இந்து மதத்திற்கு  மாறியதால்  சிதையும் மணிப்பூர்

மெய்தி மக்களை மதமாற்றிய பார்ப்பனர்கள்.

மணிப்பூர் பூர்வ குடிகளின் சனாமாஹி கடவுள் ‘பிசாடாவோ’

கிழக்கு இந்தியாவின் காஷ்மீரான மணிப்பூர் இன்று பற்றி எறிந்துகொண்டிருக்கிறது. இந்துக்களாக இருக்கும் மெய்தி மக்கள் கிருத்துவ மத குக்கி இனமக்கள் மீது வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.  ஆனால் இதற்கான விதை கி.பி 16ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்டுவிட்டது. அன்று அந்த ஊரின் பெயர் மணிப்பூர் அல்ல, மெய்ட்ரேபாக் அல்லது கங்கிலேய்பாக் என்று அழைக்கப்பட்டது.

பார்ப்பனர்கள் வருகையால் மெய்தி மக்களின் மொழி சமஸ்கிருத மயமாக்கப்பட்டது. ‘புயா’ என்று அழைக்கப்படும்  அவர்களின் சிந்தனை மரபு பார்ப்பனிய சிந்தனை மரபினால் உட்கிரகித்து விழுங்கப்பட்டது. மெய்தி மக்கள் சிறிது சிறிதாக தங்கள் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களைப் பார்ப்பன சித்தாந்தத்திடம் பறிகொடுத்து முழுவதுமாக பார்ப்பனீய இந்துக்களாக மாறிப்போனார்கள்.  இந்த அரசியல் வரலாற்றுப் பின்புலத்திலிருந்து தான் இன்று மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை நாம் அவதானிக்க முடியும். இந்த வன்முறைகளால் பயனடையப் போவது யார்? என்ற கேள்வியிலிருந்து தான் தமிழர்கள் இந்த அரசியல் நிகழ்வுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மெய்ட்ரேபாக் (மணிப்பூர்) பல நூற்றாண்டுகளாக மெய்தி அரசர்களின் அரசாட்சியின் கீழே இருந்துள்ளது. சுற்றிலும் மலைகளையும் அவற்றினிடையே உள்ள பள்ளத்தாக்கு பகுதியைச் சமவெளிகளாகவும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் செழிப்பான பூமி தான் மணிப்பூர் மாநிலம். இந்த சமவெளியில் தான் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60% ஆக உள்ள ‘மெய்தி’ மக்கள் வாழ்கின்றனர். மீதமுள்ள ‘குக்கி’ மற்றும் ‘நாகா’ இன மக்கள் அங்குள்ள மலைப்பகுதியில் காலகாலமாக வாழ்ந்துவரும் மலைவாழ் பூர்வ குடிகள். சமவெளி வசிப்பு மற்றும் எண்ணிக்கை பெரும்பான்மை காரணமாக இயல்பாக மெய்திகள் சமூக ஆதிக்கம், அரசதிகாரம் கொண்ட மக்களாகவே இருந்தனர். இன்றும் அவ்வாறே இருக்கின்றனர்.

படம் 1: காஹம்பா- தொய்பி ஜாகோய் (Khamba-Thoibi Jagoi ) எனப்படும் மெய்திகளின் பழமையான நடனம். RKCS paintings on the walls of temple of Ibudhou Thangjing at Moirang, Manipur. Picture Courtesy – Recky Maibram.

