மே 17 இயக்கப் போராளி மொழிப்போர் ஈகியர் சிவா தீலீபன் நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு

தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தி மொழி திணிக்கப்படுவதை கண்டித்து தன்னுயிரை ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு மார்ச் 29, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை ஆர்.ஏ.புரம் முத்தமிழ்ப் பேரவை டி.என்.ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.

மையம் கலைக்குழுவினரின் பறையிசைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், மே 17 இயக்கத்தின் இளம் தோழர்கள் பாடல் பாடி, கவிதை வாசித்து அரங்கினை எழுச்சியூட்டினர். மே 17 இயக்கத்தின் தோழர் கொண்டல்சாமி நிகழ்வினை ஒருங்கிணைக்க, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் குடும்பத்தினர் தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தோழர் சிவா திலீபன் அவர்களின் இணையர் தோழர் கீதா அவர்களும், அவர்களது மகள் தோழர் கோகிலா அவர்களும் நினைவேந்தல் உரையாற்றினர்.

மே 17 பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன், பத்திரிகையாளர் தோழர் நக்கீரன் கோபால், ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் ஜக்கையன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் தோழர் அருள்மொழி, புதிய குரல் ஆசிரியர் தோழர் ஓவியா, தற்சார்பு விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், சிபிஎம் கட்சியின் தோழர் பாரதி, தமிழ்த்தேசிய விடுதலைக் கழகத்தின் தோழர் வே. பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சீர்காழி செல்வம், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் தோழர் ஒப்புரவாளன், இயக்குநர் கவிதா பாரதி, கவிஞர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

மொழிப்போர் ஈகி சிவா திலீபனை பற்றி தோழர்கள் இங்கே பகிர்ந்தார்கள். நமக்கு தோழர் சிவாவை போல ஒருவர் வீட்டிலோ அல்லது நண்பர்கள் வட்டத்திலோ இருப்பர். அவர் அதிகம் பேச மாட்டார். ஆனால் நம்மை பாதுகாத்துக் கொண்டே இருப்பார். நம்மை வலுப்படுத்திக் கொண்டே இருப்பார். அன்றாடம் பேசி பழகக்கூடிய ஒரு மனிதர்களாக இல்லாமல் இருந்தால் கூட, அவரிடம் ஒரு ஆழமான நட்பு இருக்கும். நமக்கு எப்போதும் தைரியத்தை கொடுக்கக்கூடிய நபராக இருப்பார். அப்படிப்பட்ட ஒரு சேமிப்புதான் எனக்கு சிவா தோழர்.

தோழர் சிவாவை போன்று இன்னொரு தோழரை நம்மால் உருவாக்கி விட முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. சிவாவினுடைய ஈகத்திற்கான முடிவு என்பது என்னை நிலைகுலைய வைத்திருக்கிறது. அதை சொல்வதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை, தவறும் கிடையாது, கோழைத்தனமும் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு நண்பனை/ ஒரு தோழனை/ ஒரு தளபதியை/ ஒரு செயல்வீரனை/ ஒரு சிந்தனையாளனை/ தமிழ் மொழி நேசிக்கக்கூடிய ஒரு அற்புதமான போராளியை யாருக்கு இழப்பதற்கு மனது வரும்? ஏனெனில் நாம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டிய இருக்கிறது. இந்த மொழிப்போர் சண்டை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாக எதிரிகள் முளைத்துக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு தலைமுறையும் சண்டைப் போட்டு கொண்டே இருக்கிறது. நமக்கு முன் ஒரு தலைமுறை சண்டைப் போட்டது, அதற்கு முன்பு ஒரு தலைமுறை 2000 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையும் சண்டை போடுகிறது. இந்த தலைமுறையிலும் நாம் சண்டை போடுகிறோம். அந்த சண்டையில் தற்போது ஒரு தோழனை இழந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் பெருந்திரளான போராட்டங்கள் நடந்த சமயத்தில் தற்கொடைகள் தன்னை ஈகியராக்கக்கூடிய நிகழ்வுகள் நடப்பதில்லை. எப்போதெல்லாம் இந்த செயலுக்கு துணிகிறார்கள் என்று யோசித்து பாருங்கள்!

2008, 2009 ஈழப்போர் காலகட்டத்தில் பெருந்திரளாக மக்கள் திரளவில்லை என்கின்ற ஆதங்கம் இருந்தது. அன்றைக்கு எல்லா கூட்டங்களுக்கும் சென்றிருக்கின்றோம். ஒரு சொற்பமான எண்ணிக்கையை தவிர யாரும் பெரிதாக இருக்க மாட்டார்கள். ஆனால் மிகப்பெரிய ஆபத்து தமிழினத்தின் மீது வருகிறது என்கின்ற கவலையில் எல்லா போராட்டத்துக்கும், அது யார் நடத்தினாலும் போவோம். ஆனால் மக்கள் பங்கேற்பு இருக்காது. அச்சமயத்தில் தான் தோழர் முத்துக்குமார் அந்த அமைதியை உடைத்தார். முத்துக்குமாரினுடைய அந்த செயல் என்பது: அன்றைக்கு சமூகத்தில் இருந்த ஒரு அமைதி, பங்கேற்க வராமல் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே இருக்கிறது என்கின்ற இடத்தில் இருந்த தமிழர்களை, வீதிக்கு வரவைத்த ஒரு எழுச்சியை முத்துக்குமாருடைய ஈகம் உருவாக்கியது.

அதற்கு பின் ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து ’மூன்று தமிழர்களுக்கு தூக்கு’ என்று வந்த பொழுது, இதற்கு முன்தான் ஒன்றரை லட்சம் பேரை பறிக்கொடுத்தோம், மறுபடியும் ’இருக்கின்ற தமிழனை கொலை செய்வதற்கு டெல்லியிலிருந்து வந்துவிட்டானே’ என்கின்ற கோபம் இருந்தது. எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கடுமையாக போராடிய சமயத்தில்தான் தோழர் ’செங்கொடி’ தன் ஈகத்தின் மூலமாக, மக்களை வீதிக்கு வர வைத்தார். மூவர் தூக்கு ரத்து செய்வதிலே செங்கொடியினுடைய இறுதி உருவம் மிக முக்கியமான பங்கை வகித்தது.

அன்றைக்கு என்ன நடந்தது எனில்: எந்த ஒரு நபராலும் எதிர்க்க முடியாதவர் என்று நினைத்துக் கொண்டிருந்த அதிமுகவினுடைய ஜெயலலிதா அம்மையாருடைய ஆட்சி காலத்தில், அவரது கட்சி கொடியை இறக்கி அதை கிழித்து போட்டு எரித்து போட்ட சம்பவம் செங்கொடி ஊர்வலத்தில் நடந்தது. எந்த கட்சியாக இருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும், நாங்கள் துணிந்து நிற்போம் என்று தமிழர் முடிவெடுத்தார்கள். அதை செங்கொடி செய்தார். அதற்குப் பிறகு பெருந்திரளான போராட்டங்கள் நடந்தது.

நீங்கள் யோசித்து பாருங்கள்! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது யாரும் இப்படி தன்னுடைய உயிரை கொடுக்க வேண்டும் என்கின்ற தேவை வரவில்லை. எல்லாரும் உற்சாகமாக போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் 2016, 17, 18 காலகட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் வந்தது. ஆனால் யாரும் உயிர் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. ஏன்னெனில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு நின்றார்கள்.

என்னைக்கு போராட்டத்திற்கு மக்கள் வரவில்லையோ, அன்றைக்கு ஈகத்திற்கான முடிவு போன்ற நிகழ்வுகள் தமிழ் சமூகத்தில் தட்டி எழுப்புகின்ற நிகழ்வுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. அதைத்தான் சிவா தீலீபன் செய்திருக்கிறார்.

இன்றைக்கு போராட்ட களத்திற்கு வருவது என்கின்ற பழக்கம் இல்லாத, அதிலிருந்து ஒதுங்கி நிற்கக்கூடிய பண்பு பெரும்பாலான போராட்டங்களில் நாம் பார்க்கின்றோம். அது தோழர் சிவா திலீபனுக்கு நிறைய மன உளைச்சல். அவர் தமிழ் மொழி போராட்டத்திற்காக தமிழை காக்க வேண்டும் என்பதற்காக மட்டும் உயிர் கொடுக்கவில்லை, அவர் ஒரு முழுமையான போராளி. சமூக விடுதலைகாகவும், சாதி ஒழிப்புக்காகவும் களத்தில் நின்றவர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்காக களத்தில் நின்றவர். தொழிலாளர் விடுதலைக்காக களத்தில் நின்றவர். இப்படி பல்வேறு கோரிக்கைகளுக்காக களத்தில் நின்ற தோழர், இந்த போராட்டத்தில் தன்னுடைய உயிரை கொடுத்தாவது இந்த இனம் முன்னகர வேண்டும், நீங்கள் எல்லாம் வீதிக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதில் மிக தெளிவாக இத்தனை போராட்டங்களில் பங்கெடுத்த பொழுதெல்லாம் உயிரை கொடுக்க வேண்டும் என்று அவர் முடிவெடுக்கவில்லை. ஆனால் தமிழ் மொழி என்று சொன்னால் அதற்காக வீதிக்கு வருவான் என்கின்ற நம்ப நம்பிக்கையிலே அவர் தன்னை கொடுத்திருக்கிறார்.

தோழர் சிவா திலீபனின் முழக்கம் எது? ’தமிழினமே உன்னுடைய உரிமையை வெல்வதற்காக வீதிக்கு வா’ என்பதுதான்.

அன்றைக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே பங்கெடுக்கக்கூடிய 15 பேர் கொண்ட பட்டியலில் சிவா திலீபன் பெயர் கிடையாது. சிவா திலீபனுக்கு நாங்கள் அழைப்பு கொடுக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு போராட்டம் தெரிந்த உடனே வந்து நிற்கிறார். எனக்கு அவரை பார்த்த உடனே அதிர்ச்சி. என்னவெனில் அவர் வரும் போராட்டத்தை கூர்மைப்படுத்துவார், அந்த போராட்டத்தை பின்னுக்கு நகர்த்த முடியாது. அப்படிப்பட்ட ஒழுக்கம் இருக்கும். இவர் இந்த எல்லை தாண்டக்கூடாது எனில் தாண்ட மாட்டார். ஆனால் எந்த கோரிக்கைக்காக வந்திருக்கிறோமோ, அதில் ஒரு அடி பின் வைக்க விட மாட்டார்.

சிவா திலீபன் வரவில்லையெனில் நாங்கள் வெறும் ஒரு இரண்டு பலகையில் மட்டும் இந்தி எழுத்தை அழித்துவிட்டு திரும்பி வந்தாலும் வந்திருப்போம். ஆனால் சிவா திலீபன் வந்தபின், அந்த பூங்கா நிலையத்தில் இருக்கக்கூடிய அனைத்து எழுத்துக்களையும் அழிக்க வேண்டும் என்ற முடிவில் அழிக்க ஆரம்பித்தோம். அவர் ஒன்றை அழித்தவுடன் அடுத்தடுத்து இடத்தில் அழித்துக்கொண்டு இருந்தார். அப்போது நடந்த போராட்டம் முகநூல் நேரலையில் (Facebook live) பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், ஒரிடத்தில் அவர் தோலைத் தட்டி ’என் கூட நில்; என அவரை இழுத்து பிடித்தேன். ஆனால் அவர் போயிட்டார். அவர் இந்த அமைப்பை முன்னுக்கு தள்ளுகின்ற இயந்திரம்(engine). அவரை இழந்ததை வருந்தாமல் இருக்க முடியுமா? எப்படி நிலையாக இருக்க முடியும்?

அதன்பின் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட முக்கியமான 30 நிலையங்களில் இந்தி மொழி அழிக்கப்பட்டது. சென்னை, காட்பாடி, ஆம்பூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களில் அழிக்கப்பட்டது. தோழர்களே இது வெறும் மொழி அழிப்புக்காக விடயத்தில் நாம் செய்யவில்லை.

இன்றைக்கு ஒரு மிகப்பெரிய சண்டை நடக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோடு நிற்கக்கூடிய அந்த ஒட்டுண்ணிகளை எல்லாம் மொத்தமாக அம்பலப்படுத்த வேண்டும் என்றால், தமிழ் மொழி நமக்கு கலங்கரை விளக்கமாக முன்னுக்கு நிற்கிறது. இந்த மொழியில் கை வைத்து பேச ஆரம்பித்தோம் என்றால், இவனது உண்மையான முகம் என்ன என்பது அம்பலப்பட்டு போகும்.

தேர்தல் வருகிறது தோழர்களே, நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்! இந்த தேர்தலிலே பாரதிய ஜனதா கட்சியை அம்பலப்படுத்துவதற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு போராட்ட அணிவகுப்புதான் ”இந்திய எதிர்ப்பு போராட்டம்”.

2021 ஆண்டில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்து நடத்திய ஆட்சியை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தினோம். ஆனால் இந்த ஐந்து ஆண்டில் அவன் எதிர்கட்சியை போல நடந்து கொண்டிருக்கிறான். இவனை எப்படி அம்பலப்படுத்துவீர்கள்? இந்துத்துவ அரசியலை தமிழ்நாட்டு தேர்தலினுடைய பிரச்சனையாக கொண்டு வந்து நிறுத்துவதை, இன்றைக்கு திடீரென மே 17 இயக்கம் எடுக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிந்தித்து முன்னுக்கு நகர்த்தி கொண்டு வந்தது. அதில் சரியாக பாஜக மாட்டினான்.

இன்றைக்கு இந்தி அழிப்பு போராட்டத்திற்கு பதில் சொல்ல முடியாத ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. பதில் சொல்ல விரும்பாத ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். இதைப் பற்றியான எந்த அக்கரையும் படாமல் தனித்து நிற்கக்கூடியது நாம் தமிழர் என்கின்ற ஒட்டுண்ணி. இந்த மூன்றையும் அம்பலப்படுத்துகின்ற ஒற்றை போராட்டமாக இந்திய அழிப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு போராட்டம் தான் தமிழ்நாட்டினுடைய அரசியலை முன்னுக்கு நகர்த்திக் கொண்டே வந்திருக்கிறது என்றால், கடந்த 100 ஆண்டுகளில் நமக்கு ”இந்தி எதிர்ப்பு, அந்த இந்திய எதிர்ப்பின் மூலமாக இந்துத்துவ எதிர்ப்பு, அந்த இந்துத்துவ எதிர்ப்பின் மூலமாக வடவர் எதிர்ப்பு” என்கின்ற, அந்த அணிதான் நமக்கு வந்து வெற்றியை கொடுத்திருக்கிறது. அதில்தான் சிவாதிலீபன் துணிந்து இந்த முடிவை எடுத்து செய்திருக்கிறார்.

எனக்கு தோழர் கீதா, அவர்களுடைய இரண்டு பிள்ளைகள் போன்ற துணிச்சல் எனக்கு கிடையாது. நீங்கள் துணிவாக பேசுகிறீர்கள். நான் அவ்வளவு துணிவோடு இல்லை. இதை சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் துவண்டு போய்தான் இருக்கிறேன்.

இன்றைக்கு தோழர்களை உருவாக்குவது என்பது மிகச் சிரமமான விடயம். ஆனால் அரசியலாக உருவான ஒரு தோழன் கிடைப்பது என்பது அதைவிட சிரமமான விடயமாக இருக்கிறது. சிவா எனக்கு அண்ணன் போல, கீதா தோழர் எனக்கு சகோதரி, அது ஒரு வகையில் எனக்கு ஒரு குடும்பம்.

நான் 2017 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக கைது செய்யப்பட்டபோது, அந்த கைது செய்யக்கூடிய பட்டியலில் சிவா பெயர் கிடையாது. ஆனால் தன்னை இணைத்துக்கொண்டு எனக்காக சிறைக்கு வந்தவர். ஈகி சிவாதிலீபன் 25 நாட்கள் சிறையில் இருந்தார். அவர் பல விடயங்கள் அன்றைக்கு பேச முடிந்தது. அவர் மிக கூச்சப்படக்கூடியவர், அதிகமாக பேச மாட்டார், ஆனால் விளக்கங்களை கேட்டுக்கொண்டே இருப்பார். இது எப்படி பார்ப்பது? அது எப்படி பார்ப்பது? இதை எப்படி பண்ணுவது? அதை எப்படி புரிந்துக்கொள்வது? தோழர் என கேட்பார். அவ்வளவு நேசம் மிக்க ஒரு அன்பான தோழனை நான் கண்டதில்லை. மே 17 இயக்கத்தை தைரியமாக துணிச்சலாக நாம் இறங்கி போராட்டத்தை நடத்துகிறோம் எனில், எனக்கு பின்னால் ஒரு யானையை போல நிற்கக்கூடியவர் சிவா திலீபன் தான்.

தோழர்களே இந்தி ஒழிப்பு என்பது: இந்தி திணிப்பின் மூலமாக நம் மீது கொண்டுவரப்படுகின்ற வடவர் ஆரிய ஆதிக்கத்தை முற்றிலுமாக முடித்து கட்டுவது. அது நம் தலைமுறையிலே நான்காவது அலையாக எழுந்திருக்க வேண்டும். தேர்தல் முடியட்டும் தமிழ்நாடு நிச்சயம் விடியும். நம்பிக்கையோடு இருங்கள்.

உலக ஒழுங்கு மாறிக்கொண்டே இருக்கிறது. யாரெல்லாம் மிகப்பெரிய வல்லரசு என்று நினைத்துக் கொண்டிருந்தார்களோ, அவரெல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். எவனெல்லாம் வழுத்தவன் என்று சொன்னானோ, அவனது ராணுவம் துண்டு துண்டாய் சிதறிக் கொண்டிருக்கிறது. உலகத்தில் எந்த வல்லரசும் எந்த பேரரசும் நிலைத்து நின்றதாய் வரலாறு இல்லை.

தமிழ் மொழி இருக்கக்கூடிய இந்த நிலத்திலே தமிழன் தலைநிமிர்ந்து சுயமரியாதை உணர்வோடு வாழுகின்ற காலம் நிச்சயம் வரும். இந்த போராட்டத்தை நான் முன்னகர்த்த வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு தோழரும் ஒரு பத்து தோழரை உருவாக்குங்கள். அதுதான் சிவா கேட்கிறார்.

நாங்கள் அவையம் இரண்டு நாள் தமிழ் தேசிய பெருவிழா மாநாட்டை நடத்தினோம். அந்த மாநாட்டில் இறுதிநாள் கிட்டத்தட்ட 100 தோழர்கள் அமைப்பில் இணைந்தார்கள். நம் அமைப்பில் இதுவரைக்கும் தோழர்கள் இணைப்பு என்ற ஒரு வேலை நடந்ததே கிடையாது. முதல் முறையாக 100 தோழர்கள் இணைவதை ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். எங்கள் அமைப்பில் இணையுங்கள் என நாங்கள் யாரையும் கேட்டதும் இல்லை. வருகின்ற தோழர் எல்லாம் வரலாம், இணைந்து கொள்ளலாம், பேசலாம், விவாதிக்கலாம், கற்றுக்கொள்ளலாம், வேலை செய்யலாம், போராடலாம், சிறைக்கு செல்லலாம், அது அவரவர் விருப்பம். ஆனால் முதல் முறையாக 100 பேர் இணைகிறார்கள் என்று ஒரு இணைப்பை நாம் ஏற்படுத்திய பொழுது அன்றைக்கு மிகப்பெரிய உணர்வோடு ஒரு குழந்தையை போல அந்த இடத்தில் அனைவருக்கும் கை கொடுத்தவர் ஈகி சிவாதிலிபன்.

நான் சொன்னேன் என்ன தோழர் குழந்தை மாதிரி கூட வருகிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் ”கையை பிடித்துக்கொண்டு சாதித்துவிட்டோம் தோழர்” என்றார். இத்தனை பேர் நம் அமைப்பில் இணைவது பெரிய சாதனை தோழர் என உற்சாகத்தில் இருந்தார். அவர் அவ்வளவு உணர்ச்சி வையப்பட்டு நான் பார்த்ததில்லை. எல்லாரும் அவரின் ஈகத்தை வந்து உணர்ச்சி வையப்பட்டார் சொல்கிறார்கள். உணர்ச்சி வையப்படாதவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?

”உணர்ச்சி வயப்படுதல்” குறித்து மெயுணர்வு எப்படி உருவாகிறது? முதல் உணர்வு எங்கிருந்து வந்தது? என்று என்பதை குறித்து பெருஞ்சித்தனார் எழுதி இருப்பார். இந்த உணர்வு என்பது இந்த உயிருக்கு எப்படி அடித்தளமாக இருந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதை படியுங்கள். ஏன் தமிழன் தமிழ் மொழி என்று சொன்னதற்காக உயிர் கொடுக்க துணிகிறான் என்றால், தமிழை படித்து பாருங்கள். வேறு எந்த மொழிக்கு இப்படி உயிர் கொடுப்பதற்கு எவன் வந்திருக்கிறான்? இந்த மொழி அதை கற்றுக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட போர் குணத்தை நமக்குள் விதைக்கிறது. இந்த உணர்வு என்கின்ற அரசியலை வைத்துக்கொண்டு சிவா திலீபனுடைய ஈகத்தை உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் என்று சொல்லக்கூடியவர்களை தயவு செய்து நிராகரித்து விடுங்கள். அவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். இந்த மாதிரி போராட்ட வழிமுறை எல்லாம் வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்கள் நாம் நிச்சயம் நிராகரிக்கிறோம்.

நாம் உயிரை கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் போராட்ட களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். இன்றைக்கு வெறும் சமூக வலைதளத்தில் எழுதினால் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும், புத்தகத்தை எழுதினால் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும், வீடியோவை போட்டால் மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும், என்றெல்லாம் நம்பிவிடாதீர்கள்.

என்றைக்கு வீதிக்கு வருகிறீர்களோ, அன்றைக்குதான் மாற்றம் வரும். என்னைக்கு போராட்ட களத்தில நிக்கிறோமோ அன்றைக்குதான் எதிரி பின்னாடி போவான். எதிரியை நேரடியாக வீதியில் தான் எதிர்கொள்ள முடியும். அதைதான் நாம் செய்ய வேண்டும்.

நமக்கு மிகப்பெரிய ஊடக ஆதரவெல்லாம் கிடையாது. தோழர் நக்கீரன் கோபால் அவர்கள் வந்திருக்கிறார். சிவா திலீபனுடைய ஈகத்தை குறித்து முதல் முதலாக எழுதிய ஒரே பத்திரிக்கை நக்கீரன்தான். நாம் யாருமே செய்தி சொல்லவில்லை. அட்டை படத்திலே சிவா திலீபன் படத்தை போட்டு அவரை குறித்து மிக மிக மரியாதைக்குரிய ஒரு பதிவை நக்கீரன் தான் செய்தது. நாம் இதுவரைக்கும் நக்கீரன் பத்திரிக்கை ஒரு விளம்பரம் கூடம் கொடுத்தது. பாராட்டி நான்கு வார்த்தை எழுதியது கூட கிடையாது. ஆனால் தமிழ் உணர்வால் உந்தப்பட்ட நம்மையெல்லாம் இணைக்கக்கூடிய அந்த தமிழ் மொழிதான், நமக்கான மரியாதையையும், நமக்கான களத்தையும், உருவாக்கி கொடுக்கிறது.

தோழர் எழிலன், தோழர் நக்கீரன் கோபால், தோழர் ஓவியா, தோழர் அருள்மொழி என இத்தனை பேர் என்ன லாபத்துக்கு இருக்கிறோம்? எதுக்காக இதெல்லாம் செய்கிறோம்? எதுவுமே கிடையாது. நமக்கு இதனால் என்ன கிடைக்க போகிறது? ஒன்னுமே கிடையாது. ஆனால் இந்த இனத்தின் மீது நமக்கு இருக்கக்கூடிய பற்று அதுதான் நம்மை எல்லாம் இணைத்துக் கொண்டிருக்கிறது. பல இயக்கம் கடந்து, கட்சி கடந்து, எல்லாருமே ஒன்றாக உட்காந்திருக்கிறோம்.

தோழர் எழிலன் அவர்கள் மே 17 இயக்கத்தினுடைய முதல் நிகழ்வில் பங்கெடுத்தவர். முதல் நிகழ்வு ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டுதான் மே 17 இயக்கம் என்கின்ற பெயர் அறிமுகமானது. அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்குமே நம்மை தமிழும் தமிழர்களும் தான் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் தான் கட்சி கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, நாம் இந்த இனத்திற்கான ஒரு போராளிகளாக முன்களப் போராளிகளாக நிற்க வேண்டும் என்பதுதான் மே 17 இயக்கத்தின் விருப்பம்.

ஈகி சிவா திலீபன் என்கின்ற இந்த பெயர் இந்திய அளவில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தினுடைய அடையாளமாக மாற்றப்பட வேண்டும். நமது போராட்டம் நடக்க ஆரம்பித்து இந்த ரயில்வே பலகைகளை இந்தி எழுத்துக்களை அழிக்க ஆரம்பித்தவுடன் கேரளாவில் இது குறித்தான உரையாடல் வந்தது, கர்நாடகத்தில் பேச ஆரம்பித்தார்கள், மராத்தியத்தில் பேச ஆரம்பித்தார்கள், பெங்காலி பேச ஆரம்பித்தார்கள், பஞ்சாபி பேச ஆரம்பித்தார்கள், ஆந்திராவில் பேச ஆரம்பித்தார்கள், நம்மிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள், விவரங்களை கேட்டார்கள்.

இந்திய அளவிலான போராட்டமாக மாற்றியவர் சிவா திலீபன். அது நான் வெறும் மேடைக்காக பேசவில்லை. எந்தெந்த ரயில்வே நிலையத்தில் எல்லாம் தோழர்கள் இந்தியை அழித்துவிட்டு கைது செய்யப்பட்டார்களோ, அந்த இடத்தில் எல்லாம் அந்த காவல் துறைக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் வந்தது என்று, எல்லா காவல் நிலையத்திலும் சொல்லியிருந்தார்கள். இந்தி எழுத்தை அழித்தால் என்ன தண்டனை தர வேண்டும்? என்று, அவன் சட்டத்தில் கிடையாது,  

அபராதம்தான் போட முடியும். தலைகவசத்திற்கு அபராதத்தை விட குறைவு. பிறகு என்ன அழித்து முடித்திடுவோம். இது வெறும் ரயில்வேயில் மட்டும் கிடையாது, ஒன்றிய அரசு நிறுவனங்கள் எல்லா இடத்திலும் இந்தி வார்த்தை தமிழ்நாட்டில் இருக்ககூடாது. அவன் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த பயம் வர வேண்டும். தற்போது இரண்டு மார்வாடி பெண்கள் அதே பூங்கா நிலையத்தில் ”மார்வாடிகளுக்கு இது பெரிய ஆபத்து, எனவே மார்வாடிகளை ஒன்று கூடுங்கள்” என எச்சரிக்கை வீடியோ எடுத்து போட்டுள்ளார்கள்,

சவக்கார்ப்பேட்டை சவக்கார்ப்பேட்டை இருக்காது சொல்லிவிட்டோம். மார்வாடி கும்பலுக்கு தமிழ்நாட்டுக்குள் பிஜேபி இருக்கிறான், அமித்ஷா இருக்கிறான், அவன் இருக்கிறான், இவன் இருக்கிறான் என நினைத்துக் கொண்டு உங்கள் விருப்பத்திற்கு எல்லாம் தமிழை எதிர்த்து நின்று இங்கே பிழைக்க முடியாது. ஆயிரம் பேர் இந்த ஊருக்கு வந்துவிட்டு போயிட்டான். எவனும் தமிழ் மீது கை வைத்தது இல்லை. வைக்கணும் என நினைத்தால் இந்த மண் எப்படி உன்னை கையாளுமோ அப்படி கையாளும். வந்தீர்களா, வியாபாரம் பார்த்தீர்களா, மக்களோடு சேர்ந்திருக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் மொழியின் மீதும், எங்கள் அரசியல் மீதும், நீ(மார்வாடி கும்பல்) முடிவெடுக்கனும் என்றால், உன் வணிகத்தின் மீது நான் முடிவெடுக்க வேண்டிய தேவை இருக்கும். இந்தி அழிப்புப் போராட்டம் ஒரு செய்தியை சொல்கிறது: அவனுக்கு (வடவர்களுக்கு) அச்சுறுத்தலை கொடுத்திருக்கிறது.

தோழர்களே தமிழ்நாட்டில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்க வேண்டும். நாம் இவர்களை மொத்தமாக விரட்ட வேண்டுமெனில், இந்தியோடு சேர்த்து குப்பையோடு குப்பையாக இவர்களை வீசி வெளியே எரிய வேண்டும்.

நாம் தமிழர் கட்சியெல்லாம் கட்சியாக கருதமுடியாது, அது ஒரு கூட்டம். அது ஒரு கும்பல். சங்கர மடத்துக்கு போயிட்டு வந்துள்ளான் அந்த சீமான். ஐந்து நாட்களுக்கு முன்பு சங்கர மடத்துக்கு போயிவிட்டு கோமியத்தை குடித்துவிட்டு வெளியே வந்து இருக்கிறான் சீமான். மாட்டுக்கு புல் கொடுக்கும் வீடியோ வெளிவந்துள்ளது. இவர் விவசாயி என பேசுவார், மாடு, ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு தொழிலாக மாற்றுவேன் என சொல்லிருக்கிறார். இவன் ஒரு மாட்டு தொழுவத்திற்கு போகவில்லை, கோசாலைக்கு போயிவிட்டு மாட்டுக்கு புல்லு கொடுத்து வந்திருக்கிறான். இந்த கூட்டத்தை விரட்ட வேண்டும் என்ற போர் முழக்கத்தை மூலக்கொத்தளத்தில் எழுப்பியது நமது தோழர் கோகிலா அவர்கள். இவ்வளவு ஒரு போர் குணத்தோடு பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கோகிலா இப்படி எல்லாம் பேசுவார் என தெரியாது. அவர்(கோகிலா) மூலக்கொத்தளத்தில் சொல்கிறார்: ”போலி தமிழ்த்தேசியத்தை தோல் உரித்து காட்டி இருக்கிறார் என் தந்தை” என்று, அதை உரித்து தொங்கவிட வேண்டும்.

எவனெல்லாம் டெல்லிக்காரனுக்காக வேலை செய்கிறானோ, அவனெல்லாம் நமது பரம எதிரி. அவனை எல்லாம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியே ஆக வேண்டும். தோழர் சிவா திலீபனுக்கு மரியாதை செய்ய வரவில்லை. ஒரு வார்த்தை சிவா திலீபனுக்கு என்ன ஆனது என அலைப்பேசியில் கூட கேட்கவில்லை. இவனெல்லாம் தமிழ்மொழி பற்று கொண்டவனா? இவனெல்லாம் தமிழ்த்தேசியவாதியா? ஆயிரம் வேறுபாடுகள் நமக்குள் இருக்கட்டும். ஆனால் இந்த இனத்திற்காக மொழிக்காக ஒரு உயிர் கொடுக்க துணிந்திருப்பவருக்கு வந்து நின்று பேச வேண்டும் அல்லவா? என்ன உன்னுடைய சோற்றை நாங்கள் பிடிங்கிவிட்டோமா? உனக்கு(சீமானுக்கு) மிகப்பெரிய விசியமே சோறுதான். அதை நாங்கள் பிடுங்கவில்லையே, ஒரு வார்த்தை பேசவில்லை, ஆனால் அவமானப்படுத்துகின்ற முயற்சியை செய்தார்கள்.

நான் சொல்லி கொள்கிறேன்: நாம் தமிழருக்கும், சீமானுக்கும் உன் கட்சிக்காரன் எவனாவது சிவா திலீபனுடைய ஈகத்தை குறித்து ஏதாவது இழிவாக பேசினால், வெறும் எழுதிக்கொண்டு இருக்க மாட்டோம், வேடிக்கை பார்த்து இருக்க மாட்டோம். உருவி எடுத்து விடுவோம். பிஜேபி காரனுக்கு இதையே சொல்கிறோம். கருத்துக்கு கருத்து பதில் சொல்ல முடியும். அவதூறுக்கு கருத்து பதில் சொல்லாது, எப்படி பதில் சொல்ல முடியுமோ அப்படிதான் பதில் சொல்வோம். எவனெல்லாம் பிஜேபி ஐ.டிவிங்கிலிருந்து இழிவாக எழுதுறானோ, அவன் பேர், விவரம் எல்லாத்தையும் பொதுவெளிக்கு கொண்டு வந்து நிறுத்தி ஆக வேண்டும். இனி யாருக்கும் நடக்கக்கூடாது.

கருத்து பேசு, எதிர்த்து பேசு, மறுத்து பேசு” பிரச்சனை இல்லை. ஒரு ஈகியரை இழிவு படுத்துகிறான் எனில், அந்த கட்சிக்காரன் ஐடிவிங்கில் எவனாவது ஒருவன் உட்கார்ந்து எழுத சொல்லி, அந்த யோசனை சொல்லிதானே நடந்திருக்கும். அத்தனை விவரமும் பொதுவெளிக்கு வரும். தமிழ் மொழிக்காக உயிர் கொடுத்த ஒரு ஈகியரை அசிங்கப்படுத்துவதும், அவரை இழிவு படுத்துவதும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எத்தனை நாள் சிறைக்கு போனாலும் தயார். நீ கூலிக்கு வேலை பார்க்கிறவன். எச்சரிக்கை விடுக்கின்றோம். நாங்கள் ஒரு உயிரை இழந்துருக்கிறோம் எதுக்கும் பயப்பட மாட்டோம். பிஜேபி ஐடிவிங் காரன் என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? எவன் எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள்? என்று எங்களுக்கு தெரியும். அவன் பெயரும் எங்களுக்கு தெரியும். வானத்தில் இருக்க போவதில்லை, நீங்கள் எல்லாம் இதே ஊரில்தானே இருக்க போகிறீர்கள்.

ஆயிரம் விடயம் இருக்கிறது, எங்களை எத்தனையோ முறை இழிவுப்படுத்தி உள்ளீர்கள், அதை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் ஒரு ஈகனை இழிவுப் படுத்தினால், உன் புகைப்படம் மற்றும் எல்லா விவரமும் பொதுவெளிக்கு வந்துவிடும். அப்பறம் நீ நடக்க முடியாது. அடித்து ஒட விடுவோம். தமிழ்நாடு முழுக்க உன் முகம் விளம்பரம் அடித்து ஒட்டுவோம்.

தமிழ்நாட்டில் தமிழ் உரிமைக்கு பேசக்கூடிய நம்மளுடைய புகைப்படத்தையும் முகவரியையும் எடுத்து 13 மொழிகளில் போடுகிறான். அத்தனை மொழிகளில் அத்தனை ஊர்களும் போடும் உன் யுக்தி, என்னால் போட முடியும். மாட்டு சாணி திண்ணும் உனக்கு இருக்கும் போது, தமிழ் மொழி பேசுகின்ற எங்களுக்கு இருக்கும்.

பிஜேபிக்காரனை எச்சரிக்கிறோம்: அரசியல் பேசினால் அரசியல் பேசு, அவதூறு பேசினால் நீ என்ன வேலை பாத்தாயோ அத்தனையும் எங்களுக்கு நடக்கும். நாங்கள் சாவை பற்றி கவலைப்படவில்லை. தோழர் சிவா திலீபன் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

பிஜேபியோட தலைவர் நையினார் நாகேந்திரனுக்கு சொல்கிறேன்: உன் கட்சிக்காரனோட ஐடிவிங்கை அடக்கி வை. எவன் எவன் என்ன செய்தானோ, அத்தனை பேரும் வெளியே வரும். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் கேட்பதற்கு ஆளில்லை என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? நாங்கள் காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள் என காத்துக்கொண்டு இருக்க மாட்டோம். பார்த்துவிடுவோம் நீங்களா நாங்களா என்று! அவதூறு செய்பவனை எவனையும் விடுவதாக இல்லை. நான் வெளிப்படையாக சொல்கிறேன். எங்க தோழர்களை அசிங்கப்படுத்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு எங்கள் அமைப்பு நிற்காது.

பிற கட்சி தோழர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்: நாம் எந்த கட்சி வேண்டுமானாலும் இருக்கலாம். சிவாதிலிபன் ஒரு கட்சிக்காக தன் உயிரை கொடுக்கவில்லை, தமிழ் மொழிக்காக கொடுத்திருக்கிறார். சிவாதிலிபன் மே 17 இயக்கத்தின் சொத்து அல்ல, இந்த இனத்தின் சொத்து. அவரை இழிவுபடுத்தினால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முற்போக்கு இயக்கங்கள் தன்னுடைய இயக்கத்தை சார்ந்தவர் இழிவுபடுத்தியதாக, இந்த தாய்மொழி இழிவுபடுத்தியதாக, அப்படிப்பட்ட ஒரு இடத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் அதை கையாளுங்கள் அதைதான் சொல்கிறோம்.

சிவாதிலிவன் மே 17 இயக்கம் வாழ்க! என்று சொல்லவில்லை, தன்னுயிர் ஈகத்தின் போது ”தமிழ் வாழ்க” என்று சொல்லிவிட்டு போனார். நீ பேசுவதும் நான் பேசுவதும் தமிழ் என்றால், உன் தாய்மொழியும் என் தாய்மொழியும் தமிழ் என்றால், தமிழுக்காக உயிர் கொடுத்த சிவா திலிபனை இழிவுப்படுத்த கூடியவனை முடித்துக்கட்ட வேண்டும். தமிழ் மொழிக்காக உயிர் கொடுக்க கூடியவனை இழிவுபடுத்தக்கூடிய ஒரு கட்சி இந்த மண்ணில் வேரோடும் மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும். இதுதான் சிவா திலிபவனுக்கு நாம் கொடுக்கக்கூடிய உண்மையான வீர வணக்கமாக இருக்கும். அதை செய்து காட்டுவோம். அதை செய்யும் வரை மே 17 இயக்கம் ஓயப்போவதில்லை. தோழர் சிவா திலிவனுக்கு வீர வணக்கத்தை சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!!

நிகழ்வின் இடையே, மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் உருவப்படம், கும்பத்தினர் முன்னிலையில், தோழர் திருமுருகன் காந்தி உட்பட வந்திருந்திருந்த ஆளுமைகளால் திறந்துவைக்கப்பட அரங்கம் வீரவணக்கம் செலுத்தியது. இறுதியாக மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் உருவப்படம் தோழர்களால் தோழர் கீதா, தோழர் கோகிலா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் மே 17 இயக்கத்தின் சார்பாக அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »