
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். சாமி சிறப்பு தரிசனத்திற்கு அர்ச்சகர் ஒருவர் அமைச்சரிடமே ரூ.4000/- லஞ்சமாக பெற்ற பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய செய்தி விவாதமாகியுள்ளது. ஆனால் உண்மையில் அவர்கள் அர்ச்சகர்களே இல்லை என்பது தான் விவாதமாக வேண்டிய செய்தி. அரசே நினைத்தாலும் அவர்களை பணியிடை நீக்கம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் துறைரீதியாக எடுக்க இயலாது. ஏனெனில் அவர்கள் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட, அந்த துறையின் மூலம் சம்பளம் பெறும் அர்ச்சகர்கள் அல்ல. அமைச்சரின் ஆய்வில் நடந்த ஒரு விபத்தாக இந்த செய்தி நம் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த ஆய்வில் இந்தப் பார்ப்பனர்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது விவாதித்திற்குள்ளானது. இந்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக முன்னாள் திமுக அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருப்பதையறிந்து மே17 இயக்கம் இதற்கான கண்டனத்தை வெளிப்படுத்தியது. மேலும், இந்த விவாதங்களின் மூலமாக உண்மையான வரலாறு, பூசை உரிமைகள், கட்டண வசூல் உரிமைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மே17 இயக்கத்தால் இக்கட்டுரை சுருக்கமான முறையில் வெளியிடப்படுகிறது.
இலஞ்சம் பெறும் உரிமைப் படைத்தவர்களாக தம்மை கருதிக்கொள்ளும் இந்த ’திருசுதந்திரர்’, அல்லது ‘த்ரிஸ்வதந்திர’, அர்ச்சகர்கள் யார் என்பது சுவராசியமான விடயம்.
இவர்கள் தான் ‘திரிசுதந்திரர்’ எனும் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டின் பிற கோவில்களில் இவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்தில்லை. பிற்கால பாண்டியர்களுக்கு முன்பாகவே இந்த அர்ச்சகர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அர்ச்சகர்களாக இயங்கியவர்கள் என்கிறார்கள். ஆயினும் இவர்களது தொழில் நிலைபெற்றதென்பது 17ம் நூற்றாண்டுக்கு பின்பாகவே நடந்துள்ளது. குறிப்பாக கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தான தலையீட்டிலேயே நிலைபெற்றது எனலாம்.
திருச்செந்தூரில் மட்டுமே இருக்கும் இந்த அர்ச்சகர்களின் பின்னனி புது தகவல்களை நமக்கு கொடுக்கிறது. போட்ரிஸ்(Potris) எனப்படும் மலபார் பகுதியை சார்ந்த பார்ப்பனர்கள் மற்றும் திரிசுதந்திரர் எனப்படும் பார்ப்பனர்களும் ‘துளு’ மொழி பேசும் பின்புலத்தைக் கொண்டவர்கள். “முக்காணர்” என்ற மரபுடன் தொடர்புடையவர்கள் என்றும் கருதப்படுகிறது. திரிசுதந்திரர்களின் முடி அலங்காரம் வரலாற்று ரீதியாக குறிப்பிட தக்கது. இவர்களது முடி அலங்காரம் என்பது கேரளாவின் நம்பூதரி வகைப்பட்ட மேற்குதொடர்ச்சிக்கு பண்பாட்டோடு தொடர்புடையது. ஆண்கள் முன் உச்சிக் கொண்டையை தலையின் இடது அல்லது முன்புறமாக சாய்த்து அணிந்தனர். இது ‘பூர்வசிகா’ என்று அழைக்கப்படும் ஒரு பழக்கமாகும். இது மேற்குக் கடற்கரையின் பண்டைய நம்பூதிரி மற்றும் சோழியா பிராமணர்களின் மரபுகளை ஒத்தது. இதைக்காணும் பொழுது, இதே போன்ற தனித்த அடையாளம் கொண்ட மற்றுமொரு பார்ப்பன அர்ச்சகர்கள் நம் நினைவுக்கு வரலாம். அவர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலை உரிமைக் கொண்டாடும் சிதம்பரம் தீட்சிதர்கள். கேரளப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால், இவர்களிடமும் அதே திருவனந்தபுரம் மரபு இருப்பதை பொருத்தி பார்க்கலாம். இருந்தாலும், பிற பார்ப்பனர்கள் உட்பட வேறு எந்தச் சமூகத்தோடும் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை ‘அகமண முறையை (Endogamy)’ இறுக்கமாக செய்பவர்கள்.

திருச்செந்தூர் முருக வழிபாடும், திரிசுதந்திரர்களும்:
திருச்செந்தூரில் மூன்றுவகையான அர்ச்சகர்கள் கோவில் பூசை நிர்வாகங்களை மேற்கொள்கின்றனர்.
- போட்ரிஸ் (Potris) பார்ப்பனர்கள். இவர்கள் மங்களூர் அருகே இருந்து வந்த துளு மொழி பேசுபவர்கள். (அத்வைத- மத்வ மரபுக்குரியவர்கள்). இவர்கள் 1729-1758 ஆண்டு காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியின் கீழாக அரசர் மார்த்தாண்ட வர்மன் ஆட்சிக்காலத்தில் அல்லது அதற்கு முன்பாக இருந்த திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பிரதம தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யரால் நியமனம் பெற்றவர்கள். 12 அர்ச்சகர்கள் முறைவைத்து முதன்மைப் பூசை செய்ய நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், தாந்த்ரிக வழிமுறையில் பூசை செய்யும் நம்பூதரி வகைப்பட்ட பார்ப்பனர்களின் மலபார் பிரிவினர்.
- சிவாச்சாரியார்கள் -சைவ சிவ ஆகமங்கள் பயின்ற சிவாச்சாரிய குருக்கள். இவர்களில் 12பேர் பூசைகளை போட்ரிஸ்க்கு பின்னர் மேற்கொள்வார்கள்.
- முக்கனி அல்லது திரிசுதந்திரர் அல்லது த்ரிஸ்வதந்திரா எனப்படும் துளு மற்றும் தமிழ் பேசும் பார்ப்பனர்கள். இவர்கள் பூசைகளுக்கான துணைப்பணிகள்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் ஆகம முறையில் செயல்படுகின்றன. அவற்றில் சிவாச்சாரியர்கள் பூசை செய்கிறார்கள். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் “பரசுராம தந்திரம்” என்ற தனி வழிபாட்டு முறையை பின்பற்றுகிறவர்கள். முருகன் கோவில்கள் ‘குமார தந்திரம்’ எனும் கெளமார தந்திர வகை வழிபாட்டைக் கொண்டிருப்பவை. கேரள வழிபாட்டு முறையானது தாந்திரிக வழிபாட்டு முறையான பரசுராம தந்திர வழிப்பாட்டைக் கொண்டவை. கேரளாவில் இருந்து திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில் இறக்குமதியான இந்த அர்ச்சகர்கள் இரண்டு ஆகம முறையையும் இணைத்தோ அல்லது திரித்தோ பூசை செய்யக்கூடியவர்கள். இந்த ஆகம முறைகள் தமிழ் ஆகம முறைகளின் கீழ் வருவபவை அல்ல. தமிழ் மரபுகளின் கீழ் இல்லாத பூசை ஆகம முறைகளையே திருச்செந்தூரில் இந்த பார்ப்பன கட்டமைப்புகள் நிகழ்த்துகின்றன. குமார தந்திரம் எனும் வகையானது தமிழ்நாட்டிற்குள்ளாக கொண்டுவரப்பட்ட சமசுகிருத வகைப்பட்ட வழிப்பாட்டு முறை. இப்படியான தமிழுக்கு அன்னியமான வழிபாட்டு முறை பின்புலத்தையும், மலபார் பின்னனியும் கொண்ட பொத்ரி, திரிசுதந்திர பார்ப்பனர்கள் தமது ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொள்ளவும், சுரண்டலை ஏகபோகமாக நடத்தவும் இயங்கி வருவதை இச்சமயத்திலாவது தமிழ்சமூகம் புரிந்து கொள்வது நல்லது.
தமது ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் மற்ற பார்ப்பன சமூகங்களிலிருந்து வேறுபட்டவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் வெளிப்புற பார்ப்பன பூசாரிகளை கூட கருவறைக்குள் அனுமதிக்காத வகையில் தங்கள் கோவில் அதிகாரத்தை பாதுகாக்க சாதிய ஒற்றுமையை மலபார் பார்ப்பனர்கள் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.
திரிசுதந்திரர்களுக்கு கோயிலில் (votary services) எனப்படும் பக்தர்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவற்றை கட்டளைகள் என அடையாளப்படுத்துகின்றனர். இதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவைப்படும் உதவிகள், பூசைக்கான உதவிகள் என்பனவற்றை செய்துகொடுக்கும் பொறுப்பு இந்த மலபார் வழிவந்த திரிசுதந்திரர் எனும் பிரிவினருக்குண்டு. அரசர்கள் காலத்தில் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட அரசர் வழிவந்த குடும்பத்தினர், வணிகர்கள் ஆகியோருக்கு சேவை செய்பவர்களாக இயங்கியவர்கள் பின்னர், கோவிலுக்கு வரும் சாமானிய பக்தர்களுக்கு பண உதவியைப் பெற்றுக்கொண்டு சேவை செய்வதாக மாறியது. ஆனால் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழாக கோவில் நிர்வாகம் சென்ற பின்னர், இவர்களை முறைப்படுத்தும் பணியை அறநிலையத்துறை மேற்கொண்டது.
இவர்கள், இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் அல்ல. மாறாக பாரம்பரிய உரிமை எனப்படும் வழக்கத்தின் கீழாக அர்ச்சகராக இயங்கும் உரிமம் பெற்றவர்கள். இதுகுறித்து வழக்குகள் நடந்துள்ளன. இவர்கள் இந்து அறநிலையத்துறையின் கீழான பணியாளர்களாக இல்லாத போதிலும், அர்ச்சகர் உரிமம் கொண்டவர்கள், மாறாக, பக்தர்களிடம் தமது சேவைகளுக்காக நிதியை பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை அனுமதிக்காது. ஏனெனில் கோவில் நிர்வாகம், பக்தர்கள் நிர்வாகம் என்பது அறநிலையத்துறையைச் சார்ந்தது. இதுபோன்ற சேவையைச் செய்யும் அர்ச்சகர்கள் தமக்கான காணிக்கையை பக்தர்களின் விருப்பத்தின் பேரில் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த உரிமையை தமதாக்கிக்கொண்டு சாமானிய பக்தர்களை சுரண்டும் போக்கு எல்லையில்லாமல் செல்கிறது. பெரும்பணத்திற்கு பக்தியை விலைபேசுவதாகி விட்ட நிலையையே அமைச்சரின் ஆய்வு வாயிலாக அறிய இயலுகிறது. பக்தியை மூலதனமாகக் கொண்டு, வரம்பற்ற வகையில் சுரண்டுவதை எவ்வகையில் அனுமதிக்க இயலும்? இவர்கள், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் வருவதில்லை, சாமானிய பக்தருக்கும் உதவிகள் செய்வதில்லை எனும் போது, இது லாபத்தை மட்டும் இலக்காக வைத்த தொழிற்முறை கொள்ளையாக மாறிவிட்டது என்பதே நிதர்சனம். இந்த சுரண்டல் தடுக்கப்பட்டு, ஒழிக்கப்பட வேண்டும்.அரசு நிர்வாகத்தில் இயங்கும் கோவிலில் அனைவருக்கும் சம உரிமை என்பதே பொருத்தமானது.
இவர்கள் இந்து அறநிலையத்துறையின் கீழாக செயல்பட மறுத்து தனித்த உரிமம் படைத்தவர்களாக தம்மை அரசாங்க பணிக்கு வெளியே நிறுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என பார்ப்போம்,
- பூசை செய்யும் அர்ச்சகர் தொழிலில் பிற சமூகத்தினர் ஈடுபட இயலாதவகையில், இத்தொழிலின் ஏகபோக நபர்களாக தமது பார்ப்பன சமூகத்தை நிலைநிறுத்துகிறார்கள்.
- அரசாங்கத்தால் முறைப்படியான பயிற்சியை பிற சமூகத்தைச் சார்ந்த பக்தர்களுக்கு வழங்க இயலாமல் தடுத்து நிறுத்தி, இப்பணியை தமதாக்கிக்கொள்வதன் மூலமாக தீண்டாமையை இன்றளவும் நிலை நிறுத்தியுள்ளார்கள். இவர்கள் பிற சாதி-சமூகத்தினர் கோவிலின் மூலவரை தீண்ட அனுமதிப்பதில்லை.
- இந்த பூசை அர்ச்சகர் உரிமையை பாதுகாப்பதன் மூலமாக அரசாங்க சம்பளத்தை மறுத்தாலும், தமது சமூக அந்தஸ்தின் மூலமாக பிற பூசைகளை நடத்தும் உரிமைகளை தம் வசம் வைத்துக்கொண்டு தமது வருமானத்தை பெருக்கியுள்ளனர்.
- கோவில் நிர்வாகத்தில் எவ்வித பங்களிப்பும், பகிர்தலும் செய்யாமல் இருந்த போதிலும், கடவுளின் நகைகள், செல்வங்களைக் கையாளும் வகையில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
- ‘திரிசுதந்திரர்’ எனப்படும் இந்த வகைப்பட்ட கோவில் பூசை உதவி, பக்தர்கள் உதவி எனும் வகையான பணிகளை செய்யும் உரிமையை நீதிமன்றத்தில் பெற்றனர். இதன் மூலமாக தமது சாதியினர் மட்டுமே இப்பணியில் ஈடுபடுதல் எனும் வகையில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர். கிட்டதட்ட 400 குடும்பங்கள் மட்டுமே இந்தப் பாரம்பரிய உரிமையை திருச்செந்தூரில் அனுபவித்து வருகிறார்கள்.
- கோவிலில் வருமானம் ஈட்டித்தரும் இப்பணிகளை அர்ச்சகர் உரிமை எனும் பெயரில் சுரண்டி வருவதை தமது நிரந்தர தொழில்வாய்ப்பாக மாற்றிக்கொண்டுள்ளனர். இந்தப் பணிக்கு போட்டியிடும் உரிமையை பிறச்சாதி சமூகங்களிடமிருந்து பிடுங்கி தமதாக்கிக்கொண்டுள்ளனர்.
இத்தகைய ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே தமது பாரம்பரிய உரிமை என ‘சுதந்திரர்’ எனும் பெயரின் வாயிலாக நிறுவியுள்ளனர். ‘த்ரி’ அல்லது ‘திரி’ எனும் சமஸ்கிருதச் சொல்லின் அர்த்தமாகிய ’மூன்று’ கட்டளைகளை தமது ‘ஸ்வதந்திர’ எனும் ‘தன்னிச்சையான’, அல்லது ‘சுதந்திரமான’ உரிமை என நிருவிக்கொள்கின்றனர்.
“திரிசுதந்திரர்” என்ற சொல் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலவையாக உள்ளது.
இந்த சொல்லை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்:
- திரி (Tri) = மூன்று
- ஸ்வதந்திர (Svatantra) – சுயாட்சி அல்லது தனி அதிகாரம்(“Sva” = சுயம் / தனி; Tantra” = அமைப்பு அல்லது ஆட்சி முறை)
- அர் (-ar) – தமிழில் மரியாதை குறிக்கும் பன்மை
சமசுகிருதத்தில் “ஸ்வதந்திர” என்பது தத்துவ ரீதியாக சுயசார்பு அல்லது தனி அதிகாரம் என்று பொருள். ஆனால் ஆனால் திருச்செந்தூர் கோவில் மரபில் இந்த சொல் வேறு பொருள் பெற்றது. அதாவது, பரம்பரை உரிமை, கோவில் சடங்கு அதிகாரம், கோவில் நிர்வாக உரிமை, பொருளாதார உரிமை ஆகிய பாரம்பரிய உரிமைகள் கொண்ட ஒரு சமூகத்தை குறிக்கும் பெயராக மாறியது.
திரிசுதந்திரர்களின் முக்கியமான மூன்று உரிமைகள்:
- முக்கிய மூர்த்திக்கு பூஜை செய்யும் உரிமை
- அர்ச்சனை மற்றும் காணிக்கை தொடர்பான உரிமை
- கட்டளை / பக்தசேவை உரிமை
திருச்செந்தூரில் வாழும் திரிசுதந்திரர் என்கிற பார்ப்பன சமூகம் என்பது மொழி –சமயம்-சட்டம் மற்றும் சமூக அதிகாரம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்துள்ள ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக நம்முன் உள்ளது. இவர்கள் சாதாரண கோவில் பூசாரிகள்/அர்ச்சகர்கள் அல்ல; பல நூற்றாண்டுகளாக கோவில் வழிபாடு, நிர்வாகம் மற்றும் பொருளாதார உரிமைகளை பாரம்பரியமாக தங்கள் உடமையாக காத்து தமிழ் சமூகத்தில் மக்கள் பணத்தை சுரண்டி வாழ்ந்து வருவதை தனது சாதி உரிமையாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தென்னிந்திய கோவில் உரிமைகள் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டன. அப்போது “சுதந்திரம்” என்ற பாரம்பரிய உரிமை “மிராசி உரிமை” என்று பதிவு செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தை புரிந்து கொள்ள அதிகம் சிரத்தையுடன் ஆய்ந்து பலவற்றை வகைப்படுத்தினர். சிலவற்றை மாற்றினர், பலவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு புதிய பெயரிட்டு அழைத்தனர். இதன் மூலமே பல வழக்கங்கள் இந்தியாவில் சட்டபூர்வ உரிமையாக அல்லது அடையாளமாக மாறியது. இந்த போக்கில் தான் பல குரலற்ற சாதிகள் தங்களுக்கான சட்ட அங்கிகாரத்தை இன்றளவும் இழந்து நிற்கிறார்கள். இப்படி இந்திய கோவில் அமைப்புகளை புரிந்துகொள்ள முயன்றபோது, இந்த பாரம்பரிய உரிமைகளை “மிராசி உரிமை” என்று கிருத்துவ ஆங்கிலேயர்கள் வகைப்படுத்தினர்.
“மிராசி” என்றால் பரம்பரை உரிமை, குடும்ப வழி சொத்து அல்லது பதவி உரிமை அல்லது வருமான உரிமை என்று பொருள்.
இதன் மூலம் திரிசுதந்திரர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றத்தில் பாதுகாக்க முடிந்தது. கோவில் பூஜை மற்றும் நிர்வாக உரிமைகள் தனியுரிமை போன்றதாக கருதப்படும் வாய்ப்பு சட்டபூர்வமானது.
1959 ஆம் ஆண்டு HR&CE சட்டம் வந்த பிறகு, தமிழக அரசு கோவில்களை பொது சொத்துகளாக நிர்வகிக்க தொடங்கியது. இதனால் பாரம்பரிய பார்ப்பன பூசாரிகளின் அதிகாரம் சவாலுக்கு உள்ளானது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் மூலம் திராவிட அரசியல் காலுன்றிய தமிழ் நாட்டில் இந்து அறநிலையத்துறையே பார்ப்பனர்களின் சமூக அதிகாரத்திற்க்கு கடிவாலமிட்டது.
விடுதலை அடந்த இந்திய அரசு என்பது சட்டபடி மதசார்பற்ற ஒரு நவீன அரசாக தன்னை நிலை நிறுத்திய காலகட்டத்தில், தமிழ்நாடு அரசு கோவில் நிர்வாகத்தை கட்டுப்படுத்த தொடங்கியது. பூசாரி பதவிகள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதனால் பொதுவாகவே பார்ப்பனர்களின் பாரம்பரிய உரிமைகள் சவாலுக்கு உள்ளானது. அப்படித்தான் திருச்செந்தூர் கோவிலிலும் நடந்தது.
திரிசுதந்திரர்கள் இதற்கு எதிராக பல வழக்குகள் தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் வழிபாட்டு மரபு (சுரண்டல் உரிமையை) அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் மத உரிமை என்று வாதிட்டனர்.
குறிப்பாக சேஷம்மாள் வழக்கு (1972) இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், பூசாரி பதவி பாரம்பரியமாக வந்தாலும், நியமனம் என்பது அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றது. ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு (2016) ஒவ்வொரு கோவிலும் அதன் சொந்த ஆகம மரபின்படி பூசாரிகளை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருச்செந்தூர் திரிசுதந்திரர் வழக்கு (2023) மதராஸ் உயர்நீதிமன்றம், திரிசுதந்திரர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் முற்றிலும் நீக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டது.
இப்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் பார்ப்பன பாரம்பரிய வழிபாட்டு சுரண்டல் உரிமைகளை வழக்கம் மற்றும் பயன்பாடு (custom and usage) என்னும் வகையில் பாதுகாக்கிறது. (Indian Evidence Act, 1872 Section 13; Article 25(1) and Article 26(b)). இதானால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சட்ட வடிவம் பெறவும், நடைமுறைக்கு வரவும் இத்தனை ஆண்டுகள் ஆனது.
பண்பாட்டு ஆக்கிரமிப்பும், மொழித்திரிபும்.
ஒரு சமூகத்தின் மொழியியல் மாற்றம் அதாவது சொல் உருவாக்கம் மற்றும் சொல் சிதைவு போன்றவையும் மற்றும் காலப்போக்கில் அந்த சொல்லிற்கு உருவாகும் சட்டப்பூர்வ அர்த்தம் போன்ற நம் கண்களுக்கு புலப்படாத கூறுகள் அந்த ஒட்டு மொத்த சமூகத்தின் சமூக அதிகார நிலையை வரையறுத்துவிடுகிறது. பன்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்கள் தமிழ் சமூகத்தில் எப்படி பல கூறுகள் சமூக அசைவியக்கத்தில் பங்கேற்றுள்ளது என்பதை தன் கட்டுரைகளில் விளக்கியிருப்பார்.
அந்த வகையில் இந்த “திரிசுதந்திரர்” என்ற சொல்லின் உருவாக்கம், அதன் மொழியியல் மாற்றம், மற்றும் அதன் சட்டப்பூர்வ அர்த்தம் ஆகியவற்றை கேள்விக்கு உட்படுத்தும் போது சமஸ்கிருத தத்துவக் கருத்துகள் எவ்வாறு தமிழ்படுத்தப்பட்டு சமூக மற்றும் சட்ட அடையாளமாக உருவாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் சமூகத்தில் இது போன்ற மாற்றங்களில் காலனித்துவ ஆட்சியும், நவீன அரசின் நிர்வாக அமைப்பு ஏற்படுத்தும் தாக்கங்களும் முக்கியமானவை.
இந்த புரிதலோடு தான் திருச்செந்தூர் திரிசுதந்திரர் திரு. ஐயப்பன் ஐயர் அவர்கள் சாமி தரிசனத்திற்க்கு ரூ.4000/- பெற்றதை பார்க்க வேண்டும். அவரை பொருத்தவரை அது அவரின் சுரண்டல் உரிமை. அதாவது கால காலத்திற்கும் தமிழர்களின் செல்வத்தை எந்த உழைப்பும் செலுத்தாமல் சுரண்டி வாழலாம் என்கிற உரிமை. நிகழ் காலத்தில் அதற்கு பெயர் லஞ்சம். அமைச்சரின் திடிர் ஆய்வில் ஒரு விபத்தாக இந்த லஞ்சம் வெளிப்பட்டுவிட்டது. பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் அவர்கள் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் முகத்திரை கிழந்ததாக குற்றம் சொல்கிறார். இந்த லஞ்சத்திற்கும் இந்து அறநிலையத்துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சொல்ல போனால் இது ஆயிரம் ஆண்டுகளாக பெறப்பட்டு வரும் லஞ்சம்.

தங்கள் சுரண்டல் முறையை தக்க வைக்க “ஸ்வதந்திர” என்ற சமஸ்கிருத சொல்லை தமிழில் “சுதந்திரர்” என்ற சமூக அடையாளமாக மாற்றினர். பின்னர் அந்த பெயர் சட்ட உரிமை, மத உரிமை மற்றும் பொருளாதார உரிமை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. இதனால் ஒரு சாதாரண சொல், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்த சமூக அதிகாரமாக மாறியது. இங்கு மொழி ஸ்வதந்திர் பார்ப்பனர்களுக்கு ஒரு பாதுகாப்பு கருவியாக மாறியுள்ளது.
திரிசுதந்திரர்களின் வரலாறு என்பது ஒரு கோவில் சமூகத்தின் வரலாறு மட்டும் அல்ல. அது மொழி, மதம், சட்டம் மற்றும் அதிகாரம் ஆகியவை எப்படி ஒன்றோடொன்று இணைகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய புள்ளி. இது அத்தனைக்கும் மொழியே அடிப்படையாக் இருப்பதால் தான் தமிழர்கள் மொழி தினிப்பு எந்த வகையில் நடந்தாலும் விழிப்போடு எதிர்க்க வேண்டும் என்பது முக்கியத்துவம் பெருகிறது.