
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி ‘பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் முழக்கத்தோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தோழர். செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து மொடக்குறிச்சியில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய தேர்தல் பரப்புரை:
அன்பான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பெருமக்களே, பெரியோர்களே, தாய்மார்களே, 2026 தேர்தல் நாம் இதுவரைக்கும் பார்க்காத ஒரு புதுவிதமான தேர்தலாக வந்திருக்கிறது. இதுவரைக்கும் தமிழ்நாடு எதிர்கொள்ளாத ஒரு வித்தியாசமான தேர்தலாக இந்த சட்டமன்றத் தேர்தல் வந்திருக்கிறது. இவ்வளவு காலமும் மாநில கட்சிகளுக்குள்ளாக போட்டி நடந்துகொண்டிருந்தது. இது தமிழ்நாட்டு கட்சிக்கும், மாநில கட்சிக்கும், வடநாட்டானுடைய கட்சிக்கும் நடக்கக்கூடிய தேர்தலாக வந்திருக்கிறது. இதுவரைக்கும் தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்படாமல், தமிழ்நாட்டுக்கு கெட்டதை மட்டுமே செய்யக்கூடிய பாஜகவுக்கும், தமிழ்நாட்டுக்காக போராடக்கூடிய, தமிழர்களுக்காக போராடக்கூடிய நமது ஊர் போராளிகளுக்குமான ஒரு போராட்டமாக வந்திருக்கிறது.
மொடக்குறிச்சி மக்கள் போராளிகளோடு நிற்கப் போகிறீர்களா? அல்லது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய பாஜகவோடு நிற்கப் போகிறீர்களா என்று வரலாறு உங்களிடத்தில் கேட்கிறது. இன்றைக்கு வரலாற்றில் மிக முக்கியமான இடத்தில் நிற்கிறோம். நீங்கள் தமிழ்நாட்டை ஆதரிக்கப் போகிறீர்களா? அல்லது டெல்லியை ஆதரிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விதான் இந்த தேர்தலினுடைய கேள்வி.
“தமிழ்நாட்டை நாங்கள் கைப்பற்றுவோம்” என்று நரேந்திர மோடி சொல்கிறார். இந்த தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடக்கூடிய பாஜகவின் வேட்பாளரை பார்த்து கேட்கின்றேன். தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்கு ‘தமிழ்நாடு என்ன பாகிஸ்தானா அல்லது பங்களாதேஷா?’ உங்கள் நாட்டுக்குள் இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தை “நான் கைப்பற்றுவேன்” என்று சொல்லக்கூடிய வகையில் தமிழ்நாட்டை எதிரியாக பார்க்கக்கூடிய இந்த பாஜகவுக்கா உங்களது ஓட்டு?
தமிழ்நாடு முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். இந்த கேடுகெட்ட பாரதிய ஜனதா கட்சி, இந்த தீயசக்தி, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களையும் நாசப்படுத்திவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரிசாவிலே கலவரம் நடக்கிறது. டெல்லியிலே பெண்கள் வீதியிலே தனியாக செல்ல இயலவில்லை. உத்தரப் பிரதேசத்திலே வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஆக, வட இந்தியா முழுவதும் கலவரம் செய்த ஒரு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க மொடக்குறிச்சியிலே தேர்தலிலே போட்டியிடுகிறது என்றால், அந்த கட்சிக்கு நாம் ஒரு எச்சரிக்கை கொடுக்கக்கூடிய வகையிலே இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்,
கடந்த தேர்தலிலே இங்கே பாஜக ஜெயித்தது, ஒரு சட்டமன்ற உறுப்பினரை அனுப்பினீர்கள். தமிழ்நாடு அதிர்ச்சியடைந்தது. “என்னடா மொடக்குறிச்சி போராளிகள் மண்ணாச்சே, அந்த மண்ணிலிருந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடிய பாஜகவிலிருந்து ஒருவரை அனுப்பி இருக்கிறார்களே” என்கின்ற கவலை எனக்கு இருந்தது. நான் உங்களிடம் ஒரு நியாயம் கேட்க வந்திருக்கிறேன். நீங்கள் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்களே, அந்த அம்மா ஐந்து வருடம் சட்டசபையில் ஏதாவது பேசினார்களா? ஐந்து வருடம் உங்கள் ஊர் பிரச்சனையைப் பற்றி ஏதாவது பேசினார்களா? தமிழ்நாட்டு பிரச்சனையை குறித்து ஏதாவது பேசினார்களா? தமிழ்நாட்டுக்கான, நமது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்துக்கான நிதியை மோடி நிறுத்தி வைத்திருக்கிறாரே, அந்த மோடியை கேள்வி கேட்டார்களா? நமது பிள்ளைகளுக்கு பாடப்புத்தகத்தை அச்சடிக்க முடியவில்லையே, நமது பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியருக்கு சம்பளம் தர முடியவில்லையே, அந்த நிதியை எல்லாம் நிறுத்தி வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. அதை எதிர்த்து கேள்வி கேட்டார்களா? அவர்கள் கட்சித் தலைவரை பார்த்து கேட்டார்களா? ஒரு அறிக்கை விட்டார்களா? ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருப்பார்களா? எதுவுமே செய்யவில்லையே. அப்படிப்பட்ட ஒரு அம்மாவை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? அது நமக்கு மகிழ்ச்சியான விடயமா?
இதோ இந்த மண்ணிலே, தீரன் சின்னமலையினுடைய சிலை இருக்கிறது. இன்றைக்கு அவருக்கு 220வது அகவை நாள்/ பிறந்தநாள். அவருக்கு மாலை சூடுவதை பெருமையாக பார்க்கின்றேன். ஏனென்றால் வெள்ளையர்களை தோற்கடிக்க முடியாத வகையில் போர் புரிந்த ஒரு பெருவீரன் தீரன்சின்னமலை. ஜாதி பார்க்கவில்லை, மதம் பார்க்கவில்லை. அதனால்தான் வெள்ளைக்காரனை வெல்ல முடிந்தது. திப்பு சுல்தானுக்காக படை நடத்தியவர் தீரன் சின்னமலை.

இன்றைக்கு என்ன சொல்கிறான் பாஜககாரன்? “முஸ்லிம்களெல்லாம் எதிரிகள்” என்கிறான். அப்படி என்றால் தீரன் சின்னமலையோடு தோளோடு தோள் நின்று போராடிய முஸ்லிம் படைவீரர்களை, தளபதிகளை என்னவென்று சொல்வாய்? இங்கே இருக்கும் பாஜககாரனுக்கு தெரிந்தது தீரன் சின்னமலைக்கு தெரியாதா? இந்த மண்ணை காப்பதற்காக முஸ்லிம்கள் உயிர் கொடுத்தார்களோ, அதைப் பற்றி தீரன் சின்னமலைக்கு தெரிந்ததை விடவா இங்கே இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கு தெரிகிறது? இங்கே இருக்கும் பாஜககாரனுக்கு தெரியும்?
அன்பானவர்களே, உங்களுக்கு ஒரு வரலாறை சொல்வதற்காக நான் வந்திருக்கின்றேன். இதுவரை தமிழ்நாடு தெரிந்துகொள்ளாத வரலாறு, தமிழர்கள் மறந்து போன வரலாறு. மருதுபாண்டியர்களும், தீரன் சின்னமலையும், விருப்பாச்சி கோபாலநாயக்கரும் சேர்ந்து கோவை நகரத்தை கைப்பற்ற வேண்டும் என்று போர் திட்டம் வகுத்தார்கள். போர் புரிய வேண்டும் என்று திட்டம் வகுத்தார்கள். கோவை நகரத்தை கைப்பற்றினால் வெள்ளையனை வெளியேற்றி விட முடியும் என்று அவர்கள் ஒரு திட்டம் வகுத்தார்கள். அந்த படையெடுப்பிற்கு தலைமை தாங்கியவர் தீரன் சின்னமலை. கோயம்புத்தூரை தாக்குவதற்கான அந்த படைக்கு தலைமை தாங்கியவர் தீரன் சின்னமலை. அவருக்கு உதவியாக படைவீரர்களாக, தளபதிகளாக இருந்தவர்கள் திப்பு சுல்தானுடைய படையில் இருந்தவர்கள். திப்பு சுல்தான் படையில் இருந்த கனிஷா கான், ரனுல்லா கான், முகமது ஹாசம் என்கின்ற தளபதிகள்தான் திப்பு சுல்தானோடு படை நடத்தினார்கள்.
ஆனால் இன்றைக்கு பாஜககாரன் ஊருக்குள் வந்து “முஸ்லிம்களெல்லாம் எதிரிகள்” என்று சொல்கிறான். நாம் தலையாட்ட முடியுமா? அப்படிப்பட்ட ஒரு போர் அன்றைக்கு ரனுல்லா கான், புத்த முகமது, முகமது ஹாசம், கனிஷா கான் என்கின்ற தளபதிகளோடு தீரன் சின்னமலை கோயம்புத்தூர் மீதான போரை நடத்தினார்.
தாராபுரத்திலிருந்து ஒரு தளபதி, அதேபோல காங்கேயத்திலிருந்து ஒரு தளபதி, சத்தியமங்கலத்திலிருந்து முகமது ஹாசம் என்கின்ற தளபதி, இப்படி எல்லா இடங்களிலும் இருந்து தளபதிகள் அங்கே கோயம்புத்தூரை நோக்கி தாக்குதல் நடத்த சென்றார்கள். வெள்ளைக்காரன் எல்லா இடத்திலும் உளவாளிகளை வைத்திருந்தார்கள். போரை நடத்துவதற்கு ஆயுதத்தை கொண்டு போக வழி இல்லாமல் இருந்தார்கள் நமது தீரன் சின்னமலை படைவீரர்கள். அந்த தீரன் சின்னமலையினுடைய படையினருக்கு ஆயுதங்களை கொண்டு போய் மறைத்து வைத்து கொடுத்தவர்கள் முஸ்லிம்களும் அவர்களது மசூதிகளும். தாராபுரத்திலிருந்து கோயம்புத்தூர் வரை இருக்கக்கூடிய மசூதிகள்தான் தீரன் சின்னமலைக்கான ஆயுதங்களை பாதுகாத்துக் கொடுத்தன. அவர்கள் எல்லாம் சோறு போட்டார்கள். அந்த பள்ளிவாசல்களில் பதுங்கி இருந்துதான் அங்கே தீரன் சின்னமலை படை வீரர்கள் கோயம்புத்தூர் நோக்கிப் போனார்கள். அது முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்து அன்றைக்கு போர் நடத்தினார்கள். இதையெல்லாம் சொல்லாமல் முஸ்லிம்களை எல்லாம் எதிரி ஆக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் கும்பல் இங்கே ஊருக்குள் இறங்கி இருக்கிறது.
நான் ஆர்.எஸ்.எஸ் கும்பலைப் பார்த்து கேட்கிறேன். நீங்கள் எல்லாம் யோக்கியனாக இருந்தால், நாங்கள் இங்கே மேடை போடுகிறோம், நீ வா, வரலாறு பேசுவோம். இந்த தீரன் சின்னமலை உயிரோடு இருந்து போர் புரிந்தார். மருதுபாண்டியர் இறந்ததற்கு பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் கொல்லப்பட்டதற்கு பிறகு, விருப்பாச்சி கோபால நாயக்கர் தூக்கிலிடப்பட்டதற்கு பிறகும் தீரன் சின்னமலையை அவரால் பிடிக்க முடியவில்லை. போர் புரிந்தார். அப்படி போர் புரிந்ததற்கு காரணம் அவரது உயிரை ஒரு முஸ்லிம், ஒரு இஸ்லாமியர் காப்பாற்றினார்.
சத்தியமங்கலத்தில் போர் புரிந்த முகமது ஹாசம் என்கின்ற தளபதி, ஒரு பெரிய தளபதி, பெரிய வீரன். அந்த முகமது ஹாசம் என்கின்ற தளபதி தீரன் சின்னமலைக்காக சத்தியமங்கலத்திலிருந்து கோவையை நோக்கி போர் புரிகிறார். அவரை சுற்றிவளைத்து தாக்குகிறார்கள். அவர் தீரன் சின்னமலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, பிடித்து விடக்கூடாது என்பதற்காக போக்கு காட்டுகிறார். காடுகளுக்குள் செல்கிறார்.
அப்படி காடுகளுக்குள் பின்வாங்கிச் செல்லக்கூடிய அந்த முகமது ஹாசத்தை வெள்ளைக்காரன் சுற்றி வளைத்து பிடிக்கிறார்கள். முகமது ஹாசத்திடம் தீரன் சின்னமலையுடைய கடிதங்கள் இருக்கின்றன. அவர் இருக்கக்கூடிய இருப்பிடம் முகமது ஹாசத்துக்கு நன்றாகத் தெரியும். “ஒருவேளை வெள்ளைக்காரன் நம்மையெல்லாம் பிடித்து, தன்னை சித்திரவதை செய்து, தீரன் சின்னமலையினுடைய இடத்தை காட்டிக் கொடு என்று சொல்லி நம்மை சித்திரவதை செய்து, நமது வாயிலிருந்து ஒருவேளை உண்மை வந்துவிட்டால் என்ன செய்வது? இப்பேர்பட்ட ஒரு போராளியை நான் பாதுகாக்க வேண்டுமே, அவ்ர் வெள்ளைக்காரனை எதிர்த்து நின்று போர் புரிய ஒரு தலைவன் வேண்டுமே” என்று சொல்லி முகமது ஹாசம் என்ன செய்தார் தெரியுமா? தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போனார்.
கழுத்தை அறுத்துக்கொண்டு அந்த முகமது ஹாசம் அன்றைக்கு தன்னை தற்கொலை செய்துகொண்ட காரணத்தினால்தான் தீரன் சின்னமலையை வெள்ளைக்காரனால் பிடிக்க முடியவில்லை. இல்லையென்றால் தீரன் சின்னமலையை அன்றைக்கே பிடித்திருப்பார்கள். இப்படி முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் உயிர் கொடுத்து காப்பாற்றிய பெருவீரன் தீரன் சின்னமலை. ஆனால் இன்றைக்கு பாஜககாரன் ஊருக்குள் வந்து பேசுகிறான்: “முஸ்லிம்கள் எல்லாம் வேறு, நாமெல்லாம் வேறு, அவன் சாமி வேறு, நமது சாமி வேறு என்றும், முஸ்லிம்கள் பெருகிவிட்டார்கள், கலவரம் செய்கிறார்கள், பள்ளிவாசலை இடிக்கிறது, தர்காவை இடிக்கிறது” என்று பேசுகிறான்.
தீரன் சின்னமலையை பாதுகாத்த முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தீர்களா? இந்த மண் துரோகம் செய்யுமா? இப்படிப்பட்ட பாஜககாரனை, தீரன் சின்னமலையை பாதுகாத்த அந்த இஸ்லாமியர்களை, அந்த தளபதிகளை, உயிர் கொடுத்து காப்பாற்றிய அந்த முஸ்லிம்களை நீங்கள் காட்டிக் கொடுப்பீர்களா? அந்த முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பாஜகவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா?
தீரன் சின்னமலையை பாதுகாத்து உயிர் கொடுத்த முகமது ஹாசம், ரனுல்லா கான், கனிஷா கான், புத்தே முகமது என்கின்ற தளபதிகள் யார்? யார்? முகமது ஹாசம் கழுத்தை அறுத்து இறந்து போனார். ஆனால் கனிஷா கான், புத்தே முகமது, ரனுல்லா கான் என்கின்ற தளபதிகளை எல்லாம் வெள்ளைக்காரன் பிடித்துக்கொண்டு போய் தூக்கிலேற்றி படுகொலை செய்தான். ஒருவரல்ல, இருவரல்ல, 36 முஸ்லிம்கள் தூக்கிலேற்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எவரும் தீரன் சின்னமலையை காட்டிக் கொடுக்கவில்லை. யார் தீரன் சின்னமலையை காட்டிக் கொடுத்தானோ, அவன் வம்சம் இன்றைக்கு பாஜகவாக வந்து நிற்கிறது. அவனுடைய ஆட்கள் ஆர்.எஸ்.எஸ்.காரனாக வந்து நிற்கிறான். அப்படிப்பட்ட பாஜகவுக்கு ஓட்டு போட்டு நீங்கள் சட்டசபைக்கு அனுப்புகிறீர்களா? இந்த பாஜக அன்றைக்கு தமிழர்களை காட்டிக் கொடுத்த அதே கூட்டத்தோடு கைகோர்த்து நிற்கிறது, இந்த வரலாறை யாரால் மறுக்க முடியும்? இது வரலாறு, மறுக்க முடியுமா?

ஆக, தமிழ்நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் பாஜக கொச்சைப்படுத்துகிறது, அசிங்கப்படுத்துகிறது, அவமானப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளில் இந்த வரலாறை உங்களிடத்திலே சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஏனென்றால் வரலாறை சொன்னால்தானே நாம் யாரை நம்புவது, யாரை எதிர்ப்பது என்பது முடிவாகும் பெரியோர்களே, தாய்மார்களே. இந்த வரலாறு தயவு செய்து ஊரெல்லாம் போய் பேசுங்கள். தீரன் சின்னமலைக்கு நாம் கொடி பிடித்தால் போதாது. அவர் என்ன தியாகம் செய்தார்? அவரோடு பொல்லான் போராடி உயிர் கொடுத்தார். தீரன் சின்னமலை ஜாதி, மதம் பார்க்கவில்லை. ஆனால் பாஜககாரன் ஜாதியா மதமா பார்த்து இந்த மண்ணை அந்நியனுக்கு காட்டிக் கொடுக்கிறான். இப்படிப்பட்ட ஒரு பாஜகவை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்த பாரதிய ஜனதா கட்சி என்பது யார்? தமிழ்நாட்டுக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டுக்கு நல்லது ஏதாவது செய்தானா சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். பாஜககாரனை, நரேந்திர மோடியை, நயினார் நாகேந்திரனை, அண்ணாமலையை சொல்லச் சொல்லுங்கள்.
அண்ணாமலை பெரிய தலைவர் மாதிரி எல்லா இடத்திலும் எல்லாம் போகிறான், கூட்டம் போகிறான், பேட்டி அளிக்கிறான், எல்லாம் செய்கிறான். அண்ணாமலை கடந்த ஐந்து வருடத்தில் தமிழ்நாட்டுக்காக நடத்திய ஒரு போராட்டத்தை சொல்லுங்கள். ஐ.பி.எஸ் அதிகாரிதானே? ஒரு போராட்டம் செய்திருப்பாரா? அதற்கு துணிச்சல் இருக்கிறதா அண்ணாமலைக்கு? இருந்தால்தானே? ஏதோ ஒரு போராட்டத்துக்கு கூப்பிட்டார்கள். இவரும் போயிருக்கிறார். அங்கே கைது செய்கிறார்கள் என்று சொன்ன உடனே ஆட்டோ பிடித்து தப்பித்து ஓடிவிட்டார். கைது செய்தால் கொண்டு போய் மண்டபத்தில் வைத்து சாப்பாடு போட்டு சாயந்திரம் விடப் போகிறான். அதற்கு பயந்துகொண்டு ஆட்டோ பிடித்து ஓடிப்போனதுதான் அந்த அண்ணாமலையின் வரலாறு.
தமிழ்நாட்டினுடைய நலனுக்காக ஒரு போராட்டத்தைக் கூட செய்யாத அண்ணாமலையை இன்றைக்கு பாஜககாரர்கள் தூக்கி நிறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாத்துக்கும் பத்திரிகையாளரை சந்திப்பதைத் தவிர, அண்ணாமலை செய்த ஒரு நல்ல காரியத்தை சொல்லுங்கள் பார்ப்போம். நாள் முழுக்க டி.வி.யை போட்டால் அவர் முகம் தெரிய வேண்டும். வேறு ஒன்றும் கிடையாது. அண்ணாமலை வேறு சரக்கே இல்லை. நேருக்கு நேராக தொலைக்காட்சியில் ஒரு விவாதம் செய்வதற்கு அண்ணாமலைக்கு துணிச்சல் இருக்கிறதா? மோடிக்கே இல்லை என்கிறபோது அண்ணாமலைக்கு எங்கே இருக்கப் போகிறது? “நீங்கள்தான் ஐ.பி.எஸ் அதிகாரி” என்றும், “2 லட்சம் கேஸ் போட்டேன்” என்றும், “20,000 புத்தகத்தை படித்தார்” என்று யார் காதில் பூ சுற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அண்ணாமலை வாருங்கள், இங்கே மேடை போடுவோம். ஏனென்றால் பத்திரிகையாளர் பேசினால் கேள்வி கேட்க மாட்டார்கள். பத்திரிகையாளர் வீடியோ எடுத்துக்கொண்டே இருப்பார்கள். இது நமக்கு இந்த YouTube-ல் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் விலாக் என்று ஒன்று வைத்திருப்பான். அவன் காலையில் எழுந்ததிலிருந்து சாயந்திரம் படுத்து தூங்குவது வரைக்கும் அப்படியே போய்க்கொண்டே இருப்பான். அதாவது பிக் பாஸ் கதாநாயகன் அண்ணாமலை. அவர் என்ன செய்தாலும் நாம் பார்ப்பதுதான் நமது வேலை. தமிழ்நாட்டுக்காக நல்லது செய்தாரா? ஒன்றும் இல்லையே. அவரால் சொல்ல முடியாது.
அன்பானவர்களே, ஒரு விடயத்தை உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. பாஜகவை வளர்த்துவிட்டீர்கள் என்றால் நாளைக்கு நமது ஊரில் இந்த அதிகை பார்மசி, சூர்யா பேக்கரி, ஜே.பி பேக்கரி, சாக்லேட் பேக்கரி, ட்ரீம் லுக், ஜெனனி மொபைல், செல்வம் கூல் டிரிங்க்ஸ் இதெல்லாம் இருக்காது. இதெல்லாம் சேட்டு பெயராக இருக்கும். அந்த மோத்திலால் ஜெயின், ஜோதிலால் ஜெயின் வைத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் கடையாக மாறிவிடும். இது நடக்காது என்று நினைக்கிறீர்களா?
கோயம்புத்தூரில் 30 வருடத்துக்கு முன்னால் இதே மாதிரிதான் பாஜககாரன் வந்தான், ஆர்.எஸ்.எஸ்.காரன் வந்தான். அன்றைக்கு அரை டவுசர் போட்டிருப்பான், அவன் வந்து என்ன செய்தான்? “இது இந்துவின் கடை, அது முஸ்லிமின் கடை, அது கிறிஸ்தவரின் கடை, நமது ஊரில் எப்படி முஸ்லிம் கடை வைக்கலாம்? எப்படி கிறிஸ்தவன் கடை வைக்கலாம்?” என்று உசுப்பேற்றி விட்டான். நமது ஆட்கள் அறிவு கெட்டுப் போய் சண்டை போட்டார்கள். சண்டையை போட்டு பெரிய கலவரமாகிப் போய் கடைகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார்கள். அந்த ஏரியாவுக்குள் போய் பார்த்தால் அங்கே தமிழன் கடை எதுவுமே இல்லை. இந்து கடையும் இல்லை, முஸ்லிம் கடையும் இல்லை, கிறிஸ்தவன் கடையும் இல்லை. எல்லாம் சேட்டு மார்வாடி கடையாக இருக்கிறது.
நான் அண்ணாமலை மாதிரி பொய் எல்லாம் சொல்லமாட்டேன். நீங்கள் வேண்டுமானால் போய் கோயம்புத்தூரில் போய் பாருங்கள். ரங்கே கவுடர் வீதியில் எவன் கடை வைத்திருக்கிறான்? மரக்கடையில் யார் வைத்திருக்கிறார்கள்? ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட்டில் யார் கடை வைத்திருக்கிறார்கள்? இதிலெல்லாம் கொடுமை என்னவென்றால், ரங்கே கவுடர் வீதி என்கிற பழைய வீதி. அங்குதான் எல்லாம் மொத்த வியபாரம் மார்க்கெட் இருக்கும். அந்த ரங்கே கவுடர் வீதிக்கு ஒரு சேட்டு பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி, ராஜஸ்தான்காரன், குஜராத்துக்காரன் எல்லாம் சேர்ந்து போராட்டம் செய்துகொண்டு இருக்கிறான். அந்த போராட்டம் செய்யக்கூடிய அம்மாவை கொண்டு வந்து கவுன்சிலருக்கு வேட்பாளராக எடப்பாடியார் நிறுத்துகிறார். ரங்க கவுண்டர் வீதி வேண்டாமா? அந்த தெருவுக்கு சேட்டு பெயர் வைக்க வேண்டுமா? இதுதான் லட்சணம்.
அன்பானவர்களே, இவர்களை எல்லாம் விட்டோம் என்றால் நாடு நாசமாகப் போய்விடும். டி.என்.பி.எஸ்.சி என்று ஒரு பரீட்சை எழுதுவது, அரசாங்க வேலைக்கு பரீட்சை எழுதக்கூடிய நுழைவுத் தேர்வு இருக்கிறது. உங்கள் எல்லாருக்கும் தெரியும், அது தமிழ்நாட்டில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் படித்து அரசாங்க வேலைக்கு போவதற்கு இருப்பதுதான் டி.என்.பி.எஸ்.சி. அந்த டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழ்நாட்டுக்காரன் மட்டும் இல்லை, யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று சட்டத்தை மாற்றியது யார் என்றால் எடப்பாடியார்தான் மாற்றினார்.
எடப்பாடியார் என்ன சொல்கிறார்? “மத்திய அரசாங்கத்தோடு சண்டை போட்டிருந்தால் எப்படி நல்லது செய்ய முடியும்?” என்கிறார். நான் எடப்பாடியாரை பார்த்து கேட்கிறேன். நீங்கள்தான் நான்கு வருடம் பாஜகவுக்கு அடிமையாகவே நின்று ஆட்சி செய்தீர்களே, நீங்கள் செய்த ஒரு நல்ல திட்டத்தை சொல்லுங்கள். நீங்கள் நல்லதுதான் நினைக்கலாம். பாஜக விடமாட்டான் அல்லவா? பாஜககாரர் விடுவானா? இப்படி ஒரு மோசமான ஒரு சூழலில் தேர்தலை எதிர்கொள்கிறோம்.
மொடக்குறிச்சியிலிருந்து ஒரு நல்ல வேட்பாளர் சட்டமன்றத்துக்கு வர வேண்டுமென்றால் அது நமது தோழர் செந்தில்நாதன் அவர்கள்தான் சரியான வேட்பாளராக இருப்பார். வாய் பேசாத ஒருவரை எதற்கு அனுப்பப் போகிறீர்கள்? போன தடவை அப்படித்தான் அனுப்பிவிட்டீர்கள். பாஜகவிலிருந்து அந்த அம்மா உங்களுக்கும் நல்லது செய்யவில்லை, தமிழ்நாட்டுக்கும் நல்லது செய்யவில்லை.
ஆனால் முடக்குறிச்சியில் ஒரு வீரம் மிகுந்த ஒரு தேர்தலை 1996-ல் நீங்கள் நடத்தினீர்கள். 33 கோரிக்கைகளை முன்வைத்து 1066 வேட்பாளர்கள் களத்தில் இறங்கி மொடக்குறிச்சி வரலாறு படைத்தது. அன்றைக்கு அந்த தீர்மானங்களை, அந்த கோரிக்கைகளை எல்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டுகிறேன், செய்கிறேன் என்று சொல்லி மரியாதைக்குரிய போராளி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் இங்கே பெருவெற்றி பெற்றார்கள். எதிரே நின்ற அதிமுக டெபாசிட் இழந்து போனது. இது வரலாறு.

இப்படிப்பட்ட ஊரிலிருந்து வாயையே திறந்து பேசாத ஒரு பாஜககாரரைக் கூட அனுப்பி இருக்கிறீர்களே, நியாயமா? இது சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற ஒரு போராளியை அனுப்பிய இந்த மண், வெறும் பொம்மையாக இருக்கக்கூடிய ஒருவரைக் கூட சட்டசபைக்கு அனுப்பி இருக்கிறீர்களே, இது நியாயமா? நமது மரியாதைக்கு இது தகுதியானதா என்று நீங்கள் யோசிக்க வேண்டும். அதனால்தான் இந்த தொகுதிக்கு ஒரு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டினுடைய போராட்ட களத்தில் இருக்கக்கூடிய, முன்னணியில் இருக்கக்கூடிய ஐயா வைகோ அவர்கள் செந்தில்நாதன் என்கின்ற போராளியை, மக்களை நேசிக்கக்கூடிய ஒருவரை, ஒரு செயல் வீரரை இங்கே வெற்றி வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள்.
பாஜக வேட்பாளரை பார்த்து உங்களுக்கு கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. “ஏம்மா, நல்லவர்களாக இருக்கிறீர்களே, எதற்கு இந்த தருதலை கட்சியில் இருக்கிறீர்கள்?” என்று கேளுங்கள். தமிழ்நாட்டில் இல்லாத கட்சியா போய் பாஜகவிடம் போய் நிற்கிறது? டெல்லியில் ரேப் செய்கிறான், மணிப்பூரில் ரேப் செய்கிறான், வீடெல்லாம் கொளுத்துகிறான், வீட்டை இடிக்கிறான், புல்டோசர் வைத்து வடநாடு முழுக்க ஒரே கலவரமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி நமக்கு தேவையா? அப்படிப்பட்ட ஆட்சி நமக்கு தேவையா?” யோசித்துப் பாருங்கள்.
அன்பானவர்களே, நம்முடைய வியாபாரத்தையும், தொழிலையும் எல்லாம் வடநாட்டுக்காரனிடம் இழந்துகொண்டு இருக்கிறோம். இந்த ஊர் மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு புகழ் பெற்றது. மஞ்சள் மார்க்கெட்டை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஈரோட்டில் தமிழன் கட்டுப்படுத்தவில்லை. சேட்டு மார்வாடி கையில் ஈரோட்டினுடைய மஞ்சள் மார்க்கெட் இருக்கிறது. இந்த லட்சணத்தில் நாம் வந்து இவர்களுக்கு ஓட்டு போட்டு இன்றைக்கு அதிகாரத்துக்கு அனுப்பினால் நாடு என்னவாகும்? திருப்பூர் கம்பெனி சேட்டு மார்வாடிக்கு போய்விட்டது. கோயம்புத்தூர் மார்க்கெட் சேட்டு மார்வாடி கையில் போய்விட்டது. தங்கம் பிசினஸ் சேட்டு மார்வாடிக்கு போய்விட்டது. மஞ்சள் பிசினஸ் சேட்டு மார்வாடி கையில் இருக்கிறது. பருத்தி மார்க்கெட் சேட்டு மார்வாடி கையில் இருக்கிறது. நூல் மார்க்கெட் சேட்டு மார்வாடி கையில் இருக்கிறது. எத்தனைதான் எழுதிக் கொடுப்பீர்கள்? கடைசியில் தொகுதியை எழுதிக் கொடுக்கப் போகிறீர்களா? இந்த தொகுதியை எழுதிக் கொடுக்கப் போகிறீர்களா நீங்கள்? நல்லா யோசியுங்கள்.
இந்த தேர்தலிலே தமிழ்நாட்டை, தமிழர்களையும், தமிழ் மண்ணையும் பாதுகாக்கக்கூடிய செந்தில்நாதன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று நீங்கள் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். இது சாதாரண தேர்தல் அல்ல. இது வடநாட்டுக்கும் நமக்கும் நடக்கிற சண்டை. இந்த சண்டையில் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்குமாக யோசிக்கக்கூடிய, போராடக்கூடியவர்களை நீங்கள் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். மதிமுகவினுடைய பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கணேசமூர்த்தி அவர்களை நீங்கள் மறக்க முடியுமா? அவர் இல்லையென்றால் இங்கே கெயில் பைப்லைனை போட்டு விவசாய நிலத்தை எடுத்திருப்பான். அவர் போராட்டத்தில் வந்து நின்றவர். அவர் போராட்டத்தின் போராளி. அவர் வழியில் வந்தவர் இங்கே செந்தில்நாதன் வேட்பாளராக நிற்கிறார். நீங்கள் போராளியை வெல்ல வைத்தால் வரலாறு கொடுக்கக்கூடிய மரியாதையாக இருக்கும். ஒரு பொம்மையை அனுப்பினால் அது உங்களுக்கும் பயன்படாது. தமிழ்நாட்டுக்கும் பயன்படாது. சேட்டு மார்வாடி கூட்டத்துக்கும், குஜராத்துக்காரனுக்கும்தான் பயன்படுமே ஒழிய நமக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது.
அன்பானவர்களே, இப்படிப்பட்ட சூழலிலே நீங்கள் சிந்தித்து, தேர்ந்தெடுத்து, சரியான வேட்பாளரை அனுப்ப வேண்டும். “நீங்கள் கொங்கு மண்டலத்தில் போனீர்கள் என்றால் அங்கே ஆர்.எஸ்.எஸ்.காரன் அதிகமாக இருக்கிறார்கள். யார் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரன்? காந்தியை கொலை செய்த கூட்டம்தானே அது. அவன் வந்து இங்கே கட்சி நடத்துகிறான், சங்கம் நடத்துகிறானா? நீங்கள் திருப்பி கேட்க வேண்டும். தீரன் சின்னமலையும் முஸ்லிம்களும் ஒன்றாக நின்று சண்டை போட்ட ஊர் இது. இரண்டு பேரும் தோளோடு தோள் நின்று தோழனாய் போரிட்ட ஊர். பொல்லானும் தீரன் சின்னமலையும் களம் கண்ட ஊர். எங்கள் வரலாறு வேறு. சாவர்க்கர் மாதிரி வெள்ளைக்காரன் காலை நக்கி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவனெல்லாம் இங்கே வந்து அரசியல் செய்யக்கூடாது. கிளம்பு” என்று சொல்லுங்கள். நாங்கள் எதிர்த்து நின்று சண்டை போட்டு, உயிரே போனாலும் இந்த மண்ணுக்காக நாங்கள் போராடி சாவோம்” என்பது எங்கள் பரம்பரை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு என்ன? அவர்கள் வரலாறு என்ன? ஈழத்திற்காக, விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த ஒரு மாபெரும் இயக்கம். கழுத்தில் சயனைடு குப்பியை கட்டிக்கொண்டு மரணத்தை தோளிலே சுமந்துகொண்டு களம் கண்ட விடுதலைப் புலிகளுக்காக இயக்கம் கண்ட ஒரு மாபெரும் இயக்கம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். எதற்கும் அஞ்சாமல், இந்த தமிழ் இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக போரிட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்காக உயிரையும் கொடுப்போம் என்று துணிந்து நின்ற தோழர்கள்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்கள். எத்தனை வழக்குகள், எத்தனை அடக்குமுறைகள்! என்றைக்கும் மண்டியிட்டார்களா? ஒரு நாளும் மண்டியிடவில்லை. அவர்கள் எதிர்த்து நின்று போர் புரிந்தார்கள், போராட்டம் நடத்தினார்கள். அப்படிப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செந்தில்நாதன் அவர்கள் இங்கே வெற்றி வேட்பாளராக இருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடிய, களம் கண்ட, சிறை சென்ற, வழக்குகளை வாங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செந்தில்நாதன் அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அவர் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வதுதான் தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் பெருமையாக இருக்கும். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

அன்பானவர்களே, அதிமுகவையே பாஜகவிடமிருந்து காப்பாற்ற முடியாமல் எடப்பாடியார் தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆறாக அந்த கட்சியை உடைத்தது பாஜக. ஆறாக அந்த கட்சியை உடைத்தது பாஜக. தன் கட்சியை உடைத்த பாஜகவுக்கு 40 இடங்களை வாரி வழங்கி, தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடியார் அவர்களா தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறார்? நீங்கள் அவரிடம் சென்று கேள்வி கேளுங்கள்: “எடப்பாடியார் அவர்களே, முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள். உங்கள் கட்சியை காப்பாற்றுங்கள். உங்கள் கட்சியில் இருக்கும் பெரிய தலைகள் எல்லாம் வெளியே போய்விட்டது. எல்லாவற்றையும் வெளியே அடித்துப் பறிக்க வைத்தது யார்? பாஜக. உலகத்திலேயே தனக்கு துரோகம் செய்த ஒருவரோடு கூட்டணி வைத்து நட்பு பாராட்டக்கூடிய ஒரே கட்சி அதிமுகதான். தன் கட்சியை நாசம் செய்த ஒரு கட்சியோடு நட்பு பாராட்டி, அவர்களோடு தொடர்பு வைத்து, கூட்டணி வைத்து தேர்தலுக்கு போகக்கூடிய ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் கிடையாது.
பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்தது, அப்பாவையும் பையனையும் பிரித்துவிட்டார்கள். அதிமுக கூட்டணி வைத்தது, ஆறாக பிரித்து விட்டார்கள். தமிழ்நாடு இப்படிப்பட்ட ஆட்களை தேர்ந்தெடுத்தால் நாளைக்கு தமிழ்நாட்டின் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் உதயசூரியன் சின்னத்திலே செந்தில்நாதன் அவர்களுக்கு வாக்களிப்பது மட்டுமல்ல, நீங்கள் வாக்களித்தால் போதாது. உங்கள் சொந்தக்காரர்களிடம் பேசுங்கள், ஊர்க்காரர்களிடம் பேசுங்கள், தெருவில் பேசுங்கள், கூட வேலை பார்ப்பவர்களிடம் பேசுங்கள், கூட படித்தவர்களிடம் பேசுங்கள். “இந்த பாஜககாரன் வேண்டாம். ஆயிரம் பொய் பேசுகிறான்.” அதனால் அடுத்த கூட்டத்தை போட்டு நான் பேசலாம் என்று இருக்கிறேன். ஆயிரம் பொய் பேசுவான். “நாங்கள் எல்லாம் இந்துக்களை காப்பாற்றுகிறோம்.” “நீ எல்லாம் ஒன்றையும் காப்பாற்ற வேண்டாம். சாமி எங்களை காப்பாற்ற வேண்டும். நாங்கள் சாமியை காப்பாற்ற வேண்டியதில்லை. நாங்கள் எல்லாம் காப்பாற்றித்தான் இத்தனை நாள் கோயில் இருக்கிறது, சாமி இருக்கிறது, பூஜை இருக்கிறது, தேர் இருக்கிறது. தேர் இருக்கிறது.” அவனையெல்லாம் ஊருக்குள் விட்டீர்கள் என்றால் கலவரம் செய்துவிடுவான். அவன் நல்லதே யோசிக்க மாட்டான். அப்படிப்பட்ட சங்கி கூட்டத்தை வளர்த்துவிடாதீர்கள். அவர்களை வேரோடு விரட்டி, அவனை குஜராத்துக்கு திரும்ப அனுப்பினால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.
ஆக அன்பானவர்களே, பண்பானவர்களே, இங்கே உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுகின்ற தோழர் செந்தில்நாதன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.