சனாதன சர்ச்சை தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் முகநூல் தளத்தில் பதிவு செய்த கருத்து
வடநாட்டார் சனாதனத்தை முன்வைத்து தமிழ், தமிழர், தமிழ்நாடு மீது வன்மத்தை கொட்டுகின்றனர். விடுதலையடைந்த பின்னர் தம் மக்களுக்கு 3 வேளை சோறு கூட போடமுடியாத ஆரிய-வடநாட்டாருக்கு நம்மை பார்த்து எரிச்சல் வரவே செய்யும். ஏனெனில் அவர்களது மக்களுக்கும் நாமே உணவும், வேலையும், கொடுக்கிறோம்.
இந்த வன்மம் ஆரிய பார்ப்பனியத்தின் போதாமையை நாம் நிரூபித்ததால் வருகிறது. சாஸ்திரமும், சனாதனமும் உணவு, கல்வி, வேலை தராது என்பதை நாம் நிரூபித்தோம். ஆரிய-திராவிட கோட்பாட்டு சண்டையில் நாம் வெற்றிபெற்றுள்ளோம் என்பதை அவர்களால் சீரணிக்க இயலாது. எந்நாளும் நம்முடன் சரிசமமாக வாழ வடநாட்டானுக்கு பிடிக்காது. நம்மை அடிமைப்படுத்தியே அவனால் வாழ இயலுமென நம்புகிறேன். அவனை ராமனாகவும், நம்மை ராமனுக்கு அடிமையாக வாழும் குரங்கு அனுமார் கூட்டமாகவும் இருக்க சொல்கிறான்.
நமக்குள் அண்ணாமலை, எடப்பாடி போன்ற விபீடணர்கள் உருவாக்குகிறான். இராமலீலையில் நம்மை இராவணானாக்கி எரிக்க விரும்புகிறான். இந்த கூட்டத்துடன் நாம் ஏன் வாழவேண்டுமென்றே தந்தைப் பெரியார் கேள்வி எழுப்பினார்.
இன்றைய போலித்தமிழ்த் தேசியவாதிகளால் நினைத்துகூட பார்க்க இயலாத தமிழர் விடுதலையை பெரியார் முன்வைத்தார். அவர் அக்கோரிக்கைக்காக படைகட்டவில்லை, ஆனால் மக்களை அணியப்படுத்தினார். இந்தியத்திற்குள் கரைந்துபோகாத கோட்பாட்டு வலிமையை நமக்கு கொடுத்துச் சென்றார். கட்டுரையின் இறுதி அலங்காரவாக்கியமாக ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என எழுதிச் செல்லவில்லை அவர். இந்த முழக்கத்தை அரசியல் முழக்கமாக்கினார். அதற்கென அமைப்பை உருவாக்கினார். பிரச்சார கட்டமைப்பை எழுப்பினார். அஞ்சாத பாட்டாளி தோழர்களை உருவாக்கினார். கழுதைக்கு ஒருவேளை மூக்கு நீளமாக வளர்ந்தாலும் அது யானையாகது. அதுபோலவே பாராளுமன்றம் கட்டிவைத்தாலும் அது தமிழரின் சனநாயக அரசியல் உரிமையை உறுதி செய்யாது.
வடநாட்டான் ‘இந்தியாவை’, பாரதம் என்பான், பின்னர் ‘ஆரியவர்த்தா’ என மாற்றச் சொல்வான், ‘சமஸ்கிருத தேசம்’ என்பான். இவன் சனநாயக உணர்வற்றவன். சனாதனம் இருக்கும்வரை இவனை சனநாயகப்படுத்த இயலாது. பாஜகவை எதிர்க்கும் வடநாட்டான் கட்சி தலைவன் கூட சனாதனத்தை எதிர்த்து பேசமாட்டான். அவனுக்கு நாட்டைவிட, மக்களை விட அவனது பார்ப்பன அகங்காரம் முதன்மையானது.
பார்ப்பனிய அதிகாரம் முதன்மையானது. தமிழ்நாடே இந்த கும்பலில் தனித்து நிற்கிறது, போர்க்குரல் எழுப்புகிறது. பார்ப்பனிய வேரை ஆட்டிவீழ்த்த நினைக்கிறது. நாம் இதனால் தனிமைப்படுத்தப்படுவோம். நாம் அரசியலில் மட்டுமல்ல, சமூகத்திலும் பார்ப்பனிய சாதிய அடுக்குநிலையை குலைக்க வேண்டுமென்கிறோம். சாதியை வீழ்த்த நினைக்கும் எவரையும் இந்திய-பாரதிய-பார்ப்பனியம் ஈவு இரக்கமின்றி அழிக்கும்.
ஈழத்தின் நடைமுறை தன்னாட்சி தமிழீழ அரசாங்கத்தில் சாதி நடைமுறையிலும், அன்றாட வாழ்வியலிலும் சாதி ஒழிக்கப்பட்டது, பெண் அடிமைத்தனம் நீக்கப்பட்டது. அதனாலேயே அந்த நடைமுறை ‘தன்னாட்சி தமிழீழம்’ அழிக்கப்பட்டது. ஈழ ஆய்வாளர்கள் சொல்வதைப் போன்று, இந்துத்துவ சாதிய படிநிலை அரசியல்-சமூகத்தை புலிகள் அழித்தார்கள். இந்த புதுவடிவ அரசியல் இந்தியாவிற்குள் பரவும் ஆபத்தை பார்ப்பனியம் உணர்ந்திருந்தது. இதை அழிக்கவேண்டுமெனில் புலிகளை மட்டுமல்ல, அந்த தன்னாட்சியில் பங்குகொண்ட அரசியல் சிந்தனையாளர்கள், வெகுமக்கள் சமூகத்தை அழிக்க வேண்டுமென்றது. எனவேதான், ‘ஆயுதங்களை மெளனிக்கிறோம்’ என்று அறிவித்த பின்னரும் முள்ளிவாய்க்காலில் இந்த முற்போக்கு சமூகத்தின் 40,000 முதல் 70,000 தமிழ் மக்கள் ஈவு-இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். தலித்துகள், மலையகத்தமிழர் உட்பட அனைத்து சாதி தமிழரும் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர்.
இந்த அழிப்பை செய்த பின்னர், இந்த ‘தன்னாட்சி தமிழர் அரசை’ நீக்குவதற்கும், அதை சாத்தியமாக்கிய போராளிகளையும் நம் நினைவில் இருந்து நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் பார்ப்பனியம் தனது கைக்கூலிகளை வைத்து நகர்த்திக்கொண்டே இருக்கிறது. பார்ப்பனியத்தின் இந்த அரசியலை பாதுகாக்கும் நிலப்பரப்பே இந்தியா-பாரதம்-ஆரியவர்த்தா எனும் சனாதன தேசம்.
‘தமிழ், தமிழர், தமிழ்நாடு’ என்பதை அழிக்கவே ‘இந்தி-இந்தியா-இந்துத்துவம்’ எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது. இது நமக்கு வாழ்வா-சாவா போராட்டம்.
நாம் வேறு, இவன் வேறு.
நம் நாடு தமிழ்நாடு. தமிழ்நாடு மட்டுமே. இதை காக்கும் கூட்டமைப்புகளை உருவாக்கி இவனது சனாதன அரசியலை வீழ்த்துவோம்.