
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும் NULM தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகத்து 01, 2025 முதல் (7 நாட்களுக்கும் மேலாக) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை பறிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து, சென்னையின் பிரதான சாலையில் ரிப்பன் மாளிகை அருகே தங்களது பணி நிரந்தர கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது வரை சென்னையின் பத்து மண்டலங்களில் குப்பை அகற்றும் ஒப்பந்தத்தை சுமீத்-உர்பாசர், ராம்கி போன்ற தனியார் நிறுவங்களுக்கு கொடுத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. அரசின் இந்த தனியார்மய நடவடிக்கைக்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும் சென்னையின் 5, 6 (ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் திரு.வி.க நகர் (மண்டலம் 6)) ஆகிய இரண்டு மண்டலங்களையும் தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயற்சிக்கிறது. இதன் வெளிப்பாடாகவே இந்த மண்டலங்களில் பணிபுரிந்த 1953 NULM துப்புரவுப் பணியாளர்களை அண்மையில் தனியார் நிறுவனத்தின் கீழ் பணி செய்யுமாறு கூறியிருக்கிறது மாநகராட்சி. கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று திடீரென தொழிலாளர்களிடம் “வேலை இல்லை, நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் அல்லது ராம்கி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. மேலும் தமிழ்நாடு தொழிற்தீர்ப்பாயத்திலும் பணிநிரந்தரம் தொடர்பான வழக்கு (வழக்கு எண்: OP. No. 66 & 67 /2025) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வழக்கு இன்னும் நீதிமன்றங்களில் இருக்கும்போது முற்றிலும் சட்ட விரோதமான முறையில் தொழிலாளர்களை தனியாருக்குத் தள்ளியிருக்கிறது மாநகராட்சி.
இவ்வாறு சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்த மாநகராட்சி ஆணையர் திரு.குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் 411 மற்றும் 412 (தேதி: 28.07.2025)இல் உள்ளபடி பணி நிலையில் மாற்றம் செய்யாமல் பணி வழங்கவும் கோரி NULM தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 06.08.2025 அன்று மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் மற்றும் பல தோழர்களும் தூய்மை பணியாளர்களை சந்தித்து உரையாற்றினர். தோழர்களிடம் தொழிலாளர்கள் பலர் தங்கள் சூழ்நிலையை விவரித்தனர். மிகவும் மோசமான நிலையில் உள்ள அவர்களின் குடும்ப சூழலையும் தனியார்மய நடவடிக்கையால் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் விவரித்தனர்.
கடந்த 17 வருடங்களாக வேலை செய்து வரும் இந்த தூய்மை பணியாளர்கள் ஆரம்பத்தில் 6500 சம்பளத்தின் அடிப்படையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். ஆனால் பல போராட்டங்கள் கண்ட பிறகே நாளொன்றுக்கு 400 ரூபாய் என்ற சம்பளத்தில் இருந்து இப்போது ஒரு நாளைக்கு 753 ரூபாய் என்று சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 23 ஆயிரத்து 500 ரூபாய் என்ற அளவில் சம்பளம் பெறுகின்ற நிலையில், தனியார் நிறுவனத்திற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். “அப்படி உடனடியாக நீங்கள் வேலைக்கு சேர்ந்தால் உங்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் இலவசமாக போனஸ் தரப்படும்” என்றும் கடந்த ஜூலை 31 அன்று அறிவிப்பு கொடுத்துள்ளனர். (ஆனால் தனியார் நிறுவனம் மாதம் 16000 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கும்.)
இந்த திடீர் வேலை இழப்பை எதிர்கொள்ள இயலாமல் எளிய தொழிலாளர்கள் செய்வதறியாது திக்குமுக்காடி விட்டனர். இந்த செய்தியை அறிந்தவுடன் முதலில் பெண்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கடந்த 25.07.2025 இல் இருந்து 30.07.2025 வரை 5 நாட்களாக உண்ணாநிலை இருந்து, வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி அம்பத்தூர் வட்ட அலுவலத்தில் ஐந்து பெண்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

பிறகு உழைப்போர் சங்கம் மூலமாக இதனை சட்டரீதியாக எதிர்க்க நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளனர். அதற்குப் பிறகு தான் ரிப்பன் மாளிகை போராட்டத்திற்கு நேரடியாக வந்துள்ளனர். அனால் இவர்கள் ரிப்பன் மாளிகை அருகே சென்று போராட முயன்ற போது அவர்கள் அனைவரையும் வெளியேற்றிய சென்னை மாநகராட்சி வாயிலை அடைத்து அவர்களைப் போராட அனுமதிக்கவில்லை. எனவே வாயிலின் அருகிலேயே இவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். தெருவோரங்களில் அமர்ந்து குழந்தைகளுடன் தாய்மார்களும், வயதானவர்களும், ஆண்களும் என கிட்டத்தட்ட 2000 தொழிலாளர்கள் அங்கே வேதனையுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
போராட்டத்தில் இருந்த ஒரு பெண் தூய்மைப் பணியாளர் பேசுகையில் “நாங்கள் என்ன அடிமைகளா? ஒரு அடிமையை விற்பது போல் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்த எங்களை தனியார் கம்பெனிக்கு அரசாங்கமே விற்கிறது. எங்களை ’ராம்கி’ என்ற நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய சொல்கிறீர்கள் இது என்ன நியாயம்? தனியார் நிறுவனம் வந்தால் 23,000 சம்பளம் பெற்றவர்கள் 14 ஆயிரம் சம்பளம் பெறுபவர்களாக மாறிவிடுவோம். அதிலும் இரண்டாயிரம் பிடிப்பு போய்விடும். இஎஸ்ஐ, பிஎப் என்ற இரண்டும் பிடித்தம் செய்துவிட்டு 14,000 சம்பளம் பெறுவோம். அந்த 14,000 ரூபாய் கொண்டு எப்படி எங்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும்? பெண்களுக்கு தான் வீட்டை நிர்வகிப்பதும், வீட்டு சுமைகளும் பெரிதும் வந்து சேர்கிறது.
வீட்டு வாடகை, மின்சாரம், சிலிண்டர் எரிவாயு, மளிகை பொருட்கள், மருத்துவ செலவுகள், பிள்ளைகள் படிப்பு, போக்குவரத்து செலவு, துணிமணி வாங்குவது போன்ற செலவுகள் ஒருபுறம் இருக்க, விலைவாசி ஏற்றத்தின் கொடுமையில் குறைவான சம்பளத்தில் எங்களால் எப்படி சமாளிக்க முடியும்? என்ற கேள்வியை முன் வைத்தனர். மேலும் “அரசு கட்டுப்பாட்டின் கீழ் வேலையில் இருந்த போது எங்கள் வாழ்க்கை பாதுகாப்பானதாக உணர்ந்தோம். இப்போது எங்களுக்கு நிம்மதி என்பதே சிறிதளவும் இல்லாது போய்விட்டது. நடுத்தர வர்க்க மக்களே பொருளாதார சிக்கலில் இருக்கும் போது, ஏழை எளிய மக்களாகிய எங்களை வேலையை விட்டு நீங்கள் வீட்டிற்கு அனுப்பினால் எங்களுடைய நிலைமை தலைகீழாக மாறி விடும். இந்த தனியார்மயம் எங்கள் வாழ்க்கையை புரட்டி போடுகிறது” என்கிறார்கள்.

மற்றொரு தூய்மை பணியாளர், “15 வருடங்களாக வேலை பார்த்துவிட்டு மீண்டும் வேறொரு இடத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு போக சொன்னால் பல சிக்கல்கள் எழும். எங்களுக்கு வயதாகிவிட்டது என சொல்லிக்கூட தனியார் கம்பெனி எங்களை வேலைக்கு எடுக்காமல் தவிர்க்க வாய்ப்புண்டு. நாங்கள் மாநகராட்சியின் கீழ் வேலை செய்தபோது அமைச்சர் வந்தாலோ அரசு நிகழ்ச்சிகள் என்றாலோ அதிகளவில் வேலை செய்தோம். விரட்டி விரட்டி வேலை வாங்குவார்கள், ஓடோடி செய்தோம், இருந்தும் ஒரு எதிர்கால பாதுகாப்பு இருப்பதாகவே நினைத்து உடல் சோர்வைப் பெரிதாக பார்க்காமல் உழைத்தோம். எங்கள் இரத்தத்தை எல்லாம் உறிந்துகொண்டு இப்போது வயதாகும் காலத்தில் வேலை இழப்பது என்பது பெருந்துயரை தருகிறது…” என்று கூறினார்.
இவ்வாறு தனியார் நிறுவனத்தின் கீழ் ஏற்படும் பணி பாதுகாப்பின்மையும் அங்கு கொடுக்கப்படும் குறைவான ஊதியமும் தூய்மைப் பணியாளர்களை இன்னும் கீழான சமூக நிலைக்கு கொண்டு செல்லும் அவல நிலையை வார்த்தைகளில் வடித்தார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் திருமுருகன் காந்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவரது உரையின் சுருக்கம்:

“இன்று ஆறாவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இத்துணை ஆண்டுகாலம் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி செய்து வந்தவர்கள் இவர்கள். கொரோனா பேரிடரின்போதும் மழை, வெள்ளம் முதலிய இயற்கை பேரிடர்களின் போதும் மக்கள் பணியை இடையறாது செய்தவர்கள். ஆனால் ஜூலை 31 முதல் இவர்கள் பணியை தனியாரிடம் (Ramky Enviro Engineers லிமிடெட்) ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் அவர்களின் பணி நிரந்தரம் சாத்தியமில்லாமல் போகிறது. தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக இவர்களின் ஊதியம் குறைக்கப்படவிருக்கிறது.
நீதிமன்ற வழக்குகளின் மூலமாகவே அவர்களின் தினக்கூலியான எழுநூறு ரூபாயை அவர்கள் பெற்று வருகின்றார்கள். விடுப்பு எடுத்தால் அன்றைய கூலி ரத்தாகி விடும். இத்தகைய மோசமான சூழலில் 21000 சம்பளத்திலிருந்து 16000 ரூபாயாக குறைக்கப்படும் சம்பளத்திற்கு இவர்களை சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றுகிறது சென்னை மாநகராட்சி.
இந்த சட்டவிரோத முடிவை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் உள்ள தொழிலாளர்களோடு பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களே தொட தயங்கிய காலத்தில், இந்த நகரத்தை காத்ததோடு நோய்த்தொற்று பரவாமல் காத்த இந்த தொழிலாளர்களை அரசு வஞ்சித்திருக்கிறது. ‘தொழிலாளர்களின் பணிநிரந்தரம்’ என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது. இவ்வாறு இருந்தால் திமுக அரசு எவ்வாறு சமூக நீதியை நிறைவேற்றும் என்ற கேள்வியை மே பதினேழு இயக்கம் எழுப்புகின்றது.
தொழிலாளர்களின் பணி நிரந்தரத்தை உறுதி செய்வது சமூக நீதி. அவர்கள் நலனைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கு எதிரானது என்பதை திமுக அரசிற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் பணி புரிவதால்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் பாதுகாக்கப்படுகின்றது. சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இருக்கும் தொடர்பை பொருளாதார அறிஞர்கள் விளக்கி இருக்கின்றார்கள்.
எனவே தொழிலாளருக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பதென்பது சமூக நீதிக்கு எதிரானது. மக்கள் நலன் விரோதமானது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரானது.
தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் என்பது திமுக அரசிற்கு பெரிய அளவிலான செலவாக இருக்காது. எனவே சமூக நீதி அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் தூய்மை பணியாளர்களின் உரிமையை அரசு உடனடியாக உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே ‘திராவிட மாடல்’ உயிர்ப்பு பெறும்.
எனவே இந்த தொழிலாளர்களுக்கும் இதர ஊராட்சி/நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியார்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக அனைத்து சனநாயக அமைப்புகளும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டும்” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி.
மழை, வெயில் பாராது நடைபெறும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் அவர்களுக்காக மட்டுமல்ல தனியார்மயத்தை எதிர்க்கவும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காகவும் நடைபெறுகிறது. பணி நிரந்தரம் கோரும் அவர்களின் போராட்டம் வெற்றியடைய அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.