தவெக அரசின் முன்னிருக்கும் சவால்கள் குறித்து தோழர் கொண்டல்சாமியின் நேர்காணல்

தமிழ்நாட்டில் தற்போது புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு, தன் முன்னிருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் நிலைப்பாடு குறித்தும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமி அவர்கள் ‘தீரா’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்:

பத்திரிக்கையாளர்: ‘தீரா’ தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமி அவர்கள். தோழர் வணக்கம்!

பத்திரிக்கையாளர் கேள்வி: 2026 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக எதிர்பார்க்காத வெற்றி, திமுக எதிர்பார்க்காத தோல்வி. இந்த தோல்விக்கு பலரும் பலவிதமான காரணங்களை சொல்கிறார்கள். (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) இவிஎம்-மால்தான் இது சாத்தியப்பட்டது என்று அப்துல்கலாம்மினுடைய உதவியாளர் பொன்ராஜ் அவர்கள், மூத்த பத்திரிக்கையாளர் ஐயநாதன் அவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வைக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இது இன்ஸ்டாகிராமினாலும் குழந்தைகளாலும் பெறப்பெற்ற வெற்றி என சொல்கிறார். தவெகவினுடைய வெற்றியை மே 17 இயக்கம் எப்படி பார்க்கிறது?

தோழர் கொண்டல்சாமியின் பதில்: வணக்கம். இந்த வெற்றி என்பது யாரும் எதிர்பார்க்காத வெற்றிதான். அதே நேரத்தில் இது இவிஎம்-மால் வந்திருக்குமா என்கிற யூகத்தில் எதையும் பேச தேவையில்லை என நினைக்கிறோம். தவெகவினுடைய வெற்றி குறித்து ஒரு ஆய்வு கண்டிப்பாக தேவை. ஏனெனில் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தார்கள்.

அதற்கு மாற்றாக, தவெக வந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே ஆட்சியைப் பிடித்திருக்கிறது. எப்படி பிடித்தார்கள்? என்பது பற்றி ஒரு மிகப்பெரிய ஆய்வை நடத்த வேண்டும். அது எதிர்காலத்துக்கு நல்லது என்கின்ற அடிப்படையில் முக்கியமானது. அதே நேரத்தில் இந்த வெற்றி என்பது “மாற்றம் வேண்டும்” என்கின்ற அடிப்படையில் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்கு போட்டார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள். நாங்கள் அதை மறுக்கிறோம். எனெனில் திமுக-அதிமுகவுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டுதான் தமிழ்நாட்டில் இதற்கு முன்னாடி பல்வேறு முயற்சிகள் இதற்காக நடந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று அவர்களுக்கெல்லாம் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் அதைத் தொடரவில்லை.

சமீபத்தில் இந்தியா முழுக்க ஆட்சியை பிடித்த பாரதிய ஜனதா கட்சி, ‘தமிழ்நாட்டிலும் திமுக-அதிமுகவுக்கு அடுத்து நாங்கள் வந்து ஆட்சியை பிடிப்போம், நாங்கள்தான் மாற்று’ என்று ஒரு முழக்கத்தை வைத்தார்கள். அந்த முழக்கத்தை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள். மாற்றம்தான் தேவை என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்திருந்தால், அதை ஏன் தவெகவுக்கு போடுகிறோம், ஏன் பாஜகவுக்கு போடவில்லை என்பது ஒரு முக்கியமான கேள்வி. இதை யாரும் கேட்பது கிடையாது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மாற்று வேண்டும் என்பது மட்டும் குறிக்கோளாக இல்லை.

கேள்வி: அந்த மாற்று யாருக்கு? விஜய் ஒரு சரியான தேர்வு என நினைக்கிறீர்களா?

பதில்: அதாவது மக்கள் திரு. விஜய் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. அவர் ஏற்கனவே வெளிப்படையாக பேசி இருக்கிறார். இனி அவருடைய செயல்பாடுதான் அவரைத் தீர்மானிக்கும்.

கேள்வி: திரு.விஜய்யின் கடந்த கால செயல்பாடு ஆட்சிக்கு வருவதற்கான காரணமாக இருந்ததா?

பதில்: கடந்த கால செயல்பாடு என்றால், திரு.விஜய் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்ததில்லை. அரசியலில் சுமார் இரண்டு ஆண்டுகளாகத்தான் இருக்கிறார். அதற்கு முன்பு அவர் மக்கள் பணியை நேரடியாக செய்யவில்லை. ஆனால், மறைமுகமாக ரசிகர் மன்றம் மூலம் செய்திருக்கிறார். ஆனால், பா.ஜ.க.வைப் போல இந்தியைத் திணிப்பேன் என்று அவர் எங்கும் பேசியதில்லை. தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பழிக்கும் வேலையை இதுவரை அவர் செய்ததில்லை. அப்படி இந்த மாதிரி ஒரு களங்கமில்லாத பிம்பம் அவருக்கு இருக்கிறது. அந்த பிம்பம் மக்களுக்குத் தேவைப்பட்டிருக்கலாம். அதனால் இவர்தான் மாற்று என்று மக்கள் முடிவெடுத்திருக்கலாம். 

தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிராக அவர் இருந்திருந்தால், கண்டிப்பாக விஜய்யை தமிழக மக்கள் புறக்கணித்திருப்பார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. மக்கள் பா.ஜ.க.வை எப்படி புறக்கணித்தார்களோ, அதேபோல ’பிராமணக் கடப்பாரையைத் தூக்குவோம்’, ’திராவிடமே தவறு’ என்று சொன்னவர்களையும் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

கேள்வி: அதாவது பிஜேபியையும், நாதகவையும் நிராகரித்து உள்ளார்கள் என்கிறீர்கள் அல்லவா?

பதில்: ஆம். இந்த இரண்டையும் நிராகரித்து உள்ளனர் மக்கள். தவெக வெற்றி எப்படி இவ்வளவு அடர்த்தியாக, பிரமாண்டமாக வந்திருக்கிறது என்றாலும் கூட, அதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அந்த வெற்றியைக்கூடத் தமிழ்நாட்டு மக்கள் விஜய்க்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. பெரும்பான்மை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால், 150-160 இடங்களோடு கொடுத்திருக்கலாம். ஏன் பெரும்பான்மை குறைவாக இருக்கிறது என்றால், “மக்கள் உங்களைக் கவனிக்கிறார்கள்” என்பதைச் சொல்வது போலத்தான் இந்தச் செய்தி.

அதேபோல, அவரும் என்ன செய்திருக்கிறார் என்றால், தான் பா.ஜ.க.வின் பி-டீம் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவருடைய செயல்பாடு இருந்தது. அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்றதும், அவர்கள் நேரடியாக அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியுடன் கூட்டணி வைத்து, “எங்களுக்குப் பெரும்பான்மை கொடுங்கள்” என்று கேட்டிருக்கலாம். அவர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.

கேள்வி: இந்த இடத்தில் ஒரு தெளிவுக்காகக் கேட்கிறேன். “விஜய் பா.ஜ.க.வின் பி-டீம் இல்லை” என்பதை அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறார் என்று நீங்கள்(கொண்டல்) கூறுகிறீர்கள். இப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டும், அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பிரிவினரைப் பிரித்து, அக்கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதிருப்தியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார். அந்த 25 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும். எஸ்.பி. வேலுமணி நேரடியாக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்படி இருக்கும்போது, அந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை விஜய் பெரும்பான்மைக்காகப் பெற்றார் என்றால், விஜய்யின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவில்லையா?

பதில்: அதை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால், விஜய் முதற்கட்டமாகவே 107 இடங்கள் கிடைத்த உடனே இந்த வேலையைச் செய்திருந்தால், அவருடைய நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்திருக்கும். அவர் பா.ஜ.க.வின் பி-டீம் தான், தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் நெருங்குகிறார் என்பதை அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால், அவர் முதலில் அதைச் செய்யவில்லை.

அவர் முதலில் என்ன செய்தார் என்றால், மதச்சார்பற்ற கூட்டணியில் யார் இருக்கிறார்களோ, அவர்களின் ஆதரவைத்தான் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அ.தி.மு.க.வின் பிளவு என்பது, அவர்கள் அதிகாரத்திலிருந்து விலகிப் போவதற்கு மனமில்லாமல் உடைகிறார்களே தவிர, விஜய் அதை உருவாக்கவில்லை. “இதனால் தனக்கு ஆதரவு கிடைக்கும்” என்று அவர்கள் தாமாகவே வரும்போது, பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சி யார் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அதிமுக சென்றாலும் கூட, விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யு.எம்.எல்., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது.

நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்கள் ஆரம்பத்திலிருந்தே வி.சி.க., ஐ.யு.எம்.எல்., கம்யூனிஸ்ட் கட்சிகளிடம்தான் “எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். காங்கிரஸ்தான் தாமாகவே அவசரப்பட்டுச் சென்றதே தவிர, இவர்கள் வலியச் சென்று கேட்டு குதிரை பேரம் நடத்துவது போலெல்லாம் நாம் பார்க்கவில்லை. வி.சி.க.வோ இடதுசாரி கட்சிகளோ ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒரு நோக்கத்துடன் வந்தார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டால், பின்னால் இருந்து பா.ஜ.க. வந்துவிடக்கூடாது, ஆளுநர் ஆட்சி மூலமாக அவர்கள் வந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் விசிக, கம்யூனிஸ்ட், ஐ.யு.எம்.எல் வந்தார்கள். பெரும்பான்மைக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொன்னார்களே தவிர, அதை முறைப்படி ஏற்கனவே இருந்த கூட்டணியின் தலைமையிடம் சொல்லிவிட்டு வந்து ஆதரவு கொடுத்தார்கள்.

ஆனால், காங்கிரஸ் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக உடனடியாக ஆதரவு கொடுத்தது. இது மிகப்பெரிய துரோகம். காங்கிரஸின் இந்தச் செயல்பாட்டை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் தமிழ்நாடு 60 ஆண்டுகளாக அவர்களை நிராகரித்து வைத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு இதுதான் சான்று. காங்கிரஸின் இந்த நிலைப்பாடு வெளியில் இருப்பவர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு இதில் எந்த அதிர்ச்சியும் கிடையாது. காங்கிரஸின் வரலாறே அதுதான்.

காங்கிரஸின் வரலாற்றை நீங்கள் சமீப காலத்தில் எடுத்தால் கூட, இந்தியா முழுவதும் காங்கிரஸ் செய்யக்கூடிய வேலை இதுதான். “பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு நாங்கள்தான்” என்று சொல்லிக்கொண்டே, பா.ஜ.க.வுக்கு ஆதரவான அனைத்து வேலைகளையும் செய்தது காங்கிரஸ்தான். பா.ஜ.க.வை உண்மையாக எதிர்க்கக்கூடிய மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்தியது காங்கிரஸ்.

ஒருவேளை காங்கிரஸ், இந்தியா முக்கியம் என்றும், ராகுல் காந்தி அடிக்கடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் பிடிப்பதைப் போல, அந்த அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர் தனக்கு வரக்கூடிய ஒன்றிரண்டு இடங்களைக் கூட விட்டுக்கொடுத்து, மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத ஆட்சியை உருவாக்கும் வேலையைச் செய்திருப்பார். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. எங்கெல்லாம் காங்கிரஸ் முன்னர் ஆட்சியில் இருந்ததோ, அங்கெல்லாம் இந்தியா கூட்டணியை உடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: தவெக ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோரின் ஆதரவே போதும் என்று சொன்னீர்கள். இதையே த.வெ.க. தலைவர், முதலமைச்சர் விஜய் நினைத்திருந்தால், அ.தி.மு.க.வில் ஒரு பிளவு ஏற்பட்டு, அவர்களுக்குள் பிரச்சினைகள் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில், பிளவுபட்ட அ.தி.மு.க.வின் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றவர்களை ஒரு முதலமைச்சராக, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு நேரில் சென்று சந்திப்பது, குதிரை பேரத்துக்கு வழிவகுப்பது போலத்தானே தெரிகிறது?

பதில்: பெரும்பான்மை என்ற அடிப்படையில், “தங்களுடைய ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்று கவிழ்த்துவிடுவார்களோ, பா.ஜ.க. ஏதாவது செய்துவிடுமோ” என்ற ஒரு பதற்றம் இருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது. உள்ளுக்குள் என்ன நடக்கிறது? என்பது நமக்குத் தெரியாது. நாம் அந்தக் கட்சிக்காரர்கள் கிடையாது.  நாம் வெளியிலிருந்து பார்ப்பதன் அடிப்படையில், த.வெ.க. விஜய் அவர்களின் நிலைப்பாடாக முதலிலிருந்தே பா.ஜ.க. அல்லாத கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்துதான் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது என்பதை நாம் இன்று வரை பார்க்கிறோம்.

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளை இழுத்து தி.மு.க.வைப் பலவீனப்படுத்திவிட்டு, அ.தி.மு.க.வில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 25 பேரை இழுத்து, விஜய் ஒரு புதுவகையான அரசியல் நகர்வை முன்னெடுக்கிறார் என்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: இது தற்கொலைக்குச் சமம். அதாவது, ஜெயலலிதா அம்மையாரும் கலைஞரும் இல்லாத ஒரு சமயத்தில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்போது, இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர்கள் & அ.தி.மு.க.வுக்கு எதிராக இருப்பவர்களே, “தமிழ்நாட்டில் அ.தி.மு.க. இருக்க வேண்டும். “அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் வலுவாக இருந்தால் மட்டும்தான் இங்கு பா.ஜ.க., வலதுசாரிகள் உள்ளே நுழைய முடியாது” என்று பேசினார்கள். அப்படியானால், இந்தக் கூட்டணி இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். 

இப்போது, ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல விஜய் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு முடிவெடுத்து, இந்தப் பக்கம் இருந்து தி.மு.க. கூட்டணியை உடைத்து, தி.மு.க.வைப் பலவீனப்படுத்தி, அ.தி.மு.க.விலிருந்து பலரை வெளியே எடுத்து அ.தி.மு.க.வைப் பலவீனப்படுத்தினால், அப்போது உங்களுக்கு எதிர்த்தரப்பில் யார் இருப்பார்கள்? இந்தியா முழுவதும் ஆளுங்கட்சியாக இருப்பது, பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க.தான். அப்போது அது உங்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும். 

த.வெ.க. அப்படிப்பட்ட தவறைச் செய்யாது என்று நான் நினைக்கிறேன். அதனால், நாம் யூகங்களாக எதையும் பேசத் தேவையில்லை. நாம் ஆதாரத்துடன் பேசுவோம். ஒரு அரசியல் கட்சியாக அவர்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். இனி அவர்களுக்கு முன்னால் இருக்கும் சவால் என்ன? இந்த சவாலைத் தான் மிக முக்கியமானதாக நாம் பார்க்கிறோம்.

கேள்வி: த.வெ.க. இப்படி ஒரு முடிவெடுத்தால் அது தற்கொலைக்குச் சமம் என்று சொன்னீர்கள். அதேபோல, தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைந்து, தி.மு.க. வெளியிலிருந்து ஆதரவு அளித்து, அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கும், எடப்பாடி முதலமைச்சர் ஆவதற்கும் திருமாவளவனிடம் பேசினார்கள். அது நியூஸ் 18 தொலைக்காட்சியில் விலாவாரியாகவும் கூறினார். ஆனால், அடுத்த நாளே அதை மாற்றிப் பேசியதை நாம் பார்க்க முடிந்தது. 

இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பேபி அவர்களும் இதே கருத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த நாள் மாற்றிச் சொன்னார். இவர்கள் மாற்றிச் சொன்னதையும் நாம் இரண்டு இடங்களிலும் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  உண்மையில் தி.மு.க. – அ.தி.மு.க. இடையே உடன்பாடு ஏற்பட்டு இந்த மாதிரி ஒரு பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்திருந்தால், இது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்று பார்க்கிறீர்களா, அல்லது இதுவும் தற்கொலைக்குச் சமம் என்று பார்க்கிறீர்களா?

பதில்: தோழர் பேபி அவர்களும் சரி, திருமாவளவன் அவர்களும் சரி, அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததை மாற்றிப் பேசவில்லை. அவர்கள் “அதிகாரப்பூர்வமாக எங்களிடம் யாரும் பேசவில்லை” என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்தது நூற்றுக்கு நூறு உண்மை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது, எல்லோருக்கும் தெரியும். இது தி.மு.க.வில் இருக்கக்கூடிய பெரிய வாரிசுகளும், அ.தி.மு.க.வில் இருக்கக்கூடிய பெரிய வாரிசுகளும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனால், தி.மு.க.வில் இருக்கக்கூடிய மிக முக்கியமான நபர்கள் இதை எதிர்த்தார்கள். “இது கூடாது” என்று சொன்னார்கள். 

நீங்கள் கேட்கிறீர்கள், “இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால் இது தற்கொலைக்குச் சமமா, இல்லை அரசியல் சாணக்கியமா?” என்று. இது ஒரு தற்கொலைக்குச் சமம்தான். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து விஜயை இன்னும் 25 வருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றிவிடுவீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்திருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும்.  ஏனென்றால், விஜயின் கடைசி உரையை, அதாவது இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி உரையை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் தெரியும். “என்னை (விஜய்) எதிர்ப்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒன்று சேர்வார்கள் பாருங்கள்” என்று சொன்னார். இன்று அது உண்மையாகியிருந்தால், அவர் இன்னும் அசைக்க முடியாத சக்தியாக நின்றிருப்பார். 

அதே நேரத்தில், இவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி அது நடக்காமல் தடுத்ததில், எனக்குத் தெரிந்து தி.மு.க.வில் இருக்கக்கூடிய மிக முக்கியமான, தத்துவார்த்த ரீதியான புரிதல் உள்ள, திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுடைய பலரும் சேர்ந்துதான் இதைத் தடுத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து தி.மு.க.வில் இருக்கும் மிக முக்கியப் புள்ளிகளுக்கு, இன்னும் சொல்லப்போனால் தலைவர்களுக்கே இதில் விருப்பம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இது நடக்காமல் போனது நல்லது.

இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஆரோக்கியமான சூழல் இருக்கிறது. த.வெ.க. என்பது உண்மையைத் தெரியாத கட்சி, அது ஆட்சிக்கு வந்துவிட்டதே என்ற ஒரு சிறிய சலசலப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எதிர்க்கட்சியாக மிக வலிமையோடு தி.மு.க. இருக்கிறது. அது 60 ஆண்டுகாலப் பாரம்பரியமான கட்சி. இந்தப் பக்கம் த.வெ.க. புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். “மக்கள் நம்மை நம்பி ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்” என்ற ஒரு பொறுப்புணர்வோடு அவர்கள் இருக்கிறார்கள். இது அரசியல் எல்லையைக் கடந்து, தமிழ்நாட்டுக்கு மிக ஆரோக்கியமான சூழலாகத்தான் மே பதினேழு இயக்கம் பார்க்கிறது. 

எப்போதும் மே பதினேழு இயக்கம் சொல்வது, “தமிழ்நாட்டில் வட இந்தியக் கட்சிகளுக்கு இடமில்லை, இந்திய தேசியக் கட்சிகளுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ்நாட்டுக்கு மாநிலக் கட்சிகள்தான் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நலன்தான் முக்கியம்” என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், இன்று ஒரு சூழல் அமைந்திருக்கிறது. இந்தச் சூழல் எப்படி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

தவெக ஒரு சிறிய கட்சிதான். ஆனாலும், அவர்களுக்கான சில சஞ்சலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைச் சிலர் கையாளுகிறார்கள். உதாரணத்துக்கு, தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அது குறித்து உடனே விமர்சனம் வந்தவுடன் அவர்கள் சரி செய்கிறார்கள். “ஆம், நாங்கள் சொன்னோம். நாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றதற்குப் பிறகுதான் நாங்கள் முதலமைச்சர். அதுவரைக்கும் நாங்களும் சாதாரண எம்.எல்.ஏ.க்கள்தான். இது ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு, நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்கிறார்கள்.

கேள்வி: சபாநாயகர் தேர்தலில் அதே மாதிரி நடந்ததே?

பதில்: சபாநாயகர் தேர்தலில் அவர்கள் நெறிமுறையை மாற்றி வைத்திருக்கிறார்கள். இதை எப்படிச் சரி செய்வது என்பதை அடுத்து பேசுவோம். “இருமொழிக் கொள்கைதான் தவெகவின் கொள்கை” என்கிறார்கள். பண்டிட் என்று ஒருவரை நியமிக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு வருகிறது, உடனே திருத்திக்கொள்கிறார்கள். ஒரு தவறு என்று சொன்னால், அதைத் திருத்திக்கொள்ளும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். 

இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் தற்போது எதிர்க்கட்சியும் வலுவாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியும் ஒரு துடிப்போடு இருக்கிறார்கள். இதை நாம் ஒருங்கிணைத்துப் பார்த்து, தமிழ்நாட்டிற்குள் வலதுசாரிகள் நுழையாமல் இருக்கும் வேலையை நாம் செய்ய வேண்டும்.

கேள்வி: வலதுசாரிகள் தமிழ்நாட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்ற ஒரு நோக்கத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. பா.ஜ.க. எதிர்ப்பு, மதவாதத் திட்டங்கள், மதவாதத் திணிப்பு ஆகியவற்றை மிகக் கூர்மையாக எதிர்த்து வந்தது. அதில் எந்த இடத்திலும் சமரசம் செய்யவில்லை. இருமொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயன்றபோது, நிதியே கொடுக்காவிட்டாலும் “இதைச் செய்ய மாட்டேன்” என்று ஒன்றிய அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடியது.

இப்படி எல்லா இடங்களிலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்த தி.மு.க., இந்தத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெருமளவில் இழந்துவிட்டது. சிறுபான்மையினர் பெருவாரியாக தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: பெருவாரியாக வாக்களிக்கவில்லை என்பதைவிட, நீங்கள் 11 மாவட்டங்களில் த.வெ.க. ஒரு வெற்றியைக்கூடப் பெறவில்லை. அப்போது அந்த ஊர்களில் எல்லாம் விஜயின் அலை அடிக்கவில்லையா? என்ற ஒரு கேள்வி நமக்கு வருகிறது.

அப்போது நாம் இதை எப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும்? த.வெ.க.வின் இந்த வருகையினால் எல்லாப் பிரிவுகளிலிருந்தும் வாக்குகள் போயிருக்கின்றன. இப்போது, “நாங்கள் எந்தவிதப் பற்றும் இல்லாமல் தமிழர்கள் மட்டுமே” என்று சொல்லிக்கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் 8% வாக்கு, 4% ஆகக் குறைந்திருக்கிறது. “நாமெல்லாம் இந்துக்கள்” என்று சொல்லி, “எங்களுக்கு இஸ்லாமியர் ஓட்டு வேண்டாம், கிறிஸ்தவர்கள் ஓட்டு வேண்டாம்” என்று பிரச்சாரம் செய்த பா.ஜ.க. வாங்கிய 11% வாக்கு, இன்று ஒரிரண்டு சதவீத வாக்கில்தான் நிற்கிறது. அவர்களுடைய 9% வாக்கு இன்று த.வெ.க.வுக்கு மாறியிருக்கிறது. 

அதேபோல, தலித்துகளின் வாக்கும் மாறியிருக்கிறது. ஜோசப் விஜய் என்பவர் ஒரு கிறிஸ்தவராக இருப்பார் என்பதனால் கிறிஸ்தவர்களின் வாக்கு போயிருக்கும். இஸ்லாமியர் வாக்கைப் பொறுத்தவரைக்கும், பெருவாரியாகப் போகவில்லை என்றுதான் நான் பார்க்கிறேன். ஆனால், அதில் ஒரு சிறிய ஊசலாட்டம் வந்திருக்கிறது.

கேள்வி: அப்படியானால், திருப்பரங்குன்றம் விடயத்தில் விஜய் ஏன் கருத்து சொல்லவில்லை? மே 17 இயக்கம் அதைப் பற்றி அழுத்தமாகச் சொன்னது, தோழர் திருமுருகன் காந்தியும் சொன்னார், நீங்களும் எழுதியிருந்தீர்கள். அப்படி திருப்பரங்குன்றம் விடயத்துக்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாத விஜய்க்கு எப்படி முஸ்லிம் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் சென்றன? எந்த அடிப்படையில் அந்த வாக்குகள் சென்றன?

பதில்: இதை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதுதான். அதாவது, இப்போது கிறிஸ்தவர்கள் வாக்களித்திருந்தால்கூட, ஒருவேளை ஜோசப் விஜய் என்ற அந்தப் பெயருக்காக வாக்களித்திருக்கலாம் என்று நாம் யூகிக்கலாம். ஆனால், இஸ்லாமியர்கள் ஏன் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், இஸ்லாமியர்களுக்குள் ஒரு பிரிவினருக்கு “தி.மு.க. தங்களுக்கு எதுவும் செய்யவில்லையோ” என்ற ஒரு கருத்து இருந்திருக்கலாம். அவர்களுடைய நீண்டகால சிறைவாசிகள் விடுதலை நடக்கவில்லை என்பது ஒரு காரணம். 

ஆனாலும், நான் பார்க்கின்ற வரைக்கும், இந்தத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பார்க்கும்போது, இஸ்லாமியர் வாக்கு பெருவாரியாக தி.மு.க.வுக்குத்தான் விழுந்திருக்கிறது. ஆனால், முழுமையாக விழுந்திருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால், அது ஒரு கேள்விக்குறிதான். அதற்கான காரணங்களை இப்போது தி.மு.க.வும் “நாங்கள் காரணத்தை அவசரமாக ஆராய்கிறோம்” என்று சொல்லியிருக்கிறது. அதை அவர்கள் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்.  இது மிகவும் ஆரோக்கியமான ஒரு சூழல். எந்தக் குதிரை பேரத்துக்குள்ளும் போகாமல், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்காமல், “ஐந்து வருடம் அவர்கள் நடத்தட்டும், எப்படி இருக்கிறது என்று மக்கள் பார்த்து முடிவு செய்யட்டும். அதற்குள் நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தி.மு.க. நினைப்பதும் சரி. 

“தவெக பா.ஜ.க. பக்கம் போக மாட்டோம். அதே நேரத்தில் மதச்சார்பற்ற சக்திகள் எங்களுடன் இருங்கள். நாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் ஏதாவது இருந்தால், அதை சரி செய்துகொள்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். கண்டிப்பாகத் திருத்துகிறோம். எல்லோரும் சேர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்” என்று சொல்லும் த.வெ.க. ஆட்சியைப் பிடித்திருப்பது ஒரு பக்கம். 

இந்த இரண்டு பக்கமும் இருப்பதால், தமிழ்நாடு ஒரு ஆரோக்கியமான சூழலில்தான் இதுவரை இருக்கிறது என்று நம்புகிறோம். ஒருவேளை இதற்கு மாறாக நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இயக்கங்கள், குறிப்பாக மே 17 இயக்கம், அதை அனுமதிக்காது. தொடர்ச்சியாக, கடந்த காலங்களில் அரசுகள் தவறு செய்யும்போது எப்படி இடித்துரைத்தோமோ, கோரிக்கை வைத்தோமோ, சில நேரங்களில் தேவைப்படும் நேரத்தில் போராட்டம் செய்தோமோ, அதையும் செய்வதற்கு மே பதினேழு இயக்கம் தயாராக இருக்கும்.

கேள்வி: நிறைவான ஒரு கேள்வி. த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் 717 டாஸ்மாக் கடைகளை மூடியது, அம்மா உணவகங்களைப் புதுப்பிப்பது போன்ற நல்ல முடிவுகளை எடுத்தாலும், இப்போதும் பாட்டிலுக்கு ₹20 கூடுதலாக வாங்குவது, 5 நாளில் 25 கொலைகள், புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, கோவையில் சிறுமி பாதிப்பு என சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்கின்றன. இவற்றைத்தான் த.வெ.க. பிரச்சாரத்தில் முன்வைத்தது. இப்போதும் இதே நிலை தொடர்ந்தால், த.வெ.க. இந்தப் பிரச்சனைகளை எப்படிக் கையாளும்? இதே நிலை நீடித்தால் மே 17 இயக்கம் த.வெ.க.வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துமா?

பதில்: மே 17 இயக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் எப்போதும் மக்களோடுதான். எங்கள் தோழர் அடிக்கடி சொல்வது போல, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் எதிர்க்கட்சிதான். ஆனால் எல்லா நேரத்திலும் எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மே 17 இயக்கம் முன்னெடுத்த நினைவேந்தலில் த.வெ.க. அரசிடம் கோரிக்கை வைத்தோம். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அரசு எழுப்ப வேண்டும், நினைவேந்தல் நிகழ்வை அரசே நடத்த வேண்டும் என்று கேட்டோம். தேவைப்படும் நேரத்தில் கோரிக்கை வைப்போம். 

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கைமீறிப் போனால், தடுக்க முடியவில்லை என்றால் மே 17 இயக்கம் களத்தில் இறங்கும். அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் என எந்த அரசாக இருந்தாலும் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து வீதியில் நின்றோம், வழக்கு வாங்கினோம், சிறை சென்றோம். த.வெ.க. இப்போதுதான் வந்திருக்கிறது. புரிந்து கொள்ளக் கால அவகாசம் தேவை என்பதை உணர்கிறோம். எதிர்க்கட்சிகளும், வைகோ போன்ற மூத்த தலைவர்களும் ஆறு மாதம் அவகாசம் கொடுக்கிறோம் என்கிறார்கள். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பிரச்சனைகளை சரி செய்யுங்கள். மக்களுக்குப் பிரச்சனை வந்தால், மக்களுக்காகக் குரல் கொடுக்க நாங்கள் திரண்டு வருவோம். யாராக இருந்தாலும் சரி. தேவை இருந்தால் கண்டிப்பாகப் போராடுவோம்.

கேள்வி: சட்டம்-ஒழுங்குக்கு கால அவகாசம் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ₹10, ₹20, சில இடங்களில் ₹30 வரை கூடுதலாக வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதைத் தடுக்க முடியாமல் போவது ஏன்? கால அவகாசம் என்பது இதற்கும் பொருந்துமா?

பதில்: இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உடனடியாக அரசின் கவனத்துக்கு சென்றிருக்க வேண்டும். சினிமா துணை நடிகர் முத்துக்காளை தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று உதவி கேட்டு ஒரு சிறிய காணொளி வெளியிட்டவுடன், முதலமைச்சர் உடனே செயல்பட்டு, அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சென்று பார்த்தார்கள். அப்படியிருக்கும்போது, இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு ஆதாரத்தோடு வரும்போது அதைக் கவனத்தில் எடுத்து சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்குதான் குறையும்.

பத்திரிக்கையாளர்: இந்த தவெக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பதைப் பார்ப்போம். தவறான பாதையில் தவெக போனால் மே 17 கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும் என சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்.

தோழர் கொண்டல்சாமி: மிக்க நன்றி!

காணொளி: https://youtu.be/ZNNZaaLg61Y?feature=shared

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »