நூற்றாண்டு காலம் சக்கையாய் உறிஞ்சப்பட்டு தூக்கி எறியப்படும் மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் சில சலுகைகளை மட்டுமே தருவதாக கூறுகிறது திமுக அரசு. இது குறித்து அப்பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர், அத்தொகுதியின் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கண்டிக்கவில்லை.
அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கோ இதுகுறித்து பேசுவதற்கே துணிச்சலில்லை. பெரிய நிறுவனங்களிடம் காசு வாங்கி கட்சி வளர்க்கும் பாஜக கண்டு கொள்ளவேயில்லை. தமிழ் தொழிலாளர்களுக்கான இப்பிரச்சனையை வலியுறுத்த வேண்டிய, தமிழ்த் தேசியத்திற்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சி எட்டியும் பார்க்கவில்லை.
நூற்றாண்டு காலம் உழைத்த தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்காமல் புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசிற்கும், அவர்களுக்கு உரிமையான நட்ட ஈட்டினை வழங்காமல் நிறுவனத்தை மூடும் பாம்பே – பர்மா டிரேடிங் நிறுவனத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம், மாநாடு, கள ஆய்வு என தொடர்ந்து மேற்கொண்ட மே 17 இயக்கம், ஜூலை 31, ல் இரண்டாம் முறையாக ஊடக சந்திப்பையும் நடத்தியது.
ஊடக சந்திப்பின் பொழுது தோழர். திருமுருகன் காந்தி பேசிய உரையின் சுருக்கம் :
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு திமுக அரசு சில நிவாரணங்களை அளிக்க முன்வந்திருக்கிறார்கள். கலைஞர் திட்டத்தின் கீழ் மூன்று செண்ட் வீடும், சமவெளி பகுதியில் தொழில் துவங்கினால் கடன் உதவியும் அளிப்போம் என்று கூறியதை முதலில் வரவேற்கிறோம். ஆனால் இந்தத் திட்டங்கள் பொதுவான நலத்திட்டங்களின் கீழ்தான் வருகின்றன. இவை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகின்ற திட்டத்தின் ஒரு பகுதியே. மாஞ்சோலை மக்களுக்காக உருவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கக்கூடிய பட்டியல் சமூக மக்கள் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்ற மக்களுக்காக உருவாக்கப்பட்ட நலத்திட்டங்கள்.
மாஞ்சோலை பிரச்சனையை நான்கு தலைமுறை பிரச்சனையாக, நான்கு வழிப்பட்ட பிரச்சனையாகப் பார்க்கலாம்.
- வெள்ளையர் காலத்தில் இருந்து நீட்டிக்கப்படும் காலனிய அடிமைத்தனத்தின் நீட்சியாக இருக்கிறது.
- அது பட்டியலின மக்கள் பிரச்சனையாகவும் உள்ளது.
- 70 ஆண்டுகளாக மாஞ்சோலை நிர்வாகத்துடன் போராடிய அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது.
- கூலி உயர்வுக்காக, 1999 ஆம் ஆண்டு போராடிய மக்களில் 17 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட துயரத்தின் சாட்சியாகவும் இருக்கிறது.
மாஞ்சோலைத் தொழிலாளர்கள், 1967-ம் ஆண்டு காலகட்டத்தில் போராட்டம் நடத்திய போது, அன்றைய அண்ணா தலைமையிலான திமுக ஆட்சி அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. தொழிலாளர்களுடைய தொழிற்சங்கம் வெற்றி பெறும் வகையில் அன்றைய நெல்லை மாவட்டத்தின் திமுக பொறுப்பாளராக இருந்த ’ரத்தினவேல பாண்டியன்’ அவர்கள் மக்களுக்குத் துணையாக இருந்தார். 1967-லிருந்த தொழிலாளர்களுடனான இணக்கமான திமுக-வின் நிலைப்பாடானது, 1999 காலகட்டத்தில் நிர்வாகத்துக்கு சாதகமாக மாறி, தொழிலாளர்களுக் எதிராக மாறியதை நாம் கண்டோம். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து அந்த மக்களுக்கு இப்போது இந்த மாதிரியான நெருக்கடியான சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
மாஞ்சோலையை விட்டு பாம்பே – பர்மா டிரேடிங் நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் ”எந்தவித தொழிற்சங்கமும் வைத்திருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அம்மக்களுக்கு தமிழ்நாடு அரசுதான் அந்த மக்களுக்கு உரிய நட்ட ஈட்டைப் பெற்றுத் தர முடியும்” என்பதே அனைவருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது. இந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து, அவர்களின் கோரிக்கை என்ன என்பதைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையிலான நிவாரணத் திட்டங்களை திமுக அரசு வழங்கவில்லை.
கடந்த வாரம் நெல்லை மாவட்ட ஆட்சியரை நான், நெல்லை முபாரக் மற்றும் சனநாயக அமைப்புகளும் சென்று சந்தித்தபோது, அந்த மாவட்ட ஆட்சியர் என்ன திட்டங்களை சொன்னாரோ அதைத்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் சொல்லி இருக்கிறார். அங்கு உள்ள அதிகாரிகள் என்னென்ன நட்டைஈடு தருவோம் என்று சொன்னார்களோ, அதைத்தான் மாண்புமிகு அமைச்சரும் நிவாரணம் என்கின்ற அடிப்படையில் தருவதாக சொல்லியிருக்கிறார். இது ஏமாற்றத்துக்குரியது. இது அவர்களுக்கு உரிய நிவாரணம் அல்ல, அதனால் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அந்த மக்களுக்கு உரிய திட்டம் என்ன என்பது குறித்து அந்த மக்களிடம் பேசியிருக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை அந்த நிறுவனத்திடம் பேசி, அதன் பின்பு அதிகாரியின் வழியாக வெளியிட வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை என்றால் இதனை கண்துடைப்பாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
பாம்பே – பர்மா டிரேடிங் நிறுவனத்தை மூடப் போகின்றார்கள் என்றால், தொழிலாளர்களுக்கு கொடுக்கும் தொகைகள் எப்படி விருப்ப ஓய்வு திட்டத்தில் வரும்? ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒரு சில பேர் விருப்ப ஓய்வைப் பெறலாம். ஆனால் ஒரு நிறுவனத்தில் பணி செய்கின்ற அனைவரும் விருப்ப ஓய்வு பெறுவதாக எப்படி இருக்க முடியும்? இது எந்த தொழிலாளர் சட்ட விதிக்கு உட்பட்டது? இதை தொழிலாளர் துறை அமைச்சர் கேட்க வேண்டுமா, இல்லையா?
ஒரு நிறுவனம் மூடுவதாக இருந்தால் மூன்று மாதங்களுக்கு முன்பே அதனை அறிவிக்க வேண்டும். அந்த மூன்று மாதங்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன் பின்பு தொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டை ஈடு கட்டுவதற்குரிய பேச்சுவார்த்தையை தொழிலாளர்களிடம் நடத்த வேண்டும். இதுதான் முறை. இதன்படி தான், சென்னையில் ’போர்டு நிறுவனம்’ மூன்று மாதத்திற்கு முன்பு மூடுவதாக அறிவித்து, அதற்குரிய ஊதியமும் கொடுத்து, பின்பு நட்ட ஈட்டையும் கொடுத்தார்கள். ஒரு வருடத்திற்கு 143 நாட்கள் என கணக்கிட்டு தொழிலாளர்களுக்கு 20-80 லட்சம் வரை நட்ட ஈட்டைக் கொடுத்தார்கள். ஒரு நிறுவனத்தை மூடுகிறோம் என்று அறிவித்தால் இதுதான் நடைமுறை.
ஆனால் இங்கு தொழிலாளர்கள் விருப்பு ஓய்வு பெற்று விட்டார்கள் என்று கூறி நிறுவனத்தை மூடுகிறார்கள். அது எப்படி விருப்ப ஓய்வு ஆகும்? கிட்டத்தட்ட 540 தொழிலாளர்கள் வரை ஏமாற்றி கட்டாய விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்கள். யாரையாவது கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற்றால், அவர்கள் தொழிலாளர் வாரியத்தை அணுகலாம் என அமைச்சர் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் கட்டாய விருப்ப ஓய்வு முறையானதல்ல என்பது அமைச்சருக்கும் தெரிந்திருக்கிறது.
தொழிலாளர் துறையைச் சார்ந்த தேயிலைத் தோட்ட அதிகாரி (plantation officer) அங்கு சென்று, அம்மக்களின் குறையை கேட்க வந்திருப்பதாக சொல்லி, எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடம், ஒரு படிவத்தில் குறையைக் கேட்டதாக எழுதியிருப்பதாகக் கூறி கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கிறார். அம்மக்களை ஏமாற்றி, விருப்ப ஓய்வுக்கான கையொப்பப் படிவத்தில் கையொப்பம் வாங்கியிருக்கிறார் அந்த அதிகாரி. அதன்படியே, விருப்ப ஓய்வு என நிறுவனம் அறிவித்திருக்கிறது. முதலில் ஏமாற்றியது அந்த அதிகாரி. அதிகாரியும், அந்த நிறுவனமும் கூட்டு சேர்ந்து அம்மக்களை ஏமாற்றியதை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறது.
அந்தப் பகுதியில் தொழிலாளர்களுக்கு என்று ஏகப்பட்ட அமைப்புகள் இருக்கிறது. அவர்களிடமும் தொழில்துறை அமைச்சர் கேட்கவில்லை. விருப்ப ஓய்வின் அடிப்படையில் நிறுவனம் தந்த 25% பணத்தை விருப்ப ஓய்வு தொகையாக தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள், மீதியுள்ள 75% பெற்றுத்தர அரசு நிர்வாகம் உதவி செய்யும் என்று மட்டும் சொல்கிறார். அது தானாகவே கிடைத்து விடப்போகிறது. அதற்கு அமைச்சர் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அந்த விருப்ப ஓய்வு எப்படி சரி? அமைச்சர் இதனை எப்படி ஏற்றுக் கொண்டார்?
விருப்ப ஓய்வு கொடுத்தால், கடிதம் கொடுத்த மூன்று மாதத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அது சட்டத்தில் இருக்கிறது. 540 பேரும் அதனைத் திரும்ப பெறுவதாக சொன்னார்கள் என்றால் திமுகவின் நிலைப்பாடு என்ன? அந்த மக்களுக்கான முறையான சம்பளமும் கூட கொடுக்கப்படவில்லை. அனைத்து நிறுவனங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்பதே நடைமுறை. ஆனால் மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தருவதில்லை. அதுபோல அரசு விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் தருவதில்லை. இப்படி சம்பளம் தராத நாட்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 20 வருடம் வேலை செய்தவர்களுக்கு, கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி இருக்கிறார்கள். 2028 தான் அந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிகிறது. நான்கு வருடம் முன்கூட்டியே நிறுவனம் மூடப்படுகிறது. அதை கணக்கில் எடுத்தால்கூட கிட்டத்தட்ட 8 இலிருந்து 10 லட்சம் வருகிறது. ஆக அந்த நிறுவனம் மக்களை ஏமாற்றிய தொகையை 20 லட்சம் ரூபாய். இது குறித்து சமூக நீதி அரசு என்று சொல்லக்கூடிய திமுகவிற்கு ஏன் இது தெரியவில்லை?
திமுக அரசு அதிகாரிகளை நம்புகிறது. அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள். அரசு அதிகாரிகள் நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்து கொண்டு மக்களை வஞ்சிக்கிறார்கள். இதை அமைச்சர் கேட்டிருக்க வேண்டும் அப்பகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர் கேட்டிருக்க வேண்டும். அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரசும் இது குறித்து பேசவில்லை. எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் பாஜகவும் வாயைத் திறக்கவில்லை. யார் தமிழன், தமிழன் இல்லை என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியும் வாய் திறக்கவில்லை. எல்லா கட்சியினரும் ஓட்டு மட்டும் வாங்கி கொண்டார்களே தவிர, அம்மக்களின் சட்ட உரிமை பற்றி எவரும் பேசவில்லை. போராடுவதற்கும் துணிச்சல் இல்லை.
ஆளுங்கட்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டிய அதிமுக எதுவும் கேட்கவில்லை. சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக எடப்பாடி கூறினார். கள்ளக்குறிச்சி பிரச்சனை வந்ததற்குப் பிறகு, அது குறித்து பேசவே இல்லை. ஆக திமுகவும் முறையான நிவாரணம் அறிவிக்கவில்லை. மக்களிடம் ஓட்டு வாங்கிய எந்த பெருங் கட்சியும் இது குறித்து கவலைப்படவே இல்லை.
BBTC நிறுவனம் 1140 கோடி வரித்தொகையை நிலுவையில் வைத்திருக்கிறார்கள் என்று, நேற்று நீதிமன்றத்தில் திமுக அரசு ஆவணத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு போன்ற பலமான ஒரு அரசாலேயே அந்த நிறுவனத்தில் இருந்து பணம் வாங்க முடியவில்லை என்றால், சாதாரண தொழிலாளிகள் எப்படி வாங்க முடியும்? இப்படி அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கக்கூடிய இந்த நிறுவனத்தை பற்றி ஏன் திமுக அரசு தட்டிக் கேட்கவில்லை? எதிர்க்கட்சியான அதிமுக ஏன் பேசவில்லை? கூட்டணி கட்சியான காங்கிரசு ஏன் பேசவில்லை? மூன்றாவது பெருங் கட்சி என்று சொல்லக்கூடிய பாஜக, நாதக கட்சிகள் ஏன் பேசவில்லை?
அந்த நிறுவனம் எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளது என்றால், “தொழிலாளர்களுக்கு ஓய்வு நாட்களில் சம்பளம் தரவில்லை. விருப்ப ஓய்வு என்ற பெயரில் குறைந்தபட்ச தொகையுடன் ஏமாற்றி இருக்கிறார்கள். குத்தகை காலம் முடிவதற்கு நான்கு வருடத்திற்கு முன்பாகவே அந்த நிறுவனத்தை மூடுகிறார்கள்”. இப்படிப்பட்ட மோசமான நிறுவனத்தை தமிழ்நாடு அரசு எப்படி விட்டு வைத்திருக்கிறது?
அந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளாக, நிறுவனத்தில் இருந்து நட்ட ஈடாக, சட்டப்பூர்வமான தொகையான 15 லட்சம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும், நிறுவனம் முன்கூட்டியே மூடப்படுவதால், அதற்குரிய இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தர வேண்டும் என முன்வைக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக அரசு 10 லட்சம் ரூபாய் தந்தது. குடும்பத்தலைவர் இறந்ததால் அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக தருவோம் என்று சொன்னது. இதைப் போலத்தான் மாஞ்சோலை தொழிலாளர் குடும்பங்களும், வேலை இல்லாத போது சிரமத்திற்கு ஆட்படும். அவர்களுக்கும் ஏன் அரசு 10 லட்சம் தரக்கூடாது? அதேபோல விவசாயம் தொடர்வதற்காக குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலம் கேட்கிறார்கள். இவர்கள் நான்கு தலைமுறைகளாக அந்த நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும், இந்திய அரசுக்கும் வருமானம் ஈட்டி தந்திருக்கிறார்கள். அதனால் இந்த கோரிக்கைகள் நியாயமானதே.
பாஜக கட்சிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கொடை கொடுத்தது BBTC நிறுவனம்தான். பாரதிய ஜனதா கட்சிக்கு நிதி அளித்து புரவலராக இருக்கும் BBTC நிறுவனத்திடம் இருந்து, உரிய நட்ட ஈட்டினை பெற்றுத் தரவேண்டும். தமிழ்நாட்டில் அதிக அளவு விற்பனையாகும் பிரிட்டானியா நிறுவனம் இவர்களுடையதுதான். 11000 கோடி அளவுக்கு விற்பனை செய்கிறார்கள், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம் மூலம் சுமார் 2600 கோடி வருமானம் ஈட்டுகிறார்கள், ஒரு ஆண்டின் மொத்த வருமானம் சுமார் 16000 கோடி ரூபாய், அந்தக் கம்பெனி முதலாளிக்கு 6 கோடி போய் சம்பளம் என இவ்வளவு பெரிய வருமானம் உடைய இந்த நிறுவனத்தில் இருந்து திமுக அரசு உரிய நட்ட ஈட்டினை பெற்றுத் தர வேண்டும்.
இந்நிறுவனம் வரி நிலுவையின் மூலம் தமிழ்நாடு அரசையும் ஏமாற்றி இருக்கிறது. உரிய நட்ட ஈட்டினைத் தராமல் தொழிலாளர்களையும் ஏமாற்றி இருக்கிறது. இப்படிப்பட்ட நிறுவனத்தின் அலுவலகம் சென்னையிலும் இருக்கிறது. வருகிற செப்டம்பர் 1ந் தேதி சனநாயக அமைப்புகளுடன் கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த போகிறோம். மே 17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இந்திய குடியரசு கட்சி தமிழக மக்கள் சனநாயக கட்சி என்று பல்வேறு சனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து முற்றுகையிட போகிறோம். தமிழர்களை வஞ்சிக்கும் இந்த நிறுவனத்தின் பிரிட்டானியா பிஸ்கட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த போகிறோம்.
தமிழ்நாடு அரசை வரி நிலுவைத் தொகையால் ஏமாற்றிவிட்டு, தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்து உரிய நட்ட ஈட்டினை தராமல் ஏமாற்றி விட்டு செல்லும், நூஸ்லிவாடியாவின் பாம்பே – பர்மா டிரேடிங் நிறுவனத்தை தொடர்ச்சியாக எதிர்த்து போராடப் போகின்றோம். அந்த மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை. அவர்களிடம் ஓட்டு வாங்கிய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக என அனைத்து கட்சிகளும் அவர்களை கைவிட்டு இருக்கிறது. இந்த கட்சிகளும் அம்மக்களை வஞ்சித்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டையும் பகிரங்கமாகவே நாங்கள் வைக்கிறோம். இந்த கட்சிகள் சேர்ந்து அம்மக்களுக்காக ஒரு முடிவெடுக்க வேண்டும். எங்களைப் போன்ற சனநாயக அமைப்புகள்தான் அந்த மக்களுடன் துணைக்கு நிற்கிறோம்.
BBTC நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களுக்கு இதுவரை வேலை செய்ததற்கு உரிய நட்ட ஈடு, அந்த நிறுவனம் ஏமாற்றிய ஞாயிறு விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களுக்கும் உரிய ஊதியத்திற்கான நட்ட ஈடு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மூடக்கூடியதால் ஏற்படும் இழப்பீடு என இவற்றிற்கெல்லாம முறையான பேச்சுவார்த்தை நடத்தி வழங்கப்பட வேண்டும். விருப்ப ஓய்வு என்று ஏமாற்றி படிவத்தில் கையெடுப்போம் வாங்கிய தோட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த அலுவலகத்திற்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கும்.
வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு, வட நாட்டு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு, கூலி உயர்வு கேட்டதால் கொல்லப்பட்ட அந்த மக்களுகான அநீதி தொடர்ந்தது. இப்போதும் உரிய நட்ட ஈட்டிற்கான நீதி கேட்டு போராடுகிறார்கள். இதனை திமுக அரசு பெற்றுத் தர வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுக குரல் கொடுக்க வேண்டும். தேசிய கட்சிகளாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. அதனையும் சுட்டிக் காட்டுகிறோம். அந்த மக்களுக்குரிய தீர்வு வரும் வரை போராட்டத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதை இந்த சமயத்தில் உறுதி கூறுகிறோம்.