கன்னியாகுமரியில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் தாலுக்காவில் சுமார் 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண்ணிலுள்ள கனிம வளங்களையும் அணுக்கனிமங்களையும் எடுக்க ஒன்றிய பாஜக அரசு இந்திய அரிய மணல் ஆலைக்கு அனுமதி வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டமே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் சூழலை உண்டாக்கும் இந்த அபாயகரமான திட்டத்தை மே பதினேழு இயக்கம் கடுமையாக எதிர்க்கிறது. இத்திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
இந்திய அரிய மணல் ஆலை (IREL) மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே சின்னவிளை, பெரியவிளை என இரண்டு கிராமங்களில் கனிமங்களுக்காக மணல் அள்ளி வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மணல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 மீட்டர் வரை கடற்கரையும் பல மக்கள் குடியிருப்புகளும் கடலுக்குள் சென்றுவிட்டன. மேலும் இம்மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இல்மனைட், ரூட்டைய்ல், சிர்க்கான், சிர்க்கோனியம், புளூட்டோனியம், மோனோசைட், யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க கனிமங்களால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்படைந்துள்ளனர். தற்போது இந்த நிறுவனத்திற்கு தான் புதியதாக அணுக்கனிமங்களுக்காக மணல் அள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில், கிள்ளியூர் தாலுகாவில் உள்ள மிடாலம், கீழ்மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாவில் சைமன்காலனி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மணல் அள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சைமன்காலனி முதல் நீரோடி வரையிலான கடற்கரை மற்றும் உட்பகுதிகளில் 30 அடி ஆழம் வரை மணலை தோண்டி எடுத்து, அதிலுள்ள அணுக்கனிமங்களை பிரித்து பின்பு கழிவு மணலை கொண்டு தோண்டிய இடத்தில் கொட்டப்படும் என்று இத்திட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய திட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டவே புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த திட்டத்தின் 1144 ஹெக்டேரில் ஏறத்தாழ 353 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டலத்தின் கீழ் வருகிறது. மேலும், ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் வீதம் சுமார் 60 மில்லியன் டன் கனிமங்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்த எந்த ஆய்வும் இல்லை. ஏற்கனவே திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையால் பல மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டு அல்லல்படுகின்றனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம் பிறப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தினால் அதிகரிக்கப்படும் கதிரியக்கத்தினால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அதனோடு, பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதியில் மணல் அள்ளப்படும்போது, கடலோர சூழல் கடுமையாக பாதிக்கப்படும். கடற்கரையினுள் கடல்நீர் உட்புகும் போது, கடற்கரையொட்டிய உயிர்ச்சூழல் அழிந்துவிடும். இது இப்பகுதியின் காலநிலையில் கடுமையான மாற்றத்தை உண்டாக்கும். உள்மாவட்டத்தில் மலைகள் அழிக்கப்படும் சூழலினால் உண்டாகும் பாதிப்போடு, கடற்கரை பகுதியில் இத்திட்டத்தினால் உண்டாகும் பாதிப்புகள் சேரும் போது, எதிர்பார்க்க முடியாத இயற்கை பேரிடர்களை கன்னியாகுமரி மாவட்டம் சந்திக்கும். காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் உலகின் முன்னேறிய நாடுகளே கடுமையாக போராடும் போது, எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கவலைப்படாமல் அழிவுத் திட்டங்களை முன்னெடுக்கும் இந்திய ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழர்கள் மீது திணிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இச்சூழலில், பாதிப்புகள் குறித்து கவலைப்படாமல் ஒன்றிய பாஜக அரசு அனுமதியளித்துள்ள இத்திட்டம் குறித்து வரும் அக்டோபர் 1 அன்று மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த கருத்துகேட்பு கூட்டத்திற்கு கன்னியாகுமாரி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த கருத்துகேட்பு கூட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், இத்திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
அழிவுத்திட்டங்களை தமிழ்நாட்டின் மீது திணிப்பதை ஒன்றிய பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஒத்திசைவு வழங்கக்கூடாது. தமிழர்களின் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டத்தை ஒன்றிய-மாநில செயல்படுத்த முனைந்தால், எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும். தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக ஆற்றல்களையும் ஒன்றிணைத்து மக்களின் ஆதரவோடு தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும். இதனை முன்னெடுக்கும் ஜனநாயக ஆற்றல்களோடு மே பதினேழு பதினேழு இயக்கம் கைகோர்த்து செயல்படும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
22/09/2024