
நீட்டைத் திணித்து நம் மாணவர்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து, நம் மாணவர்களுக்கு உரிமையான 461 அரசு மருத்துவ இடங்களையும் பறித்திருக்கிறது மோடி அரசு. மூன்று தனியார் கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றியதால் இந்த இடங்கள் நம் கைவிட்டுப் போயிருக்கின்றன. நீட் அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராடும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்த அநீதி நிகழ்ந்தேறியுள்ளது.
தமிழ்நாட்டின் 2026-ம் ஆண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்திருக்கிறது. திருச்சி சமயபுரத்தில் உள்ள ‘சீனிவாசன் மருத்துவக் கல்லூரி’, பெரம்பலூரில் உள்ள ‘தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி’, ஓசூரில் உள்ள ‘செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி’ ஆகிய 3 கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக (Deemed University) அறிவித்தது. இக்கல்லூரியில் மொத்தமிருந்த 650 மருத்துவ இடங்கள் இனி அகில இந்திய மருத்துவ பொது கலந்தாய்விற்கு சென்று விட்டன. ஆனால், மருத்துவ சேர்க்கை கட்டணம் தனியார் நிர்வாகத்தினரின் சொந்த முடிவுக்கு உட்பட்டது. மருத்துவ சீட்டுகள் கோடிகள் கைமாறும் தன்மை கொண்டதாகி விட்டதாகி விட்டது. இதில் அரசு தலையிட முடியாது.
இவை தனியார் கல்லூரியாக இருந்ததனால் சுமார் 70% வரையான ‘461 இடங்கள்’ தமிழ்நாடு அரசின் பொதுக் கலந்தாய்வில், வெறும் ரூ 4.5 லட்சம் கட்டணத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைத்து வந்தன. SC, ST, BC, MBC என 69% இடஒதுக்கீடும் இதில் இருந்தது. ஆனால் இன்று இந்த 3 கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Deemed University) ஆன பிறகு, அவை மொத்தமும் இந்திய மருத்துவ கலந்தாய்வுக்கு சென்று விட்டன. நீட்-ல் 500 மதிப்பெண் எடுத்து, ரூ 5 லட்சத்தில் மருத்துவர் ஆகலாம் என்ற கனவுடன் இருந்த மாணவனிடம் இருந்து தனியார் கல்லூரியின் சீட்டுகள் பறிக்கப்பட்டு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கட்டணம் அளிக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக பணக்காரர்களுக்கான இடமாக மாறிவிட்டது.
2024 -ம் ஆண்டுக்கு முன்பு வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் கூட, 50% சீட்டுகள் மாநில அரசின் கலந்தாய்வும், மத்திய கலந்தாய்வும் என சேர்ந்து ஒதுக்கப்பட்டது. மீதி 50% நிர்வாகத்தினரின் ஒதுக்கீடாக இருந்தது. அதனால் தனியார் கல்லூரிகளைப் போல, 5 லட்சத்துக்குள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு 69% இடஒதுக்கீடு அடிப்படையில் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைத்தது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மோடி அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் 2024-ம் வருட ஆணையினால், நிகர் நிலை பல்கலைக்கழகமாக மாறிய 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்த 71% அரசு ஒதுக்கீட்டு இடங்களான 2000க்கும் மேலான மருத்துவ இடங்கள் ஒரே நாளில் மாநில அரசின் கைவிட்டு போனது. 5 லட்சத்திற்குள் மருத்துவம் படிக்கலாம் என்ற மாணவர்களின் கனவும் தகர்ந்தது.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினால் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் நம்மிடம் இருக்கின்றன. மேலும் 2 (ESIC + AllMS) கல்லூரிகளும் தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. 39 கல்லூரிகளும் சேர்த்து மொத்தமாக 5349 மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றின் 15% (832 இடங்கள்) இடங்களை மத்திய தொகுப்புக்கு கொடுத்து விட வேண்டும். தனியார் கல்லூரிகளின் வசமுள்ள சுமார் 7500 இடங்களில் 71% அரசின் ஒதுக்கீட்டுக்குள் சுமார் 4000 இடங்கள் வருகின்றன. ஆக மொத்தம் கிட்டத்தட்ட 8500 இடங்களுக்கு மேல் மாநில அரசின் முடிவுக்கு உட்பட்டவையான இருக்கின்றன.
| விவரம் | எண்ணிக்கை |
| தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் | 37 |
| ESIC + AIIMS (தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ்) | 2 |
| மொத்த அரசு/அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள கல்லூரிகள் | 39 |
| விவரம் | எண்ணிக்கை |
| அரசு கல்லூரி மொத்த MBBS இடங்கள் (39 கல்லூரிகள்) | 5,349 |
| அகில இந்திய ஒதுக்கீடு (15%) | 832 |
| மாநில ஒதுக்கீட்டில் மீதமுள்ள அரசு இடங்கள் | 4,517 = (5349-832) |
| தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் (சுமார்) | 7,500 |
| அரசின் ஒதுக்கீட்டுக்குள் வரும் இடங்கள் (சுமார்) | 4,000 |
| மாநில அரசின் முடிவுக்கு உட்பட்ட மொத்த இடங்கள் (சுமார்) | 8,517 = (4517+4000) |
இவற்றில் அரசாணை பிறப்பித்த 7.5% ‘அரசுப் பள்ளி மாணவர்’களுக்கான இட ஒதுக்கீடும் செயல்படும். இவர்கள் செலவை முழுவதையும் அரசு ஏற்கும். அரசு கல்லூரிகளில் வருடத்திற்கு 15 ஆயிரத்திற்குள் கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்கள் 3050. இவை மொத்தமும் 2024 ம் ஆண்டு ஆணைக்கு பிறகு கைவிட்டுப் போயின. அரசு மருத்துவ கல்லூரிகளில் மத்திய தொகுப்பு 15% சேர்த்து மொத்தமாக 3882 இடங்களை தமிழ்நாட்டிலிருந்து தனது அதிகார அத்துமீறலினால் கொண்டு போய் விட்டது மோடி அரசு. இப்போது 2026 -ல் மூன்று கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றியதால் மொத்தம் 4443 இடங்களை எடுத்துக் கொண்டு போய் விட்டது.
இனி தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கட்டணக் கொள்ளை அடிக்கலாம் என்கிற நோக்கத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற விண்ணப்பிப்பார்கள். தனியார் கல்லூரிகளில் இருந்து அரசின் ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் சுமார் 4000 இடங்களும் கேள்விக்குறியாகும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 4500 இடங்களை தங்களது மத்திய தொகுப்புக்கு மாற்றி விட்டு, இந்த மூன்று தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றப்படுவதால் தமிழ்நாட்டிற்கு குறையும் சீட்டுகளை சமன் செய்வதற்காக 900 சீட்டுகள் அதிகரித்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதில் 150 சீட்டுகள் அரசு கல்லூரிகளுக்கும், 650 சீட்டுகள் தனியார் கல்லூரிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு அளிக்கப்படும் சீட்டுகள் எந்த நேரத்திலும் அரசிடமிருந்து பறிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. வருங்காலத்தில் இவையும் மத்தியத் தொகுப்புக்குள் சென்று விடும் சூழலே ஏற்படும்.
“ஒரே தேசம்; ஒரே கலந்தாய்வு” என முடிவெடுத்த மோடி அரசு தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தொடுத்த மருத்துவ அநீதி இது. நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடும் கிடையாது. பண வரையறையும் கிடையாது. இதனால் தமிழ்நாட்டின் சுமார் 4500 இடங்களில் பணம் இருக்கும் எந்த மாநிலத்திலிருந்தும் வந்து அமரலாம். டெல்லி, உ.பி, குஜராத்தில் இருந்து பணக்கார மாணவர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள். நம் மாணவர்கள் வெறும் பார்வையாளராக நிற்க வேண்டியவர்களாகி விடுவார்கள்.
தமிழ்நாடு 40 ஆண்டுகளாக 69% இடஒதுக்கீட்டுடன் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. அந்த உரிமையை மத்திய அரசு ஒரே கையெழுத்தில் பறித்துள்ளது.
நாங்கள் கடிதம் அனுப்பினோம், பதில் வரவில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் சொல்கிறது. இந்தக் கடிதமும் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது. மாநில அரசு மறுத்தாலும், இந்திய ஒன்றிய அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்கிற சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்து விட்டார்கள். இதனால் தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்தால் உடனே நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறும் அங்கீகாரம் கிடைத்து விடுகிறது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு 2024- லிலேயே உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதற்குள் இந்த மூன்று தனியார் கல்லூரிகளையும் நிகழ்நிலைப் பல்கலைக்கழமாக மாற்றி 461 இடங்களையும் பறித்து விட்டார்கள்.
அரசுப் பள்ளி மாணவன், முதல் தலைமுறை பட்டதாரி, விவசாயியின் மகன் இவர்களின் மருத்துவக் கனவை சுக்குநூறாக்கும் சதி இது. இது தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைக்கு எதிரான போர்.
“நீட்”டால் போதாது என்று இப்போது “நிகர்நிலைப் பல்கலைக்கழகம்” என்ற புதிய ஆயுதத்தை வைத்து தமிழ்நாட்டு மாணவர்களை வீழ்த்தப் பார்க்கிறார்கள்.

நீட்டைத் திணித்து அனிதா உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைப் பறித்த பாஜக அரசு, இப்போது ஏழை மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்தே தூர விலக்கிவிடும் வேலையைச் செய்கிறது. மாநில அரசின் உரிமைகளைப் படிப்படியாகப் பறித்து, கல்வியிலும் தனது அதிகாரத்தைத் திணிக்கிறது.
அதிகாரப் பறிப்பிற்கு எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாஜக அரசிடமிருந்து கல்வியை மீண்டும் மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே இந்த அதிகாரத் திணிப்பைத் தடுக்க முடியும்.
மாணவர்கள் முன்வைக்கும் “நீட் ஒழிப்பு” கோரிக்கை என்பது மாநில உரிமையை மீட்பதற்கான முதல் படி.
கல்வி மாநிலப் பட்டியலுக்குள் கொண்டு வருவதே தமிழ்நாட்டுக்கான நிரந்தரத் தீர்வு.