தலையங்கம் – ஆகஸ்ட் 5, 2022
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட முன்னேறிய தொழிற்நுட்பத்துடன் கூடிய உளவுபார்க்கும் திறன் வாய்ந்த யுவான்வாங்-5 எனும் சீன கண்காணிப்புக் கப்பல் 2022 ஆகஸ்டு 11, 12 தேதிகளில் இலங்கை துறைமுகத்தை வந்தடைய இருக்கிறது. இந்தியப் பெருங்கடலை முழுமையாக வேவுபார்க்கும் நோக்கத்துடன் அது இலங்கை துறைமுகமாகிய அம்பாந்தோட்டைக்கு வந்தடைய இருப்பதை இலங்கையின் பாதுகாப்புத்துறை தொடர்பு நிர்வாகி கர்னல் நளின்ஹெராத் தெரிவித்திருக்கிறார். வழக்கம் போல இந்த நடவடிக்கைகளை இந்தியா உற்றுக்கவனிப்பதாக சொல்லி இருக்கிறது. 2014-இல் இதே போல அணுத்திறன் கொண்ட சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் இலங்கை வந்தது. அப்பொழுதும் கடும் கண்டனத்தை தெரிவித்து உற்றுக் கவனித்தது இந்தியா.
இந்நிகழ்வுகள் இந்தியப்பெருங்கடல் இந்தியாவின் ஆளுகையிலிருந்து கைவிட்டுபோனதை பறைசாற்றுகிறது. 2009 ஈழப்படுகொலை போருக்கு முன்பு இப்பிராந்தியம் இந்தியாவின் முழுமையான ஆளுமையில் இருந்தது. போரின் உச்சத்தில் மே 15, 2009-இல் அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையின் தலைமைத்தளபதி, இந்தியப்பெருங்கடல் என்பது அனைத்து சாராருக்குமான கடற்பகுதி என்று சொன்னபோது இந்தியா மெளனம் காத்தது. விடுதலைப்புலிகளை அழித்த பின்னர் இப்பகுதியில் இந்தியாவின் ஆளுமை இல்லாது போனது என்கிற நிதர்சனத்தை இந்தியாவின் பார்ப்பனிய வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கையறுநிலையை அவ்வப்பொழுது இலங்கை அம்பலப்படுத்துகிறது.
இருந்த போதிலும், வட இந்திய பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் கட்டுரைகளை இன்றளவும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட தி பிரிண்ட் இதழில் புலிகளை கொச்சைப்படுத்தும் விதமாக கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இப்பிராந்திய அரசியலை இந்தியா கைகழுவுவதற்கு 2009 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸின் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையும், தமிழின விரோத பாதுகாப்புக்கொள்கையுமே அடிப்படைக் காரணம். இக்கொள்கையில் பாஜகவும் காங்கிரஸோடு கைகோர்த்து தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்தது.
இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது இந்தியா சார்ந்தும், தமிழர் சார்ந்தும் அமைந்ததற்கு விடுதலைப்புலிகளின் கடற்படை பிரிவு மிகமுக்கியமான காரணியாக அமைந்தது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரைக்குத்துவதை அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்தது. இதற்கு அடிப்படையை இந்தியாவின் பார்ப்பனியம் வகுத்துக் கொடுத்தது.
2001 அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்து தடை செய்ய வைத்தது இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு. இதன்மூலமாக இப்பிராந்தியத்திற்குள் நுழைவதற்குரிய உரிமையை அமெரிக்கா பெற்றெடுத்தது. இதன் மூலமாக அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட விடுதலைப்புலிகள் மீது போர் தொடுக்க இலங்கையை இந்தியாவும்-அமெரிக்காவும் தயார் செய்தன. இந்த நடவடிக்கைகளைப்பற்றி நார்வேயின் அமைச்சர் எரிசோல்ஹேம் பங்கேற்பிலான அமைதிக் கண்காணிப்புக் குழு கள்ளமெளனம் சாதித்தது.
இப்படியாக இப்பிராந்தியத்திற்குள் தலையிட அமெரிக்கா வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு இலங்கைக்குள் கண்காணிப்பு ரெடார்களை அமைத்தது. இரணில் விக்கிரமசிங்கே இதற்குரிய ஒப்பந்தங்களை கைசாத்திட்டார். இந்தியா இப்படியாக ரேடார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என இலங்கை தயங்கிய பொழுது, இந்தியாவிடம் எதிர்ப்பு வராதென்று அமெரிக்கத் தரப்பு சொன்னதை இந்தியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி இராமன் தனது இணையதளத்தில் பதிவு செய்தார். இப்படியாக அமெரிக்கா உள்ளே நுழைய அமெரிக்க சார்பு நபர்களான முன்னாள் தேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.கே நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கரமேனன் எனும் கேரள பார்ப்பனர்கள் கைகொடுத்தனர். இவ்வாறு இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்பது விற்கப்பட்டது.
இதற்கு மேலே ஒருபடி சென்று 2007-இல் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்காவின் இராணுவ கப்பல்கள் தங்கி இளைப்பாறவும், பழுது பார்க்கவுமான அக்சா (ACSA) ஒப்பந்தத்தை இலங்கை-அமெரிக்கா கைசாத்திட்டது. இப்படியான ஒரு ஒப்பந்தத்தை 1976-களில் இலங்கையின் ஜெயவர்த்தன முயற்சித்த பொழுது இந்திரா காந்தி அரசு கடுமையாக எதிர்த்து பின்வாங்க வைத்தது. இதன் அடிப்படை காரணமாக இந்தியாவின் பிராந்திய் பாதுகாப்பே அமைந்தது. இந்த எச்சரிக்கைக்கு இலங்கை அடிபணிந்தாலும், அமெரிக்காவின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா எனும் வானொளியை அமைத்துக் கொள்ள அனுமதித்தது இலங்கை. இந்த வானொலி வாயிலாக தமிழ்நாட்டு தமிழர்கள் பாடல்களை கேட்குமளவு அலைவீச்சு வீரியமாக அமைந்தது மட்டுமல்ல, இந்த வானொலி நிலையம் வாயிலாக இந்தியப்பெருங்கடலை அமெரிக்கா உளவு பார்த்தது என்பதை பாதுகாப்பு ஆய்வாளரான மறைந்த தராகி சிவராம் பதிவு செய்தார். இப்படியாக இப்பிராந்தியம் நெருக்கடியை சந்தித்ததை கடந்த 50 ஆண்டுகால அரசியல் பதிவு செய்யும். ஆனால் இத்தகைய தகவல்களை கவனமாக மறைத்துவிட்டு இலங்கை, அமெரிக்க சார்பாக செய்திகளை இந்திய பார்ப்பன சார்பு ஊடகங்கள் வெளியிடுகின்றன.
இந்த நகர்வுகளுக்கு இடையே தமிழ்நாடு மீனவர்கள் அடித்தும், சுட்டும் இலங்கையால் படுகொலை செய்யப்படுவதன் அடிப்படை காரணிகளாக இருப்பது மீன்வளம் மட்டுமல்ல, இப்பிராந்தியத்தில் தமிழர்களின் ஆதிக்கம் வளராமல் தவிர்க்க தமிழக மீனவர்கள் இப்பிராந்தியத்திலிருந்து அனைத்து வகையிலும் வெளியேற்றப்பட வேண்டுமென்பதே. இக்கொள்கையில் தமிழ்நாட்டு பார்ப்பனர்களான என்.ராம், சோ, சுப்பிரமணியசாமி, குருமூர்த்தி ஆகிய கும்பல்கள் இந்தியா, இலங்கை, அமெரிக்காவோடு கைகோர்த்து நிற்பார்கள். இவர்களின் செய்திகளே இந்தியாவில் அதிகம் பரப்பப்படுகின்றன. இந்த சதிகளைப் பற்றி மக்களிடம் அரசியல்படுத்தாமல் போலி தமிழ்த்தேசிய கூட்டமும், அதிகாரத்தை சுவைக்கும் திராவிட கட்சிகளும் தங்களது பொறுப்புகளை கைகழுவும் பணிகளை திறம்பட செய்துவருகின்றன.
பிராந்திய இராணுவ அரசியல் அறிவினை தமிழர்கள் பெறாமல் போனால் தமிழினம் மேலுமொரு அரசியல் அழிவினை சந்திக்கும் என்பதை நாம் மறக்கக்கூடாது என்பதை மே பதினேழு இயக்கம் 2009 முதல் பதிவு செய்துவருகிறது. இதைப்பற்றிய தொடர் பதிவுகளை வெளியிட்டு எம்முடைய இயக்கம் தொடர்ந்து செய்து எச்சரித்து வருகிறது. இலங்கையின் கடற்பகுதியில், பொருளாதாரத்தில், பாதுகாப்பில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய மாற்றங்களும் இக்கடல் பிராந்தியத்தை பாதிக்கும். அவ்வாறு நடக்கும் மாற்றங்கள் இக்கடல்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்களின் வாழ்வை நேரடியாக, மறைமுக பாதிக்கவே செய்யும் என்பதை தமிழர்கள் மறக்கக்கூடாது.