இரண்டாவது முறையாக தேர்தலைப் புறக்கணிக்கும் பொட்டலூரணி கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை இரண்டாவது முறையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 912 வாக்காளர்களைக் கொண்ட இக்கிராமத்தின் இந்த முடிவு, உள்ளூர் பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாததன் வெளிப்பாடாக இருக்கிறது. இதை சாதாரண அரசியல் நிகழ்வாக கடந்து விட கூடாது. மக்களாட்சியின் / சனநாயகத்தின் செயற்பாடாக பார்க்கப்படும் ஒன்றை கேள்விக்குறியாக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இக்கிராமத்தைச் சுற்றியுள்ள மூன்று கழிவுமீன் செயலாக்க நிறுவனங்கள் காரணமாக, அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிறுவனங்களிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் அன்றாட வாழ்க்கையை சிரமமாக்கியுள்ளதாகவும், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கழிவுநீர் அருகிலுள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் கலப்பதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு, அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, கடந்த 700 நாட்களுக்கு மேலாக அம்மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்த நிரந்தர தீர்வும் எட்டப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாகும். இதனால், மீண்டும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பை ஒரு எதிர்ப்புச் செயலாக அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

மேலும், தங்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்குகளை திரும்ப பெறுவதும், பிரச்சினைக்கு காரணமான கழிவுமீன் நிறுவனங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, மக்கள் மனதில் விரக்தியை உருவாக்குகிறது. குறிப்பாக, உள்ளூர் அளவில் நேரடியாக வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படாதபோது, மக்கள் அமைதியான எதிர்ப்பாக தேர்தல் புறக்கணிப்பைத் தேர்வு செய்வது அதிகரித்து வருகிறது. இது வெறும் அலட்சியம் அல்ல; ஒரு திட்டமிட்ட அரசியல் அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், நிலம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், மக்கள் ஒருங்கிணைந்து இத்தகைய முடிவுகளை எடுப்பது இயல்பான ஒன்றாகும். பொட்டலூரணி கிராமத்தின் இந்த நடவடிக்கை; நாட்டின் பல பகுதிகளில் உருவாகும் பொதுவான மக்கள் மனநிலையின் பிரதிபலிப்பாக உள்ளது.

இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த தேர்தல் புறக்கணிப்பு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான சான்றாகும். இது அரசாங்கத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை மணி. மக்கள் குரல் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது, சனனநாயகத்தின் மீது அவர்களுடைய நம்பிக்கை மேலும் குறையும் அபாயம் உள்ளது.

இந்த சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளுவது அவசியமாகிறது. இல்லையெனில், தேர்தல் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கைகள் மேலும் பல இடங்களில் உருவாகும் சாத்தியம் உள்ளது. பொட்டலூரணி கிராம மக்களின் இந்த முடிவு, “மக்கள் குரல் முக்கியம்” என்பதை அரசியல் அமைப்புக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

மக்களாட்சிக்கான மாபெரும் திருவிழா என்று திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் தேர்தலை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களாட்சியின் மன்னர்களான மக்களின் பிரச்சனைகளையோ குப்பைத் தொட்டியில் வீசி விட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உண்மையான மக்களுக்கான பிரச்சினைகளை பேச முனைவோம், குரல் கொடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »