இராமேசுவரம் கடற்பகுதியில் கடந்த ஆகத்து 1, 2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகைக் கவிழ்த்து, மலைச்சாமி என்கின்ற மீனவரை படுகொலை செய்தது இலங்கைக் கடற்படை. மேலும், தண்ணீரில் மூழ்கிய இராமச்சந்திரன் என்பவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் மீனவத் தொழிலாளர்கள் இவ்வாறு இலங்கை ராணுவத்தினால் படுகொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 35 வருடங்களில் தொடர்ச்சியாக 875 மீனவர்களைக் கொலை செய்திருக்கிறது இலங்கை கடற்படை. மேலும் ஆயிரக்கணக்கானவர்களை ஊனமடைய வைத்திருக்கிறார்கள்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதும், படுகொலை செய்யப்படும் பொழுதும் தொடர்ச்சியான போராட்டங்களை மே 17 இயக்கம் முன்னெடுக்கிறது. மேலும் மலைச்சாமி மற்றும் இராமச்சந்திரனின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் குடும்ப நிலையை கள ஆய்வு செய்தது மே 17 இயக்கம். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுதே, தமிழ்நாட்டில் சிங்களத்தினரால் நடத்தப்படும் DAMRO அறைகலன் கடையை முற்றுகை இடுவோம் என அறிவித்திருந்தது.
தமிழக மீனவர்களை தொடர்ந்து வேட்டையாடும் சிங்களப் பேரினவாதத்தின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் செயல்படுவோம் என்று கூறியது மே 17 இயக்கம். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிங்கள நிறுவனமான ‘தம்ரோ பர்னிச்சர்’ கடைகளை இழுத்து மூடும் முற்றுகை போராட்டத்தை மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட சனநாயக அமைப்புகள் முன்னெடுத்தன.
அதன் முதற்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உள்ள தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிடும் போராட்டம், ”மே பதினேழு இயக்கம், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை ஆகிய அமைப்புகள் தலைமையில் ஆகத்து 10 சனிக்கிழமை காலையில் நடைபெற்றது”. அதே நேரத்தில் கோவையில் உள்ள DAMRO கடையை முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது.
இந்தப் போராட்டங்களின் போது, “தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்யும் இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வரப்பட வேண்டும், தம்ரோ உள்ளிட்ட சிங்கள பேரினவாத நிறுவனங்களை தமிழ்நாட்டில் இழுத்து மூட வேண்டும், சிங்கள வணிகங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பட்டன. மேலும் இலங்கை கடற்படையினருடன் இராணுவப் பயிற்சி அளிக்கும் இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் ஆவடி நாகராஜ், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஏ.கே.கரீம் மற்றும் வடக்கு மண்டல தலைவர் தோழர் ரஷீத், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலு உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள், பிரதிநிதிகள் தோழர்களோடு பங்கேற்று, தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு கைதாகினர்.
தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு உரையின் சுருக்கம் :
“தமிழ்நாடு மீனவர்களை தொடர்ச்சியாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசு படுகொலை செய்து வருகிறது. 850 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலையானபோதும் இந்திய அரசு இதற்குரிய தீர்வினை எட்டவில்லை. இதற்குரிய கொலை வழக்கை கூட பதிவு செய்யவில்லை. ஆனால் பாகிஸ்தானில், குஜராத்தில் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டால் கொலை வழக்கை உடனே பதிவு செய்கிறார்கள். அதற்கு மோடி நேரடியாகவே ட்விட்டரில் (X தளத்தில்) கண்டனத்தை பதிவு செய்கிறார். தூதரை அழைத்து கண்டிக்கிறார்கள். ஆனால் இலங்கையில் இருப்பவன் தமிழக மீனவர்களை கொலை செய்யலாம் என்று எழுதிக் கொடுத்தது போல, இத்தனை மீனவர்கள் கொலை செய்யப்பட்ட போதும் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்த மீனவர்கள் மீனவத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “நாங்கள் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது, கலெக்டரை பார்த்து ஏன் பிணக்கூறாய்வை செய்யவில்லை, ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?” என்று கேட்டோம். ”இலங்கை எல்லையில் கொலை நடந்திருப்பதால் செய்யவில்லை என்றார்கள். இதை எவ்வாறு உறுதி செய்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதில் இல்லை”. அப்படியே இலங்கை கடற்பகுதியில் கொலை நடந்தாலும் கொலை வழக்கை பதிவு செய்திருக்க வேண்டும். இலங்கை அரசு ஏன் குற்ற வழக்கை பதிவு செய்யவில்லை என்று இந்திய அரசு கேட்கவில்லை. இவ்வாறு எங்கேயும் பதிவு செய்யப்படாமல் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதானி வணிகத்துக்காக, ஒப்பந்தம் போட இங்கிருந்து வெளியுறவுத்துறை செயலரிலிருந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் வரை செல்கிறார்கள். இங்கிருக்கும் மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடிக்க ஏன் ஒப்பந்தம் போடவில்லை என இந்திய அரசை கேட்கிறோம். கடந்த முறையும் தமிழ்நாட்டு மீனவர் ராஜ்கிரன் கொலை செய்யப்பட்ட வழக்கை பதிவு செய்யவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே சடலத்தை எடுத்து பிணக்கூறாய்வு செய்தார்கள். ஆனால் கொலை வழக்கை பதிவு செய்யவில்லை. இப்பொழுது மதுரை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்காமல் கொலை வழக்கை பதிவு செய்யாமல், பிணக்கூறாய்வு செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இதற்காக இந்திய அரசை நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். திமுக அரசும் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கை பதிவு செய்யவில்லை என்பதால் திமுக அரசிற்கும் எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
இங்கு சிங்களவர்களின் கடைகள் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றன. ‘தம்ரோ பர்னிச்சர்’ தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஃபர்னிச்சர் நிறுவனம். தமிழ்நாட்டில் 40 இடங்களில் கிளைகள் கொண்டது தம்ரோ நிறுவனம்.
இந்த சிங்கள நிறுவனத்தை நாங்கள் இதுவரை தொந்தரவு செய்ததில்லை. தமிழர்களின் ஆதரவுடன்தான் இந்த நிறுவனம் பெரிதாக வளர்ந்து இருக்கிறது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் இருக்கின்றன. 500 – 600 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் தம்ரோ நிறுவனத்தை நாம் அனுமதிக்கிறோம். ஆனால் கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் கஞ்சி குடிக்கும் மீனவன் அங்கு படுகொலை செய்யப்படுகிறான்.
எங்கள் மீனவனை படுகொலை செய்வது தொடர்ந்தால் உங்கள் நிறுவனத்தை புறக்கணிப்போம். சுயமரியாதை மிக்க எந்தத் தமிழனும் தம்ரோ நிறுவனத்தில் பொருள் வாங்கக்கூடாது. மீனவர்களுக்குத் துணையாக நிற்கும், மீனவர்களின் ஏழை குடும்பத்திற்கு துணையாக நிற்கும் தமிழர்கள் இந்த நிறுவனத்தில் பொருட்களை வாங்காதீர்கள்.
நம்மால் பணம் சம்பாதித்து, நம் மீனவர்களை படுகொலை செய்யும் இந்த சிங்கள நிறுவனம் எதற்கு என்ற கேள்வியைத்தான் இப்பொழுது எழுப்புகிறோம். வரும் வாரங்களில் தமிழ்நாடு முழுவதும் தம்ரோ கடைகளை முற்றுகையிடும் போராட்டங்கள் தொடர்கின்றன. ”திங்கட்கிழமை 12-ஆம் தேதி மதுரையிலும், 13-ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14-ஆம் தேதி திருச்சியிலும், 16-ஆம் தேதி தஞ்சாவூரிலும், 20-ஆம் தேதி வேலூரிலும் தம்ரோ முற்றுகை போராட்டத்தை நடத்துகின்றோம்”.
2013-ல் தமிழ்நாட்டின் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டமன்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்திய அரசு தமிழ்நாட்டின் மீனவனைக் காப்பாற்றவில்லை என்றால் சிங்களவன் கடை இங்கு புறக்கணிக்கப்படும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
இந்தக் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தாலே நமது புறக்கணிப்பால் இக்கடை மூடப்படும். இங்கு தம்ரோ நிறுவனம் மட்டுமல்லாது பல சிங்கள நிறுவனங்கள் இருக்கின்றன. அந்நிறுவனங்களுக்கு எதிராக போராட்டத்தைத் துவங்க இருக்கிறோம். ’எங்கள் மீனவனை கொலை செய்தால், எங்கள் மீனவர்களின் படகுகளை பிடித்துக் கொண்டு எங்கள் மீனவர்களை சிறையில் சித்திரவதை செய்தால், எங்கள் மீனவர் சிக்கல் தீரவில்லை என்றால் பாஜகவுக்கு எதிரான பெரும் போராட்டம் தொடங்கும்’.
இலங்கை கடற்படை செய்த கொலைகளுக்கு வழக்குப்பதிவு செய்து சர்வதேச நீதிமன்றத்தை நாட வேண்டும். மீனவர் படுகொலைகளைத் தடுக்காத பாஜக, தமிழ் நாட்டை இழிவு செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை அண்ணாமலைக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
சிங்களவரிடம் பாஜகவினர் பணம் பெற்றுக்கொண்டார்களா என்று கேள்வி கேட்கிறோம். இதே கேள்வியை காங்கிரசிடமும் எழுப்புகிறோம். ராகுல் காந்தி மீனவர் படுகொலை குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை? பாஜகவும், காங்கிரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. எனவே நாங்கள் இந்தியாவில் இருக்கும் எந்த இந்திய தேசிய கட்சிகளையும் நம்புவதில்லை.
எங்கள் மீனவரைப் பாதுகாப்பதற்கு நாங்கள் வீதிக்கு வருவோம். தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்போம். இதேபோன்று லைக்கா நிறுவனத்தை எதிர்த்தும் போராடி இருக்கிறோம். வழக்கும் வாங்கி இருக்கிறோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதற்கு முன்னர் சீமான், லைக்கா நிறுவனத்திற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். மேலும் நெய்தல் படையைக் கட்டுவேன் என்று கூறியவர் இதுவரைக்கும் மீனவர்களுக்காக ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
அன்று ”அதிமுக அரசு இலங்கை மீதான பொருளாதார தடைக்கான தீர்மானத்தை கொண்டு வந்தது. திமுகவும் அதை ஆதரித்தது. இன்று இரண்டு கட்சிகளும் இங்கு சிங்கள நிறுவனம் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்ப வேண்டும்.” என்று உரையாற்றினார் தோழர் திருமுருகன் காந்தி.
மேலும் அவர் “ஊடக விவாதங்களில் எங்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. நாங்கள் நடத்தும் எந்த போராட்ட செய்திகளும் வெளியில் வருவதில்லை. கள்ளக்குறிச்சிக்கு எங்கள் தோழர்கள் நேரில் சென்றனர். மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக மாநாடு நடத்தி இருக்கிறோம். நீட் எதிர்ப்பு போராட்டங்கள், ஒப்பந்த ஊழியர் போராட்டங்கள் போன்ற பலவற்றில் பங்கு எடுத்திருக்கிறோம். நாங்கள் தான் வீதியில் போராடி இருக்கிறோம். ஆனால் நம் மீனவர்களுக்கு எதுவுமே செய்யாத கட்சிகள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலையும், சீமானும் மீனவர்களுக்காக ஒரு போராட்டம் கூட இதுவரை நடத்தியது கிடையாது. மீனவர்களுக்காக பாஜக ஏதாவது போராட்டம் செய்திருக்கிறதா? சீமான் போராட்டம் செய்திருக்கிறாரா? நாங்கள் தான் தமிழர்களுக்காக, மீனவர்களுக்காக வீதியில் இறங்கி இருக்கிறோம். நாங்கள்தான் அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு. எங்களை புறக்கணிக்க வேண்டும் என்று அழுத்தம் ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுவோம்.” என்று கூறினார்.
சென்னையைப் போலவே கோவையிலும் மே பதினேழு இயக்கத்தின் தோழர். கொண்டல் சாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் தோழர். கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் DAMRO முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர். நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை கட்சியின் தோழர்.ரவிக்குமார், தமிழ் சிறுத்தைகள் கட்சி தோழர். அகத்தியன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர். இளவேனில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர். சுசி கலையரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் கோவை குரு, தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகத்தின் தோழர். நேரு தாஸ், புரட்சிகர இளைஞர் முண்ணனியின் தோழர். மலரவன், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கத்தின் தோழர். காமராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர். தங்கராசு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் தோழர். அபுதாகீர் உள்ளிட்ட சனநாயக முற்போக்கு இயக்கங்கள் கட்சிகளின் தோழர்கள், மே பதினேழு இயக்கத் தோழர்களுடன் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இப்போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு காந்திபுரத்தில் உள்ள கமலம் துரைசாமி மஹாலில் வைக்கப்பட்டனர்.
இப்போராட்டத்தின் எதிரொலியாக கோவை GP signal அருகேயுள்ள தம்ரோ பர்னிச்சர் கடை முழு நாளும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனியும் தமிழக மீனவர்களைக் கொலை செய்தால், தமிழ்நாட்டில் உள்ள சிங்கள நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். சிங்கள நிறுவனங்களில் இருந்து எந்தப் பொருட்களும் தமிழர்கள் வாங்கக்கூடாது என்கின்ற பிரச்சாரத்தை தமிழ்நாடெங்கும் செய்வோம் என்னும் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவேற்றது.