15 லட்சம் கோடி மோசடி: மோடி ஆட்சியில் பெருநிறுவனங்களின் நூதன கொள்ளைகள்

பெங்களூரைச் சார்ந்த ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்கிற தங்க நகை ஏற்றுமதி நிறுவனம் 15.15 லட்சம் கோடி அளவில் வருமானத்தை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் பங்குச்சந்தை விலையை அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 2021-25 வரையில் நடந்ததாக எழுந்த இம்மோசடி விவகாரத்தில், பங்குச்சந்தை ஒழுங்கு அமைப்பான செபி(SEBI) இப்போதுதான் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்நிறுவனம் பங்குச்சந்தை ஊடாக பல்லாயிரம் கோடி அளவில் மக்கள் பணத்தை சுருட்டி இருக்கலாம் என்னும் குற்றச்சாட்டு பங்குச்சந்தை நிபுணர்களால் வைக்கப்படுகிறது.

தங்க நகை சுத்திகரிப்பு முதல் சில்லறை விற்பனை வரை தடம் பதித்த, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் (REL) பல ஆண்டுகளாக பெரும் வருவாயைப் பதிவு செய்து இந்தியாவின் பெரு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. உலகின் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தையும் 35% சுத்திகரிப்பதாகக் கூறுகிறது. 99% வருமானம் சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனம் மூலமே ஈட்டுவதாக சொல்கிறது. ‘ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ தங்களது குழுமத்தின் முதன்மை நிறுவனம் சுவிட்சர்லாந்தில் உள்ள “வல்காம்பி” என்கிறது. அப்படியென்றால் வல்காம்பியின் வருமானம் அதிக அளவு இருக்க வேண்டும். ஆனால் 99% வருமானம் ஈட்டுவதாக சொல்லும், வல்காம்பியுடைய வருமானம் ஆண்டுக்கு சில நூறு கோடி (543 கோடி) மட்டும்தான் என தெரிய வந்துள்ளது.

வல்காம்பியின் ‘பங்கு கட்டுப்பாட்டு நிறுவனமான (Holding Company)’ குளோபல் கோல்ட் ரிபைனரிஸ் நிறுவனம் ஆண்டிற்கு 3 லட்சம் கோடியை வருமானமாகக் கூறியது. தங்க சுத்திகரிப்பு வேலை செய்யும் வல்காம்பி நிறுவனம் ஒரு ஆண்டிற்கு 543 கோடி வருமானமும், எந்த வேலைகளிலும் ஈடுபடாத ஒரு பங்கு கட்டுப்படுத்தும் நிறுவனம் ஆண்டிற்கு மூன்று லட்சம் கோடி வருமானத்தை காட்டுவதும் சந்தேகத்தை எழுப்பியது. குளோபல் கோல்ட் ரிபைனரி நிறுவனம் வருமானத்தை பெரிதாகக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட  ஷெல் நிறுவனமே  என்பது செபியின் குற்றச்சாட்டு.

