நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்தும் பெண்கள் குறித்தும் இழிவாக தொடர்ந்து பேசி வரும் நிலையில் அவருக்கு எதிராக மே17 இயக்கம் உட்பட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு களம் இறங்கியிருக்கிறது. தந்தை பெரியாரை தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாக கொண்டிருந்த சீமான், இப்பொழுது ஆர்.எஸ்.எஸ் & பாஜகவின் திட்டத்தின்படி பெரியாரை இழிவு செய்யும் வகையில் ஊடக சந்திப்புகளில் பேசுவது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீமான் பரப்பும் அவதூறுகளுக்கான ஆதாரத்தை பொதுவெளியில் பகிரும்படி மே17 இயக்கம் வலியுறுத்தியும், எவ்வித ஆதாரமுமின்றி தொடர்ந்து அவதூறு பரப்பினார் சீமான். எனவே இத்தகைய அவதூறுக்கு பதிலடியாகவும் அவரை அம்பலப்படுத்தும் விதமாகவும் சீமானின் வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.
தொடர்ந்து இது குறித்தான ஊடக சந்திப்பும் சனவரி 21, 2025 அன்று நடைபெற்றது. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் முக்கியத் தலைமைகள் கலந்து கொண்டனர். இதில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள், சீமான் பெரியார் மீது அவதூறு வைத்ததற்கான ஆதாரத்தைக் கடந்த 15 நாட்களாகக் கேட்டும் கொடுக்காமலும், தொடர்ந்து பெரியாரை அவதூறு செய்வதை நிறுத்தாததாலும் முற்றுகையிடப் போவதாக கூறினார். எட்டு சதவீதம் வாக்குகளை வாங்கி இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் பொய்யை பேசினால் அந்த செய்தி உண்மை என்றுதானே பொதுவெளியில் பார்க்கப்படும், மேலும் அவர் விவாதத்திற்கு வாருங்கள் என்று அழைத்தால் ஓடி ஒளிகிறார்.
பெரியாரைக் குறித்து அவதூறு பேசும்போது அது குறித்து கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற இடத்தில் வந்து நிற்பதால்தான் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக போராட்டக் களத்தில் நிற்க வேண்டிய தேவை வந்தது. சீமான் நேரடியாக மன்னிப்பு தெரிவித்து வெளிப்படையாக விவாதத்திற்கு வர வேண்டும். கிட்டத்தட்ட பத்து நாட்களாக விவாதத்திற்கு வர தயாராக இல்லாததால் முற்றுகை இடுகிறோம் எனப் பேசியிருந்தார். சீமானின் கருத்துக்கும், நாம் தமிழர் கட்சி கொள்கைக்கும் சம்பந்தமில்லை என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூறியதால் அலுவலகத்தை முற்றுகையிடாமல் வீட்டை முற்றுகையிடுவோம் எனக் கூறியிருந்தார். ஈரோடு தொகுதியில் நடைபெறப் போகும் இடைத்தேர்தலை முன்னிறுத்தியே பாஜக-ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தலின்படி தந்தை பெரியார் மீது சீமான் அவதூறு பரப்புகிறார் என்னும் குற்றச்சாட்டையும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சீமான் வீட்டை சனவரி 22, 2025 அன்று பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பை சேர்ந்த தோழர்கள் முற்றுகையிட்டனர். காலை 10 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை முற்றுகையிட்ட 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் கைகளில் பதாகை ஏந்தி சீமானுக்கு எதிராக முழக்கமிட்டனர். குறிப்பாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பெண் தோழமைகள் ஒன்று கூடி பெண்களை இழிவுபடுத்தும் சீமானைக் கண்டித்ததுடன் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று முழங்கினர்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் உள்ள கட்சித் தலைவர்களான ”தோழர் கோவை இராமகிருட்டிணன், தோழர் விடுதலை இராசேந்திரன், தோழர் கே.எம்.சரீப், தோழர் ஜக்கையன், தோழர் குடந்தை அரசன், தோழர் நாகை திருவள்ளுவன், தோழர் பசும்பொன் பாண்டியன், தோழர் எஸ்.ஆர்.பாண்டியன், தோழர் வெண்மணி, தோழர் இளமாறன், தோழர் ரவிக்குமார், தோழர் காஞ்சி மகேஷ், தோழர் மாரிமுத்து, தோழர் பன்னீர்செல்வம், தோழர் நாகராஜ், தோழர் சுந்தரவள்ளி, தோழர் லோகு அய்யப்பன், தோழர் புதுவை தீனா, தோழர் நதியா, தோழர் மணி அமுதன்” என பல தோழமைகள் பங்கேற்க முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
முற்றுகைப் போராட்டத்தின் போது செய்தியாளர்கள் கேட்டவைகளுக்கு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அளித்த பதில்கள்:
“சீமான் தந்தை பெரியார் மீது கூறும் அவதூறுக்கான ஆதாரத்தை இதுவரை கொடுக்கவில்லை. சீமான் மீண்டும் மீண்டும் பொய்யே பேசுகின்றார். மேதகு பிரபாகரனோடு இருந்ததாக பொய் பேசினார் சீமான். இப்பொழுது பெரியாரை அவதூறு செய்கிறார். இவ்வாறு தமிழினத்தினுடைய மிகப்பெரிய ஆளுமைகளான மேதகு பிரபாகரன், தந்தை பெரியார் இருவரையும் இழிவுபடுத்துகின்ற வேலையை சீமான் செய்கின்றார்.
2009க்குப் பிறகு தனது அமைப்பை ஆரம்பித்து சிங்களவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் நகர்வுகளை செய்தவர் சீமான். சிங்கள அரசுக்கு ஆதரவாக சீமான் செய்த வேலைகளை ஆதாரத்தோடு பட்டியலிட நாங்கள் தயாராக இருக்கிறோம். இலங்கை அரசிற்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் இயங்கியவர் சீமான். விடுதலைப் புலிகள் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் என்ற ஒரு தீர்மானத்தை ஆதரித்து 2013-14 இல் ஊர்வலம் நடத்தியவர் சீமான். விடுதலைப் புலிக்கு எதிராக பேசக்கூடிய சீமானுக்கு இதைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை கிடையாது. அவருக்கு வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை அமலாக்கத்துறை கண்டுபிடித்திருக்கலாம் என்பதால் இவ்வாறு அவதூறு செய்கின்றார்.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய் பேசுபவர் சீமான். அவர் எந்த புத்தகத்தையும் வாசிக்கும் நபர் கிடையாது. தனி தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய தோழர் தமிழரசனை ‘தேங்காய் சில்லு’ என்று கொச்சைப்படுத்தியவர் சீமான். சீமானுக்கு ஆதரவாக எச்.ராஜா இருக்கிறார். எச்.ராஜாவும் சீமானும் சேர்ந்து வரட்டும். நாங்கள் தனியாக எதிர் கொள்கிறோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை ஆட்கள் சீமானுக்காக வேலை பார்க்கிறார்கள். பிஜேபி போன்ற வடநாட்டுக் கட்சியிடம் கும்பிடு போட்டு நிற்பதற்கு சீமானுக்கு வெட்கமாக இல்லையா? இந்திக்காரனுக்கு அடிமை வேலை பார்ப்பதற்கு கொஞ்சம் கூட கூச்சம் கிடையாதா? பிஜேபி, ஆர்எஸ்எஸ், மார்வாடிக்கு கைகட்டி வேலை பார்ப்பதற்கு வெட்கமாக இல்லையா? என்று சீமானைப் பார்த்து வெளிப்படையாக நான் கேட்கின்றேன்.
இப்பொழுது தன் கட்சிக்காரர்களுக்கு கட்டையை கொடுத்திருக்கிறார் சீமான். ராஜபக்சே இந்தியா வந்தபோது இந்த வீழ்ந்து விடாத வீரம் எங்கே போய் விட்டது? தமிழ்நாட்டு உரிமையை, காவிரி உரிமையை பாஜக மறுக்கும்போது, நீட் தேர்வினால் தங்கை அனிதா மரணித்தபோது, சிங்கள அரசு தமிழ்நாட்டு மீனவனை அடித்துக்கொன்றபோது அண்ணாமலையை நோக்கியோ பாஜகவை நோக்கியோ கட்டையைத் தூக்கினாரா சீமான்?
மேலும் சீமானைப் போன்ற ஒரு கோழையை தமிழ்நாடு அரசியல் பார்த்ததில்லை. மீனவனை அடித்தால் மாணவனை அடிப்பேன் என்று வீரவசனம் பேசிய சீமான், இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்காக என்ன போராட்டம் செய்திருக்கிறார்? வெற்று வாய்ச்சவடால் பேசும் தமிழின விரோதி சீமான்.
வரும் ஈரோடு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பதிலாக யாரோ ஒருவரை களம் இறக்கி, பெரியாரை அவதூறாகப் பேசி, பெரியார் பிறந்த மண்ணில் ஓட்டு அதிகமாக வாங்க வேண்டுமென்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜெண்டா. பாஜக சார்பில் ஒருவர் தேர்தலில் நிற்பதற்குப் பதிலாக சீமான் நிற்கிறார்.
110-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு விஷ ஊசி போட்டு கொலை செய்தபோது சீமான் “அது விஷ ஊசி கிடையாது, சத்து ஊசி” என்று கூறினார். இப்படி சிங்களவனுக்கு ஆதரவாக இயங்கக்கூடிய ஒருவரை எப்படி ஈழ ஆதரவாளர் என்று கூற முடியும்? மேதகு பிரபாகரன் அவர்களின் இறுதி நேரத்தில் (போருக்கான நடவடிக்கையில் இருக்கும் பொழுது) இவர் “சோறாக்கி போட்டாரு, குழம்பாக்கி போட்டாரு” என்று பேசினார். இவ்வாறு தொடர்ந்து பொய் பேசும் சீமானை அம்பலப்படுத்துவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம். சீமானுக்குத் துணிச்சல் இருந்தால் அவர் கூறிய அவதூறுக்கு ஆதாரத்தோடு விவாதத்திற்கு வரச் சொல்லுங்கள். இனி அந்தக் கோழையை அம்பலப்படுத்துவதுதான் எங்கள் வேலை” என்று கூறினார் தோழர் திருமுருகன் காந்தி. இதனை தொடர்ந்து அனைத்து தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் அருகிலிருந்த சமூக நல கூடத்தில் மாலை வரை தங்க வைக்கப்பட்டனர். குழந்தைகளுடன் கைது செய்யப்பட்ட பெண் தோழர்கள் இருந்த சமூக நல கூடத்திற்கு குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மிகவும் தாமதமாகவே வழங்கியது காவல்துறை. பெண் தோழர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பிய பின்னரே அவர்களுக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ளும் சூழல் இருந்தது.
கைதாகி செல்லும் வழியிலும், பேருந்தில் பயணிக்கும் நேரத்திலும் பெண் தோழர்கள் தங்கள் முழக்கத்தை நிறுத்தவில்லை. தந்தை பெரியாரைப் போற்றியும் சீமானைக் கண்டித்தும் தொடர்ந்து முழங்கினர். அவர்கள் தங்க வைக்கப்பட்ட இடத்திலும் பெண்ணிய விழிப்புணர்வு உரைகள், பெரியாரிய கருத்துக்கள் செறிந்த கவிதைகள், பாடல்கள், நடனம் என்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இது பெரியாரின் பாசறை கூட்ட நிகழ்வாக அரங்கேறியது.
பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நேரம், காலம், தேதி என அனைத்தையும் முன்பே குறித்து, வெளிப்படையாக அறிவித்து முற்றுகையிடும் சமயத்தில், நாதக கட்சியினர் சிலர், தோழர்களின் கடையான திசை புத்தக நிலையத்தை முற்றுகையிட்டது அனைவரையும் நகைக்க வைத்தது. மேலும் தோழர். திருமுருகன் காந்தி வீட்டை தேடித் தேடி அலைந்ததாகக் கூறியதும், சீமானின் ரசிகர்களான நாம் தமிழர் கட்சியினரின் அரசியல் பலகீனத்தை காட்டும்படி இருந்தது. தமிழ்நாட்டில் பாஜகவின் அடிவருடியாக இருக்கும் சீமானை இனியும் தொடர்ந்து எதிர்ப்போம் என்று பெரியாரிய உணர்வாள தோழர்கள் சூளுரைத்த போராட்டம் பெரும் எழுச்சியுடன் வெற்றியோடு முடிந்தது.