பெண்ணின் கருப்பை மீது அதிகாரம் செலுத்தும் அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்!
சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் ஆகத்து 9, 2026 அன்று நடைபெற்ற பேரணியில் பங்கெடுத்த தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் “கருக்கலைப்பைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்” என்று கூறி இருக்கிறார். பெண்கள் குறித்தான சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் இந்தக் கருத்து, ஒரு தனிப்பட்ட கருத்தாகக் கடந்து செல்லக் கூடியதல்ல, அது பெண்களின் உடல் மீதான உரிமை, தனிநபர் சுதந்திரம், குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஆகியவற்றைச் சுற்றி எழும் மிக முக்கியமான அரசியல் கேள்வி.
பெண் குழந்தையை அழித்த சமூகமே இன்று “குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்கிறது!
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற சமூகம் இது. கருவிலேயே பெண் குழந்தை என்பதை அறிந்து அழித்த சமூகமும் இதுதான். பெண் குழந்தை பிறப்பையே சுமையாகக் கருதிய சமூகமும் இதுதான். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்று அவளின் கல்வியைத் தடுத்ததும் இந்தச் சமூகம்தான். பெண்ணின் திருமணத்தை அவளுடைய விருப்பத்திற்கு மாறாக நிர்ணயித்ததும் இந்தச் சமூகம்தான். இன்றும் வேற்று சாதியில் திருமணம் செய்தால் ஆணவப் படுகொலை செய்யும் சமூகமும் இதுதான். பெண்ணின் கர்ப்பத்தைக் குடும்பத்தின் சொத்தாகக் கருதியதும் இந்தச் சமூகம்தான். பிள்ளை இல்லாத தம்பதியில் பெண்ணை மட்டும் பழித்த சமூகமும் இதுதான்.
இன்று அதே சமூகத்தின் சில குரல்கள், “பெண்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?”, “எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்?”, “கருக்கலைப்பு செய்யலாமா, கூடாதா?” என்று பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்த கேள்விகளுக்கான பதில் யாருடையது?
அந்தப் பெண்ணுடையதா? அவளுடைய பெற்றோருடையதா? கணவனுடையதா? மதத்தினுடையதா? அரசியல் கட்சிகளுடையதா? அல்லது அரசினுடையதா?
பெண்ணின் உடல் மீது உரிமை கொண்டாடுவதற்கு இந்த உலகில் எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. அவளின் உடல் குறித்த முடிவை அவளே எடுக்க வேண்டும்.
இன்று பெண்ணை ஒடுக்கிய அதே சமூகத்தின் ஒரு பகுதி, “பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை வழங்குகிறது. நேற்று பெண் குழந்தை பிறக்கக் கூடாது என்றார்கள்; இன்று பெண் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பெண்ணின் கருப்பை மீது அதிகாரம் செலுத்தும் உரிமையை ஆணாதிக்கம் ஒருபோதும் கைவிடவில்லை; அது தனது மொழியை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் கருக்கலைப்பு உரிமை:
பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கான போராட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறவில்லை. உலகின் பல நாடுகளில் பெண்கள் தங்களுடைய உடல் மற்றும் குழந்தைப் பேற்றுக்கானத் தேர்வுகளுக்கான உரிமைக்காகப் பல நூறாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
உலக அளவில் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை Center for Reproductive Rights அமைப்பின் தரவுகளின்படி 5 முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
முழுமையான தடை (சுமார் 24 நாடுகள்): தாய்/பெண்ணின் உயிர் ஆபத்தில் இருந்தாலும் கூட எந்தவொரு சூழலிலும் கருக்கலைப்புக்கு அனுமதி கிடையாது (எ.கா: எல் சால்வடார், ஹோண்டுராஸ், மால்டா, பிலிப்பைன்ஸ், டொமினிகன் குடியரசு).
தாயின் உயிரைக் காப்பாற்ற மட்டும் அனுமதி (சுமார் 41 நாடுகள்): பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் (எ.கா: நைஜீரியா, உகாண்டா, பிரேசில், வங்கதேசம்).
உடல்/மன ஆரோக்கியக் காரணங்களுக்காக அனுமதி (சுமார் 47 நாடுகள்): பெண்ணின் உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்படுகிறது (எ.கா: இந்தியா, கோஸ்டாரிகா).
சமூக-பொருளாதாரக் காரணங்களுக்காக அனுமதி (சுமார் 13 நாடுகள்): பெண்ணின் குடும்பச் சூழல், நிதி நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது (எ.கா: ஜப்பான், தைவான், பின்லாந்து).
கோரிக்கையின் அடிப்படையில் அனுமதி (சுமார் 77 நாடுகள்): கர்ப்பத்தின் குறிப்பிட்ட வாரங்களுக்குள் (பொதுவாக 12 முதல் 24 வாரங்கள்) பெண் தனது விருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் (எ.கா: பிரான்ஸ், கனடா, சீனா, உருகுவே, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள்).
கருக்கலைப்புக்கு எதிரான சட்டங்களும் வரலாற்றுப் போராட்டங்களும்
லத்தீன் அமெரிக்கா: லத்தீன் அமெரிக்க நாடுகள் மரபு வழியாகப் பழமைவாதக் கத்தோலிக்கக் கொள்கைகளைக் கொண்டவை. அங்கு கருக்கலைப்புக்குக் கடுமையான தடைகள் இருந்தன. 2020-ஆம் ஆண்டு மக்களின் “பச்சை அலை” (Green Wave) என்ற போராட்டத்தின் மூலம் அர்ஜென்டினா நாடாளுமன்றம் 14 வாரங்கள் வரையிலான கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கியது.
மெக்சிகோ & கொலம்பியா: 2021 மற்றும் 2022-இல் மெக்சிகோ உச்ச நீதிமன்றமும் கொலம்பியா உச்ச நீதிமன்றமும் கருக்கலைப்பைக் குற்றமற்றதாக்கி (Decriminalize) வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கின.
பிரான்ஸ்: 2024 மார்ச் மாதம், உலகிலேயே முதன்முறையாகப் பெண்களின் கருக்கலைப்பு உரிமையைத் தனது அரசியலமைப்பிலேயே (Constitutional Right) ஒரு அடிப்படை உரிமையாகப் பிரான்ஸ் இணைத்தது.
கருக்கலைப்புக்கு எதிரான (Pro-life) இயக்கங்கள்
அமெரிக்கா: 1973-லேயே அமெரிக்காவில் பெண்களுக்குக் கருக்கலைப்பு உரிமை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. ஆனால் 2022 ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், ஒவ்வொரு மாநிலமும் கருக்கலைப்பைத் தடை செய்ய அதிகாரம் பெற்றது.
அயர்லாந்து (1983): 1980களில் கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கும் வாய்ப்பு உருவாகலாம் என்ற அச்சத்தால், PLAC (Pro-Life Amendment Campaign) என்ற அமைப்பு தீவிர பிரச்சாரம் நடத்தி, 1983-இல் “கருவில் உள்ள குழந்தையின் வாழ்வுரிமை” என்பதன் அடிப்படையில் கருக்கலைப்பிற்கு எதிராகச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது (67% வாக்காளர்கள் ஆதரித்தனர்).
போலந்து: கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவுடன் 1970கள் மற்றும் 1980களில் இருந்து கருக்கலைப்புக்கு எதிரான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 2020-இல் கருக்கலைப்புக்கான அனுமதிகளை மேலும் குறைக்கும் நீதிமன்றத் தீர்ப்பை இவ்வமைப்புகள் ஆதரித்தன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) எச்சரிக்கை:
கருக்கலைப்பைத் தடை செய்வதால் அது குறைந்து விடுவதில்லை; மாறாக, பெண்கள் சட்டவிரோதமான, பாதுகாப்பற்ற மருத்துவ முறைகளை நாடித் தங்கள் உயிரை இழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. மேலும் உலகளவில் ஆண்டுதோறும் நடைபெறும் கருக்கலைப்புகளில் 45% பாதுகாப்பற்ற முறையில் நடைபெறுகின்றன. இத்தகைய உடல்நிலை பாதிப்புகளையும் மீறி, பொருளாதார குடும்ப சூழல்கள் என அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, அவர்கள் உடல் மீதான உரிமை கூட மறுக்கப்படுகிறது.
எனவே தான் கருக்கலைப்புக்கான தடையை நீக்குவது என்பது பெண்களின் உடல் நலம், சமத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த முதன்மைத் தேவையாக உலகெங்கிலும் வலியுறுத்தப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் பெண்களின் குழந்தைப்பேறு உரிமைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் கருக்கலைப்பைப் பாதுகாப்பானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றத் தங்கள் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளன. ஆனால், எல் சால்வடார், நிகராகுவா, போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே இதற்கு எதிராகச் சென்று கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.
மதவாத அரசியலும் பெண்ணுரிமையும்:
உலகிலேயே தன்னை மிகுந்த வளர்ந்த நாடாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்காவே பெண்களின் உரிமைகளில் பின்னோக்கிச் செல்வதைக் காணலாம். இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. “இஸ்லாமியர்கள் அதிகமாகக் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்; அதனால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எனவே இந்துக்களும் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று ஆர்.எஸ்.எஸ் (RSS) பிரச்சாரம் செய்வதைக் காணலாம்.
“கருவில் உள்ள குழந்தைக்கும் வாழ்வுரிமை உள்ளது” என்ற வாதங்கள் மதம் அல்லது ஒழுக்கநெறி அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றன. பெரும்பான்மை மதவாத தலைவர்கள் ஆண்களாகவே இருப்பதால், கருக்கலைப்பை பெண்ணுரிமையாகப் பார்க்க மறுக்கிறார்கள்.
இவ்வாறு கருக்கலைப்பை மதத்தின் அல்லது சமூகத்தின் கண்ணாடி வழியாக மட்டும் பார்ப்பது மிகவும் ஆபத்தானது.
இதுஇந்துப் பெண்ணின் பிரச்சினையல்ல; இது இசுலாமியப் பெண்ணின் பிரச்சினையல்ல; இது கிறிஸ்தவப் பெண்ணின் பிரச்சினையல்ல; இது பெண்ணின் அடிப்படை உரிமை பற்றிய கேள்வி.
இதனால்தான், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தில் தந்தை பெரியார் பின்வருமாறு எழுதினார்:
“பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல் போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது.
தவிர, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், ‘உலகம் விருத்தியாகாது, மானிட வர்க்கம் விருத்தியாகாது’ என்று சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்?”
பெண்ணின் மனதுக்குள் புதைந்துகிடந்த கேள்விகளை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். பெண்ணின் உடலை ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே பெரியாரியப் பெண்ணிய சிந்தனையின் மையம். பெண்ணை வெறும் மனைவியாகவும், சமையல் செய்பவராகவும், குடும்பத்தைப் பராமரிப்பவராகவும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் கருவியாகவும் மட்டுமே பார்க்கும் சமூகத்திலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் பெண்கள் உரிமைகளுக்கு எதிரான மதவாத-வலதுசாரி முழக்கங்களுக்கு இடமில்லை என்பதை ஓவ்வொருவரும் உணர வேண்டும்.
முற்போக்கு தளமான தமிழ்நாட்டில் வெள்ளையின-ஐரோப்பிய-கிருத்துவ பெண் அடிமைத்தன கருத்தியல்களை தூக்கிச் சுமப்பது கண்டனத்திற்குரியது.
இதுவும் சங்கித்தன மத அரசியலும் வேறுபட்டதாய் இருக்க முடியாது. பெண்களின் உரிமைக்கு எதிரான சாதி, மதம், ஆணாதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் — அதற்கு எதிராக குரல் கொடுப்பது அவசியம்.
எனவே பெண்களின் குழந்தை பெரும் உரிமையைப் பறிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகள் எந்த அரசியல் அமைப்பிலிருந்து வந்தாலும் அவை விமர்சிக்கப்பட வேண்டும். இதை சபாநாயகர் முன்மொழிவது கண்டனத்திற்குரியது. இதைச் சொல்ல அவர் உட்பட எந்த ஒரு ஆணுக்கும் உரிமையில்லை. பெண் என்றால், அவளுடைய உடல் மீதும் வாழ்க்கை மீதும் முடிவெடுக்கும் உரிமையும் அவளுக்கே இருக்க வேண்டும். இதுபோன்ற பெண் அடிமைத்தனப் பிற்போக்குத்தனமான மதவாத அரசியலை தவெக தலைவர்கள் தொடர்வது கண்டனத்திற்குரியது.
அனைத்து உயிர்களையும் சமமாகப் பார்த்த தமிழ்ச் சமூகத்தில் பெண்ணை அடிமைப்படுத்த நுழைந்தவையே ஆரிய சனாதனக் கருத்துக்கள். ஆரிய வருகைக்கு முன்பு வரை தாய் வழி சமூகமாகவே வாழ்ந்த தமிழ்ச்சமூகம் ஆரிய வருகைக்கு பின்பு சாதி மதத்தை முன்னிறுத்தி ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தியது. பெண்களின் முடிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. சமத்துவ சமூகம் ஆணாதிக்க சமூக கட்டமைப்பாக மாறி இன்று வரை நீடிக்கிறது. அதைக் களைய தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எடுத்த சீரிய முயற்சியின் விளைவாகவே, தமிழ்ச் சமூகம் ஆணாதிக்கத்தை விட்டொழித்து முன்னேறிய சமூகமாக மாற முயற்சித்தது. ஆனால் இன்று பெண்கள் உரிமைகளுக்கு எதிரான மதவாத-வலதுசாரி கருத்தின் மறு வடிவமாக ஒரு முழக்கத்தை சபாநாயகர் கூறி இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஆணாதிக்க கருத்துக்களை களையவில்லையென்றால் பெண்களுக்கு எதிரான சமூகமாகவே இச்சமூகம் மாறும் ஆபத்து ஏற்படும். எனவே மதரீதியாக பெண்களை பண்டமாக, சொத்தாக, குழந்தைகளை உற்பத்தி செய்ய வேண்டியவர்களாக மாற்ற முனையும் மதவாத அரசியலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். பெண்களின் உடலைக் கட்டுப்படுத்துவது சமூக முன்னேற்றமல்ல; பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கக்கூடிய சமூகத்தை உருவாக்குவதே உண்மையான முன்னேற்றம்.