ராஜேஷுடன் மோடி

ஒரு நிறுவனம் வருமானத்தை அதிகமாக காட்டுவதற்கு அதற்கு அதிக பலன்கள் கிடைப்பதே காரணமாகிறது. இதனால் அதன் பங்கு விலைகள் உயரும். முதலீட்டாளர்கள் நம்பி பங்கை வாங்குவதற்கும் உதவும். பங்கு ஏறினால் நிறுவனர்களுடைய சொத்து மதிப்பும் கூடும். வங்கிக் கடன்கள் எளிதாக கிடைக்கும். சந்தையில் நம்பகத்தன்மை கூடும். ராஜேஷ் எக்ஸ்போர்ட்சும் ஆண்டுக்கு ‘ஷெல் நிறுவனம்’ மூலம் மூன்று லட்சம் கோடி அளவில் வருமானம் காட்டியதன் விளைவு, இந்த நிறுவனத்திற்கு மக்கள், சிறு முதலீட்டு நிறுவனங்கள் என 29 கோடி பங்குகள் சேர்ந்தன . 2023-ல் 1028 ரூபாய்க்கு இருந்த ஒரு பங்கின் விலை, மோசடி வெளியான பின்பு ஜூன் 12, 2026-ல் 76 ரூபாய் அளவில் சரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு பங்கிலேயே 952 ரூபாய் நட்டமாகி இருக்கிறது. இந்த வீழ்ச்சியினால் இதிலிருந்த மக்களின் பணம் ஒரே நாளில் 12,726 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்கு உயரவதற்கு எல்ஐசியே முக்கியக் காரணம். 1995-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 2000-ல் பங்கு சந்தையில் நுழைந்தது. முதலில் அதன் நிறுவனர்கள் மட்டுமே அதிக பங்கினை வைத்திருந்தனர். மார்ச் 2016-ல் இதில் எல்ஐசியின் பங்குகள் 1.99% ஆக இருந்தன. மார்ச் 2022 க்குள் 11.22% ஆக உயர்த்தியது எல்ஐசி. மார்ச் 2026 நிலவரப்படி, இந்நிறுவனத்தில் 10.8% பங்குகளை வைத்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு செய்வதற்கு வலுவான விதிமுறைகள் உண்டு.  நிரிவாகக் குழு, பல கட்ட ஆலோசனைகள், உரிய ஆய்வுகள் உள்ளிட்டவை பல மட்டங்களில் நடந்த பிறகே முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்படும். ஆனால் நீண்ட காலமாகவே ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரகசியங்கள் குறித்த சர்ச்சைகள் சில பத்திரிக்கைகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போதும் எல்ஐசி ஏன் இந்நிறுவனத்தில் பங்குகளை அதிகரித்தது என்ற கேள்வி வலுவாகியிருக்கிறது. மக்களும் சிறு முதலீட்டாளர்களும் எல்ஐசி முதலீடு செய்த நம்பிக்கையிலேயே முதலீடு செய்திருந்தார்கள். இப்போது அவர்களும் நட்டமடைந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கு குறைந்தால் எல்ஐசிக்கு 2800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் மக்களின் காப்பீட்டு பணத்திலிருந்தே ஈடுகட்டப்படும். காப்பீடு செய்தவர்களின் ஊக்கத்தொகை, முதிர்வுத் தொகை போன்றவை குறையும். இதிலும் மக்களுக்கே நட்டம்.

இந்தியப் பெரும் நிறுவனங்கள் பலவும் துணை நிறுவனம், ஷெல் நிறுவனம் என வெளிநாட்டில் நிறுவனங்களை வைத்துக் கொண்டு பங்குச் சந்தைகளில் பல லட்சம் கோடி மோசடிகளை சுலபமாக செய்கின்றனர். இதன்படியே அதானி ஏழரை லட்சம் கோடி மோசடி செய்ததாக “ஹிண்டென்பெர்க்” நிறுவனம் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அயல்நாட்டின் தரவு பாதுகாப்புச் சட்டங்கள், ரகசிய காப்புச் சட்டங்கள் போன்றவைகள் இவர்கள் கொள்ளையடிப்பதற்கு வழியை திறந்து விட்டுள்ளன.

அதானியின் பங்குகள் சரியும் போது மக்களின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகளைக் கொடுத்து மோடி தூக்கி நிறுத்தியது போல, இந்நிறுவனத்தில் எல்ஐசி பங்கு உயர்வதற்கும் யார் காரணம் என்பது, ஹிண்டென்பெர்க் ஆய்வைப் போல ஒரு ஆய்வு வெளிநாட்டில் இருந்து செய்யப்பட்டால் மட்டும் தெரியவரும்.

ஆனால் ஒரு நிறுவனத்தின் பண மோசடியைக் கண்டறியக் கூடிய இந்தியாவின் எந்த விசாரணை அமைப்புகளும் இந்த மோசடியைக் கண்டறியவில்லை. நீண்ட நாளாக இந்த நிறுவனம் குறித்த சர்ச்சைகள் எழுந்தபோதும் செபி கண்டு கொள்ளவில்லை. பங்கு வாங்கிய முதலீட்டாளர்கள் சிலர் மனு அளித்த புகாரின் நெருக்கடியிலேயே செபி விசாரணையில் இறங்கியது. இந்த நிறுவனம் மட்டுமல்ல, பெரு நிறுவனங்களாக உலா வந்த சத்யம் கம்யூட்டர்ஸ், ILFS நிறுவனம், DHFL நிறுவனம், யஸ் பேங்க் (Yes Bank) போன்ற பல நிறுவனங்கள் வருமானத்தை அதிகம் காட்டியே வங்கிகளில் கடன் வாங்கியும், பங்குகளை உயர்த்தியும் ஏமாற்றிய பட்டியல்கள் உண்டு.

இப்படியாக ஏமாற்றுப் பேர்வழிகள் பெருகியுள்ள பெரும் நிறுவனங்களின் வருவாய் கணக்கீடுகளுக்கு சோம்பல் காட்டும், பண மோசடி கண்டறியும் துறைகள் தான் சாதாரண வணிகர்களின் சிறு குறு நிறுவனங்களின் மீது பாய்கின்றன.

சிறு குறு நிறுவனங்களும், சிறு வியாபாரிகளும் வளர்ந்து விடவே கூடாது என்ற அவர்களை மன உளைச்சலில் தள்ளிய ஜிஎஸ்டி தணிக்கை துறை, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளின் பணப் பட்டுவாடா பிசகாமல் நடந்து கொண்டிருக்க, சாதாரண மக்களின் கைளிலிருந்த பணப்பறிப்பில் மும்முரமாக இருந்த தேர்தல் ஆணையத் துறை, உரிய ரசீதுகளே இல்லாமல் வர்த்தகம் செய்யும் குசராத்தி பனியாக் கொள்ளை வருமானத்தின் பக்கமே போகாமல், ஜிஎஸ்டி கட்டி, கடன் வாங்கி வியாபாரம் செய்யும் தமிழ்நாட்டு வர்த்தகர்களின் வீடுகளுக்கு படையெடுக்கும் வருமான வரித்துறை, ஆளும் கட்சியினரின் ஊழல்களை அறவே ஒதுக்கி விட்டு மாநில கட்சிகளின் அரசியல்வாதிகள் வீடுகளுக்கு மட்டுமே செல்லும் அமலாக்கத் துறை போன்ற துறைகளின் அலட்சியத்தினாலோ அல்லது ஆசிர்வாதத்தினாலோ, 15.15 லட்சம் கோடி வருமானமாகக் காட்டி அதை வைத்து பங்கு சந்தையில் மோசடி செய்து லாபம் ஈட்டியிருக்கிறது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்னும் நிறுவனம். எப்பொழுதும் போல செபி நிறுவனம் தாமதமாக விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

செபி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதானி பங்குச் சந்தை ஊழலில் பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு அதானிக்கு செபி நற்சான்றிதழ் வழங்கியது போல,  இந்நிறுவனத்திற்கும் பல கட்ட விசாரணைகள் நடத்திய பின்பு வழங்குமா என்பது விசாரணையில் முடிவில்தான் தெரியவரும்.

மோடி ஆட்சியின் கடந்த 12 ஆண்டுகளில் நுட்பமான கொள்ளைகள் (organised loot) ஒவ்வொரு பெரு நிறுவனங்கள் ஊடாகவும் எப்படி நடக்கிறது என்பதற்கு ராஜேஷ் எக்ஸ்போர்ட் தங்க ஏற்றுமதி நிறுவனமும் சான்றாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »