கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று

கொரோனாவிற்கு இடையே பரவிடும் நிபா தொற்று


கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அது ஒரு புறம் இருக்க, தற்போது அங்கு நிபா வைரசஸ் பரவ ஆரம்பித்துள்ளது. கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அச்சிறுவனின் பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு நோய் பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து சிறுவனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சிறுவனுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5.9.2021 அன்று அதிகாலை 5 மணிக்கு அந்த சிறுவன் மரணம் அடைந்தார். எனினும் சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் குழு கேரளா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், நிபா வைரசால் உயிரிழந்த 12 வயது சிறுவனுடன் தொடர்பிலிருந்த 11 பேருக்கு நிபா அறிகுறிகள் இருக்கிறது. அவர்கள் அனைவரது உடல்நிலை பரிசோதனை செய்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

நிபா வைரசால் இறந்த சிறுவனுடன் தொடர்பிலிருந்த 251 பேர் கணடறியப்பட்டுள்ளது. அதில், 125 பேர் சுகாதாரப் பணியாளர்கள். கூடுதலாக, 54 பேர் அதிக ஆபத்துள்ளவர் பட்டியலில் உள்ளனர். அதில் 38 பேர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆபத்துள்ளவர் பட்டியலில் உள்ளவர்களில் 30 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர்.

இந்நோய் வவ்வால் மற்றும் மிருகங்கள் வாயிலாகவும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கால்நடை வளர்ப்பு துறை, உயிரிழந்த சிறுவனின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தது. அங்குள்ள ஏரியின் குறுக்கே வௌவால்களின் வாழ்விடத்தையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் மூலம் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அச்சிறுவன் வீட்டில் இருந்த இரண்டு ஆடுகளிடம் இருந்தும் சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நோய் அறிகுறி:
1. நிபா வைரஸ் முதலில் லேசான தலைவலியுடன் தொடங்கும்.

  1. தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.
  1. தொடர்ந்து வாந்தி வருவது போல இருக்கும்.
  1. வாந்தியுடன் லேசான மயக்கமும் ஏற்படும்.
  1. மயக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும்.
  1. நாள் முழுவதும் உடல் சோர்வுடன் மயக்கமாகவே இருக்கும்.
  1. தலைவலி தீவிரமாகி காய்ச்சலும் அதிகரிக்கும். 10 நாட்களுக்கு பிறகு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
  1. நோயின் தீவிரம் குறையாமல் தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

தவிர்க்க வேண்டியவை:
 1. பறவைகள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது.

  1. பறவைகள் கடித்து போட்ட பழங்களை ஒருபோதும் உண்ணக்கூடாது.

3. முக கவசம் அணிவது போல் கைகளுக்கும் கையுறை அணிய வேண்டும்.

  1. நோய் பாதிப்பு உள்ள மிருகங்களுடன் பழகக்கூடாது.
  1. மிருகங்களையோ அல்லது பறவைகளையோ தொட்டால் உடனே கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

6. மிருகங்கள், பறவைகளின் எச்சத்தை மிதித்தால் உடனே உடலை சுத்தம் செய்ய வேண்டும்.

  1. வவ்வால் மூலமே இந்நோய் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அவை வாழும் பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  1. பன்றிகள் மூலமும் இந்நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் அவற்றிடமும் கவனமாக இருக்க வேண்டும்.

உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவிடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது. அது குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தெரிய வந்தது.

கேரளாவில் 2018-ம் ஆண்டும் இதே போல் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். 2019ஆம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் செவிலியர் உள்பட 7 பேர் பலியானார்கள். அதன் பிறகு நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது, மீண்டும் அந்நோய் பரவி வருவது கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது.

நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இதற்கான தடுப்பூசி மருந்தை  இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகிய ஆர்யாச்சி மையங்கள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் நல்ல பலனை அளிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

ஆப்பிரிக்க பச்சை வகை குரங்கின் வைரசை இந்த தடுப்பூசி முழுமையாக அளித்துள்ளது. சிரியா ஹேம்ஸ்டர் என்ற சோதனை எலியின் மீது வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்ட சோதனைகளை அடுத்து மனித பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொது மக்கள் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது மிகவும் அவசியம். மேலும், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபா வைரசைக் கட்டுப்படுத்திட கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் உடனடி சிகிச்சை வழங்குவது மிக முக்கியம். இது குறித்து கேரள அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாடு – கேரளா மாநில எல்லை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடரும் தொற்றுகள்

கடந்த சில ஆண்டுகளாகவே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிடும் புதிய நோய் கிருமிகளின் தொற்று  பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. நிபா, சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS), எபோலா, பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் என்ற பட்டியலில் 2019 முதல் கொரோனா (கோவிட்-19) புது வரவாக இடம்பிடித்துள்ளது. இந்த தொடர் நிகழ்விற்கு சுழலியலாளர்கள் பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் வனங்கள் காரணமாக மனிதருக்கும் விலங்குகளுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி உலக நாடுகள் வனவிலங்குகளின் வாழ்விடங்களை மிக வேகமாக அழித்து வருகின்றன. இதன் எதிர்வினையாக இந்த புதிய நோய்கள் மனிதர்களிடையே பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், விவசாயம் மற்றும் இறைச்சி உணவு உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பல அபாயகரமான இராயசனங்கள் உணவு சங்கிலியில் நுழைந்து கடுமையான பாதிப்புகளை உருவாக்குகின்றன. இந்த இராசயனங்களை எதிர்த்து உயிர்தப்பித்து வாழும் நோய் கிருமிகள் இதுவரை கண்டிராத வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிடும் போது புதிய நோய்களை ஏற்படுத்தி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கின்றனர்.

ஒரு சில முதலாளிகளின் வளர்ச்சிக்காக நிகழ்த்தப்படும் இயற்கை அழிவுகளை நிறுத்தி, வனத்தையும் அவற்றில் வாழும் விலங்குகளையும் பாதுகாத்திடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கார்பொரேட் லாப நோக்கில் ஊக்குவிக்கப்படும் செயற்கை மற்றும் இராசாயனம் சார்ந்த உணவு உற்பத்தி முறைகளை கைவிட்டு இயற்கையுடன் ஒத்துப்போகும் முறைகளை கடைபிடித்திட அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »