தமிழர் நில அபகரிப்பு – யாருடைய லாபத்திற்காக?

அறுவடை பயிர் மீது பொக்லைன் இயந்திரங்களை இறக்கிய என்.எல்.சி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கார்பொரேஷன் (என்.எல்.சி) தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி 30க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்களை அழித்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1956ம் ஆண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், சுரங்கம் தோண்டி பழுப்பு நிலக்கரி எடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. அங்குள்ள மக்களிடம் உள்ள நிலங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு தருகிறோம் என அதிகாரிகள் கூறி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தினர். ஆனால் 66 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தால் தமிழர்களுக்கு உரிய வேலைவாய்ப்பும் தரப்படவில்லை, ஒன்றிய அரசு வாக்களித்தபடி நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை.

இதுவரை என்.எல்.சி நிர்வாகம் சுரங்கத்திற்காகக் கையகப்படுத்திய நிலங்களின் விவரம்.

சுரங்கம் 19 கிராமங்கள் 3000 ஏக்கர் 
சுரங்கம் 225 கிராமங்கள் 10,000 ஏக்கர் 
சுரங்கம் 326 கிராமங்கள் 12,125 ஏக்கர் 

தற்போது வரை, 25,000 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. 1985 ஆண்டு சுமார் 10,000 ஏக்கர் நிலங்களைக் கையெடுக்கப்படுத்தி 37 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாமல் இப்போது இரண்டாவது சுரங்கத்திற்கு விறுவிறுப்பாக என்எல்சி வேலையைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் மின்சார தேவை ஒரு நாளைக்கு 18000 முதல் 22,000 மெகாவாட் மின்சாரம் ஆகும். தற்போது என்எல்சி நாளொன்றுக்கு 2000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கிறது. அதில் 40 சதவீதம், அதாவது 800 மெகாவாட் மட்டுமே தமிழ்நாட்டுக்குக் கிடைக்கிறது. மாநிலத்தின் தேவைக்குக் காற்றாலை, நீர், கடலலை மற்றும் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், வட மாநிலங்களுக்கான மின் உற்பத்திக்காகத்  தமிழர் விளை நிலங்களை ஏன் அழிக்க வேண்டும்?

மூன்று அலகுகள் உள்ள அந்நிறுவனத்திற்கு இதுவரை நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தமிழர் நிலத்தைக் கையகப்படுத்திக் கட்டப்பட்ட அந்நிறுவனம் தொடர்ந்து தமிழர்களைப் புறக்கணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட 25,000 மேற்பட்ட குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களாக 3500 பேர் பணியில் நியமிக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு என்எல்சியில் 299 பொறியாளர் வேலை நிரந்தர வேலைக்கு ஆட்கள் எடுத்ததில் ஒருத்தர் கூட தமிழர் இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொறியாளர் மற்றும் உயர் அதிகாரி பதவிகளில் பிற மாநிலத்தவரே அமர்த்தப்படுகின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் கடைநிலை பணியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப்  பணி நிரந்தரம் செய்யாமல் வைக்கப்படுகின்றனர். இதனால் விளை நிலங்களைக் கொடுத்துவிட்டுக் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்வதாக அம்மக்கள் குமுறுகின்றனர்

குறிப்பாக வட மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதையொட்டி,  அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை தர வேண்டும் என்றும், நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என மே17 இயக்கம் உட்படப் பல அரசியல் அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலக்கரி சுரங்கம் தோண்டியதின் எதிரொலியாக நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிகள் கீழே போய்விட்டது என்றும்; மழை நீரை உறிஞ்சி கடலில் வெளியேற்றுகின்றனர், பாசனத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளும் உருவாகியுள்ளது. இங்கு உள்ள பயிர் வகைகள், நெல், கரும்பு, வாழை, முட்டைகோஸ் போன்ற பயிர்களும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படுவதாக என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மூன்றாவது சுரங்கத்தை அமைக்கத் திட்டமிட்டுக் கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் நிலங்கள் கையெடுக்கப்பட்டதாக என்எல்சி  அறிவித்துள்ளது. இரண்டாவது சுரங்கம் பயன்பாடு 37 வருடம் கழித்து நடக்கும்போது, மூன்றாவது சுரங்கம் எதற்கு? என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுகிறது. இது தமிழர்களின் நில வளங்களை என்எல்சி மூலம் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம், எல்ஐசி, விமான நிலையம், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசாங்கம் தனியாருக்குத் தாரைவார்த்து வருகிறது. 

வாழ்வாதாரத்தை இழந்து எப்படி வாழ்வது என்றும், சொந்த நிலமிருந்தும் அகதியாக இருக்கிறோம் என்று கூறும் அம்மக்களின் குரலுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது? நெய்வேலி எல்.எல்.சி  தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப்  போராடிய நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

நெய்வேலி எல்.எல்.சியில் பணிபுரியக்கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நிரந்தரப்படுத்தும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் 50,000 வழங்கக் கோரியும் (சமவேலைக்குச் சம ஊதியம்) அதோடு, என்எல்சிக்கு ஏற்கனவே வீடு நிலம் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் வியாழன் இரவு வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் என்.எல்.சி  தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைகளில் உறங்கி போராட்டத்தைத் தொடர்கின்றனர். 

இந்நிலையில் என்.எல்.சி நிறுவனத்திற்காகக் கடலூர் மாவட்டத்தில் 60 கிராமங்களில் உள்ள 25,000 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே அக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்பி வந்தனர். கடந்த மார்ச் 9-ம் தேதி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி கிராமத்தில் சுரங்கப் பணிகளை என்.எல்.சி. தொடங்கியது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் தங்களது அரசு அடையாள அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தியாவில் கிராமப்புறங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு 4மடங்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நிலம் கையகப்படுத்தும் சட்டம் (2013)  கூறும்போது; அச்சட்டத்தைப் பின்பற்றாமல் அரசு குறைந்தளவு இழப்பீடு வழங்குவதாக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

நிலத்திற்கான முறையான இழப்பீடு இல்லை, தமிழர்களுக்குப் பணி நிரந்தரம் இல்லை, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி அப்பகுதி வாழ் மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்பது, தமிழர் நிலக்கரி தமிழருக்கு பயன்படாமல் போவது என்று எந்த வகையிலும் தமிழர்களுக்குப் பலனில்லாத என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டில் தேவையா என்ற கேள்வியை தமிழர்கள் எழுப்ப வேண்டும்.

நெய்வேலியில் போராடும் தொழிலாளிகளின் கோரிக்கைகள் வெற்றிபெற மே பதினேழு இயக்கம் வாழ்த்துகிறது. இது குறித்து விரிவான அறிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »