மணிப்பூர் இராணுவ வீரர் மனைவிக்கு சங்கிகள் செய்த பாலியல் வன்முறை!
என்ன நடக்கிறது மணிப்பூரில்!! – தொடர் கட்டுரையின் 2ம் பாகம்.
பாசிசம் என்ன செய்யும்? அது பெண்களின் ஆடைகளை அவிழ்த்து வன்கொடுமை செய்யும், பின் அந்த நிகழ்வை நியாயப்படுத்தும், அதைப்பற்றிப் பேசிக் கூடாதென்று தடைபோடும். அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும்.
காசுமீர் மாநிலத்திலோ வடகிழக்கு மாநிலங்களிலோ நடக்கும் பல நிகழ்வுகள் இந்தியாவின் மைய விவாதங்களில் இடம்பெறாமல் போவதற்குக் காரணங்கள் பல உண்டு. அதிலும் தற்போதைய அரசுகளே திட்டமிட்டு அம்மாநிலங்களில் இணையச் சேவைகளைத் துண்டித்துத் தனிமைப்படுத்தி கலவரங்களை அரங்கேற்றுவதைக் காண முடிகிறது. எனவே தான் வடகிழக்கு மணிப்பூரில் சிறுபான்மை மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்முறை வெறியாட்டம் மிகவும் தாமதமாகவே வெளி வருகின்றன.
இதேபோன்று கடந்த மே 4 தேதியன்று மணிப்பூரில் குக்கி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு வன்கொடுமை செயலின் காணொளி நேற்று (20 ஜூலை ) ஊடகங்கள் வழியாக வெளியானது. கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடந்து வரும் குக்கி மக்கள் மீதான இனப்படுகொலைக்குச் சாட்சியமாக இக்காணொளி சமூகவலைத்தளங்களில் பரவியது.
குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பழங்குடி பெண்களை ஆடை இல்லாமல் பல நூற்றுக்கணக்கான மெய்ட்டி இனத்து ஆண்கள் சாலையில் நடத்திச் செல்லும் காணொளி இணையத்தில் பரவியது. இது இந்தியா மற்றும் உலகெங்கிலும் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டதாகக் கூறப்படும் குக்கி மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலை இக்காணொளி நம் கண்முன்னே நிறுத்துகிறது.
கடந்த மே 4 அன்று மணிப்பூரில் காங்போக்பி என்ற மாவட்டத்தில் குக்கி மக்கள் அதிகம் வாழும் கிராமத்திற்கு அருகில் மெய்டி வன்முறை கும்பல், ஆளும் பாஜக அரசின் ஆதரவுடன், குக்கி மக்களின் வீடுகளை எரித்து கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்து, பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தஞ்சம் புகுவதற்காகக் காட்டிற்குள் மறைந்திருக்கிறார்கள். பின்னர் காவல்துறையால் மீட்கப்பட்டுக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் மெய்டி கும்பலால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினர் குக்கி பழங்குடி பெண்களைப் பாதுகாப்பு அளிக்காமல் வன்முறை கும்பலிடம் அவர்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். காவல் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இது நிகழ்ந்திருக்கிறது.
இதனையடுத்து, வன்முறை மெய்டி கும்பல் பழங்குடி பெண்களைக் கொடூரமான முறையில் தாக்கி, அவர்கள் ஆடைகளைக் களையச் செய்துள்ளனர். மேலும், அவர்களை ஒரு நெல் வயலுக்கு இழுத்துச் சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வன்கொடுமை சம்பவம் நடந்த பகுதியை மெய்டி மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் குக்கி மக்களுக்கு நடந்த இந்த வன்கொடுமை ஜூன் மாதம் வரை வெளியுலகிற்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. சுமார், 77 நாட்களுக்குப் பிறகு வெளியாகிய சம்பவத்தைக் கண்டு கொந்தளித்துப் போன பொதுமக்களின் கோபத்திற்கு அஞ்சி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் குறித்து வாய் திறக்காத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி “… அனைத்து முதல்வர்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்.” என்கிற வகையில் பேசினார். மணிப்பூர் பாஜக நடத்தும் வன்முறையை நேரடியாகக் கண்டிக்க பிரதமர் மோடிக்கு நேர்மையோ தைரியமோ இருக்கவில்லை.
மே மாதம் நடந்த வன்கொடுமை குறித்து மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பு ஜூன் மாதமே தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறது. குக்கி பெண்களுக்கு எதிரான ஆறு வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு மின்னஞ்சலும் செய்திருக்கிறது. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தேசிய மகளிர் ஆணையம், மணிப்பூர் காணொளியை நீக்குமாறு ட்விட்டருக்கு ஆணை விதித்துள்ளது. மணிப்பூரில் பாஜகவினர் நிகழ்த்திய பெண்கள் மீதான வன்முறைகளை மறைக்கச் செயலாற்றும் மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட (பெரும்பான்மை கிறித்துவ) குக்கி பெண்களின் உரிமைகளைக் குறித்துப் பேச மறுக்கிறது.
மேலும், ‘எல்லையில் ராணுவ வீரர்கள்…’ என்று எதற்கெடுத்தாலும் முழங்கிடும் பாஜகவின் தேசபக்தி முகமூடி இன்று கிழிந்து தொங்கியது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் ராணுவ வீரர் என்றும் கார்கில் போரில் பணியாற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல்,“பெண்களைக் கடவுளாக வணங்குகிறோம், பாரத மாதா..” என்றெல்லாம் முழங்கும் ஆர்எஸ்எஸ் பாஜக கட்சியினரின் பெண்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அம்பலமானது. ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை நாட்டின் ஜனாதிபதி ஆக்கினோம் என்று கூறிக்கொள்ளும் பாஜக, மணிப்பூரில் பழங்குடி மக்களுக்குச் செய்த கொடுமைகள் இன்று வெட்டவெளிச்சமாகி உள்ளன.
(மேலும் விரிவான கட்டுரைகள்: மணிப்பூர்: பா.ஜ.க.வின் சனாதன மாடல்; இந்து மதம் மணிப்பூருக்கு வந்தது எப்போது? கலவரத்தின் வரலாறு! )
நாடு முழுவதும் மிகவும் கொந்தளிப்புகளை இந்தக் காணொளி ஏற்படுத்தினாலும், பாஜக அரசு இதை வழக்கம்போல் மேம்போக்காகவே கையாளுகிறது. மணிப்பூர் முதல்வர் பாஜகவின் பிரென் சிங் “இது போன்று நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்துள்ளது.” என்று தனது ஆட்சியின் யோக்கியதையைப் பத்திரிகையாளரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி இத்தகைய வன்கொடுமை நிகழ்வுகளை மூடி மறைக்கும் எண்ணத்தில் இந்த காணொளியைப் பகிர வேண்டாம் என்று சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூரில் இந்துத்துவ பாஜகவினர் நிகழ்த்திவரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை பல்வேறு அரசியல் செயற்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டித்தனர். இதன் தொடர்ச்சியாக, 20 ஜூலை மாலை மணிப்பூர் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்ஸாரி ஒருங்கிணைப்பில் பதாகை ஏந்தி அமைதியான ஒன்றுகூடல் மெரினாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடினர். இப்படி, மணிப்பூரில் பாஜக அரங்கேற்றும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து அமைதியாகக் கூடியவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வன்கொடுமை காணொளி வெளியானதையடுத்து, “..அரசு செயல்படவில்லை என்றால், நாங்கள் செயல்படுவோம்” என்று உச்ச நீதிமன்றம் தன் பங்கிற்குக் கருத்து தெரிவித்திருக்கிறது. 77 நாட்களாக ஒரு குறிப்பிட்ட மத சிறுபான்மை பழங்குடி இனத்தவர் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளைத் தடுத்திட இயலாமல் அரசியலமைப்பு நிறுவனங்கள் செயலற்று இருக்கும் அவலத்தில் தான் இந்தியா உழன்று கொண்டிருக்கிறது.
இந்துத்துவ மத வெறி பாசிசத்தின் கோரப்பிடியில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில்; செயலற்று போன எதிர்க் கட்சிகளும் அரசியலமைப்பு நிறுவனங்களும் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பைத் தருவதாகத் தெரியவில்லை. இன்று மணிப்பூரில் ஒரே இனத்திற்குள் நிகழ்த்தப்படும் “இன ரீதியான” மோதல் வன்முறை அரசியலை வாய்ப்புள்ள எந்த மாநிலத்திலும் இந்துத்துவா பயன்படுத்தும் என்பதைத் திராவிட இன அரசியலைப் பேசும் தமிழர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.