மானுடவியல் (Anthropology) படி மங்கோலிய இன கூறுகளைக் கொண்டவர்கள் மெய்தி மக்கள் என்று பெரும்பாலான இளைய தலைமுறை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவுகளை முன் வைக்கின்றனர். ஆனால், பார்ப்பன ஆய்வாளர்கள் மற்றும் பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் ஆய்வாளர்கள் மெய்தி மக்கள் இந்தோ-ஆரிய (Indo-Aryan) இனத் தொகுப்பினராக அடையாளப்படுத்துவதில் நெடுங்காலமாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மணிப்பூர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது என்றும்; அது மகாபாரதத்தில் மணிப்பூர் குறிப்பிடப்படுவதிலிருந்து தெரிவதாகவும் இவர்கள் கூறி வருகின்றனர். மேலும், மெய்திகள் மகாபாரத அர்ஜுனன் வழித்தோன்றல்கள் என்கிற புராணக் கதைகளை அதற்கு ஆதாரமாகப் புனைகின்றனர். மகாபாரத கதையின் படி அர்ஜுனன் மணிப்பூர் பெண்ணான ‘சித்தரங்கடா’-வை (Chitrangada) மணந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், அந்த குழந்தையின் பெயர் ‘பப்ருவாஹனா’ (Babhruvahana) என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, தங்களை அர்ஜுனன் மகனான பப்ருவாஹனாவின் வழித்தோன்றல்கள் என்கிற பார்ப்பனர்களின் கட்டுக்கதைகளை மெய்தி மக்கள் சிலர் நம்புகின்றனர்.

மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள் மெய்தி மக்களின் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள்   மலைவாழ் மக்களின் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களோடு பொருந்திப் போவதாகக் கருதுகின்றனர். மலைவாழ் மக்கள் மற்றும் மெய்தி மக்களுக்கு இடையே அவ்வளவு பெரிய வேறுபாடுகள் இல்லை என்ற கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். பழங்குடி மக்களைப் போலவே மெய்தி மக்களின் முன்னோர்கள் மாமிச உணவுகளை உண்ணும் பழக்கத்தையும், இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்ததைச் சான்றாகக் கருதுகின்றனர். ஆனால், தங்களை மலைவாழ் மக்களின் வழித்தோன்றல்களாக உளவியலாக ஏற்றுக் கொள்ள முடியாத, பார்ப்பன சிந்தனையில் சிக்கிய, உயர் சாதி மெய்திகள் இதை மறுத்தே வந்துள்ளனர்.

Ibudhou Thangjing painting
படம் 2: தமிழர்களின் கபடி விளையாட்டைப் போன்ற மெய்திகளின் பாரம்பரிய விளையாட்டு (இன்றைய ஹாக்கி விளையாட்டு போன்றது).RKCS paintings on the walls of temple of Ibudhou Thangjing at Moirang, Manipur. Picture Courtesy – Recky Maibram.

முதன் முதலாக, கி.பி. 1516 ல் தான் பார்ப்பனர்கள் மெய்ட்ரேபாகிற்கு வந்ததாக அரச குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது. மெய்தி மன்னன் ‘லாம்கியம்பா’ (Lamkiyamba) ஆட்சிக்காலத்தில் ‘செய்தரோல் கும்பபா’ (Cheithral Kumbaba) என்கிற பார்ப்பனர் தெகாவோ (Tekhao – இன்றைய அசாம்) பகுதியிலிருந்து மெய்ட்ரேபாகிற்கு வந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. இந்த காலகட்டத்தில் தொடர்ந்து சிறு சிறு குழுக்களாக வந்த பார்ப்பனர்கள் மெய்தி இனப் பெண்களை மணந்து தங்கள் வழித்தோன்றல்களை மெய்ட்ரேபாகில் உருவாக்கினர். இந்த பார்ப்பன வம்சாவளியினர் தங்களை ‘மெய்தி பாமன்கள்’ (மெய்தி பிராமன்கள்) என்று அழைத்துக் கொள்கிறார்கள். 

