
வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் எனும் முழக்கத்தோடு 14.04.26 அன்று மணப்பாறையில் தோழர் அப்துல் சமதுவை ஆதரித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை
அன்பான மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பெருமக்களே, பெரியோர்களே, தாய்மார்களே, இந்த 2026 தேர்தல் நாம் இதுவரை பார்த்த தேர்தல் போல இல்லை. இது நமது தமிழ்நாட்டைக் காப்பதற்காக நாம் நடத்தக்கூடிய போராட்டம். இன்றைக்கு மோடி அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நாம் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.
நமது ஊரில், தமிழ்நாட்டில் இப்போது நீங்கள் ரயில்வே நிலையத்துக்குப் போனாலும் சரி, வங்கிக்குப் போனாலும் சரி, எல்லா இடத்துக்குப் போனாலும் இந்தியில் பேசும் அதிகாரிதான் அதிகமாக இருக்கிறார்கள். எல்லா இடத்திலும் இந்திக்காரர்கள்தான் இருப்பதால் நம்மால் எழுத முடியவில்லை, சொல்ல முடியவில்லை, பேச முடியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் மத்திய அரசாங்கத்தின், மோடி அரசாங்கத்தின் அலுவலகங்களில் இரண்டரை லட்சம் வேலைகள் இருக்கின்றன. இந்த இரண்டரை லட்சம் வேலை தமிழர்களுக்கு கிடைப்பதில்லை.
இப்போது நீங்கள் திருச்சி போனால் பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இருக்கிறதா? இருக்கிறது. பெல் தொழிற்சாலை இருக்கிறதா? இருக்கிறது. துப்பாக்கி தொழிற்சாலை இருக்கிறதா? இருக்கிறது. சென்னைக்கு போனால் ஆவடி தொழிற்சாலை இருக்கிறது, ஐசிஎப் தொழிற்சாலை இருக்கிறது. எல்லா ஊரிலும் ரயில்வே நிலையம் இருக்கிறது, எல்லா ஊரிலும் வங்கி இருக்கிறது. எல்லா இடத்திலும் இந்திக்கார அதிகாரிகளுக்கு மட்டும்தான் வேலை கொடுக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு மட்டும்தான் வேலை. நான் கூலி வேலை பார்க்கும் வடநாட்டு இந்திக்காரர்களை சொல்லவில்லை, அதிகாரிகளை சொல்கிறேன்.

இந்த வேலைகள் எல்லாம் யாருக்கு வந்திருக்க வேண்டும்? நமது பிள்ளைகளுக்கு வந்திருக்க வேண்டும். நமது பிள்ளைகள் பி.ஏ படித்துள்ளார்கள், பி.எஸ்சி படித்துள்ளார்கள், பி.இ படித்துள்ளார்கள், எம்.பி.ஏ படித்துள்ளார்கள். எல்லா வீட்டிலும் பிள்ளைகள் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்களா இல்லையா? ஆனால் நல்ல வேலை கிடைக்கிறதா? பிள்ளைகளுக்கெல்லாம் வேலையே இல்லை. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வேலைகளை இந்திய அதிகாரிகளுக்காக மோடி அரசாங்கம் கொடுத்து வைத்துள்ளது. இது மட்டுமில்லாமல், போன ஆட்சியில் எடப்பாடியார் ஆட்சியில் தமிழ்நாடு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய வேலையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டார்கள். நமக்கும், நமது பிள்ளைகளுக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
அப்படி எல்லா இடத்திலும் இந்தியை திணிக்கிறார்கள்? வெறும் மொழியை நாம் எதிர்க்கிறோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் விடயம் அதுவல்ல. இந்திக்காரன் இருப்பதால்தான் இந்தியை திணிக்கிறான். இந்திக்காரன் இங்கே ரயில்வே நிலைய அதிகாரியாக இருப்பதால், ரயில்வே போலீசாக இருப்பதால், ஐசிஎப்-ல் வேலை பார்ப்பதால், பொன்மலையில் வேலை பார்ப்பதால், இப்படி எல்லா இடத்திலும் இந்திக்காரனாக இருப்பதால்தான் இந்தியை திணிக்கிறான்.
நீங்கள் வங்கி மேலாளரைப் பார்த்து கடன் வாங்க முடியுமா? சுலபமாக வாங்க முடியவில்லை. ஏன் வாங்க முடியவில்லை? யார் வீட்டு பணம் அது? நாம் எல்லாம் பணம் போடுவது வங்கியில்தான். அந்த பணத்தில் நமக்கு கடன் தர மறுக்கிறான். ஏனென்றால் மேலே இந்திக்காரன் உட்கார்ந்திருக்கிறான். இப்படி எல்லா இடத்திலும் இந்திக்காரனைக் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சிதான் மோடி அரசு.
இப்போது மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. “எதற்கு மோடியை எதிர்த்து பேசுகிறீர்கள்?” என்று கேட்பீர்கள். இதுவரை தமிழ்நாட்டுக்குள் இருக்கக்கூடிய கட்சிகளுக்குத்தான் போட்டி நடந்துகொண்டிருந்தது. ஆனால் இன்றுதான் முதல் முறையாக நாம் பார்க்கிறோம் – அமித்ஷா வருகிறார், நரேந்திர மோடி வருகிறார், யோகி ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து வருகிறார், குஜராத்திலிருந்து வருகிறார்கள், மகாராஷ்டிராவிலிருந்து இந்திக்காரன்தான் வருகிறான்.
இந்திக்காரன் முதலமைச்சராக வருகிறான். நாம் கேள்வி படுகிறோம்: இந்திக்கார முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? உனக்கு என்ன வேலை? எதற்கு இங்கு வருகிறாய்? தமிழ்நாட்டுக்கு நீ என்ன நல்லது செய்திருக்கிறாய்? ஏதாவது நல்லது செய்திருக்கிறாயா? நல்லது கெட்டதுக்கு வந்திருக்கிறாயா? நமது ஊரில் மழை வந்தது, வெள்ளம் வந்தது, புயல் வந்தது, வறட்சி வந்தது. அப்போது யாரும் வரவில்லையே. மீனவனை சுட்டுக் கொன்றபோது வரவில்லையே. இப்போது எதற்கு இந்திக்காரனாக வருகிறாய்? நாம் கேட்க வேண்டாமா? எதற்கு இந்திக்காரன் வருகிறான்? அவன் ஆட்களுக்கு இங்கே வேலை கொடுக்க வேண்டும். நமது ஆட்களை வேலையை விட்டு விரட்ட வேண்டும். இதற்குத்தான் இந்திக்காரனாக வந்து இறங்குகிறான்.
இந்திக்காரனை முதலமைச்சராக கொண்டு வந்து இறக்குவது யார்? நரேந்திர மோடி கொண்டு வந்து இறக்குகிறார். அவருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இருக்கிறதா? நல்லது செய்திருக்கிறாரா? நமக்கு மழை, வெயில், புயல் வந்தபோது வந்து நின்றாரா? பார்த்தாரா? ஒன்றுமே இல்லையே. எதற்கு வரவில்லை? இப்போது என்ன சொல்கிறார்? “தமிழ்நாட்டை நாங்கள் கைப்பற்றுவோம்” என்கிறார். இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். நேரு இருந்திருக்கிறார், இந்திரா காந்தி இருந்திருக்கிறார்கள். யாரும் “தமிழ்நாட்டை கைப்பற்றுவேன், உங்கள் கட்சியை எல்லாம் அழித்து நாசமாக்குவேன்” என்று சொல்லவில்லை. எந்த பிரதமரும் சொல்லவில்லை. ஆனால் மோடி சொல்கிறார்: “தமிழ்நாட்டு கட்சிகளை எல்லாம் அழித்து நாசமாக்கிவிட்டு பார்த்துவிடுவோம்” என்கிறார். வெளிப்படையாக பேசுகிறார்.
இதுவா ஒரு பிரதமருக்கு அழகு? நாம் வரி கொடுக்கவில்லையா? வெள்ளைக்காரன் கூட சோற்றுக்கு வரி போடவில்லை. எல்லாவற்றுக்கும் வரி கட்டுகிறோம். ஆனால் பாஜக அரசு, மோடி அரசு நாம் சாப்பிடும் இட்லிக்கு வரி போட்டுள்ளது, சட்னிக்கும் வரி போட்டுள்ளது, போடும் இலைக்கும் வரி போட்டுள்ளது, தட்டுக்கும் வரி போட்டுவிட்டது. சோற்றுக்கு வரி போட்ட ஆட்சிதான் இந்த மோடி ஆட்சி. அவர்கள் தமிழ்நாட்டு ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்கிறார்கள். ஆனால் பாஜக தனியாக நின்று ஒரு கவுன்சிலராவது வென்றதா? ஒரு இடத்திலாவது வெல்லவில்லை. அந்த கட்சியை நாம் பார்த்ததே இல்லை, கேள்விப்பட்டதே இல்லை. அந்த ஊர் தலைவர் நமக்கு தெரியாது.
அதிமுக என்றால் எம்ஜிஆர் தெரியும், ஜெயலலிதா அம்மையார் தெரியும். திமுக என்றால் அண்ணா தெரியும், கலைஞர் தெரியும். பாஜகவில் யாராவது தலைவர் தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அந்த கட்சிக்காரர்களுக்கு 40 இடங்களை கொடுத்திருக்கிறார் எடப்பாடி. ஒரு கவுன்சிலர் இடம் கூட வெல்லாத ஒரு கட்சிக்கு 40 இடங்கள் எதற்கு கொடுத்தார் எடப்பாடி? அவர் சொத்தையும், தன்னையும் காப்பாற்றிக்கொள்வதற்காக கொடுத்தார்.
நான் என்ன கேட்கிறேன் என்றால், ஜெயலலிதா அம்மா இறந்ததற்கு பிறகு அதிமுக எத்தனை கட்சியாக உடைந்தது? இரண்டாக உடைந்ததா, மூன்றாக உடைந்ததா, நான்காக உடைந்ததா, ஐந்தாக உடைந்ததா? கணக்கே இல்லை. அந்த கட்சியை யார் உடைத்தது? திமுக உடைத்ததா? அதிமுகவை யார் உடைத்தது? கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் உடைத்தார்களா? இல்லை. மதிமுக உடைத்ததா? இல்லை. அப்துல் சமது உடைத்தாரா? யார் உடைத்தது? பாஜக. உடைத்த ஒருத்தனோடு நாம் போய் சேர்ந்து கூட்டு வைத்துக்கொள்வோமா? உறவு வைத்துக்கொள்வோமா? வைத்துக்கொள்ள மாட்டோம்தானே.
எடப்பாடி என்ன சொல்கிறார்? “நான் தமிழ்நாட்டை காப்பாற்றுவேன்” என்கிறார். முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம். உங்கள் கட்சியை ஐந்து ஆறு கட்சியாக உடைத்துவிட்டார்கள். உங்கள் கட்சியை காப்பாற்றிவிட்டு பிறகு தமிழ்நாட்டை காப்பாற்றுவதைப் பற்றி பேசுங்கள். நம்புவோம்.
பாஜகவோடு சேர்ந்து எந்த கட்சியாவது நன்றாக இருந்திருக்கிறதா? அதிமுகவை உடைத்தார்கள். அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை உடைத்துவிட்டார்களா இல்லையா? அப்பாவுக்கும் பையனுக்கும் எத்தனை சண்டை? பாவம், அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டையை கொண்டு வந்தார்களா இல்லையா? குடும்பத்தையே உடைத்துவிட்டார்கள், குடும்பத்தையே நாசம் பண்ணிவிட்டார்கள். இப்போது பாஜகவோடு சேரும் எல்லாருக்கும் என்ன ஆகிறது? கடின காலம் வந்துவிடுகிறது. இவர்கள் எல்லாம் பாஜகவுடன் நண்பர்களாக இருந்தவர்கள். அவர்கள் கட்சியை உடைத்துவிட்டார்கள்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்தார்கள். பீகாரில் நிதீஷ்குமார் கட்சியை உடைத்தார்கள். பஞ்சாபில் அகாலிதள் கட்சியையே இல்லாமல் செய்துவிட்டார்கள். பாஜகவோடு யாரெல்லாம் கூட்டணி வைத்தார்களோ, அந்த கட்சி எல்லாம் நாசமாகிப் போனது. அப்படியானால் அதிமுக எதற்காக இதை செய்கிறது? நான் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கட்சிக்கு நாம் ஓட்டு போட முடியுமா? முடியாது.
நாம் என்ன சொல்கிறோம் என்றால், அதிமுகவிடம் “நீங்கள் நல்ல கட்சிதான், முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள், அப்புறம் அடுத்த முறை பார்ப்போம்” என்றுதான் சொல்ல முடியும் இல்லையா? இப்போது உங்கள் கட்சியை காப்பாற்றும் வழியை பாருங்கள்.
எங்களுக்கு இன்றைக்கு அப்துல் சமது இருக்கிறார் எனக்கு 17 வருடமாக தெரியும். மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடியவர், சண்டை போடக்கூடியவர் அப்துல் சமது. பார்க்க அமைதியாக இருப்பார். நிறைய படிப்பார், நல்லவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பார். கல்பாக்கத்தில் நான்கு பேருக்கு அடிபட்டு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள். அங்கே மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனையில் “நாங்கள் வைத்தியம் பார்க்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். உடனே 5000 பேரை திரட்டி மறியல் செய்து போராட்டம் நடத்தி, அதற்காக சிறைக்குப் போனவர் அவர். அப்துல் சமது அதை உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார். மக்களுக்காக போராடி வேலூர் சிறைக்கு ஏழு வருடத்திற்கு முன்னால் சென்றவர். அப்படிப்பட்ட ஒரு நல்லவர், நேர்மையானவர். அப்படிப்பட்டவரைத்தான் ஜெயிக்க வைக்க வேண்டும்.

இன்றைக்கு ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் மோடி அரசு. என்னவென்றால், “தமிழ்நாட்டில் அதிகமாக எம்.பி வைத்திருக்கிறீர்கள், இனிமேல் உங்களுக்கு எம்.பி கிடையாது, உத்தரப் பிரதேசத்துக்கும் பீகாருக்கும்தான் அதிகமான எம்.பி” என்று சொல்லிவிட்டார்கள்.எப்படி? உத்தரப் பிரதேசம் எங்கே இருக்கிறது என்று தெரியுமில்லையா? நமது கண்ணுக்கு தெரியாத ஊர், எங்கேயோ கிடக்கிறது, அயோத்தியில் இருக்கிறது. அந்த ஊருக்கான எம்.பி எவ்வளவு பேர் தெரியுமா? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி – இந்த ஐந்து மாநிலங்களை சேர்த்தால் எத்தனை எம்.பி வருமோ, அதை உத்தரப் பிரதேசத்துக்கு கொடுத்துவிட்டான். ஐந்து மாநில எம்.பி-யை சேர்த்தால் கூட, உத்தரப் பிரதேச எம்.பி அளவுக்கு வர முடியாது. அவர்களுக்கு 145, 150 எம்.பி கொடுத்துவிட்டான்.
தமிழ்நாட்டுக்கு வெறும் 49 எம்.பி. இதை வைத்து என்ன செய்வது? இனி தமிழ்நாட்டிலிருந்து ஒரு சட்டம் கூட டெல்லியில் நிறைவேற முடியாது. அங்கே எல்லாம் இரண்டு மடங்காக ஆக்கிவிட்டான். 50 தொகுதி, 49 தொகுதி என்று இருந்த பீகாருக்கு இன்றைக்கு 79 தொகுதி. உத்தரப் பிரதேசத்துக்கு 70 தொகுதி இருந்தது, இன்றைக்கு 145 தொகுதி ஆக்கிவிட்டான். ராஜஸ்தானுக்கு 25 தொகுதி இருந்தது, இப்போது 50 தொகுதி. மத்தியப் பிரதேசத்துக்கு 30-ல் இருந்து 50 ஆக்கிவிட்டார்கள். இப்படி இனி இந்திக்காரன் முடிவெடுப்பதுதான் இந்தியாவில் சட்டம்.
நமது வேலை என்ன? வரி கொடுப்பது மட்டும்தான். பணம் இவர்களுக்கு தண்டமாக அழுவதுதான் வேலையாக இருக்கிறது. நாடு மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது, நாசமாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு இனிமேல் பெரிதாக எம்.பி கிடையாது. நம்மைவிட நான்கு மடங்கு, ஐந்து மடங்கு பதவி வடநாட்டுக்கு போய்விட்டது. வடநாட்டு ஆள் நினைத்தால்தான் அவன் கொண்டு வருவதுதான் சட்டம்.
என்ன அநியாயம் தெரியுமா? பீகாருக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் கடலே கிடையாது. ஆனால் கடல் சம்பந்தமான சட்டத்தை யார் போடுகிறார்கள்? அவன்தான் சட்டம் போடுகிறான். நமது மீனவர் நிலைமை என்ன? நடுக்கடலில் விட்டுவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டுக்காக சேர்த்து சட்டம் போட்டுக்கொண்டிருக்கிறான். நாம் என்ன கத்தினாலும் வேலைக்கு ஆகவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் தமிழ்நாட்டுக்கு நமக்காக குரல் கொடுப்பதற்கு யார் இருக்கிறார்கள்? நமக்காக குரல் கொடுக்க யார்? இந்திக்காரனின் ஆதிக்கத்தை அடக்க வேண்டுமா இல்லையா?
எங்கள் அமைப்பின் பெயர் மே 17 இயக்கம். நாங்கள் தேர்தலில் போட்டி போடுவதில்லை. நாங்கள் மக்களுக்கு பிரச்சனை என்றால் போராட்டத்துக்கு வரக்கூடியவர்கள். அப்படித்தான் போராட்டத்தில் அப்துல் சமதுடன் சேர்ந்து நிற்போம். நாங்கள் போன மாதம் இந்தி எழுத்துகளை அழித்தோம். எல்லா ஊரிலும் அழித்தோம். அப்போது எங்களுடன் இருந்த எனக்கு மூத்தவர், சிவா திலீபன் என்ற தோழர். அவர் ரயில்வே நிலையத்தில் அழித்துக் கொண்டிருக்கும்போது, இந்திக்காரனின் கொடுமையை பார்த்து, “தமிழ் மக்கள் போராட வரமாட்டேன் என்கிறார்களே, தமிழ் மக்களுக்கு புரியவில்லையே, தமிழ் மக்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்களே, இவர்களின் உரிமை எல்லாம் இழந்துகொண்டிருக்கிறார்களே, இவர்கள் வேலை எல்லாம் பறிபோகிறதே” என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டு, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று சொல்லிவிட்டு ரயிலுக்கு முன்னால் குதித்து தனது உயிரை கொடுத்துவிட்டார். அடிபட்டு அவ்வளவு மோசமான நிலைமையில் “தமிழ் வாழ்க” என்று சொல்லி உயிர் விட்டார். தமிழ் மொழிக்காக உயிர் கொடுத்திருக்கிறார்.

அவர் யாருக்கு கொடுத்தார்? நமக்காக கொடுத்திருக்கிறார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் போராட்டத்துக்கு வருவார்கள். அவருடைய மனைவியும் போராட்டத்துக்கு வருவார்கள். ஈகி சிவா திலீபன் அவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர், என்னுடனே 15 வருடமாக இருந்தவர். அவர் தமிழுக்காக உயிர் கொடுத்திருக்கிறார். காரணம், நமது ஊரில் இந்திக்காரனின் ஆதிக்கம் அதிகமாகிப் போய்விட்டது. உயிரோடு வேறு என்ன கொடுக்க முடியும் ஒரு மனிதன்? உயிரையே கொடுத்துவிட்டார். அதனால்தான் நாங்கள் சொல்கிறோம். நாங்கள் அவ்வளவு பிரச்சனையை பார்க்கிறோம்.
நாங்கள் அதனால்தான் சொல்கிறோம்: தயவு செய்து நீங்கள் மட்டும் அப்துல் சமதுக்கு ஓட்டு போட்டால் போதாது. உங்கள் சொந்தக்காரர்களிடம் சொல்லுங்கள். ஏனென்றால் நாளைக்கு யாராவது பொய் சொல்வார்கள், சரியா? “நான் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன்” என்று சொல்வார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் அப்துல் சமது சட்டமன்றத்துக்குப் போக வேண்டும். அவர் சட்டமன்றத்துக்குப் போக வேண்டும் என்றால் நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு என்ன செய்ய வேண்டும்? ஓட்டு போட வேண்டும்.
எல்லா இடத்திலும் பாஜககாரன் நம்மை ஜாதியாக, மதமாக பிரிக்கிறானா? நாம் ஏதாவது ஜாதி மதம் பார்த்தோமா? அவன் என்ன செய்கிறான்? நாம் எல்லாம் முருக பக்தர்கள் தானே? பழனிக்கு போகிறீர்கள், திருப்பரங்குன்றத்துக்கு போகிறீர்களா. நாம் என்றைக்காவது அங்கே தர்கா இருப்பதைப் பற்றி கவலைப்பட்டிருக்கிறோமா? ஏனென்றால் முருகனுக்கு அதனால் பிரச்சனை வந்திருக்கிறதா? மேலே தர்கா இருப்பதால் முருகனுக்கு ஏதாவது வயிற்றுவலி வந்திருக்கிறதா? இல்லை. நல்லாத்தானே இருக்கிறார். முருகனே நமக்கு நல்ல அருள் கொடுக்கிறார். நல்லா இருக்கிற ஊருக்குள் நாசம் பண்ணுவதற்கு பாஜக காரன் வந்திருக்கிறான். எப்படி ஓட்டு போட முடியும் சொல்லுங்கள்?
நாம் என்றைக்காவது சொன்னோமா? “அங்கே அல்லாஹ் இருக்கிறார், இங்கே முருகன் இருக்கிறார், இங்கே இயேசு இருக்கிறார்” என்று. நாமெல்லாம் போய்க்கொண்டு தானே இருக்கிறோம். எல்லா சாமியையும் கும்பிடத்தானே போகிறோம். நமக்கு எந்த பிரச்சனையும் இல்லையே. பாஜக காரன் வந்து நமக்குள் ஜாதி, மதம் என்று பிரித்து சண்டை போட்டுவிடுகிறான்.
இப்படித்தான் அவனுங்க உத்தரப் பிரதேசத்தில் போய் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள். அந்த ஊர் நாசமாகிப் போனது. தற்போது சிக்கந்தர் தர்காவை இடிக்கிறேன் என்று சொல்லி எச். ராஜா போனாரே, என்ன ஆனது? ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார். முருகன் தண்டனை கொடுத்துவிட்டார்.ச் உத்தரப் பிரதேசக்காரன் மசூதியை போய் இடித்துவிட்டு, மத சண்டை போட்டுக்கொண்டிருந்தால் சோற்றுக்கு வழி இல்லாமல் போய்விட்டது. சோற்றுக்கு வழி இல்லாமல் போய் இங்கே வந்து வேலை பார்க்கிறான். நமது ஊரில் மூட்டை தூக்குவதிலிருந்து, விறகு வெட்டுவதிலிருந்து, தோசை சுடுவதிலிருந்து, முடி வெட்டுவதிலிருந்து எல்லா வேலையும் பார்க்கிறார்கள். எல்லா வேலையும் பார்க்கிறார்கள். ஏன் அவன் ஊரில் வேலை இல்லாமல் போனது? “என் மதம்தான் பெரிது, என் ஜாதிதான் பெரிது, நான் வந்து அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், மசூதியை இடிப்பேன்” என்று போனார்கள். உருப்படாமல் போய்விட்டார்கள். அதனால் இனிமேலாவது அவர்களுடைய அரசியலை நமது ஊரில் விடக்கூடாது.
அதனால் நீங்கள் அப்துல் சமது அவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குங்கள். நன்றி தெரிவிக்க கூட்டத்துக்கு நான் நிச்சயம் வருவேன். நான் கோயம்புத்தூர்க்காரன். நான் இந்த ஊருக்கு வந்ததே இல்லை. அப்துல் சமதுடன் மக்களுக்கு நன்றி தெரிவிக்க வருவேன். மிக்க நன்றி. வருகிறேன்.