமல் அவருக்கு பதவி உயர்வு தந்து பாராட்டியது அப்போதைய அதிமுக அரசு.

திமுக அரசு பதவியேற்ற பிறகு அந்த மாவட்டங்களில் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தால் இன்று கள்ளச்சாராய பிரச்சினையை ஓரளவிற்காவது தடுத்திருக்கக்கூடும். அதிகார வர்க்கம் கை ஓங்கும் போதெல்லாம் அரசு போராடும் மக்கள் பக்கம் துணை நின்றிருந்தால் இன்று சமூகத்தில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். ஆனால் அத்தகைய நிகழ்வுகள் சில நாட்களிலேயே மறக்கப்படுவதால் / மறைக்கப்படுவதால் இன்றும் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்கதையாகின்றன.

கட்சி வேறுபாடின்றி பல கட்சிகளை சேர்ந்தவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுவதை விடவும் யார் மீது பழி சுமத்தலாம் என்றே பல கட்சியினரும் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். சிலர் “கள்ளச்சாராயம் குடித்தவருக்கு எதற்கு பத்து லட்சம் நிவாரணம்?” என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

“கள்ளச்சாராயத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நட்ட ஈடு என்பது கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய அரசாங்கத்தின்  செயலற்ற தன்மைக்கு கொடுக்கப்படும் தண்டனை” என்று கூறுகிறார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். (கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் பின்னணி மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து மே இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தமிழ்வினை ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்: https://www.youtube.com/watch?v=eoYF2nYFmSE )

எனவே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோனவர்கள், வேடிக்கை பார்த்த அதிகாரிகள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு திமுக அரசு நின்று விடக்கூடாது. மதுவை ஒழிப்பது, நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்துவது, மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றை அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

2020ல் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தால் இறந்த 120 பேர், 2022ல் குஜராத்தில் இறந்த 42 பேர் வரிசையில் இன்று கள்ளக்குறிச்சியும் இணைந்திருக்கிறது. ‘மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை அனைத்து அமைப்புகளும் மீண்டும் அரசுக்கு நினைவூட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »