இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!

தலையங்கம் – ஆகஸ்ட் 25, 2022

இலவசங்கள் குறித்தான வழக்கினை உச்சநீதிமன்றம் அனுமதித்ததே மோடியின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதாகும். இலவசம் குறித்து ரிசர்வ் வங்கி கருத்து தெரிவிப்பது, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிப்பது என்பது மோடியின் கருத்தினை வலுப்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் கேலிக்கூத்து.

பிரதமர் இலவசங்களைப் பற்றி சனநாயகமாக விவாதிக்க வேண்டுமெனில் அதை மக்களவையிலோ மாநிலங்களவையிலோ துவக்கி இருக்க வேண்டும். இதுவே பிற கட்சிகள், பிரதிநிதிகளின் கருத்தை சனநாயகப்பூர்வமாக எதிர்கொள்ளும் இடமாக அமையும்.

நாடாளுமன்றம், ஊடகம் ஆகியவற்றை கண்டு அஞ்சும் பிரதமர் இவ்விவாதங்களை பொதுவெளியில் போகிறபோக்கில் சொல்லிவிட்டு ஓடிவிடுவது வாடிக்கை. இது பற்றியான விவாதத்தை என்றைக்கும் அவர் எதிர்கொண்டதில்லை. இதைப் பற்றி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் விவாதத்தை நாடாளுமன்றம் நடத்தாமல் தற்போது நீதிமன்றம் நடத்த ஆரம்பித்திருக்கிறது.

நீதிபதி ரமணா, திமுக எம்பி வில்சன்

நீதிமன்றங்கள் இதுபோன்ற சனநாயக மக்கள் கொள்கைகளை தன்னிச்சையாக கையில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்திருப்பது பாஜக ஆட்சி காலத்தில் அதிகரித்திருக்கிறது. கோட்பாடு, சனநாயக விழுமியங்கள் குறித்து சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமுள்ள கருத்துகள் தகவல்களை தொகுத்து விவாதமாக்கப்படுதலே சனநாயகத்தின் முக்கியமான அங்கம்.

இலவசம் என்பதை ரிசர்வ் வங்கி என்கிற நிதி நிறுவனமோ, நீதிமன்றம் எனும் அரசியல்சாசன நிறுவனமோ மட்டுமே நிகழ்த்திவிட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களை நேரடியாக சந்திக்கவும், அவர்களுக்கு பதில் அளிக்கவும் கடமைப்பட்டவர்கள்.

மேலும், இந்தியாவின் சனநாயகத்தில் தேர்தல் கட்சிகள் மட்டுமே சமூக பொருளாதார கோட்பாடுகளை அல்லது கொள்கைகளை அடித்தளமாக வைத்து இயங்குபவை. அரசு நிறுவனங்கள் அவ்வாறு இயங்குபவை அல்ல. அவர்கள் அரசியல் சாசனத்தில் உறுதிசெய்யப்பட்ட நடைமுறைகளை, வழிமுறைகளை நெறிப்படுத்தவோ, நடைமுறைப்படுத்தவோ செய்யும் நிறுவனங்களாகவே அறியப்படுபவை. அல்லது அவர்கள் இயங்கும் துறை சார்ந்து அரசியல்சாசன நெறிமுறைகளுக்கு வியாக்கியானம் கொடுக்கும் பணிகளையும் செய்கின்றன.

மோடி எழுப்பி உள்ள இலவசம் என்ற ரீதியிலான கேள்வி, பொருளாதார, சமூக நிலைகளை நிராகரிக்கும் தட்டையான வணிகத்தன்மையான வாதமாகும். வணிகப்பொருட்களில் உள்ளார்ந்து இருக்கும் உழைப்பு, லாபம் ஆகியவற்றை இழக்கும் நிலையை இலவசமென முதலாளித்துவம் சொல்லுகிறது. ஆனால் ஒரு தேசத்தின் உற்பத்தியில் குறைந்த விலைக்கு தனது உழைப்பை விற்கும் தொழிலாளிக்கு என்ன கிடைக்கிறது?

இலவசம் என்று சொல்லப்படும் பொருள் தன் உழைப்பினை குறைந்த விலைக்கு விற்றதற்கான பண்டமாற்றாகவே கிடைக்கிறது. உழைப்பிற்கான விலையை நிர்ணயித்து கூலியை உறுதி செய்யமுடியாத அரசு, அவருடைய கூலிக்கான உண்மை விலையை சிலசமயங்களில் இலவசங்கள் எனும் பெயரில் ஈடுகட்டுகிறது.

நாட்டின் பொருளாதார உற்பத்தியில் ஈடுபடும் ஏழை பாட்டாளிகளின் கடும் உழைப்பால் சாலையில் விரிகின்றன; கட்டிடங்கள் உயருகின்றன; தொழிற்சாலைகள் இயங்குகின்றன; வணிகங்கள் பெருகுகின்றன. இந்த உழைப்பினை சொற்ப விலைக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டி வளர்கின்றன என்பதை யார் மறுக்க முடியும்?

ஒப்பந்த தொழிலாளர்களாக, முறைசாரா தொழிலாளர்களாக, விவசாய கூலிகளாக, வீட்டு வேலை செய்பவர்களாக, அரசு நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களாக, பாதுகாப்பு வீரர்களாக சொற்ப வருமானத்தில் இத்தேசத்தை முன்னகர்த்துகிறார்கள். இவர்களது உழைப்பில் வளரும் தேசத்தின் வளர்ச்சியில் எவ்வித பங்கீடும் தராமல் வஞ்சிக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் ஆறுதல் பரிசாக இந்த சலுகைகள், இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

பிரதமர் முதல் அதிகாரவர்க்கம் வரை ஓலமிடும் இந்த ’இலவசங்கள்’ உண்மையிலேயே எத்தனை விகிதம் என்பதை பார்ப்போம்.

மானியங்கள் எனப்படும் பலவகைப்பட்ட உதவித்திட்டங்கள் ஏழைகள் முதல் நிறுவனங்கள் வரையிலானவை எவ்வாறு உள்ளன. இந்த மானியங்கள் மாநிலங்களின் மொத்த வருவாய்க்குட்பட்ட செலவினத்தில் 7.8 சதமாக உள்ளது. 2019-இல் இந்நிலை மேலும் உயர்ந்து 2021-22இல் 8.2 சதமாக மாறியது. மாநிலங்களில் இலவசங்கள் எனப்படுபவை உண்மையிலேயே அபாயகரமான செலவினமாக இருக்கிறதா என்று பார்த்தால், அதன் மொத்த மாநில மொத்த உற்பத்தியில் இலவசங்களுக்கான விகிதம் 0.1 சதத்திலிருந்து 2.7 சதமாக பல்வேறு மாநிலங்களின் செலவினங்கள் உள்ளது. இதில் கல்வியும், மருத்துவமும் இதர அத்தியாவசிய செலவினங்களும் இந்த பட்டியலில் உள்ளது.

இதே நேரத்தில் வங்கிகளில் பெரும் தொழிற்நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பிக்கட்ட இயலாததால் உருவாகிய கடன் 2019-இல் 4,48,911 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வராக்கடன் என்பது வெறும் 8 துறைகளில் ஏற்பட்ட கடனைக் காட்டுகிறது. இதில் கட்டுமானத்துறை, உலோகம், நகைத்துறை ஆகியன அடங்கும். மோடியின் முதல் ஐந்து ஆண்டுகளில் (2014-2019 ) தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட் கடன்களின் அளவு 6,35,164 கோடி ரூபாய். இது அரசு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு.

மேலும் 50 நபர்களால் ஏற்பட்ட கடன் தள்ளுபடி அளவு ரூ 68,607 கோடி. முகுல் சோக்சி ரூ.5492 கோடி, REI Agro ரூ.4314 கோடி, விண்ட்சர் வைரங்கள் 4,076 கோடி, ரோட்டோமேக் பேனா 2850 கோடி, குடோ கெமிக்கல் 2326 கோடி ரூபாய் எனுமளவிற்கு கடன் ஏமாற்றத்தை செய்திருக்கின்றனர். இதில் மல்லயா 1943 கோடி, டெக்கான் க்ரானிக்கிள் 1915 கோடி ரூபாய், முகுல் சோக்சியின் மற்றுமொரு நிறுவனமான நக்சத்திரா 1447 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். இந்தக் கடன்கள் அரசினால் தள்ளுபடி ஆகும் பொழுது சாமானிய மக்களின் பங்களிப்பு ஈடுசெய்யும் குறைந்தபட்ச பங்களிப்பை கேள்வி எழுப்புகிறார் மோடி.

ஆக, மக்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச மானியங்கள், சலுகைகள் என்பது அவர்கள் தங்கள் கடுமையான உழைப்பினால் ஈட்டியவை. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அம்மக்களின் உழைப்பில் மிகுந்த உபரியே நிதியாக வங்கிகளில் குவிக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார் பெரு நிறுவனங்களுக்கு மூலதனமாக அளிக்கப்படும் இந்த நிதிமூலதனத்தின் அடிப்படை உரிமையாளர்கள் இந்த பாட்டாளிகளே. இம்மக்களை ஏமாற்றி சில சலுகைகளையும், மானியங்களையும் ‘இலவசமாக’ கொடுக்கப்படும் திட்டங்கள் என்று மலினப்படுத்தி வஞ்சிக்க விரும்புகிறது கார்ப்பரேட் இந்தியா.

இந்த சுரண்டலை நிறுவனமாக்கி பாதுகாக்கும் இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்களான நீதிமன்றம், ஊடகங்கள், நாடாளுமன்றம் ஆகியன இந்த சுரண்டலை நியாயப்படுத்துவதும், உபரியில் வீசப்படும் சில சோற்று பருக்கைகளால் இந்திய பொருளாதாரம் நசிவடைகிறது என்றும், இம்மக்கள் இதனால் சோம்பேறியாகிறார்கள் என்றும் ஏளனம் பேசுகின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரமணா அவர்கள் இதுகுறித்து பேசும் பொழுது, தமிழகத்தின் நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் அவர்கள் மீதான தனிப்பட்ட வன்மத்தை 23-08-2022 வழக்கு விசாரணையின் போது கக்கி இருக்கிறார்.

இந்தியாவின் கேள்விக்குட்படாத அதிகார மையங்களாக பிரதமர் அலுவலகமும், அமைச்சகங்களும் மாறியது மட்டுமல்லாமல், நீதிமன்றங்களும் தமக்கிருக்கும் தனிச்சலுகைகளை சனநாயக விரோத நிகழ்ச்சி நிரல்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன என்பது மிகையில்லை. உழைக்கும் மக்கள், இந்தியாவின் வளங்களின் மீதான தமக்கான உரிமையை இவர்களிடமிருந்து தட்டிப்பறிக்காமல், இந்தியாவின் ஆளும்வர்க்கம் ஒருபோதும் பகிர்ந்து கொடுக்காது.

இந்த நிலம் நம்முடையது, இதன் வளர்ச்சி நம்முடையது. நம் மக்களை புறக்கணித்து உருவாக்கப்படும் எத்திட்டங்களும் நமக்கு எதிரானவையே. இலவசமென்று ஏளனப்படுத்தப்படும் மானியங்களை மோடி அரசு தடுத்து நிறுத்தினால், மக்களும் வரி கொடுப்பதை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »