
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழைப் போற்றும் கவிதைகளுக்கு இணையாக திராவிடத்தையும் போற்றுகிறார். திராவிடமும், தமிழும் வேறல்ல என்பதை தெளிவுபடுத்துகிறார். சாதி, சமயம், மதம் கடந்த தமிழுணர்வே திராவிடம் என்பதை பாடல்களால் அழுத்திக் கூறுகிறார்.
இன்று போலித் தமிழ்த் தேசியவாதியாக உலா வரும் சீமான் மட்டுமல்ல, பாரதிதாசன் காலத்திலேயே இருந்தவர்கள் திராவிடம் குறித்தான விவாதங்களைத் துவக்கி விட்டனர். அவர்களுக்கெல்லாம் விளக்கமளிக்க, திராவிடம் என்பது தமிழ் சொல்லே தவிர ஆரியம் அல்ல என்பதை 1958-ல் தனது குயில் ஏட்டில் ‘திராவிடம்’ என்றும் தலைப்பிட்ட பாடலில் விவரிக்கிறார். தமிழ் என்ற சொல்லை வெளிநாட்டவர்கள் பேசும் போது எந்த ஒலி வெளிப்பட்டதோ, அந்த ஒலியின் அடிப்படையிலேயே அவர்கள் தங்கள் புத்தகங்களில் எழுதி வைத்திருப்பது குறித்து விளக்கமாக பாடல் தீட்டியிருக்கிறார். பாலி மொழியில் உள்ள மகாவம்சம் என்னும் நூலில் தமிழை ‘தமிழோ’ என்று பயன்படுத்தியதும், தாலமி என்னும் பயணி தமிழ்நாட்டை ‘தமிரிசி’ என்று குறிப்பிட்டதும், அயலார் நாக்குகளின் தவறே என்கிறார். மச்சபுராணத்தில் தமிழை திரமிளென்றும், படியை வடமொழியில் பிரதி என்றும் கூறியதெல்லாம் ‘தமிழம்’ -திராவிடம் ஆக திரிந்ததே தவிர, அது ஆரியச் சொல் அல்ல என்கிறார்.
“திராவிடம் என்று செப்பிய தேன் எனில்
“திருத்தமிழம்” எனும் செந்தமிழ்ப் பெயரை
வடவர் திரமிளம் என்று வழங்கினர்.
திரமிளம், பிறகு திராவிடம் ஆனது.
வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்
வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே!
அதுபோல்,
திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால்
இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்?” – வடவரின் நாவினில் ஏறாத “திருத்தமிழம்” சொல் திராவிடமாக திரிந்ததை எடுத்துரைக்கிறார்.
தமிழினம் தன்னைப் பிரிக்கும் சாதி, சமயம், மதம் கடக்க வேண்டும் என்றால், திராவிட எண்ணம் கொள்ள வேண்டும் என்பதை ‘தமிழினத்தார் ஒன்றுபட வேண்டும்’ என்கிற தலைப்பில் தீட்டுகிறார் புரட்சிக் கவிஞர்.
‘நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்’ …தூவென்று சாதி மதம் கான்று மிழ்ந்தால்
அந்த நொடியே நமது மிடி(துன்பம்) பறக்கும்
அடுத்த நொடி திராவிடரின் கொடி பறக்கும்!…
– சாதி, சமயம், மதம் கடக்கும் தமிழினம் வெற்றி கொள்ளும், வெற்றிக் கொடியேற்றும். அந்த வெற்றிக் கொடியையே திராவிடம் என்றழைக்கிறார் பாரதிதாசன். திராவிட எண்ணம் தான் சாதி, சமயம் கடக்கும் தமிழினத்தைப் படைக்கும் என்பதே அவரின் ஆணித்தரமான கருத்தாகும்.
ஆனால் சீமான், சாதியப் பெருமிதங்களின் சமத்துவமற்ற தன்மையை எந்த வகையிலும் மாற்றாமல் அதன் பெயரை மட்டும் முந்தைய சமத்துவ தமிழினத்தின் குடி வகைகளில் அடையாளப்படுத்துகிறார்.. தமிழர் தெய்வமான முருகனை முன்னோர் வழிபாடு என்று ஏற்றுக் கொண்டவர், தமிழை நீச மொழி என்று கூறும் சமசுகிருத மடமான சங்கரமடத்துக்கு சென்று வழிபடுகிறார். தமிழ் முருகனை ஆரியமே சமஸ்கிருத சுப்ரமணியனாக்கியது. அதனை எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு கோயிலில் நடக்கும் சமசுகிருத வேத சடங்குகளுக்கு உடன்பட்டு பூசை செய்கிறார். இந்துத்துவ மதவாதியான இராம ரவிக்குமாருடன் நட்பு பாராட்டி கைக்கோர்க்கிறார்.

சீமான் சாதியை, சமயத்தை கைவிட முடியாமல், அவற்றையெல்லாம் தமிழினத்தின் பெருமைகளாக அடையாளப்படுத்துகிறார்.. தமிழினத்தின் கறைகளாகப் படிந்த சாதி மதத்தை திராவிட எண்ணமே நீக்கும் என்பது பாரதிதாசனின் கூற்று.. ஆனால் சீமான் என்னும் போலித் தமிழ்த் தேசியவாதி திராவிட எண்ணத்தை நீக்கி விட்ட தமிழினத்தை சாதிகளால் கட்டியமைக்கிறார். திராவிடக் கருத்துரு இல்லாத போலித்தமிழ்த் தேசியத்தை தமிழ்த்தேசியம் என்று ஏமாற்றுகிறார்..
திராவிடம் என்றால் என்ன? என அடிக்கடி கேட்கும் சீமான் போன்ற போலித் தமிழ்த்தேசியவாதிகளுக்கு, ஆரியத்தினால் தமிழினத்தில் புகுத்தப்பட்ட சாதி, மதம், மூடத்தனம், சடங்கு, சம்பிரதாயம் போன்ற கறைகளைக் களையும் கருத்தியலே திராவிடம் என்று அழுத்திக் கூறுகிறார் பாரதிதாசன். திராவிடம் என்பது நூற்றாண்டு கால கருத்தியல் மட்டுமல்ல. அதன் அடித்தளமாக இந்தியாவில் ஆரிய வருகைக்கு முன்னிருந்த மரபினமான திராவிட இனம், அவர்கள் பேசிய திராவிட மொழி போன்றவை இருக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டே பாரதிதாசன்,
“இனப்பேர் ஏன் என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்கு சொல்லொணொ மகிழ்ச்சியாம்
நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என் புகழ்”
-எனத் தன்னை திராவிடன் என அழைத்துக் கொள்வது தேனைப் போன்ற இனிமையானது என்று பாடுகிறார். ஆரிய நஞ்சிடமிருந்து தமிழினத்தைப் பிரிக்கும் திராவிடத்தை தேன் என்கிறார். திராவிடன் என தன்னை அழைப்பதில் இனிமை ஊறுவதாக கவிதையில் வடிக்கிறார்.
திராவிட நாட்டுப் பண் வாழ்த்துப் பாடலில்,
“ …பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளு மலையாளம்
கண்டை நிகர் கன்னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு…”
-என்று செந்தமிழில் சமசுகிருதம் கலந்து திராவிட மொழியானது என்னும் மொழியியல் ஆய்வாளர்களின் கூற்றைப் பாடுகிறார். பண்டையத் தமிழ் செறிவான தமிழாக இருந்தது. அதில் சமசுகிருதம் கலப்பு ஏற்பட்டு இன்றைய தமிழாக, தெலுங்கு, மலையாளம், துளுவம், கன்னடமாகப் பிரிந்திருக்கிறது. தமிழில் கூட சமசுகிருதம் கலந்திருக்கிறது. ஆக இன்றைய தமிழர்கள் உட்பட அனைவரும் செம்மைத் தமிழிலிருந்து பிறந்த மொழி பேசுபவர்கள் என்பது தெளிவாகிறது.. அதைத்தான் பாரதிதாசன் அவர்கள் திருத்தமிழம் என்பதே திராவிடர் ஆகத் திரிந்ததாகக் கூறுகிறார்.
நிழலில் இருந்த உடல் நிறமும் வெயிலில் இருந்த கை நிறமும் வேறு வேறாயினும் அதை இரண்டும் வேறென்று சொல்வார்களா ? எனக் கேள்வி எழுப்பும் பாடலில்,
“ …நீயும் தெலுங்கனும் நீங்கொணா இனத்தவர்,
இந்த உண்மை ‘இடைநாள்’ என்னும்
நிழல் மறைத்திருந்தது, நீ, உன் உணர்வால்,
உள்ள உறவினை உற்று நோக்குக!
பரந்து கிடக்கும் பழந்தமிழ் நாட்டைப்
பார்! உன் பைந்தமிழ்ச் சீர்பார்! மகிழ்ச்சி கொள்!…
– என்று உன் இனத்தை எதிரிக்கு உரியதாக்கி ஊனத்தை நாட்டுக்கு உண்டாக்குகிறாய், நம் அரும் தாய்த்தமிழ் செம்மைப் பழந்தமிழ், தெலுங்கென, மலையாளமென, கன்னடமென பிரித்ததுண்டா? எனக் கேள்வி எழுப்புகிறார். பகைப்புலத்தை வீழ்த்த திராவிடன் என்று தோள் உயர்த்து என்கிறார்..
ஆனால் சீமான் தெலுங்கு பேசுபவர்களை மட்டும் திராவிடர் என சித்தரிக்கிறார். தமிழிலிருந்து பிரித்த சமசுகிருதம் மேல் கோவம் கொள்ளாமல் தெலுங்குப் பார்ப்பன ஆதிக்க சங்கரமடத்துக்கு செல்லக்கூடிய சீமான், பல நூற்றாண்டு காலமாக தமிழராகவே இங்கு வாழ்ந்த தெலுங்கு பேசுபவர்களை எதிரியாகக் காட்டுகிறார். தெலுங்கர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்கிறார். தெலுங்கு மட்டுமல்ல ஆதிக்க மனப்பான்மை கொண்ட எவரும் தமிழரல்ல என்பதே திராவிடக் கருத்தியல். பிறப்பின் அடிப்படையினால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. ஆரியம் தமிழர்கள் மேல் திணித்த, அடுத்தவர் மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சாதி சமயத்தைத் துறந்தவரே தமிழர் என்பதை உரத்துக் கூறுவதற்கே திராவிடக் கருத்தியல் உருவானது. ஆரியத்திற்கு எதிராக சண்டையிட்டு தமிழர்களை, தமிழைக் காக்க எழுந்ததே திராவிடக் கருத்தியல்.. அது அறிவியல் சொல்லாக திராவிட இன அடிப்படையில், திராவிட மொழி அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டது.
“செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்!
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்!
– என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, எங்கு பிறந்திருந்தாலும் குருதியில் தமிழ் தன்மையை கொண்டிருப்பவர் தமிழரே, இங்கு தமிழராகப் பிறந்திருந்தாலும் ஆரியனுக்கு அடிபணிந்தவர் அயலவரே எனப் பாடுவதை, பிறப்பின் அடிப்படையில் தமிழர் என்று பாரதிதாசன் பாடுவதாகத் திரிக்கின்றனர் போலித் தமிழ்த்தேசியவாதிகள். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைச் சாதியாகப் பிரித்த சனாதனவாதிகளின் தூதுவர்களாக செயல்படுகின்றனர்.
தமிழ் சமூகத்தில் இருந்து ஆரியத்தை நீக்கும் ஆக்க வேலைகளில் ஒன்றாக கவிதை வடித்தார் பாரதிதாசன். ஆரிய நீக்கம் செய்யப்பட்ட தமிழினம் இந்திய தேசிய மறுப்புடன், ஏகாதிபத்திய எதிர்ப்புடன், சுயநிர்ணய உரிமையுடன், தற்சார்பு பொருளாதாரத்துடன், பாலின சமத்துவத்துடன், வர்க்க பேதம் ஒழிக்கும் நோக்கத்துடன் எழக்கூடிய தன்மை அடையும். அதுவே தமிழ் தேசியம். இந்த ஆரியம் ஒழிந்த தமிழ்த் தேசியத்தையே பெரியாரும், பாரதிதாசனும் உயர்த்திப் பிடித்தனர். அதற்கான செயல்பாடுகளாகவே திராவிடக் கருத்தியலை மேற்கொண்டனர். இதற்கு முற்றிலும் எதிராக ஆரியத்தை தழுவுகிறார் சீமான். ஆரியத்தை தழுவும் எதுவும் தேசியமாக முடியாது. சீமான் பேசுவதும் தமிழ் தேசியம் ஆகாது.