Kaw Phaba painting
படம் 3: காவ் ஃபாபா (Kaw Phaba) மெய்திகளின் வீரன் காளையை அடக்கும் காட்சி. 
RKCS paintings on the walls of the temple of Ibudhou Thangjing at Moirang, Manipur.
Picture Courtesy – Recky Maibram

 தமிழர்களைப் போலவே தனித்த பண்பாட்டு அடையாளம்; புயா என்கிற சிந்தனை மரபு; பார்ப்பனியத்திற்கு எதிரான ‘சனாமாஹி’ என்கிற பூர்வ குடி மத வழிபாடு என்று தனித்த பண்பாட்டைக் கொண்ட மெய்திகளை பண்பாட்டு ரீதியாக வீழ்த்தியது இந்த மெய்தி பாமன்கள் எனப்படும் மணிப்பூர் பார்ப்பனர்கள். கி.பி. 1717 ஆம் ஆண்டு மெய்தி அரசன் கரிப்னிவாஸை வைணவ மதத்திற்கு மாற்றியதன் மூலம் வைதீக வைணவ வழிபாட்டு முறையை அரசு அதிகாரத்தின் மதமாகப் பார்ப்பனர்கள் மாற்றினர். இப்படியாக, அரசியல் தலைமையின் வழிபாடு மாற்றப்பட்டதை அடுத்து பொது மக்கள் வழிபட்டு வந்த ‘சனாமாஹி’ மரபை மெய்தி மக்களிடம் இருந்து பார்ப்பனீயம் அபகரித்துக் கொண்டது. ஆக, தமிழர்கள் எப்படி இந்துக்கள் அல்லவோ, அது போல மெய்திகளும் இந்துக்கள் அல்ல.

படம் 4: ‘பிசாடாவோ’ என்கிற மெய்திகளின் கட்டுமான கலைகளுக்கான கடவுளை ‘விஸ்வகர்மா’ என்று இந்துமதம் உருமாற்றி உள்ளது.

‘சனாமாஹி’ என்பது தமிழரின் மூதாதையர் வழிபாட்டை ஒத்த தொல் வழிபாட்டு முறையாகும். அது ‘சனாமாஹிசம்’ (Sanamahism) என்று சொல்லும் அளவிற்கு மரபு வழி கூறுகளைக் கொண்ட சிந்தனை போக்குடையதாகும். மெய்தி மொழியில் எழுதப்பட்ட இந்த சிந்தனை மரபின் நூல்களே ‘புயா’ என்று அழைக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்ட அரசன் கரிப்னிவாஸ் பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டு மெய்தி மொழியில் எழுதப்பட்ட பல நூல்களைத் தீக்கிரையாக்கி உள்ளான். பார்ப்பனீயம் செல்லும் இடங்களில் எல்லாம் அங்கிருக்கும் தொல் சிந்தனை மரபுகளைத் தீயிட்டு அழிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்தடுத்து வந்த மெய்தி அரசர்களின் ஆதரவோடு 18 ஆம் நூற்றாண்டில் மெய்ட்ரேபாக் என்கிற பெயர் சமஸ்கிருத மணிப்பூராக மாற்றப்பட்டது.

இப்படி பார்ப்பனிய ஊடுருவல் மூலம் தாங்கள் இழந்தவை எவை, தங்கள் மூதாதையர் சிந்தனை மரபு எது என்பதை அறியத் தமிழர்கள் இடையே திராவிட இயக்கம் தோன்றியது போல அங்கு எந்த பண்பாட்டு அரசியல் இயக்கமும் தோன்றிடவில்லை. ஆகையால், தங்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை மறந்து பார்ப்பனிய கூறுகளான இந்து மத சாதி ஆதிக்கங்களை உள்வாங்கி, பார்ப்பன இந்திய ஒன்றியத்தின் லாப நோக்கு அரசியலுக்காக, தங்கள் இனக் குழுக்களுக்குள்ளாகவே முரண்பட்டு நிற்கின்றனர்.

படம் 5: பழமையான சனாமாஹி கோயில்.

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் காங்லா அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள சனாமாஹி கோயில் (Sanamahi Temple) அல்லது சனாமாஹி சங்க்லன் என்பது சனாமாஹிசத்தின் உயர்ந்த தெய்வமான இலெய்னிங்தோ சனாமாஹியின் கோயிலாகும். இது ஆசியாவின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். மெய்தி இனத்தின் சிந்தனை மரபின் எச்சமாக இருக்கும் சனாமாஹி-யை கட்டுப்படுத்தும் அதிகாரம் தற்போது பாஜகவின் பிடியில் உள்ளது.

பாஜக கட்சியைச் சேர்ந்த நாங்கதோம்பாம் பிரேன் சிங் தான் இன்று மணிப்பூரின் முதலமைச்சராகவுள்ளார். இவர் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர். இவர் சனாமாஹி மத வழிபாட்டை மீட்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “லைநின்ங்தோ சனாமாஹி கோயில் வாரியத்தின்” (Lainingthou Sanamahi Temple Board) தலைவராகவும் இருக்கிறார். அதாவது மணிப்பூரின் முதலமைச்சர் ஒருவர் கோயில் வாரியத்தின் தலைவராகவும் இருப்பது மணிப்பூர் வரலாற்றில் இதுவே முதல் முறை. மிக முக்கியமாக, பாஜக அரசின் முதலமைச்சர் தொல் வழிபாடு சனாமாஹி மையத்தை நேரடியாகக் கட்டுப்படுத்தும் பதவியில் இருப்பது எளிதாகக் கடந்து போகும் செய்தியல்ல. இக்கோயில் மணிப்பூரில் சனாமாஹி வழிபாட்டை பின்பற்றுபவர்களுக்கான அதிகாரப்பூர்வ வழிபாடு மையம் ஆகும். பூர்வ குடி மக்கள் வழிபடும் தளங்களை பாஜக கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்களின் அரசியலையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம், மணிப்பூரில் செய்து முடித்த அரசியலை ஆர்.எஸ்.எஸ் பாஜக பிற மாநிலங்களில் செய்யவும் திட்டமிடும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் வைதீக முறைப்படி இயங்காத சிறு தெய்வ கோயில்களைக் கைப்பற்றும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக அமைப்பினர் செயல்படுகின்றனர் என்பதை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து கூறிவருகிறது. தமிழ் நாட்டை கைப்பற்றத் துடிக்கும் இந்த கும்பலின்  திட்டத்தை அம்பலப்படுத்தி “உன் சாமி வேறு, என் சாமி வேறு” என்று தோழர் திருமுருகன் காந்தி கூறியதற்குப் பின்னர் தான் மே பதினேழு இயக்கத்தின் மீதும் தோழர் திருமுருகன் காந்தியின் மீதும் அரச அடக்குமுறைகள் அதிகப்படுத்தின என்பதைத் தமிழர்கள் இங்குப் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம்.

தங்களை ஆரிய இன வழித்தோன்றல்களாகக் கருதிய மெய்தி மக்கள் தான் தற்போது தங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்பதை முன்வைத்துள்ளனர். இதன் பின்புலத்தில் அரசியல் காய்களை நகர்த்திப் பலனடையப் போவது பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான். உண்மையில் மங்கோலிய இனக் கூறுகளைக் கொண்ட மெய்தி மற்றும் குக்கி இனமக்கள் இடையே உள்ள முரண்களைக் கூர்தீட்டி அவர்களை பகடைக்காய்களாக்கும் வேலையை பாஜக வெற்றிகரமாகச் செய்துள்ளது. அடுத்த பத்தாண்டுகள் மிக நிதானமாகக் குக்கி இனமக்கள் மீது ஒரு இனப்படுகொலை நிகழ்த்தும் அளவிற்கு மெய்தி மக்கள் சுயமிழந்து இந்து மத வெறியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

இரண்டு குக்கி இனப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மேலும் நிர்வாணமாகத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்டுமிராண்டித் தனம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த காணொளியைப் பார்க்கும் யாருக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள இந்த கொடூரம், நிகழும் போது அங்கே சுமார் ஐம்பதுக்கும் அதிகமானோர்  சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது தான் இனப்படுகொலைக்கான ஆரம்பப் புள்ளி. இப்படி தான் ஈழத்தில் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதையும், கொலை செய்வதையும் ‘பௌத்த பேரினவாதம்’ ரசித்துக் கொண்டாடியது. மெய்திகள்  தங்கள் ‘இந்து பேரினவாதத்தை’ நிகழ்த்த இந்த வன்முறை வெறியாட்டங்களை உளவியலாகச் சகஜமாக்கும் வேலையைத் தான் மணிப்பூர் அரசு செய்துவருகிறது. இந்த வன்முறைகளைத் திட்டமிட்டுச் செய்யும் ஒன்றிய மாநில அரசுகளைப் பார்த்து இந்தியாவில் உள்ள எதிர்க் கட்சிகளோ அப்பாவிகளைப் போல பாஜக அரசு வன்முறைகளைத் தடுக்க தவறிவிட்டது என்று புலம்புகின்றனர்.

ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழர்களைப் போலப் பண்பாட்டு ரீதியாக, அரசியல் ரீதியாகவும் ஆரியப் பார்ப்பனீய பேரினவாதத்திற்குச் சவால் விடும் அரசியல் இயக்க வரலாற்றுப் பின்புலம் யாருக்கும் வாய்க்கவில்லை. மணிப்பூரில் நிகழ்த்தப்படும் அரசியலை, இனப்படுகொலையைச் சந்தித்த ஒரு இனமாகத் தமிழர்கள், நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். மலையாளிகளை , தெலுங்கர்களை, கன்னடர்களைத் தமிழர்களின் முதன்மை எதிரிகளாக நம்மிடம் சித்தரிக்கப்படுவதன் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள சாதிய முரண்பாடுகளில் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பாஜக குளிர்காயத் துடிப்பதை நாம் உணர வேண்டும். நம் வரலாற்று எதிரி இந்த முரண்களைத் தான் நம்மை எதிர்க்கும் ஆயுதமாக ஏந்துவான். தமிழர்களாகிய நாம் நம் வரலாற்றையே ஆயுதமாக்கி ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்!

(மேலும் விரிவான கட்டுரைகள்: மணிப்பூர்: பா.ஜ.க.வின் சனாதன மாடல் ; இந்து மதம்  மணிப்பூருக்கு வந்தது எப்போது? கலவரத்தின் வரலாறு! ; வரலாற்றின் கருப்பு பக்கங்களில் நுழைந்த மணிப்பூர் )

One thought on “இந்து மதத்திற்கு  மாறியதால்  சிதையும் மணிப்பூர்

  1. பார்ப்பனியத்தின் வெற்றி இதுதான். அவர்கள் விரித்த வலையில் நூற்றாண்டுகளுக்கு முன்பே விழுந்து சிறிது சிறிதாக தங்கள் தனித்த பண்பாட்டு அடையாளங்களைத் திருடு கொடுத்து இந்துக்களாய் மாறிப்போன மெய்திகள், குக்கி பழங்குடி இனத்தவர் மீது தொடுக்கும் வன்முறையை ஆளும் பாசிச பா.ஜ.க வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. பார்ப்பனர்கள் இதே யுத்தியைத்தான் தமிழ்நாட்டிலும் கையாண்டார்கள். இன்னும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அதை இனங்கண்டு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள போதுமான அரசியல் வரலாற்றுத் தெளிவை தந்தை பெரியார் நமக்குத் தந்திருக்கிறார். மணிப்பூர் வன்முறைக்குப் பின்னால் இருக்கும் பார்ப்பனிய அரசியலைத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரையை எழுதிய தோழருக்கு வாழ்த்துகள். இதை அனைவரும் படித்துத் தெளிவு பெறுதல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »