
அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்திடுக! தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடு! – மே பதினேழு இயக்கம்
தனியார் நிறுவனத்திற்கு தங்களை ஒப்பந்தம் செய்ததை கண்டித்து கடந்த 13 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 13, 2025 புதன்கிழமை) நள்ளிரவில் அடாவடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் உரிமைக்காக அறவழியில் அமைதியாக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி நள்ளிரவில் அராஜகமாக கைது செய்த திமுக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. முந்தைய ஆட்சியாளர்களின் வழியில் ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் மீது திமுக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 15-20 ஆண்டுகளாக NULM திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் 1953 பணியாளர்களை ஆகஸ்ட் 1 முதல் பணி நீக்கம் செய்து, அவுட்சோர்ஸ் முறையில் ‘ராம்கி’ என்ற தனியார் நிறுவனத்திற்கு குறைந்த ஊதியத்தில் மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம் முன்பாக முகாமிட்டு பொதுமக்களுக்கு இடையூறின்றி அமைதி வழியில் போராடி வந்தனர். ஆனால், ரிப்பன் கட்டிடம் முன்பாக போராடுவதற்கு தடை பெற அரசு தரப்பு நீதிமன்றம் சென்றுள்ளது. நீதிமன்றமும் போராடும் தொழிலாளர்களின் முறையீட்டினை கருத்தில் கொள்ளாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் போராடலாம் என்று உத்தரவு வழங்கியுள்ளது. உடனடியாக நீதிமன்ற உத்தரவை காட்டி போராடிய தொழிலாளர்களை அராஜக முறையில் கைது செய்துள்ளனர். இது திமுக அரசின் ஜனநாயக விரோத செயலாகும்.
போராட்டம் தொடங்கிய நாள் முதலே தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து திமுக அரசு அக்கறை காட்டாமல் பேச்சுவார்த்தை நடத்தாமல் காவல்துறையினரை கொண்டு மிரட்டி, போராடும் தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டியது. மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், அரசியல் செயற்பாட்டாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தந்து அரசுக்கு அழுத்தத்தை உண்டாக்கினர். இதனையடுத்தே அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், பேச்சுவார்த்தை அரசின் முடிவை நியாயப்படுத்தி விளக்கம் அளிக்கும் கூட்டமாக இருந்தது. அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகள் போராட்ட இடத்தை மாற்றி வைப்பதையே மையப்படுத்தி இருந்தது. பேச்சுவார்த்தைகள் எதுவும் போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பற்றி இல்லாமல் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றவது பற்றியும், தள்ளிப்போடுவதை பற்றியுமே இருந்தது என்பது, அரசுக்கு போராடுபவர்களின் கோரிக்கைகள் குறித்து துளியும் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்நிலையில் போராட்டம் நீடித்ததற்கும், தீர்வு காணப்படாமல் இருந்தததற்கும் போராட்டக்குழுவே காரணம் என்று அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது.
நீண்டகாலமாகவே தங்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என்று கோரி வரும் தொழிலாளர்களை, ஒரே நாளில் ‘ராம்கி ‘ என்ற தனியாருக்கு குறைந்த ஒப்பந்தத்திற்கு செல்லுங்கள் அல்லது பணியை விட்டுவிட்டு செல்லுங்கள் என்று தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் எதேச்சதிகாரமாக அரசு செயல்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பணி நிரந்தம் மற்றும் அவுட்சோர்ஸ் செய்வது தொடர்பான வழக்கு தொழிற்தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. தொழிற்தகராறுகள் சட்டம் 1947-ன் படி, முன் அனுமதி பெறாமல் பணி மறுப்பது 6 மாதம் சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை அறிந்திருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களான தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு ஒப்பந்தம் செய்து துயரத்தில் தள்ளியுள்ளது தொழிலாளர் விரோத திமுக அரசு.
தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியார்மயமாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், முந்தைய ஆட்சியாளர்களின் தனியார்மயமாக்கல் செயல்பாடுகளை முன்நிறுத்தியும் திமுக அரசு தற்போதைய தூய்மைப் பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை செவிமடுக்க மறுத்துவருகிறது. ஆனால் தூய்மைப்பணி தனியார்மயமாக்கப்பட்ட பின்பு தான், அதிலும் குறிப்பாக ‘ராம்கி’ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டப் பின்பு சென்னை மாநகராட்சி தூய்மையான நகரங்களின் பட்டியலில் மோசமான நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சூழலை கருத்தில் கொள்ளாமல் திமுக அரசு கார்ப்பரேட் நலன் காக்கும் அரசாக செயல்படுவது திமுகவிற்கு வாக்களித்த எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மேலும், சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்காக நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி ரிப்பன் கட்டிட முன்பாக இருந்த போராட்டக் களத்தை கலைக்க அரசு அடக்குமுறையை ஏவியது ஜனநாயக விரோத செயலாகும். போராட்டக் களத்தில் பெருமளவில் காவல்துறையை குவித்து, ரிப்பன் கட்டிடம் நோக்கி செல்லும் சாலைகள் அனைத்தையும் மூடி, போக்குவரத்தை நிறுத்தி, போராட்டக் களத்திற்கு செல்வோரை தடுத்து நிறுத்தி, போராட்டக் களத்தை திறந்தவெளி சிறைச்சாலை போல் மாற்றி அரசு பெரியளவில் அச்சத்தை உண்டாக்க முயன்றது. இருந்தும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு தோழர்களின் துணையோடு அனைத்தையும் எதிர்கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்நிலையில் நள்ளிரவில் காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை கட்டவிழ்த்து அனைவரையும் அராஜகமாக கைது செய்து, சுதந்திர நாளை கருப்பு நாளாக மாற்றியுள்ளது திமுக அரசு.
கைதின் போது, போராடிய தொழிலாளர்களையும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த செயற்பாட்டாளர்களையும் காவல்துறை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. பெண் தொழிலாளர்களை ஆண் காவலர்கள் மோசமான முறையில் கையாண்டுள்ளனர். மயக்கமடைந்த தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்க மறுத்துள்ளனர். ஆதரவாக இருந்த தோழர் வளர்மதி, தோழர் நிலவுமொழி உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை குறிவைத்து தாக்கி படுகாயமடைய செய்துள்ளனர். மேலும் சில செயற்பாட்டாளர்களை சிறையில் அடைப்பதற்கான முயற்சியையும் காவல்துறை மேற்கொள்கிறது. காவல்துறையினர் தங்கள் அடையாளத்தை ஒளித்துக்கொண்டு ரவுடிகளைப் போன்று செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், செயற்பாட்டாளர்களை கடுமையாக தாக்கி குற்றவாளிகள் போல் நடத்தியுள்ளது. அதிகார வர்க்கத்தின் இந்த அராஜக போக்கை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது வேதனைக்குரியதாகும்.
கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தொழிலாளர்கள் அமைதிவழியில் போராடுவது ஜனநாயகம் உரிமை. அந்த வகையில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மேலும், தொழிலாளர்களோடு போராடிய செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் அவர்களை சிறையிலடைக்கும் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது எனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டுமென வலியுறுத்துகின்றோம். தோழர்கள் வளர்மதி, நிலவுமொழி உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது விசாரணையும், பணி நீக்கமும் செய்திட வேண்டும். சட்டவிரோதமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடி தேவை.
முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தனியார் ஒப்பந்ததை ரத்து செய்து குறைந்தபட்சம் முந்தைய நிலையை நீடிக்க செய்வதே தற்காலிக தீர்வாக அமையும். தனியார்மயம் எனும் தொழிலாளர் விரோத கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளர்களாக மாற்றுவதே உண்மையான சமூகநீதி அரசாக இருக்கும்.
திமுக அரசின் தொழிலாளர் விரோத, தனியார்மய ஆதரவினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ‘திராவிடம், தந்தை பெரியார்’ எனும் வார்த்தைகளை உச்சரிப்பதாலேயே இது ‘திராவிட மாடல்’ ஆட்சியாக அமைந்துவிடாது. திமுகவின் முதலாளித்துவ ஆதரவும், தொழிலாளர் விரோதமும் தந்தை பெரியார், திராவிடம் ஆகியவற்றிற்கு நேரெதிரான போக்காகவே மே பதினேழு இயக்கம் கருதுகிறது. தனியார்மயமாக்கலில் பாஜகவிற்கு நிகரான கொள்கையையே திமுக கடைபிடிக்கிறது. இதை திமுகவின் ஆட்சிக்காலம் முழுவதுமே சுட்டிக்காட்டி கண்டித்தும், போராடியும் வருகிறது மே பதினேழு இயக்கம்.
தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைகள் வெல்லும் வரை மே பதினேழு இயக்கம் அவர்களுக்கு துணை நிற்கும். அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து அவர்களின் கோரிக்கைகள் வெல்ல மே பதினேழு இயக்கம் தொடர்ந்து போராடும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
14/08/2025